Published:Updated:

ஒரு ஏக்கர்... 1,93,000 ரூபாய்! செழிப்பான லாபம் தரும் செண்டுமல்லி!

செண்டுமல்லி தோட்டத்தில் ஸ்டெல்லா மேரி
பிரீமியம் ஸ்டோரி
செண்டுமல்லி தோட்டத்தில் ஸ்டெல்லா மேரி

மகசூல்

ஒரு ஏக்கர்... 1,93,000 ரூபாய்! செழிப்பான லாபம் தரும் செண்டுமல்லி!

மகசூல்

Published:Updated:
செண்டுமல்லி தோட்டத்தில் ஸ்டெல்லா மேரி
பிரீமியம் ஸ்டோரி
செண்டுமல்லி தோட்டத்தில் ஸ்டெல்லா மேரி

யற்கை முறையில் செண்டுமல்லியைச் சாகுபடி செய்து கணிசமான வருமானம் பார்த்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி. திருநெல்வேலி – சங்கரன் கோவில் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது மானூர். ஊரின் தொடக்கத்திலேயே காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த செண்டுமல்லிப் பூக்கள் ஸ்டெல்லா மேரியின் பூந்தோட்டம் இதுதான் என நமக்கு அடையாளம் காட்டியது. பூக்கள் அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தவரை ஒரு காலை வேளையில் சந்தித்தோம். தோட்டத்தைச் சுற்றிக் காட்டியபடி பேசத்தொடங்கினார்.

‘‘அம்பாசமுத்திரம் பக்கத்துல இருக்குற கல்லிடைக்குறிச்சிதான் என்னோட சொந்த ஊரு. பூர்வீகமே விவசாயம்தான். விவசாயத் தைத் தவிர, வேற எதுவும் தெரியாது. எங்கப் பகுதி முழுக்கவே நெல் விவசாயம்தான். ‘அம்பை-16’ ரக நெல்லைத்தான் விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்வாங்க. முழுக்கவும் ரசாயன விவசாயம்தான். ரசாயன உரம் தூவுறதையும், மழைத் தூத்தல் விழுகுற மாதிரி ரசாயனப் பூச்சிக்கொல்லித் தெளிக்கிறதும் எல்லா விவசாயிகளும் சொல்லி வச்ச மாதிரி செய்வாங்க.

செண்டுமல்லி தோட்டத்தில் ஸ்டெல்லா மேரி
செண்டுமல்லி தோட்டத்தில் ஸ்டெல்லா மேரி

உரம் தூவுற நாள்லயும், பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கிற நாள்லயும் அந்த நாத்தத்தைப் பொறுத்துக்க முடியாம மூக்கைப் பொத்திக் கிட்டுதான் வயக்காட்டைக் கடந்து போவோம். பி.காம் முடிச்சதுமே எனக்குக் கல்யாணமாயிடுச்சு. என்னோட கணவர் பாஸ்கர் வீட்டுலயும் விவசாயம்தான் முக்கியத் தொழில். காய்கறிகள், பருத்தி, கடலைதான் முக்கியச் சாகுபடியா இருந்துச்சு.

7 வருஷத்துக்கு முன்னால திருநெல்வேலி யில உள்ள சுப்பிரமணியன்ங்கிற இயற்கை விவசாயி மூலமா இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன் படுத்தாம இயற்கை முறையில விவசாயம் செய்யலாம்ன்னு சொன்னாங்க. மண் வளப்படுத்துதல், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு, பூச்சி-நோய்த்தாக்குதல் கட்டுப்பாடுகளைத் தெரிஞ்சுகிட்டேன். கணவரும் இயற்கை முறையில விவசாயம் செய்ய சம்மதிச்சார். முதல் வேலையா மூணு முறை பலதானிய விதைப்பு விதைச்சு மடக்கி உழுதோம். மண்ணுல மட்கின தொழுவுரத்துடன் மண்புழு உரத்தைக் கலந்து உழுதும் மண்ணை வளப் படுத்தினோம்.

