Published:Updated:

பீகார் விவசாயிகளை நாடோடிகளாக்கிய எம்.எஸ்.பி நீக்கம்!

பீகார்
பிரீமியம் ஸ்டோரி
பீகார்

அலசல்

பீகார் விவசாயிகளை நாடோடிகளாக்கிய எம்.எஸ்.பி நீக்கம்!

அலசல்

Published:Updated:
பீகார்
பிரீமியம் ஸ்டோரி
பீகார்

மத்திய அரசின் வேளாண் சட்டங் களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 10 கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் தொடர்கிறது. உச்ச நீதிமன்றம் அமைத்த குழுமீதும் நம்பிக்கை இல்லையென விவசாயிகள் தெரிவித்துவிட்டார்கள். போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து உணவு மற்றும் வர்த்தகக் கொள்கை ஆய்வாளரும் வேளாண் நிபுணருமான தேவிந்தர் சர்மாவுடன் நேர்காணல் நடத்தியது பசுமை விகடன். கடந்த இதழில் வெளியான அந்த நேர்காணலின் தொடர்ச்சி இங்கே இடம் பெறுகிறது.

பீகார் விவசாயிகளை 
நாடோடிகளாக்கிய எம்.எஸ்.பி நீக்கம்!

‘‘சந்தை பொருளாதார அமைப்பால் பெரும் நிறுவனங்கள் மட்டுமே வளரும். சிறு விவசாயிகள் விவசாயத்திலிருந்தே வெளியேற்றப்படுவர். இது உலகம் முழுவதும் நடக்கிறது. சந்தை பொருளா தாரத்தால் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பது அமெரிக்காவிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கு நிகழும் விவசாயி களின் தற்கொலையே அதற்குச் சாட்சி. தற்போது, அமெரிக்காவில் ஒரு பொருளை நுகர்வோர் ஒரு டாலருக்கு வாங்கினால், விவசாயிகளுக்கு 8 சதவிகிதம் மட்டுமே சென்றடைகிறது. அதனால்தான் அமெரிக்காவில் விவசாயிகள் நிலை பரிதாபமாக உள்ளது. ஆனால், அங்கு விவசாயிகளுக்கு ஒரு வருடத்துக்கு 62,000 டாலர் மானியம் கிடைக்கிறது. இந்தியாவில் விவசாயிகளுக்குக் கிடைப்பது வெறும் 280 டாலர்கள் மட்டுமே.

தற்போது பஞ்சாபில் கோதுமை உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு 5.2 டன், நெல் உற்பத்தி 6.6 டன். அமெரிக்கா, சீனாவைவிட நமது உற்பத்தி அதிகம். ஆனாலும் நம் விவசாயிகள் ஏழைகளாக இருக்கிறார்கள். காரணம், நம்நாட்டில் விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பதுதான். குறைந்தபட்ச ஆதார விலைகூட இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் அதை உறுதிப்படுத்தவில்லை.

2006-ம் ஆண்டு பீகார் அரசு குறைந்தபட்ச ஆதார விலையை ரத்துச் செய்து, சந்தை அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் தனியார் முதலீடுகள் குவியும். விவசாயிகள் சிறந்த விலையைப் பெறுவார்கள் என்றது அம்மாநில அரசு. 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை அப்படி எந்தவொரு அதிசயமும் நிகழவில்லை. விவசாயத்தை விட்டுப் பலர் வெளியேறினார்கள். கொரோனாவால் நாடு முடக்கப்பட்டபோது, 80 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் பீகாரிகள். வாழ்வாதாரத்துக்காக நகர்ப்புறம் நோக்கிச் சென்ற விவசாயிகள்தாம் அவர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த அறுவடை பருவத்தில் பீகாரில் உற்பத்தி செய்யப்பட்ட 50 லட்சம் டன் நெல் பஞ்சாபில்தான் விற்பனை செய்யப்பட்டது. ஏனென்றால் பஞ்சாபில் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை 1,800 ரூபாய். பீகாரில் குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததால், உள்ளூர் விவசாயிகள் அதன் பலனை அனுபவிக்க முடியவில்லை. மற்றொரு வாதமும் நம் முன் வைக்கப்படுகிறது. தற்போது 6 சதவிகித விவசாயிகள் மட்டுமே குறைந்த பட்ச ஆதரவு விலை பெறுகிறார்கள். சுமார் 90 சதவிகிதம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை. பிறகு நமக்கேன் எம்.எஸ்.பி?

நாம் இதை அப்படிப் பார்க்கக் கூடாது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்னவென்றே தெரியவில்லை. இதன் பலன் தெரியாததால், வேளாண் சட்டங்கள் குறித்து மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுகுறித்த புரிதல் தேவை. 6 சதவிகித விவசாயிகளுக்கு மட்டும் ஆதார விலை கிடைத்தால் போதாது, 100 சதவிகித விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம்.

குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. தற்போது கோதுமை, நெல் உட்பட 23 பயிர்களுக்கு மட்டுமே எம்.எஸ்.பி நிர்ணயிக்கப்படுகிறது. அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான (ஓ.இ.சி.டி) அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் 2000 - 2016 காலகட்டத்தில் இந்திய விவசாயிகளுக்கு ரூ.45 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. குறுகிய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரிழப்பு அது. ஒரு அசாதாரண நெருக்கடி. உடனே அரசு எழுந்து நின்று செயல்பட்டிருக்க வேண்டும். சமூகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இத்தகைய அசாதாரணப் பிரச்னையை அரசு உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை. எந்தத் தொலைக்காட்சியும் விவாதிக்கவில்லை, ஏன் காட்சிப்படுத்தக்கூட முடியவில்லை.

பீகார் விவசாயிகளை 
நாடோடிகளாக்கிய எம்.எஸ்.பி நீக்கம்!

அதே வேளை, தொழில் நிறுவனங்கள் 5 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதற்காக அவை வானுக்கும் பூமிக்கும் குதிக்கின்றன. கொள்கை முடக்கம், அரசு கொள்கை மாற்றம் எனப் பல நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. கார்ப்பரேட் கடன் குறித்து விவாதிக்கும் ஊடகங்கள் ஏன் விவசாயிகளைப் பற்றிப் பேசவில்லை. அதைப்பற்றி யாரும் கேள்விகூடக் கேட்கவில்லை. கடனைச் செலுத்த முடியாததால், பல விவசாயிகள் சிறைக்குச் சென்றனர். எந்தவொரு தொழிலதிபரும் கடனைச் செலுத்தாதற்காகச் சிறைக்குச் சென்றதில்லை. விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்.

நாட்டின் பொருளாதார வடிவமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வேளாண்மை இந்த நாட்டின் சுமையாகக் கருதப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் இந்தியாவின் பொருளாதார ஆலோசகர்கள். விவசாயி, தொழிலதிபர் இருவரும் ஒரே வங்கியில் கடன் பெறுகிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்தாதற்கு ஒருவருக்குச் சாதாரணக் கண்டிப்புகூட இல்லை. ஆனால், மற்றவருக்குக் கடுமையான எச்சரிக்கை, தண்டனை. இதுதான் நமது பொருளாதாரக் கட்டமைப்பில் உள்ள குளறுபடிகள். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது 90,000 கோடி வரை கார்ப்பரேட் நிதி மோசடி நடந்துள்ளது. ஆனால், அதை வாராக்கடன் என்றழைக்கிறார்கள், யாராவது இதைப் பற்றிப் பேசுகிறார்களா? இல்லை. ஒரு விவசாயிக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்துக்கு 18,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை மிகப்பெரிய முதலீடு என்கிறார்கள்.

பீகார் விவசாயிகளை 
நாடோடிகளாக்கிய எம்.எஸ்.பி நீக்கம்!

தற்போது விவசாயிகளுக்கு நிலவும் நெருக்கடியை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, 2014-19 காலகட்டத்தில், செலுத்த முடியாத சொத்தாக (Impaired Asset) 7.9 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 9 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது. ஐந்து ஆண்டுகளில், கார்ப்பரேட்டுகள் 16.88 லட்சம் கோடி பலன் அடைந்தனர். யாராவது இதுகுறித்துக் கேள்வி கேட்டார்களா? இல்லையே.

பீகார் விவசாயிகளை 
நாடோடிகளாக்கிய எம்.எஸ்.பி நீக்கம்!

விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்? ஏன் இந்த அநீதி? விவசாயிகளுக்காகத் தோள் கொடுக்க வேண்டிய தருணம் இது. விவசாயிகள் ஒரு தனி நாட்டில் வாழவில்லை. நாட்டின் மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் அவர்கள். தற்போது சமூகம் சிதைந்துள்ளது. அநீதி இழைக்கப்படும் விவசாயிகள் பக்கம் நாம் நிற்க வேண்டும். அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்திய விவசாயிகளுக்கு அதிக லாபம் கொடுத்து வரும் அமுல் நிறுவனத்தின் கூட்டுறவு முறை பற்றியும் இன்னும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவை அடுத்த இதழில் தொடரும்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism