பசுமை விகடன் வெறும் எழுத்துப்பணியோடு நிற்பதில்லை... விவசாயிகளின் நலன் மற்றும் விவசாய மேம்பாட்டுக்காக, நேரடியாகக் களப்பணியும் ஆற்றிவருகிறது. இதன் முக்கிய அங்கமாகத்தான், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பட்ஜெட்டில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும் என்பதை, விவசாயிகள் மற்றும் விவசாய வல்லுநர்களின் கருத்துகளை அறிந்து, பட்ஜெட் பரிந்துரைகளாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் பசுமை விகடன் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், பொருளாதர வல்லுநர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்தோம். அவற்றில் சில அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் செயல்படுத்தப்பட்டும் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு, விவசாயத்துக்கென தனி பட்ஜெட் போடப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய ஆக்கபூர்வ மான அம்சங்கள் குறித்து, விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், பொருளாதர வல்லுநர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளைப் பசுமை விகடன் தொகுத்திருக்கிறது. அவற்றைத் தமிழக முதலமைச்சர், நிதி அமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உள்ளிட்டோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். அவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் மட்டும் கீழே இடம்பெறுகின்றன.
நிதி ஒதுக்கீடு
ஒவ்வோர் ஆண்டும் விவசாய நிதி ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரித்து, அடுத்த ஐந்தாண்டுகளில் மற்ற துறைக்கு நிகராக விவசாயத்துறைக்கும் நிதி ஒதுக்க வேண்டும்.
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மைக்கெனத் தனிக்கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இயற்கை வழி வேளாண்மையை நடைமுறைப்படுத்த அரசுச் செயலர், பொறுப்பாளர் அளவில் அதிகாரமுடைய, இயற்கை உழவர்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இயற்கை விவசாயத்தின் மூலமாகச் சூழலியல் பாதுகாப்புக்குப் பங்களிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்கும் திட்டம் வேண்டும். அரசு வழங்கும் சலுகைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். செயற்கை உரங்களை மறுக்கும் உழவர்களுக்கு, அதனால் கிடைக்கும் மானியத் தொகையை வேறு வகையில் அளித்திட வேண்டும். நம்மாழ்வாரின் 24 அம்சங்கள் கொண்ட உயிர்த்தன்மையுள்ள மாதிரிக் கிராமங்களை உருவாக்க நிதி ஒதுக்கப்பட வேண்டும். இயற்கை வேளாண் வல்லுநர் சுபாஷ் பாலேக்கரின் ‘செலவில்லா இயற்கை வழி வேளாண்மை’ பயிற்சிகளைத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும்.

விதைகள்
விதை-விதை பன்மயம் (Seed Diversity) பாதுகாக்க விதை வங்கிகள் தாலூகா அளவில் உண்டாக்க வேண்டும். இயற்கை விவசாயச் சான்றளிப்பை (Organic Farming Certificate) எளிமைப்படுத்தி இலவசமாக அரசே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கால்நடைகள்
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பர்ய கால்நடை இனங்களைப் பாதுகாக்க, பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தியைப் பெருக்கச் சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். நாட்டு மாடுகள் (பசு), எருமைகள், காளைகள், நாட்டுக்கோழிகள் வளர்ப்போருக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கி, உள்நாட்டு வகையினங்கள் வளர்ப்போர் எனச் சிறப்பு நிலை அளிக்கப்பட வேண்டும்.
மானாவாரி விவசாயிகளின் நலன்
மானாவாரி விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியானது, இறவைப் பாசன விவசாயிகளுக்கு இணையாக இருக்க வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டம்
100 நாள் வேலைத்திட்டத்தை இயற்கை விவசாயப் பணிகள், காடு வளர்த்தல், நீராதார வள மேம்பாடு, மதிப்புக் கூட்டும் வேலைவாய்ப்பு, மூலிகைப் பண்ணை அமைத்தலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
குத்தகை விவசாயிகள்
நிலமுள்ள விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளைக் குத்தகை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டுகிறோம்.
விவசாயக் கடன்கள்
தமிழக அரசு, தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க ஆவன செய்ய வேண்டும். வறட்சி, வெள்ளக் காலங்களில் நிவாரணம் கொடுப்பதற்குப் பதிலாகப் பயிர்க்கடனை அரசாங்கமே செலுத்த வேண்டுகிறோம்.
நெல் கொள்முதல்
டெல்டா மாவட்டங்களில் புதியதாக 400 நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாக்க வேண்டும்.
பனை பாதுகாப்பு
பனைமரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், பாதுகாக்கவும் சட்ட வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்குப் பனை சார்ந்த அனைத்து தொழில்களையும் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு
அண்மைக் காலத்தில் பூச்சிக்கொல்லி மரணங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறது. இவை பலவும் வெளியே தெரியாமல் பதிவுகள், தீர்வுகளின்றித் தொடர்ந்து வருகின்றன. பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி ஆகியவை தடைசெய்யப்பட வேண்டும். பூச்சிக்கொல்லி மரணங்கள் நிகழாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பங்களுக்குப் பொருளாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
சந்தை வாய்ப்பு
உழவர் சந்தையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுச்சந்தையில் அரசுத் தலையீடு மற்றும் ஆதரவு விலை வேண்டும் (Market Intervention and Price Support Scheme). உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கான (Farmers Producer Organisation) உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதன் அளவைக் குறைக்க வேண்டும்.
ஏற்றுமதி
வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். விவசாயப் பொருள்கள் ஏற்றுமதிக்கு மானியம் வழங்க வேண்டும். அரிசி, பருப்பு போன்ற ஏற்றுமதி செய்யும் உணவுப் பொருள்களைத் தரப் பரிசோதனை செய்யச் சோதனைக்கூடங்களை அமைக்க வேண்டும். அதேபோன்று பால் பொருள்கள் சோதனை செய்ய ஆரோக்கியச் சான்றிதழ் வழங்கத் தாமதமாகிறது. அந்தத் தாமதத்தைத் தவிர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பயிர்க்காப்பீடு
விவசாயக் காப்பீடு விஷயத்தில் தனியார் நிறுவனங்களைத் தவிர்த்து, அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும். தவணை (பிரீமியம்) தொகையில் விவசாயி, மத்திய மற்றும் மாநில அரசுகள் என்று மூன்று பங்குண்டு. இதில் தவணைத் தொகையை, விவசாயிகளிடமிருந்து பெறாமல் மாநில அரசே கட்ட வேண்டும்.
நீர்ப்பாசனம்
ஆந்திர மாநில ‘ஜலயக்ஞம்’ (2003 - 2013) மற்றும் தெலங்கானா மாநில ‘மிஷன் காகதீய’ போன்று தமிழ்நாட்டிலும் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகள், கண்மாய்களை மேம்படுத்த ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தயாரித்து 5 ஆண்டுகளில் நடைமுறைபடுத்த வேண்டும்.
நீர்நிலைகள் பராமரிக்கச் சிறப்பு நிதி ஒதுக்கீடு
ஏரிகள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் என நீர் கட்டமைப்புகளின் பாதுகாப்பு, பராமரிப்பு என வேளாண்மை நிதியில் முதலிடம் அளிக்கப்பட வேண்டும். ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகிய வற்றிலிருந்து வண்டல் மண் எடுத்துப் பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். வண்டல் எடுக்க விரும்புபவர்களுக்கு இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். ஒவ்வொரு 5 ஏக்கருக்கும் ஒரு பண்ணைக்குட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
பயிர்வாரி முறை
அரசுத் துறைகளால் மறந்துபோன தமிழ் வழி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றுள்ள ஐந்து வகை நிலப் பாகுபாடுகளைப் பட்டியலிட்டு, அந்தந்த நிலங்களில் பயிரிடக்கூடிய பயிர் வகைகளை வரிசைப்படுத்தி உழவர் களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.
தனித்தனி கிடங்குகள்
ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் போன்ற வற்றை இருப்பு வைக்கும் குடோன்களிலேயே விவசாய விளைபொருள்களையும் வைக்கிறார்கள். இது ஆபத்தானது. விளைபொருள்களுக்கு எனத் தனியாகக் கொள்கலன் சரக்கு நிலையம் (Container Fright Station) அமைக்க மாநில அரச ஆவன செய்ய வேண்டும்.
பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரைகளை முழுவதும் வாசிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும். https://www.vikatan.com/news/agriculture/farmers-shares-their-suggestions-via-pasumai-vikatan-for-tamilnadu-agriculture-budget