Published:Updated:

தானியம் சேமிக்கும் `பண்டகக்குழி’ கண்டுபிடிப்பு... பண்டையத் தமிழர்களின் `பலே' வேளாண் அறிவு!

பண்டகக் குழி - பேராசிரியர் ஆ.பிரபு

திருப்பத்தூர் மாவட்டத்தில், பழங்காலத்தில் தானியங்களைச் சேமித்து வைக்கும் நிலவறைப் போன்ற `பண்டகக் குழி’ கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

தானியம் சேமிக்கும் `பண்டகக்குழி’ கண்டுபிடிப்பு... பண்டையத் தமிழர்களின் `பலே' வேளாண் அறிவு!

திருப்பத்தூர் மாவட்டத்தில், பழங்காலத்தில் தானியங்களைச் சேமித்து வைக்கும் நிலவறைப் போன்ற `பண்டகக் குழி’ கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

Published:Updated:
பண்டகக் குழி - பேராசிரியர் ஆ.பிரபு

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் இருவரும் வழக்கமான கள ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, கொரட்டி கிராமத்தின் அருகே பழங்காலப் பண்டகக் குழியைக் கண்டுபிடித்தனர். இது பற்றி பேராசிரியர் ஆ.பிரபு கூறுகையில், ``கொரட்டி கிராமத்தின் அருகே அரசுக்குச் சொந்தமான கனிமம் வெட்டி எடுக்கப்படக்கூடிய `மைக்கா’ சுரங்கம் இருக்கிறது. அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மரங்களை நடுவதற்காக ஜே.சி.பி இயந்திரத்தால் பள்ளம் தோண்டினர். அப்போது, திடீரென ஏற்பட்ட வித்தியாசமான பள்ளத்தைக் கண்டு வியந்துபோய் எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். எனது குழுவினருடன் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தேன். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

பண்டகக் குழி
பண்டகக் குழி

ஏனெனில், அந்தக் குழி சாதாரணமானது கிடையாது. பண்டகக் குழி. அதாவது, தானியக் கிடங்கு என்றும் சொல்லலாம். மனித நாகரிக வளர்ச்சியில் `வேளாண்மை’ என்பது மிக முக்கியமான நகர்வாகும். அதிலும் குறிப்பாக, விளைபொருள்களை சேமித்து வைக்கும் பழக்கம் என்பது ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களிடம் இருந்திருக்கின்றன. ஆதிச்சநல்லூர், பொருந்தல் உள்ளிட்ட பல்வேறு அகழ்வாய்வுக் குழிகளில் இருந்து கண்டறியப்பட்ட தானியங்களே இதற்குச் சான்றாகும். விளைவித்தப் பொருள்களை ஆண்டுதோறும் பயன்படுத்தும் நோக்கத்தோடும், வறட்சிக் காலங்களில் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யவும் சேமிப்பு உதவுகிறது.

மேலும், பருவக் காலங்களில் மீண்டும் விளைவிக்க விதையாகவும் இந்தச் சேமிப்பு பயன்படுத்தப்படுகிறது. மைக்காமேடு என்ற இந்தப் பகுதியில் இதேபோன்ற 5 குழிகளைக் கண்டறிந்திருக்கிறோம். தற்போது ஆய்வு மேற்கொண்ட இக்குழியைத் தவிர்த்து ஏனையக் குழிகள் மூடப்பட்டுவிட்டன. பண்டகக் குழியானது 10 அடி ஆழமும், அதன் உட்புறம் குடையப்பட்டு 13 அடி சுற்றளவு கொண்டதாகவும் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இதன் வாயிலானது ஒன்றரை அடி சதுரஅளவு கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. வாயிற் பகுதியின் சுற்றுப்புறத்தை பலகைக் கற்களைக் கொண்டு அமைத்திருக் கிறார்கள்.

பேராசிரியர் ஆ.பிரபு
பேராசிரியர் ஆ.பிரபு

இக்குழியின் உள்ளே பாரம்பர்ய சிறுதானியமான `சாமை’ சேமிக்கப்பட்டுள்ளது. குழியின் உள்ளிருந்து பெறப்பட்ட மண்ணில் சாமை படிந்திருப்பதையும் உறுதிப் படுத்தியிருக்கிறோம். விளைவித்த தானியங்களை இதனுள் கொட்டிவைத்து வாயிற் பகுதியினை புற்களைக் கொண்டு மூடி அதன்மீது கற்களை வைத்து, பின்னர் மண்ணைப்போட்டு மூடிவிடுவர். அதற்கு அடையாளமாக ஒன்றை வைத்துக்கொள்வர். காற்றும் நீரும் உட்புக முடியாதபடி, இதன் அமைப்பு இருக்கிறது. இக்குழியினுள் சேமித்து வைக்கப்படும் தானியங்கள் வெகுநாள்கள் கெடாமல் பாதுகாப்புடனும் உயிர்ப்புடனும் இருக்கும். இவ்வமைப்பு தமிழர்கள் கண்டறிந்த பாரம்பர்ய சேமிப்புக் கிடங்காகும். தமிழர்களின் விவசாயத் திறனையும் சேமிப்புத் தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்ள இதுபோன்ற தானியக் கிடங்குகள் சான்றாக அமைக்கின்றன’’ என்றார் பெருமையோடு!