Published:Updated:

மனிதனும் மாடும்! - பிளாஷ்பேக் கதை #MyVikatan

Representational Image
Representational Image

இன்றைய தலைமுறைக்கு இப்படி ஒரு வாழ்க்கை முறை இருந்ததே ஆச்சர்யமாக இருக்கும்.

நெல்லுச்சோறு* என்பது எல்லோருக்கும் கிடைக்காது. பெரும்பாலான வீடுகளில் கேப்பைக்கூழோ கம்பங்கூழோ இருக்கும். ஒரு கிராமத்தில் உள்ள சில வசதியானவர்கள் வீட்டில் மட்டும் தினமும் நெல்லுச்சோறு சமைப்பார்கள். அங்கே வேலை செய்யும் சம்பளக்காரர்களுக்கு* வாரத்தில் சில நாள்கள் நெல்லுச்சோறு கிடைக்கும். இந்தச் சம்பளக்காரர்களின் உடைமைகள் அனைத்தையும் ஒரு மஞ்சள் துணிப்பையில் வைத்து ஒரு ஆணியில் தொங்க விட்டிருப்பார்கள். அந்த மஞ்சள் பையில் இரண்டு கைலிகள், இரண்டு துண்டுகள், ஒரு வேட்டி, ஒரு சட்டை இருக்கும். இந்த வேட்டி சட்டை வெளியூர் செல்லும் பொழுது அணிவது. மற்ற நாள்களில் அதற்கு வேலையில்லை.

Representational Image
Representational Image

கைலி துண்டை துவைப்பதற்கு கிளம்பும் முன், ஆத்தா உப்பு சோப்பு குடுங்க என்று வாங்கிக்கொண்டு கண்மாயில் போய் துவைப்பார்கள். உப்பு சோப்பு என்பது நீளமான சோப். வசதியான வீடுகளில்கூட சிறிய கத்திகள் இருக்காது. அதனால், சடம்பை* அந்த சோப்பின் மீது கட்டி ஒருபுறம் இழுப்பார்கள். அதன் மூலம் ஒரு சிறிய துண்டு சோப்பு கிடைக்கும். இந்த சோப்பைத் துணியில் போட்டு துவைக்கும்போது நுரை வந்து நான் பார்த்ததில்லை. பிரச்னை சோப்பிலா, அழுக்கான துணியிலா அல்லது தண்ணீரிலா என்று தெரியவில்லை. சோப்பு போட்டு துவைத்தோம் என்ற உணர்வைத் தருவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள் அது.

குளிப்பதற்கு சோப் கிடையாது. ஒரு முறை நான் குளிப்பதற்கு வைத்திருந்த சந்திரிகா சோப்பை ஒரு சம்பளக்காரரிடம் கொடுத்தேன். அய்யய்ய, அதைப் போய் எவனாவது போடுவானா என்றார்! குளித்துவிட்டு தலையில் தேய்க்க நல்லெண்ணெயும் அதே ஆத்தாதான் உள்ளங்கையில் ஊற்றுவார். இன்றைய தலைமுறைக்கு இப்படி ஒரு வாழ்க்கை முறை இருந்ததே ஆச்சர்யமாக இருக்கும்.

பெரும்பாலான வீடுகளில் அடுப்பு கூட்டுவதே ஒரு நாளைக்கு ஒருமுறை தான் நடக்கும். சுள்ளிகளை* அடுக்கி எரிப்பதால், அடுப்புக் கூட்டுவது என்று சொல்வார்கள். தீப்பெட்டி எல்லா வீடுகளிலும் இருக்காது. அந்த ஊரில் உள்ள வசதியான வீட்டிலிருந்து ஒரு கரண்டியில் கங்கு* வாங்கி அதை வைத்து அடுப்பு கூட்டுவார்கள்.

Representational Image
Representational Image

மாலை நேரத்தில் அடுப்பு கூட்டி கூழோ சோறோ சமைப்பார்கள். அதற்கு ஒரு குழம்பு வைப்பார்கள். அந்தக் குழம்பை சோற்றில் ஊற்றிவிட்டு, அதில் கிடக்கும் கத்திரிக்காயை வெஞ்சனமாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஓரே காய் கத்திரிக்காய்தான். சாம்பாரிலும் புளிக் குழம்பிலும் பயன்படுத்தப்படும் காய் அது மட்டுமே.

தீபாவளி பொங்கல் போன்ற நாள்களில் பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை செய்வார்கள். இதற்கான மாவை அரைப்பதற்கு ஆட்டுக்கல் என்றொன்று இருந்தது. ஒரு குழியில் அரிசி மற்றும் உளுந்தைப் போட்டு அதன் மீது கல்லை வைத்து, அந்தக் கல்லை ஒருவர் சுற்ற வேண்டும். இன்னொருவர் மாவை தள்ளிவிடுவார். எனவே, மாவரைக்க இரண்டு பேர் வேண்டும். சில திறமையான பெண்கள், ஒரு கையால் மாவைத் தள்ளிவிட்டு இன்னொரு கையால் மாவாட்டவும் செய்வார்கள்.

என் பாட்டி வீட்டில் சுடும் தோசையை என் அம்மாவும் செய்வார். ஆனால், அதை ஊத்தப்பம் என்று சொல்வார்! ஒரு பொருளின் பெயர் 6 கிமீ தூரத்தில் மாறிவிடுகிறதே என்று அந்தக் காலத்தில் ஆச்சர்யப்பட்டேன்! பல வீடுகளில் பண்டிகை பலகாரம் இட்லியும் ஊத்தப்பமும்தான். அந்தக் காலத்தில் இதைக் கவனித்த நான், மனிதனைவிட மாட்டுக்கு நல்ல உணவு தந்தார்கள் என்று நினைத்துக்கொண்டேன். மாட்டுக்கு எள்ளுப்புண்ணாக்கும் தவிடும் கலந்த நீரை ஊரலில் ஊற்றி குடிக்கத் தருவார்கள்.

சில நேரங்களில் கடலைப்புண்ணாக்குத் தருவார்கள். அது தவிர வைக்கோலும் புல்லும் தருவார்கள். இவ்வளவு வகைகள் மனித உணவில் இருக்கவில்லை. இரவு 8 மணிக்கெல்லாம் வீட்டின் வெளியே பாயை விரித்து பொட்டணத்தை* தலைக்கு வைத்து படுத்துவிடுவார்கள். பாய் இல்லாதவர்கள், அருகே நிற்கும் மாட்டு வண்டியில் தூங்குவார்கள்.

Representational Image
Representational Image

கோழி கூப்புட எழுந்து சாம்பலையோ* வேலங்குச்சியையோ, ஆலங்குச்சியையோ வைத்து பல் தேய்த்துவிட்டு நீராகாரத்தை குடித்துவிட்டு ஆண்கள் மாடுகளை வண்டியில் அல்லது கலப்பையில் பூட்டி வயலுக்குக் கிளம்பிவிடுவார்கள். ஒரு தூக்குவாளியில் கஞ்சியை ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தை உரித்துப் போட்டிருப்பார்கள்.

மதிய உணவுக்கு வெங்காயத்தைக் கடித்துக்கொண்டு கஞ்சியை சாப்பிடுவார்கள். பெண்கள் கடகப் பெட்டியுடன்* வேலைக்குக் கிளம்புவார்கள். ஒரு ஏர் உழுபவருக்கு பின்னால், ஒரு பெண் கொட்டானில்* உள்ள விதைகளைத் தூவிக்கொண்டே செல்வார்.

ஏர் உழுவது என்பது மாட்டுக்கும் மனிதனுக்கும் கடினமான வேலை. மண்ணுக்குள் புதைந்த கலப்பையை இழுத்துக்கொண்டு மாடு நடக்க வேண்டும். மனிதன் மண்ணுக்குள் கலப்பையை ஆழமாக அழுத்த வேண்டும். இதைச் சில முறை முயன்று பார்த்து ஏர் உழும் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். பூஸ்டும் ஹார்லிக்ஸும் குடித்து வளர்ந்த என்னால் கலப்பையை மண்ணுக்குள் அழுத்த முடியவில்லை. கஞ்சியும் வெங்காயமும் சாப்பிட்டவர்கள் எளிதாக உழுதார்கள். அந்த வயதில் இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நாத்து நடுவது என்பது இன்னொரு முறை. இந்த முறையில் நெல்லை ஒரு சிறிய பகுதியில் (பாத்தி) விளைவித்து, அந்தப் பயிரை (நாத்து) எடுத்து நீர் நிரம்பிய வயலில் நடுவார்கள். இதைப் பெரும்பாலும் பெண்களே செய்வார்கள். ராசியானவர் என்று என் அம்மாவை முதல் நாத்தை நடச் சொல்வார்கள். இதுபோல முதல் நாத்தை நட்ட என் உறவினர் ஒருவரை சரமண்டலம் என்ற ஒரு பூச்சிக் கடித்து இறந்துவிட்டார். இதைப் பார்த்த நான், எல்லோரும் ஷூ போட்டுக்கொண்டு வேலை செய்யுங்கள் என்று சொன்னேன்.

Representational Image
Representational Image

வயல் சாமி, அதுக்குள்ளே செருப்போட இறங்கக் கூடாது என்று சொன்னார்கள். இன்றைக்கும் வெறும் காலுடன்தான் வேலை செய்கிறார்கள். மழைக்காலம் முடிந்த பிறகு, பயிர்களுக்கு கிணற்றிலிருந்து நீர் இறைப்பார்கள். இதற்குப் பல முறைகள் இருந்தது.

கமலை என்பது ஒரு நீள மரத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய பானை. இந்தப் பானையை சால் என்று சொல்வார்கள். மரத்தின் மீது ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு ஒருவர் நடப்பதன் மூலம், கமலை கிணற்றிலிருந்து நீரை மேலே கொண்டுவரும். இதில் நடப்பது கடினம்.

ஏறக்குறைய கயிற்றில் நடப்பது போன்றதே இந்த முறை. இன்னொரு முறையில் இரண்டு ஆண்கள் கமலையுடன் இணைக்கப்பட்ட கயிற்றை இழுத்துக்கொண்டு முன்னும் பின்னும் ஓடுவார்கள். பெண்களும் இதைச் செய்வார்கள். இதனால் நீர் இறைக்கப்படும். அதற்கடுத்தது, மாடுகளைப் பயன்படுத்தி கமலையை இழுப்பது. மாடு வைத்து கமலை இறைப்பது தொடர்பாக விகடனில் த.வினோதா என்பவர் கட்டுரை எழுதியுள்ளார். அதில், கமலையுடன் விவசாயி கருப்பையா படமும் உள்ளது. வாசகர்கள் அந்தக் கட்டுரையைப் படிக்க அறிவுறுத்துகிறேன் .(https://www.vikatan.com/literature/agriculture/59305-success-story-of-farmer). இப்படி இறைக்கப்பட்ட நீர் வாய்க்கால்களில் ஓடி பயிர்களுக்குச் செல்லும். அந்த நீர் களைகளையும் வளர்த்து விடும்.

Representational Image
Representational Image

களை எடுப்பது என்பது ஒரு கலை. கடலை போன்ற பயிர்களின் ஊடே இருக்கும் களை எளிதாகத் தெரியும். களை என்பது புல். கடலைச் செடிகள் இலைகளுடன் இருப்பதால் எளிதாக களைகளைக் கண்டுபிடித்து கொத்துவானால்* கொத்தி விடுவார்கள். ஆனால், நெல் பயிறுடன் இருக்கும் களையைக் கண்டுபிடிப்பது கடினம். இரண்டும் ஒரே மாதிரி இருக்கும்.

நான் சிறுவனாக இருந்த சமயத்தில் பலமுறை முயன்றும் நெல்லுக்கும் களைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. களையெடுக்கும் பெண்கள் எளிதாகக் கண்டுபிடித்து கொத்திவிடுவார்கள். நெல் வளர்ந்த பின் பயிர்களை அறுத்து களத்துமேட்டுக்குக் கொண்டுவருவார்கள். களத்து மேட்டில் நெல்லடிப்பார்கள். "மாடு கட்டி போரடித்தால் மாளாது– செந்நெல் என்று யானை கட்டி போரடிக்கும் மாமதுரை’’ என்று தமிழிலக்கியத்தில் பாடப்பட்டிருக்கிறது. யானை கட்டி போரடித்து நான் பார்த்ததில்லை. ஆனால், மாடு கட்டி போரடித்து நான் பார்த்திருக்கிறேன்.

நெல்லுடன்கூடிய பயிரை பரப்பி, அதன் மீது மாடுகளும் மனிதர்களும் நடப்பார்கள். மாடுகள் மிதிப்பதால், நெல் பயிரில் இருந்து உதிரும். இப்படி நடக்கும்பொழுது மாடு சாணி போட்டால், நெல் வீணாகிவிடும். அதனால், மாடு சாணி போடும்பொழுது வைக்கோலால் சாணியைப் பிடித்து வெளியே போடுவார்கள். பின்னர் வைக்கோலை அள்ளினால், நெல் கீழே கிடைக்கும். அதை எடுத்து கோணிச்சாக்கில் வைத்து தைத்து வீட்டுக்கு மாட்டு வண்டியில் எடுத்து வருவார்கள்.

Representational Image
Representational Image

வசதியானவர்கள் நெல்லை குலுமையில் சேமித்து வைப்பார்கள். குலுமையை குதிர் என்றும் சொல்வார்கள். "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற பழமொழியில் வருகிற குதிர்தான் குலுமை. இது தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டது.

மாடும் மனிதனும் இணைந்து செய்யும் பல வேலைகளை சிறு வயதில்ருந்து கவனித்து வருகிறேன். மகாராஷ்டிராவின் ஊரகப்பகுதிகளில் பயணம் செய்த பொழுது, மாட்டை கரும்பு ஜூஸ் தயாரிக்க பயன்படுத்துவது கண்டு ஆச்சர்யமடைந்தேன். இதெல்லாம் ஒரு விஷயமா, மாட்டை கலவரம் செய்யவே பயன்படுத்துகிறார்கள் என்பதுதானே உண்மை.

- கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

*நெல்லுச்சோறு - அரிசி சாதம் *சம்பளக்காரர்கள் - வருட சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆண் தொழிலாளர்கள் *சடம்பு - சணல் கயிறு *சுள்ளிகள் - கருவேல முள் குச்சிகள் *கங்கு - நெருப்பில் எரியும் கரித்துண்டு *வெஞ்சனம் - தொட்டுக்கொள்ள பயன்படும் காய்கறிக் கூட்டு அல்லது பொரியல் *பொட்டணம் - ஒரு சேலை அல்லது பழைய வேட்டியில் துணிகளை வைத்து கட்டுவார்கள். அதுதான் பொட்டணம். தலையணையாக பயன்படுத்துவார்கள்*சாம்பல் - மாட்டு சாணத்தை சுவரில் ஒட்டி காய வைத்து கிடைப்பது எரு. இதை விராட்டி என்றும் சொல்வார்கள். இதை எரித்தால் கிடைப்பது சாம்பல். இதைப் பல துலக்க பயன்படுத்துவார்கள். *கடகப் பெட்டி - பனை ஓலையில் செய்த வட்ட வடிவ பெட்டி *கொட்டான் - பனை ஓலையில் செய்த சிறிய வட்ட வடிவ பெட்டி *கொத்துவான் - மண்வெட்டியின் சிறிய வடிவம் *குலுமை - நெல்லை சேமிக்கும் பெரிய கலன். ஏறக்குறைய பத்தடி உயரம் இருக்கும்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு