Published:Updated:

“டெல்லியில் டிராக்டர் பேரணி நடந்தே தீரும்!” - உறுதியுடன் நிற்கும் விவசாயிகள்!

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் விவசாயிகள் பல வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த பல வாரங்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் 136 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளை ஆராய்வதற்காக நான்கு நபர்கள் அடங்கிய குழுவையும் அமைத்தது.

“டெல்லியில் டிராக்டர் பேரணி நடந்தே தீரும்!” - உறுதியுடன் நிற்கும் விவசாயிகள்!

போராட்டக் குழுவினரோ, ‘‘நீதிமன்ற உத்தரவு மத்திய அரசுக்கு மறைமுகமாக உதவுகிறது. அந்தக் குழுவில் உள்ளவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள். அதனால் அந்தக் குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது. இடைக்காலத் தடையைக் காரணம் காட்டி போராட்டத்தை நீர்த்துப்போக வைக்க மத்திய அரசு முயல்கிறது. வேளாண் சட்டங்களை நீக்கும் வரை போராட்டம் தொடரும்” என அறிவித்துப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

உச்ச நீதிமன்றம் அமைத்த நால்வர் குழுவில் விவசாயிகளுக்கான பிரதிநிதியான முன்னாள் எம்.பி-யும், பாரதிய கிஷான் யூனியன் தலைவர் மற்றும் அகில இந்திய கிஷான் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பூபிந்தர் சிங் மான் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘‘மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டங்கள் குறித்து விவசாயச் சங்கங்களுடன் கலந்துரையாட அமைக்கப்பட்ட நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழுவில் என்னைப் பரிந்துரைத்த நீதிமன்றத்துக்கு நன்றி. நானும் ஒரு விவசாயி தான். அத்துடன் ஒரு சங்கத்தின் தலைவராகவும் பொதுமக்களிடம் நிலவும் உணர்வுகள் மற்றும் அச்சங்கள் பற்றி யோசிக்கிறேன். பஞ்சாப் மற்றும் அனைத்து விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்யும் எந்த ஒரு பதவியையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். எனவே, அந்த நால்வர் குழுவிலிருந்து விலகிக்கொள்கிறேன்’’ என அறிக்கை வெளியிட்டு விலகிவிட்டார், பூபிந்தர் சிங் மான்.

இதை வரவேற்ற டெல்லி விவசாயிகள் போராட்டக் குழுவினர், ‘‘இவரைப் போலவே விவசாயிகள் போராட்டத்தில் உள்ள நியாயங்களை மற்றவர்கள் உணர்ந்து, அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். இடைக்காலத் தடை எங்களுக்குத் தேவையில்லை. நிரந்தரமாக வேளாண் சட்டங்களை நீக்கும் வரை போராட்டம் தொடரும்” என அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் போராட்டக் குழுவுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இதுவரை 10 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து அனைத்தும் தோல்வியில் முடிந்திருக் கிறது. இந்நிலையில், 10-ம் கட்டமாக நடந்த பேச்சு வார்த்தைக் கூட்டத்தில், ‘‘புதிய வேளாண் சட்டங்கள் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்படும்’’ என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கை முழுமையாக மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெற வேண்டும் எனக் கடைசி வரை உறுதியாக இருந்ததால் அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள் இதுபற்றிப் பேசும்போது, “மத்திய அரசின் குழுவோடு நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மத்திய தொழில்துறை அமைச்சர் சோம் பிரகாஷ் ‘இரண்டு வருடங்களுக்குப் புதிய வேளாண் சட்டம் நிறைவேற்றப்படாது’ என்று கூறினார். ஆனால், மற்ற இரண்டு அமைச்சர்களான பியூஸ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் ‘ஒன்றரை வருடங்கள்வரை எந்தப் புதிய வேளாண் சட்டமும் நிறைவேற்றப்படாது’ என்று கூறினர். இது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பஞ்சாப்பைச் சேர்ந்த 32 விவசாயச் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பின்பு, எங்கள் முடிவை அறிவிப்போம். அதோடு குடியரசு தின விழா அன்று நடத்தப்படவுள்ள டிராக்டர் அணிவகுப்பு குறித்த எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என்றனர்.

“டெல்லியில் டிராக்டர் பேரணி நடந்தே தீரும்!” - உறுதியுடன் நிற்கும் விவசாயிகள்!

மொத்தமாக 40,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் இருக்கின்றனர். டிராக்டர் பேரணியில் குறைந்தது 20 மாநிலங் களின் விவசாயிகள் கலந்துகொள்வார்கள் என டெல்லி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியில் வந்த அழைப்பு

இந்தச் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்ததோடு, இந்தச் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவும் நாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் கருத்துகளை அறியவும், ஆய்வுக்குழுவை அமைத்தது. நேரிலும் காணொளி மூலமாகவும் விவசாயிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதற்கு மின்னஞ்சல்மூலம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தஞ்சையில் உள்ள விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு வந்துள்ள மின்னஞ்சல் கடிதம் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு