Published:Updated:

மரத்திருகை, பாரம்பர்ய ரக அரிசி, ஆரோக்கிய வாழ்வு... அசத்தும் அமுதா!

தமிழர்களின் பாரம்பர்ய அரவைச் சாதனங் களில் திருகையும் ஒன்று. அம்மியைப்போல கருங்கல்லினால் செய்யப்பட்ட திருகையில் தான் அரிசியை மாவாகத் திரிப்பார்கள்; பருப்பு வகைகளை உடைப்பார்கள்

பிரீமியம் ஸ்டோரி

``என்னதான் மிக்ஸி இருந்தாலும் நம்மில் சிலர் அடுப்படியில இன்று வரை ஒரு அம்மியும் போட்டுவெச்சு தேவையானதை அதில் அரைச்சுக்கிறோம் தானே? அதேபோல, ஒரு திருகையும் வாங்கி வீட்டுல வெச்சுக்கிட்டா ஆரோக்கியமான அரிசி கிடைக்கும். பாரம்பர்ய வாழ்வுமுறைக்குத் திரும்புற வழிகளையெல்லாம் இப்படித்தான் ஒவ்வொண்ணா ஏற்படுத்திக்கணும்’’ என்கிறார் விருதுநகரைச் சேர்ந்த அமுதா.

தமிழர்களின் பாரம்பர்ய அரவைச் சாதனங் களில் திருகையும் ஒன்று. அம்மியைப்போல கருங்கல்லினால் செய்யப்பட்ட திருகையில் தான் அரிசியை மாவாகத் திரிப்பார்கள்; பருப்பு வகைகளை உடைப்பார்கள். நெல்லில் இருந்து அரிசியை கைக்குத்தல் அரிசியாக மாற்ற, உரலில் போட்டு உலக்கையால் இடிப்பார்கள். ஆனால், முன்பெல்லாம் மரத்தாலான திருகை மூலம் அரிசி எடுத்து வந்திருக்கிறார்கள். அப்படித்தான் இப்போது தன் வீட்டுத் தேவைக்காக மரத் திருகையில் அரிசி எடுத்து வருகிறார் அமுதா. விற்பனைக் கும் மரத்திருகை செய்துதருகிறார்.

மரத்திருகை, பாரம்பர்ய ரக அரிசி,
ஆரோக்கிய வாழ்வு... அசத்தும் அமுதா!

‘`விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள அச்சங்குளம் கிராமம்தான் எங்க ஊரு’’ என்று பேச ஆரம்பித்தார் பி.இ பட்ட தாரியான அமுதா. ‘`பல நிறுவனங்கள்ல வேலைபார்த்தேன். என் கணவர் பிச்சை முருகனுடன் சேர்ந்து இப்போ 15 வருஷமா இயற்கை விவசாயம் செய்துட்டு வர்றேன். வீட்டுத் தேவைக்கு உரல்ல நெல்லைக் குத்தி கைக்குத்தல் அரிசியா எடுத்து பயன்படுத்திட்டு வந்தேன்.

10 வருஷத்துக்கு முன்னால மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் `காந்தி நிகேதன்’ ஆசிரமத்துல நடந்த இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புல கலந்துக் கிட்டப்போதான், மரத்திருகை பற்றித் தெரிய வந்தது. 50 வருஷத்துக்கு முன்னால ஆசிரமத்தின் மூலம் அப்பகுதி விவசாயிகளுக்கு மரத்தாலான திருகை வழங்கப்பட்டதா பயிற்சியில சொன்ன தகவலைக் கேட்டு, அதே டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி களிடம் மரத்திருகை பற்றி விசாரிச்சோம்.

‘எங்க வீட்டுல நீங்க சொல்லுற மரத்திருகை கிடக்குது. இப்போ அதைப் பயன்படுத்துற தெல்லாம் இல்ல’னு சொன்னவர்கிட்ட பேசி, அந்தத் திருகையை வாங்கிட்டு வந்து, சுத்தப்படுத்தி, கீறல்கள் விழுந்திருந்த பகுதிகளை சரிசெஞ்சேன். அந்தத் திருகையின் அடிப்பகுதி, மேல் பகுதி, சுற்றுக் கைப்பிடி எல்லாமே மரம்தான். கருங்குருவை நெல்லைப் போட்டு சுத்திப் பார்த்தேன். பல் சக்கரம் தேய்ஞ்ச நிலையில இருந்ததால ஏழெட்டு சுத்துக்குப் பிறகுதான் நெல்லுல இருந்து தோல் நீங்க ஆரம்பிச்சது. வீட்டுத் தேவைக்கு மட்டும் அப்பப்போ அதுல நெல்லைப் போட்டு சுத்தி அரிசி எடுத்துக்கிட்டு இருந்தேன். ஆறு மாசத் துலயே திருகை சேதமாகி பயன்படுத்த முடியாமப் போயிடுச்சு. மரத் தச்சரிடம் சேதமான மரத் திருகையைக் காண்பிச்சு அதே மாதிரி புதுசு செய்து தரச்சொல்லிக் கேட்டேன். நினைச்சது மாதிரியே கச்சிதமா அமைஞ்சுபோச்சு’’ என்பவர், திருகையின் வடிவமைப்புப் பற்றி பகிர்ந்தார்.