ஆரஞ்சு நிற செண்டுமல்லி
ஆரஞ்சு நிற செண்டுமல்லி

ஒரு ஏக்கர்ல நிலக்கடலையைச் சாகுபடி செஞ்சோம். சுமாரான மகசூல் கிடைச்சது. அடுத்த முறை கணிசமான மகசூல் கிடைச்சுது. தொடர்ந்து கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாயைச் சாகுபடி செஞ்சோம். இயற்கையில விளைய வச்சதுன்னு பார்த்தாலே சொல்லுற மாதிரி காய்கள் மினுமினுப்பாவும் திரட்சியாவும் இருந்துச்சு. ‘சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகள்ல மலர் சாகுபடிதான் அதிகமா நடக்குது. திருநெல்வேலி பூச்சந்தைக்கு அங்க இருந்துதான் பூக்கள் வருது. திருநெல்வேலிப் பகுதியில மலர் சாகுபடி அதிகம் கிடையாது.அதனால, மலர் சாகுபடி செய்யலாம். அதுமட்டுமல்லாம பராமரிப்பும் குறைவு, தண்ணீர்த் தேவையும் குறைவு’ன்னு நண்பர் ஒருத்தர் மலர் சாகுபடி யோசனையைச் சொன்னார்.

 செண்டுமல்லி அறுவடை
செண்டுமல்லி அறுவடை

எங்களுக்கும் அந்த யோசனை சரின்னு தோணுச்சு. ‘பூ விவசாயத்தை நீயே பாத்துக்கோ’ன்னு கணவரும் சொன்னார். அரை ஏக்கரில் கோழிக்கொண்டைப்பூ, அரை ஏக்கர்ல செண்டுமல்லி சாகுபடி செய்தேன். இதுல செண்டுமல்லியில நல்ல வருமானம் கிடைச்சது. தொடர்ந்து இப்போ 4 வருஷமா செண்டுமல்லியைச் சாகுபடி செஞ்சுட்டு வர்றேன். இது மொத்தம் 2 ஏக்கர். செம்மண் கலந்த மணற்பாங்கான நிலம். 50 சென்ட்ல ஆரஞ்சு நிற செண்டுமல்லியும், இன்னொரு 50 சென்ட்ல மஞ்சள் நிற செண்டுமல்லியும் அறுவடையில இருக்கு. இதற்கடுத்து இன்னொரு ஏக்கர்ல செண்டு மல்லி சாகுபடிக்காக நிலத்தைத் தயார்ப்படுத்தி வச்சிருக்கேன்” என்றார்.

இறுதியாக விற்பனை மற்றும் வருமானம் பற்றிப் பேசியவர், “செண்டுமல்லியில மஞ்சள் நிறத்தைவிட, ஆரஞ்சு நிறப் பூக்களுக்கு அதிக வரவேற்பும், கூடுதல் விலையும் கிடைக்கும். ஆனா, சில விவசாயிங்க மஞ்சள் நிறத்தை மட்டும் சாகுபடி செய்வாங்க. ஆனா, நான் ஒண்ணுல இல்லாட்டாலும் இன்னொண்ணுல காசு பார்த்திடலான்னுதான் ரெண்டு ரகத்தையும் சாகுபடி செஞ்சிருக்கேன்.

செண்டுமல்லியைப் பொறுத்தவரைக்கும் மல்லிகைப் பூ மாதிரி தினப் பறிப்பா பறிக்கணும்னு கட்டாயம் கிடையாது. ரெண்டு, மூணு நாள்களுக்கு ஒரு தடவையும் பறிக்கலாம். இடைவெளி விட்டுப் பறிக்கிறதுனால பூ நல்லா மலர்ந்திருக்குமே தவிர வாடாது. அதே நேரத்துல இடைவெளி விட்டுப் பறிச்சு, மொத்தப் பூவையும் மூட்டை மூட்டையா சந்தையில இறக்குனா நல்ல விலை கிடைக்கும்னு சொல்ல முடியாது.

தொடர்ச்சியா பூ சாகுபடி செஞ்சி சந்தைக்குக் கொண்டுபோகணும். அப்பத்தான் வியாபாரிங்க நம்மளை எதிர்பார்ப்பாங்க. திருநெல்வேலி பூச்சந்தையிலதான் பூக்களை விற்பனை செய்றேன். காலையில 6 மணிக்கெல்லாம் பறிப்பை ஆரம்பிச்சிடுவோம். 8 மணிக்குள்ள பறிச்சு, 9.30 மணிக்குச் சந்தையில மூட்டையை இறக்கிடுவோம். 10 மணிக்குள்ள நடக்குற ஏலத்துலதான் நல்ல விலை கிடைக்கும். கதம்பம், பூ மாலைகள்ல செண்டுமல்லியின் பங்கு அதிகம். செண்டுமல்லி இல்லாத பூமாலையைப் பார்க்க முடியாது. சாதாரண நாள்களைத் தவிர வெள்ளி, செவ்வாய், முக்கியப் பண்டிகைகள், விசேஷங்கள், முகூர்த்த நேரங்கள்ல நல்ல விலை கிடைக்கும்.

அட்டவணை
அட்டவணை


செண்டுமல்லிக்குத் தேவை இருக்குங்கிற துனால சந்தை வாய்ப்புக்கு எந்தக் குறைவும் கிடையாது. ஆரஞ்சு நிறச் செண்டுமல்லி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மஞ்சள் நிறச் செண்டுமல்லி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் குறையாம வித்ததே கிடையாது. அதேபோல அதிகபட்சமா ஆரஞ்சு நிறப் பூ 120 ரூபாய் வரையிலும், மஞ்சள் நிறப் பூ 100 ரூபாய் வரையிலும் விலை போகும். அதனால, இதுல நஷ்டமுங்குற பேச்சுக்கே இடமில்ல.

சராசரியா ஆரஞ்சு பூ கிலோவுக்கு 40 ரூபாய், மஞ்சள் பூ கிலோவுக்கு 30 ரூபாய் கிடைக்கும். போனமுறை கழிவுப் பூக்கள் போக, 50 சென்ட்ல 4,600 கிலோ ஆரஞ்சு நிறப் பூவும், 50 சென்ட்ல 4,300 கிலோ மஞ்சள் நிறப் பூவும் கிடைச்சது. ஆரஞ்சு நிறப் பூ விற்பனை மூலமா 1,84,000 ரூபாயும் மஞ்சள் நிறப் பூ விற்பனை மூலமா 1,29,000 ரூபாயும் என மொத்தம் 3,13,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல மொத்தச் செலவு 1,19,500 ரூபாய் கழிச்சு, மீதமுள்ள 1,93,500 ரூபாய் லாபம்தான். இது ஒரு போகத்துல கிடைச்ச லாபம்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ஸ்டெல்லாமேரி,

செல்போன்: 75503-85262

மஞ்சள் நிற செண்டுமல்லி
மஞ்சள் நிற செண்டுமல்லி

பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் செண்டுமல்லி

‘‘வாழை, பப்பாளி, தென்னை, சம்பங்கி, கொய்யா என எந்தப் பயிருக்கும் ஊடுபயிராகச் செண்டுமல்லியைச் சாகுபடி செய்யலாம். முதன்மைப் பயிரைத் தாக்கும் நூற்புழுக்களை இவை கட்டுப்படுத்தும். இதில், மஞ்சள் நிறச் செண்டுமல்லி, முதன்மைப் பயிர்களைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைத் தின்னும், நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும். இதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். எல்லாப் பயிருக்கும் வேலி ஓரங்களிலும் செண்டு மல்லியை நடவு செய்யலாம். ஆடு, மாடு சாப்பிடாது என்பதால் கால்நடைகளால் பாதிப்பு இல்லை. ஊடுபயிராகச் சாகுபடி செய்வதன் மூலம் உபரி வருமானமும் பார்க்கலாம்” என்கிறார் ஸ்டெல்லா மேரி.

பூச்சித் தாக்குதலுக்கு வேப்பங்கொட்டைக் கரைசல்!

மொட்டு விடும் நேரத்தில் ஒருவிதப் பச்சை நிறப் புழுக்களின் தாக்குதல் இருக்கும். அவை இலைகள், பூக்களில் சாற்றை உறிஞ்சும். அதன் தீவிரம் அதிகமாகும்போது பூக்கள் காய்ந்துவிடும். அதைக் கட்டுப்படுத்த 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி வேப்பங்கொட்டைக்கரைசல் கலந்து கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 5 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இடித்து, 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கலந்து ஒருவாரம் வரை ஊற வைத்து வடிகட்டினால் ‘வேப்பங்கொட்டைக் கரைசல்’ தயார்.

மஞ்சள் நிற செண்டுமல்லி
மஞ்சள் நிற செண்டுமல்லி

இப்படித்தான் செண்டுமல்லிச் சாகுபடி

ஒரு ஏக்கரில் செண்டுமல்லிச் சாகுபடி செய்வது குறித்து ஸ்டெல்லா மேரி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

அனைத்து வகை மண்ணிலும் செண்டுமல்லியைச் சாகுபடி செய்யலாம். ஆண்டு முழுவதும் எந்தப் பட்டத்திலும் நடவு செய்யலாம். இருந்தாலும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நடவு செய்தால் வளர்ச்சி வேகமாக இருக்கும். நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே 8 நாள்கள் இடைவெளியில், 4 முறை உழவு செய்ய வேண்டும். 4வது உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி பரவலாக உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 2 அடி, நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

இந்த இடைவெளியில் நட்டால்தான் செடி வளரும்போது ஒன்றையொன்று உரசாது. செடி உரசினால் பூக்கள் பருவெட்டாகாது. 18 முதல் 22 நாள்கள் வரையிலான நாற்றுகள் நடவுக்கு ஏற்றது. நட்ட அன்றே உயிர் நீரும் பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்தும் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும். அதிக தண்ணீர் தேங்கினால் செடி அழுகிவிடும் என்பதால் கவனம் தேவை. நாற்று நடவு செய்வதற்கு முன்பு, ஒரு பாத்திரத்தில் பஞ்சகவ்யாவை ஊற்றி நாற்றுகளின் வேர்ப்பகுதியை முக்கி எடுத்து நிழலில் 10 நிமிடங்கள் காய வைத்த பிறகு, நடவு செய்ய வேண்டும். இப்படி விதை நேர்த்தி செய்து நாற்றுகளை நட்டால் வேர் அழுகல் நோய் வராது.

ஆரஞ்சு நிற செண்டுமல்லி
ஆரஞ்சு நிற செண்டுமல்லி

10-ம் நாளிலிருந்து 7 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யாவை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா) கைத் தெளிப்பான் மூலம் தெளித்து வர வேண்டும். 15-ம் நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 10, 25 மற்றும் 35-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். களை எடுக்கும்போது செடிகளின் தூர்களில் மண் அணைக்க வேண்டும். இதனால் நன்கு வேர் பிடிப்பதுடன், செடியின் தாங்கு திறனும் அதிகரிக்கும்.

30 முதல் 35-ம் நாளில் மொட்டுகள் தென்படும். அந்த நேரத்தில் பயிர் வளர்ச்சியூக்கியாக 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி, மீன் அமிலத்தைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து விட வேண்டும். இதனால் பூக்கள் தரமானதாகவும், பருவெட்டாகவும் இருக்கும். 40 முதல் 45-ம் நாளில் பூ பூக்கத் தொடங்கும். 45 முதல் 50-ம் நாளிலிருந்து பூக்களைப் பறிக்கத் தொடங்கலாம். 60-ம் நாளுக்கு மேல் மகசூல் அதிகரிக்கும். தொடர்ந்து 120-ம் நாள் வரை பூப்பறிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism