Published:Updated:

“ஒரு முழம் பூ கேட்டேன்... தோட்டத்தையே உருவாக்கிக் கொடுத்துட்டார்!”

குப்புசாமி அனிதா தம்பதியர்
பிரீமியம் ஸ்டோரி
குப்புசாமி அனிதா தம்பதியர்

மாடித்தோட்ட விவசாயத்தில் கலக்கும் குப்புசாமி அனிதா தம்பதியர்

“ஒரு முழம் பூ கேட்டேன்... தோட்டத்தையே உருவாக்கிக் கொடுத்துட்டார்!”

மாடித்தோட்ட விவசாயத்தில் கலக்கும் குப்புசாமி அனிதா தம்பதியர்

Published:Updated:
குப்புசாமி அனிதா தம்பதியர்
பிரீமியம் ஸ்டோரி
குப்புசாமி அனிதா தம்பதியர்

நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி அனிதா தம்பதியரின் வீடு, சென்னையிலுள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் ரொம்பவே பிரபலம். ஒரு வெற்றிலைக் கொடியில் தொடங்கப்பட்ட தோட்டம், தற்போது நூற்றுக்கணக்கான தாவரங் களுடன் மினி சோலையாகக் காட்சியளிக் கிறது. மாடித்தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றவர்களின் முகத்தில் உற்சாகம் மலர்கிறது.

விவசாய ஆர்வத்துக்கு விதையாக அமைந்த 29 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவிலிருந்து தொடங்கினார் குப்புசாமி. “கல்யாணத்துக்குப் பிறகு என் மனைவியை மறு அழைப்புக்காகச் சொந்த ஊருக்கு அழைச்சுகிட்டுப் போனேன். இவங்க ஆசையா பூ கேட்க, ஒரு கடையில போய் கேட்டேன். ‘ஆர்டர் இருக்கு. பூ இல்லை’ன்னு சொல்லிட்டார் அந்த வியாபாரி. வழியில வேறு கடையே இல்ல. ரொம்பவே ஏமாற்ற மாகி, இனி வாழ்நாள் முழுக்க மனைவிக்கு வெளியில இருந்து பூவே வாங்கக் கூடாதுனு முடிவெடுத்தேன். உடனே நர்சரியில மல்லிகைப்பூ செடி ஒண்ணு வாங்கினோம். அப்போ நாங்க குடியிருந்த தி.நகர் வீட்டு மொட்டைமாடியில வெச்ச அந்த ஒரு செடியில இருந்து, பதியம்போட்டு

நிறைய செடிகளை உருவாக்கினோம். அவை செழிப்பா வளர்ந்து கிலோ கணக்குல மல்லிகைப்பூ பூத்துக்குலுங்குச்சு. 2004-ல் இந்த வீட்டுக்கு வந்ததும் இங்கு முறையா மாடித்தோட்டம் அமைக்க நினைச்சோம். ஒரு பயணத்தின்போது வெற்றிலை நாற்று வாங்கிட்டு வந்து வீட்டு வாசல்ல வெச்சு, அந்தக் கொடியை மொட்டைமாடிக்குப் பரப்பிவிட்டு, பந்தல் மாதிரி மாத்தினோம்.

“ஒரு முழம் பூ கேட்டேன்... தோட்டத்தையே உருவாக்கிக் கொடுத்துட்டார்!”

என்னோட ஊர்ல இருந்து நாட்டு விதை களை வரவெச்சு, காய்கறிச் செடிகள் வளர்த்தோம். ஒருகட்டத்துல, ‘சமையலுக் கான காய்கறிகள், உடல்நலனுக்கு மூலிகைகள், எனக்கும் கடவுள் வழி பாட்டுக்கும் பூக்கள்... இதெல்லாம் வேணும். மாடி முழுக்கவே தோட்டம் போடலாம்’னு மனைவி சொன்னாங்க. அப்படி படிப்படியா விரிவுபடுத்தி இப்போ நூத்துக்கணக்கான செடிகளோடு தோட்டம் ஜம்முனு இருக்கு. வெற்றிலை மானாவாரியா படர்ந்து தொங்குது. பதியம் வெச்சு தெரிஞ்சவங் களுக்கும் வெற்றிலை நாற்றைக் கொடுக்கி றோம்.

தினமும் காலையில இந்தப் பந்தலுக்குக் கீழே உட்கார்ந்துதான் காபி குடிப்போம்; சாதகம் செய்வோம்; பேசுவோம். நான் போட்ட சபதப்படி, இப்போவரை அனிதா காசு கொடுத்து பூ வாங்குறதே இல்ல” என்பவர் மனைவியைப் பார்க்கிறார்.

வெட்கத்தில் சிரித்தவாறே ஆரம்பிக்கும் அனிதா, “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கணவர், தோட்ட வேலைகள்ல அதிக ஆர்வம்கொண்டவர். தண்ணீர் ஊத்துறது, களை பறிக்கிறது, வாடிய இலைதழைகளைக் கழிச்சு விடுறதுனு தோட்டத்தை முறையா பராமரிக்கிறது இவர்தான். காய்கறிகள், பூக்களை அறுவடை செய்ற வேலைகளை நான் செய்வேன். மாடியில தடுப்புச்சுவர் ஓரத்துல பெரிய தொட்டிகள்ல மர வகை களை வளர்க்குறோம். நடக்குறதுக்கு ஒத்தை யடிப்பாதையை விட்டுட்டு மற்ற இடங்கள்ல சின்ன தொட்டிகள்ல காய்கறிகளை வளர்க்குறோம். இதனால, இடத்தேவையைச் சரியா பயன்படுத்திக்க முடியுது. மாசாமாசம் பல கிலோ அளவுக்கு மிளகாய், தக்காளி, கத்திரி, வெண்டை கிடைக்கும். தவிர, கொத்தவரங்காய், அவரை, புடலை, பாகல், கிராம்பு, பட்டை, காராமணி, அரசாணிக்காய், நார்த்தங்காய், முருங்கை, பீர்க்கன், பறங்கிக் காய், சுரைக்காய், மஞ்சள், கறிவேப்பிலை, லிச்சி, திராட்சை, இலந்தை, டிராகன் ஃப்ரூட், கிரீன் ஆப்பிள், மா, வெள்ளரி, எலுமிச்சை, அன்னாசி, சாத்துக்குடி, நெல்லி, மாதுளை, கொய்யா, தர்பூசணி, ஸ்வீட் லெமன், மினி ஆரஞ்சு உட்பட எக்கச்சக்கமான செடிகளும் மரங்களும் இருக்கு.

பல வகையான கீரைகள், நிறைய மூலிகைச் செடிகளையும் வளர்க்கிறோம். வெரைட்டி யான மல்லி மற்றும் செம்பருத்தி, பாரிஜாதம், ரோஜானு பலதரப்பட்ட பூச்செடிகளும் உண்டு. வெளிநாடுகளுக்குப் போகும் போதெல்லாம் அங்கு சிறப்பம்சம் கொண்ட செடிகளையும், அதோட விதைகளையும் தேடிப்பிடிச்சு கொண்டுவந்து தோட்டத்துல வளர்ப்பார். மரவள்ளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, செர்ரி, புரொக்கோலினு பலவிதமான பயிர்களை வளர்த்து பலன் பெற்றிருக்கோம்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

“ஒரு முழம் பூ கேட்டேன்... தோட்டத்தையே உருவாக்கிக் கொடுத்துட்டார்!”

1,200 சதுர அடியில் அமைந்துள்ள மாடித்தோட்டத்தில், 150-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் 200-க்கும் அதிகமான செடி களையும் மரங்களையும் வளர்க்கின்றனர். இதிலிருந்தே வீட்டுத்தேவையில் 80 சதவிகித காய்கறிகளைப் பெறுகின்றனர். வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் தென்னை உள்ளிட்ட சில மரங்களையும் செடிகளையும் பராமரிக்கின்றனர்.

“ஒவ்வொரு தொட்டியிலயும் செம்மண், மண்புழு உரம், சாணம் சேர்ந்த கலவையில்தான் செடி வளர்ப்போம். அப்பப்போ தண்ணீர்ல வேப்பம்பிண்ணாக்கு கலந்து ஒவ்வொரு செடிக்கும் ஊத்துவோம். தண்ணீர் பயன்பாடு தவிர வேறு எந்த உரமும் போடமாட்டோம். நோய்த்தாக்குதல் இருந்தா, வேப்பெண்ணெயை தண்ணீர்ல கலந்து தெளிப்போம். வழிஞ்சு ஓடும் தண்ணீரைச் சேகரிச்சு வெற்றிலைக்குப் போற மாதிரி செஞ்சிருக்கோம்.

மகரந்தச் சேர்க்கைக்காக தேனீப் பெட்டி ஒண்ணு வெச்சிருக்கோம். இதுல இருந்து மாசத்துக்கு அரை லிட்டருக்கும் மேல அற்புதமான தேன் கிடைக்குது. அடர்நடவு முறையைக் கடைப்பிடிக்கிறதால, எங்க தோட்டம் பார்க்க மினி காடு மாதிரி இருக்கும்” என்று குப்புசாமி நிறுத்த...

“தோட்டத்துல இருந்தே விதைகளைச் சேகரிச்சு வெச்சுப்போம். விளைபொருள்

களை பறவைகள், வெளவால், அணில் சாப்பிட்டதுபோகத்தான் வீட்டுத்தேவைக்கு. மாடித்தோட்டப் பராமரிப்பு, மனசுக்குப் புத்துணர்வு கொடுப்பதோடு, மன அழுத்தத் தையும் கட்டுப்படுத்துது. ஆர்வம் இருந்தா போதும். முடிஞ்சவரை வீட்டுலயே காய்கறித் தேவைகளைப் பூர்த்தி செஞ்சு ஆரோக்கியத் துடனும் மனநிறைவுடனும் வாழலாம்” என்னும் அனிதாவுடன், குப்புசாமியும் இணைய,

“ஆத்திலே தண்ணீர் உண்டு;

அதனருகே வயலும் உண்டு;

சேத்திலே ஈரம் உண்டு;

சேர்ந்த ஜோடி காளை உண்டு

நாத்திலே பசுமை உண்டு

நட்டுவெச்ச விளைச்சல் உண்டு” என்று கழனியில் பாடப்படும் பாடலை ஜோடியாக பாடியவாறே பசுமையான புன்னகையுடன் விடைகொடுத்தனர்.