Published:Updated:

“படம் எடுக்க வைத்த பசுமை விகடன்!” - நெகிழ்கிறார் இயக்குநர் இரா.சரவணன்

இயக்குநர் இரா.சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர் இரா.சரவணன்

பகிர்வு

விகடனில் பத்திரிகையாளராக இருந்து திரைப்பட இயக்குநராகியிருக்கும் இரா.சரவணன், இயற்கை விவசாயத்தின்மீது தீவிரப் பற்று கொண்டவர். மீத்தேன் பிரச்னையை மையப்படுத்திக் ‘கத்துக்குட்டி’ என்ற திரைப்படம் எடுத்தவர். தற்போது ஜோதிகாவை வைத்துத் தனது அடுத்த படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். திரைப்பட இயக்குநராகப் பல்வேறு ஊர்களுக்குப் பயணப்படும்போது விவசாயிகளைச் சந்திப்பதையும் அவர்களிடம் அறிந்துகொண்ட புதுத் தகவல்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பசுமை விகடனுக்கும் அவருக்குமான உறவு குறித்து அவரிடம் பேசினோம்...

“மாணவப் பத்திரிகையாளராக விகடனுக்குள் அடியெடுத்து வைத்துத் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஜூனியர் விகடன் நிருபராக ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். பரபரப்பான அரசியல் கட்டுரைகள் எழுதினாலும் ஆரம்பத்திலிருந்தே விவசாயப் பிரச்னைகளின் மீது தனிக் கவனம் செலுத்தி ஜூ.வி-யில் எழுதியிருக்கிறேன். ‘ஒரு பத்திரிகையாளனாக நீ என்னத்த சாதிச்ச?’ என்ற எண்ணம் எனக்குள் எழும்போதெல்லாம், ‘வறுமையின் கோரப் பிடியில் சிக்கி, டெல்டா மக்கள் நத்தைகளை மட்டுமே உணவாகச் சாப்பிட்ட சம்பவம் குறித்து எழுதி, சட்டமன்றத்தில் அதுகுறித்த விவாதத்தை ஏற்படுத்தியது; ஒரு அரசியல்வாதியின் பேராசைக்காக வெட்டப்படவிருந்த பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஒரு மா மரம் குறித்து எழுதி அதைக் காப்பாற்றியது’ என ஜூ.வி-யில் நான் எழுதிய விவசாயப் பிரச்னைகள் சார்ந்த கட்டுரைகளே என்னை ஆசுவாசப்படுத்தும். காரணம், நான் எளிய விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்.

இயற்கையைப் புரிய வைத்த பசுமை விகடன்

டெல்டாவின் விவசாயப் பிரச்னைகள்குறித்து நிறைய எழுதி அதில் ஆசுவாசம் அடைந்தாலும், விவசாயிகளை அங்கீகரித்துச் சாதனையாளர்களாக அவர்களுக்கு மகுடம் சூட்டும் வகையில், விகடன் குழுமத்தில் ‘பசுமை விகடன்’ ஆரம்பிக்கப்பட்ட பிறகுதான் என் பத்திரிகையாளர் பணி பூரணம் அடைந்ததாக நினைக்கிறேன். பசுமை விகடன் தொடங்கப்படுவதற்கு முன்பு, ‘நாம் ஏதாவது பெரிதாகச் சாதிக்க வேண்டும். ஊரே நம்மைப் பற்றிப் பெருமையாகப் பேச வேண்டும்’ என்று மனசுக்குள் அலையடித்துக்கொண்டே இருக்கும். உண்மையில் பெரிய சாதனை என்பது நம்முடைய சூழலை நாம் எப்படி மதிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இயற்கையின் படைப்பைத் தாண்டிப் பெரிய வெற்றி எதுவும் இல்லை என்று எனக்குப் புரிய வைத்தது பசுமை விகடன்தான். படிப்பு, அரசியல், விளையாட்டில் சாதிப்பது மட்டும்தான் சாதனை என்றிருந்த பொதுப்புத்தியை தலைகீழாகப் புரட்டிப்போட்டு விவசாயத்தில் சாதிப்பதுதான் பெரிய சாதனை என்பதை உலகுக்குச் சொன்னது பசுமை விகடன்’’ என்று ஆத்மார்த்தமாகப் பேசியவர், பசுமை விகடன் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தாக்கத்தை ஏற்படுத்திய விவசாயிகள்

“பசுமை விகடன் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஒரு இதழைக்கூட நான் தவறவிட்டதில்லை. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், காட்டுப் பூ பூத்துக்கொண்டிருப்பதைப் போல உழைப்பை வழங்கிக்கொண்டிருக்கும் விவசாயிகள்தாம் மிகச் சிறந்த முன்மாதிரி என்பதை என்னைப் போன்ற பலருக்குப் புரியவைத்தது பசுமை விகடன்தான். விகடனில் பணியாற்றும்போது பசுமை விகடனுக்காக நான் சந்தித்த விவசாயிகள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக, துளசி அய்யா வாண்டையாரும், கோ.சி.மணியும் என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தினார்கள். அவர்களை அரசியல்வாதிகளாகவே பார்த்துப் பழகியிருந்த நான், அவர்கள் விவசாயத்தை அபரிமிதமாக நேசிக்கக் கூடியவர்கள் என்று தெரிந்தபோது அதிசயித்துப்போனேன். கோ.சி.மணியைப் பற்றி ஜூ.வி-யில் நிறைய எதிர்மறையான கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால், பசுமை விகடனுக்காக அவரைச் சந்திக்கும்போது அவர் சொன்ன வார்த்தை இன்றும் மறக்கவில்லை.

இயக்குநர் இரா.சரவணன்
இயக்குநர் இரா.சரவணன்

‘அரசியல்ல நிறைய பிரஷர் இருக்கும். தலைவரேகூடச் சில நேரங்கள்ல நம்மள திட்டிருவாரு. அந்த மாதிரி சமயத்துல கட்சிக்காரங்ககிட்டயோ... இல்லை மத்தவங்ககிட்டயோ அதைப் பகிர்ந்துக்க முடியாது. அப்படியே நேரா வயக்காட்டுக்கு வந்திடுவேன் தம்பி. வயல்ல வேலை பார்க்குறவங்களோட பேசிச் சிரிச்சிகிட்டு... அவங்க சமைக்கிறதைச் சாப்பிட்டுகிட்டு... பயிர்களுக்கு மத்தியில ரெண்டு நாள் கழிச்சுட்டு வந்தேன்னா போதும். எல்லாத் துயரத்தையும் மறந்து அப்படியே குழந்தை மாதிரி மாறிடுவேன்’ என்றார். அதாவது, வயக்காடும் வயக்காட்டு வாழ்க்கையும் நம்மை எல்லா விதத்திலும் சரிசெய்துகொள்ள வழிவகைச் செய்து வைத்திருக்கிறது. ஆனால், நாம் அதை விட்டுட்டு எதை நோக்கி ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு விவசாயியிடமும் கோடிக்கணக்கான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களுக்குக் காதுகொடுக்கத்தான் ஆள் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் பூர்த்திச் செய்தது பசுமை விகடன்தான். விவசாயிகளிடமுள்ள அபூர்வத் தகவல்களை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறது பசுமை விகடன்.

சில மாதங்களுக்கு முன்பு எனக்குப் பாம்பு கடித்துவிட்டது. மரணத்தின் விளிம்பைத் தொட்டு உயிர் மீண்டேன். கிட்டத்தட்ட எனக்கு இது மறுஜென்மம். பாம்பு கடித்துவிட்டது என்று தெரிந்ததும் அடுத்த நொடியே வேப்பிலையைக் கடித்துப் பார்த்தேன்... கசக்கவில்லை; மிளகாயைக் கடித்துப் பார்த்தேன் உறைக்கவில்லை. உடலில் விஷம் ஏறிவிட்டது என்பது புரிந்துவிட்டது. உடனடியாக வெற்றிலை, மிளகு, உப்பு மூன்றையும் மடித்து மென்று அதன் சாற்றை இறக்கினேன். அதன் பிறகு, பேராவூரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ ரீதியாக என்னைக் காப்பாற்றினாலும் கூட, ‘முதலுதவியாக நீங்கள் செய்த விஷயங்கள்தான். இவ்வளவு விரைவில் மீள்வதற்குக் காரணம். விஷம் பெரியளவில் ஏறாமல் தடுத்தது நீங்கள் செய்த இயற்கை வைத்தியம்தான்’ என்றார் மருத்துவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவரான மன்னாரு

அந்த இயற்கை வைத்தியத்தைக் கற்றுக் கொடுத்தது பசுமை விகடன்தான். மரத்தடி மாநாடு, மண்புழு மன்னாரு போன்ற பகுதிகளின் மூலம் இப்படி ஏராளமான பொக்கிஷத் தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது போன்ற விஷயங்களைப் படித்ததும் இருபது, முப்பது பேரிடமாவது சொல்லிவிடுவேன். காரணம், அது இன்னும் பலருக்குச் சென்றடைவது மட்டுமல்லாமல் எனக்கும் ஆழமாகப் பதிந்துவிடும். அந்தப் பயிற்சிதான் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் அதற்கான முதலுதவி சிகிச்சையை எடுத்துக்கொண்டதற்குக் காரணம். என்னுடைய மறுவாழ்வுக்குக் காரணம் பசுமை விகடன்தான் என்றால் அது மிகையல்ல” என்று நெகிழும் இரா.சரவணன், தன் சொந்த ஊரில் உள்ள வீட்டில் ஏராளமான மரங்களை வளர்த்து வருகிறார். இதோடு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். அது தொடர்பாகப் பேசியவர்,

இயக்குநர் இரா.சரவணன்
இயக்குநர் இரா.சரவணன்

வீட்டைச் சுற்றி காடு

‘‘அதற்குக் காரணம் பசுமை விகடன்தான். பசுமை விகடனுக்காக மரம் தங்கசாமியை நான் போய்ப் பார்த்தபோது, ‘விகடனிலிருந்து வந்திருக்கீங்கன்றது ரொம்பப் பெருமையா இருக்கு’ என்றவர், தன் வீட்டில் உருவாக்கியுள்ள காட்டைச் சுற்றிக் காண்பித்தார். அதைப் பார்த்து நான் மிரண்டுவிட்டேன். அப்போது எனக்குள் ஏற்பட்ட பாதிப்புதான் என் சொந்த ஊரில் வீட்டில் மரங்கள் வளர்ப்பதற்குக் காரணம். ஊரில் 10 சென்ட் இடம். அதில் 800 சதுர அடியில் வீடுபோக மீதமுள்ள இடத்தில் 210 மரக்கன்றுகள் நட்டு அது அத்தனையையும் மரங்களாக்கினேன். செம்மரம், மகோகனி, ரோஸ்வுட் எனப் பலவகையான மரங்கள் செழித்து வளர்ந்து என் வீடு காடுபோலக் காட்சியளிக்கிறது. கஜா புயல் பல மரங்களை வீழ்த்திவிட்ட நிலையில், இப்போது 107 மரங்கள் நிற்கின்றன. ஊருக்குப் போனதும் ஒவ்வொரு மரத்திடமும் போய்ப் பேசுவதுதான் என் முதல் வேலை. அதைப் பார்த்துவிட்டுச் சுற்றியுள்ளவர்கள்,

‘பைத்தியமாடா நீ...?’ என்பார்கள். ‘என் புருஷனுக்கு வேப்பிலை அடிக்கணும்’ என்பார் என் மனைவி. ஆனால், அதையெல்லாம் காதில் வாங்காமல் நான் மரங்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். அது அவ்வளவு ஆசுவாசமாக இருக்கும்” என்று சிலாகித்தவர் கத்துக்குட்டி திரைப்படம் குறித்துப் பேசினார்.

“பக்கா கமர்ஷியல் டைரக்டர் ஆக வேண்டும்; படத்தில் ஐந்து ஃபைட்டாவது இருக்க வேண்டும் என்பதுதான் அதிகபட்ச இலக்கு. தீவிர விஜயகாந்த் ரசிகனான நான் திடீரென்று விவசாயம் சம்பந்தமாக, அதுவும் மீத்தேன் பிரச்னையை மையமாக வைத்துப் படம் எடுக்கிறேன் என்று சொன்னபோது என் வீட்டில்கூட யாரும் நம்பவில்லை. ‘கத்துக்குட்டி’யில் இரண்டரை நிமிடம்தான் மீத்தேன் பற்றி வரும். அந்த இரண்டரை நிமிடத்துக்காகத்தான் இரண்டரை மணி நேரப் படத்தையே எடுத்தேன். அதற்குத் தூண்டுகோலாக இருந்ததும் பசுமை விகடன்தான். ஆகையால், அந்தப் படத்துக்குச் ‘ச.அறிவழகன் சட்டப்பேரவை உறுப்பினர்’ என்று பசுமை விகடன் ஆசிரியருடைய பெயரைத்தான் முதலில் தலைப்பாக வைத்திருந்தேன். ஆனால், வேறுசில காரணங்களால் அதை மாற்ற வேண்டியதாகிவிட்டது. ஆனாலும், படத்தின் கதாநாயகன் பெயர் ச.அறிவழகன்தான். இப்போதுவரை இதுகுறித்து அறிவழகன் சாரிடம் சொன்னது கிடையாது’’ என்றவர் நிறைவாக,

‘இயற்கைக்கு எந்தப் பாதகமும் செய்யாமல் ஒரு தாயின் மடியில் தூங்குவதைப் போல, நாம் இயற்கையைச் சார்ந்து வாழ்ந்துவிட்டுப் போய்விட வேண்டும். அதுதான் வாழ்க்கை’ என்ற அறத்தை நான் கற்றுக்கொண்டது பசுமை விகடனில்தான். அந்தப் பார்வை வர ஆரம்பித்துவிட்டாலே... பொறாமை, பழி வாங்கும் குணம், அடுத்தவர்களைப் போட்டியாக நினைத்துச் சதி செய்து வீழ்த்துவது என அறம் தவறிய எந்தச் செயலும் நம் மனதில் நிற்காது. ஒருவனை இயற்கையோடு தொடர்புபடுத்தினால் அவன் மிகவும் தூய மனிதனாக மாறிடுவான். பூசலற்ற மனது அவனுக்கு வந்துவிடும். அந்தப் பக்குவத்தை எனக்கு ஏற்படுத்தியது பசுமை விகடன்தான்” என்று நெகிழ்ச்சியோடு விடைகொடுத்தார்.