‘`திருகையின் வட்ட வடிவ அடிப்பகுதி நிலையா இருக்கும். மேல் பகுதி கழற்றி மாட்டும் வகையில இருக்கும். அடிப்பகுதி, மேல் பகுதியின் விட்டம் ஒன்றரை அடி, உயரம் ஆறு அங்குலம். அடிப்பகுதி மீது மேல்பகுதி திருகையை அடுக்குபோல தூக்கி வெச்சுக்கணும். மேல் பகுதி திருகையின் நடுவுல இருக்குற துளைக்குள்ள

நெல் மணிகளைப் போட்டு கைப்பிடியைப் பிடிச்சு சுத்தணும். சுழற்சி வேகத்துல நெல் மணிகள் அடிப்பகுதி திருகைக்குச் சென்று செதுக்கப் பட்டுள்ள ‘V’ வடிவ பல் வரிசையில் விழுந்து நெல்லின் தோல் தனியே நீங்கும். தொடர்ந்து சுத்திக்கிட்டே இருந்தா, அரிசி கிடைச்சுடும். பயன் பாட்டைப் பொறுத்து பல் வரிசைகள் தேய ஆரம்பிக்கும்; அதைத் தீட்டிக்கலாம். மரச்செக்கைப்போல, மரத்திருகை அமைப்பதற்கும் வாகைமரம்தான் ஏற்றது. அதுலதான் தேய்மானம் குறைவா ஏற்படும்’’ என்றவர், அதில் நெல்லை அரைத்து நமக்கு ஒரு டெமோ காட்டினார்.

மரத்திருகை, பாரம்பர்ய ரக அரிசி,
ஆரோக்கிய வாழ்வு... அசத்தும் அமுதா!

திருகையில் ஒன்றரை கிலோ நெல் போட்ட அமுதா சுற்ற ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் தோல் பிரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் 20 சத விகிதம் அரிசி கிடைத்தது. கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் சுற்றியபோது, ஒரு கிலோ அரிசி கிடைத்தது. பழகி விட்டால் முக்கால் மணி நேரத்தில் முடித்துவிடலாம் என்கிறார் அமுதா.

‘`அதுக்குப் பிறகு முறத்தால (சுளகு) புடைச்சு உமியைப் பிரிக்கணும். இந்தக் காலப் பொண்ணுங்களுக்கு அதுலாம் தெரியாதுங்கிறதால, முறத்தை டேபிள் ஃபேனுக்கு முன்னால காட்டினா, அடிக்கிற காத்துல உமி தனியா பறந்துடும். திருகையில நெல்லின் தோல் மட்டுமே நீங்குறதால இரு முனைகளும் உடையாத அரிசி கிடைக்கும். மேலும், திருகையின் பல் வரிசை இடுக்குகள்ல இருந்து எடுக்குற தவிட்டை சேகரிச்சு துவையலும் செய்யலாம். இதுவரை இலுப்பை பூச்சம்பா, வெள்ளைப் பொன்னி, கருங்குருவை, தூயமல்லி, பூங்கார், குள்ளக்கார், நவரானு எங்க நிலத்துல விளைந்த பாரம்பர்ய நெல் ரகங்களை இந்தத் திருகையில சுத்தி அரிசியாக்கி இருக்கேன்’’ என்று சொல்லும் அமுதா, ஒரு கட்டத்தில் திருகையை மற்றவர்களுக்கும் விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார்.

‘`இந்த மரத்திருகையைப் பார்த்த சிலர், தங்களுக்கும் செய்து தரச் சொல்லிக் கேட்டாங்க. அப்படி இதுவரை 12 பேருக்கு செய்து கொடுத்திருக்கோம். இதைப் பரவலாக்கணும். வாகைமரம், செய்கூலினு ஒரு மரத்திருகை செய்ய 20,000 ரூபாய்வரை ஆகுது. முதற் கட்டமாகச் செய்ய ஆரம்பித்திருப்ப தால இந்த விலை. அதிக எண்ணிக்கை யில செய்ய ஆரம்பிக்கும்போது விலை குறையும். வாகை மரம் அதிகம் விளையும் ஊர்கள்ல இதைச் செய்து வாங்கும்போது விலை கணிசமா குறையும். 7,000 ரூபாயில விற்பனை செய்வதுதான் எங்க இலக்கு.

 கணவருடன்...
கணவருடன்...

ஒரு மூட்டை பாரம்பர்ய ரக நெல்லும், ஒரு மரத்திருகையும் இருந்தா ஒரு குடும்பத்துக்கு ஒரு வருஷத்துக்கு அரிசி போதும். டாக்டர்கிட்ட எந்த நோய்க்காகப் போனாலும், நல்லா பசி எடுக்குதா, மலச்சிக்கல் இருக்கானு தவறாம கேட்பாங்க. பசியைத் தூண்டுறது, செரிமானத்தை எளிமையாக்கி

சீரா மலம் கழிக்க வைக்கிறதுனு இதையெல்லாம் பாரம்பர்ய ரக அரிசி செய்யும். தினமும் சாப்பிட முடியாவிட்டாலும் வாரத்தில்

மூணு நாளாவது சாப்பிடலாம்” என்றபடியே திருகையில் சுற்றி எடுத்த அரிசியை கைநிறைய அள்ளிக் காட்டினார் அமுதா.

ஆரோக்கியம் சிரித்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு