Published:Updated:

350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!

வி.பி.செல்லமுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
வி.பி.செல்லமுத்து

படிச்சோம் விதைச்சோம்

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாகவும், வறண்டப் பகுதியாகவும் மாறி யிருக்கிறது, கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி. ஆனால், இந்த வறண்ட பூமியிலும், மழைநீரைச் சிறப்பாகச் சேமித்து, இயற்கை முறையில் ஆடு, கோழி வளர்ப்பு, காய்கறி, தீவனப்புல், விதைகள் உற்பத்தி, பழமரங்கள் சாகுபடி, பஞ்சகவ்யா, மண்புழு உரம் தயாரிப்பு என வெற்றிகர விவசாயியாகத் திகழ்கிறார் வி.பி.செல்லமுத்து.
350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கணக்குப்பிள்ளைபுதூரைச் சேர்ந்தவர் வி.பி.செல்லமுத்து. அவரது நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களெல்லாம் வறண்டுபோய், மேய்ச்சல் நிலமாக மாறியிருக்கின்றன. ஆனால், இவரது நிலம் மட்டும் பசுமை போர்த்தியிருக்கிறது. ஒரு மாலைவேளையில் வி.பி.செல்லமுத்துவைச் சந்தித்தோம். வேலை ஆள்களுக்கு அறிவுரை வழங்கிவிட்டு, நம்மிடம் பேசத் தொடங்கினார்.

“எங்க பூர்வீகத் தொழிலே விவசாயம்தான். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ வரலாறு படிச்சேன். படிக்கிற காலத்துல வாலிபால், கபடியில சாம்பியனா இருந்தேன். அப்போ சென்னைப் பல்கலைக்கழகக் கபடி டீமுக்கு நான்தான் கேப்டனா இருந்தேன். 30 வருஷத்துக்கு முன்னாடி டிகிரியை முடிச்சப்ப, வேலைக்குப் போகத் தோணல. பாட்டன், பூட்டன் பார்த்து வந்த விவசாயத்தையே கையில் எடுத்தேன். விவசாயத்தை நான் ஆரம்பிக்கும்போது, மிளகாய், கம்பு, சோளம், கடலை, புகையிலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை பண்ணிணேன். அப்போவெல்லாம் நல்லா மழை பெய்யும். கிணறுகள்ல தண்ணி ஊறும். ஆனா, போகப் போக நிலைமை மோசமாயிடுச்சு. மழை கம்மியாகிடுச்சு. இருந்தாலும், விடாம விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!

என்னோட நிலம் 20 ஏக்கர். அதுல முழுசா வெள்ளாமை பண்ண முடியலை. அதனால, மழைநீரைத் தேக்கி, பூமிக்குள்ள அனுப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்னு முடிவு பண்ணினேன். என் நிலத்தில அங்கங்க மண்ணேரி (கரைகளை) அமைச்சு, மழைநீர் பூமிக்குள்ள போற மாதிரி செஞ்சேன். நாலஞ்சு வருஷம் தொடர்ந்து செஞ்சதுல, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துச்சு. அதனால, தடங்கல் இல்லாம விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல இருந்தே இயற்கை விவசாயம் பண்ணினாலும், கடந்த அஞ்சு வருஷமாதான் தீவிரமா இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு வர்றேன்’’ என்று அறிமுகம் கொடுத்தவர் தோட்டத்தை நமக்குச் சுற்றிக்காட்டினார்.

‘‘7 ஏக்கர் நிலத்துல தீவனப் புல்லை வெள்ளாமை பண்ணி, அதுல கிடைக்குற விதைகளைச் சேகரிச்சு விற்பனை செய்றேன். முயல் மசால், வேலி மசால், சூப்பர் நேப்பியர், கொழுக்கட்டை புல்னு பல ரகத் தீவனப் புல்லைப் பயிர் செஞ்சு, வருஷம் முழுக்க விதைகளை விற்பனை செய்றேன். அரசு கால்நடை துறைக்கும், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரிக்கும் தீவனப்புல் விதைகள அனுப்பிக்கிட்டு இருக்கேன்.

350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!

இதைத் தவிர, விவசாயிகள், தனியார் விதை கடைகளுக்கும் கொடுத்துட்டு இருக்கேன். ஒரு கிலோ முயல் மசால் விதை ரூ.400, வேலிமசால் விதை கிலோ ரூ.600, சூப்பர் நேப்பியர் கரணை ஒன்று ஒரு ரூபாய், கொழுக்கட்டைப் புல் விதை ரூ.300-க்கும் விலை போகுது. இது மூலமா எல்லாச் செலவுகளும் போக மாசம் ரூ.30,000 லாபம் கிடைக்குது. ஒருபக்கம் விவசாயம் பார்த்தாலும், ஆடு வளர்ப்பையும் தீவிரமா பண்ணிக்கிட்டு வர்றேன். கொட்டகை அமைச்சு வளர்க்குறேன். என்கிட்ட 300 செம்மறியாட்டுக் குட்டிகளும், 50 தாய் ஆடுகளும் இருக்குது. ஆடுகளை என் நிலத்தில தன்னால மேயவிடுவேன். ஆட்டுக்குத் தேவையான அசோலாவை நானே உற்பத்தி செஞ்சுக்குறேன். உளுந்தம் பொட்டு, பாசிப்பயறு பொட்டு, துவரைப் பொட்டு, மக்காச்சோளம், பிண்ணாக்குனு கலந்த கலப்புத் தீவனம் கொடுக்கிறேன். அதேபோல, நான் விதைக்காக வளர்க்குற வேலி மசால், சூப்பர் நேப்பியர், முயல் மசால், கொழுக்கட்டைப் புல்லையும் வெட்டிப் போடுவேன்.

வேலிமசால்
வேலிமசால்

மொத்தமுள்ள ஆடுகளை 25 - 30 ஆடுகளாப் பிரிச்சு தனித்தனியா அடைச்சு வளர்க்கிறேன். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை அதுல இருந்து ஆடுகளை விற்பனை செய்வேன். அந்த இடத்துக்கு வெளியில மூணு மாசக் குட்டிகளை விலைக்கு வாங்கி வந்துவிடுவேன். அதை ரெண்டு மாசம் வளர்த்து, விற்பனை செய்றேன். இதைச் சுழற்சிமுறையில செய்வேன். மூணு மாசக் குட்டியை ரூ.5,000-க்கு வாங்குவேன். கலப்புத் தீவனம் போட்டு வளர்ப்பேன். ரெண்டு மாசம் கழிச்சு ரூ.7,000-க்கு விற்பனை செய்வேன். கலப்புத் தீவனத்துக்கு ரூ.1,000 செலவு போக,

ஒரு குட்டிக்கு ரூ.1,000 கையில் நிக்கும். சராசரியா மாசம் 50 ஆட்டுக்குட்டிகள் வரை விற்பனை செய்றேன். அந்த வகையில, மாசம் எனக்கு ரூ.50,000 வரை லாபம் கிடைக்குது.

ஆடு வளர்ப்பில் லாபம்னாலும், அதைப் பராமரிக்குறதுல கவனமா இருக்கணும். நீலநாக்கு நோய், துள்ளுமாரி, அம்மை நோய்னு வரும். வருஷத்துக்கு ஒருதடவை ஆடுகளுக்குத் தடுப்பூசி போடுவேன். மூணு மாசத்துக்கு ஒருதடவை எல்லாக் குட்டிகளுக்கும் குடற்புழு நீக்கம் மருந்து கொடுப்பேன். விற்பனைக்குச் சிரமமில்ல. வியாபாரிங்க என் பண்ணைக்கே வந்து, எடைபோட்டு ஆடுகளை வாங்கிட்டுப் போறாங்க’’ என்றவர் ஆடுகளுக்குத் தீவனத்தைப் போட்டுவிட்டுத் தொடர்ந்தார்.

தீவனத்தட்டை
தீவனத்தட்டை

‘‘இதுமட்டுமில்லாம, கடக்நாத் கோழி, நாட்டுக் கோழி, கின்னிக்கோழி, வான்கோழிகள வளர்க்கிறேன். கோழிகளைக் காட்டுல மேய விடுவேன். கம்பு, சோளம், மக்காச்சோளம்னு வாங்கிக் கலந்து கோழிகளுக்குத் தீவனமா கொடுப்பேன். கோழிகளைக் கவனிச்சு வளர்க்கணும். வெள்ளைக்கழிச்சல் நோய் வராம இருக்க, 3 மாசத்துக்கு ஒருதடவை தடுப்பூசி போடுவேன். மழைக்காலங்கள்ல கோழிகளுக்குச் சளி வராம இருக்க, மாசத்துக்கு ஒருதடவை மருந்து கொடுப்பேன்.

அமுதக்கரைசல், மீன் அமிலம், பூச்சி விரட்டித் தயாரிச்சு, சொந்த தேவைக்குப் பயன்படுத்திக்கிறேன். இதோடு, தேனீ வளர்க்குறேன். கொசுத்தேன், அடுக்குத்தேன்னு தேன் சேகரிக்க 9 பெட்டிகளை வெச்சுருக்கிறேன். பழமரங்கள், மூலிகைச் செடிகள், காய்கறிச் செடிகளுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் மூலமா பாசனம் செய்யுறேன்’’ என்றவர் மாத வருமானம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

இயற்கை இடுபொருள்கள்
இயற்கை இடுபொருள்கள்

‘‘தீவனப் புல் விதைகள் மூலம் ரூ.30,000, ஆடுகள் மூலம் ரூ.50,000, கடக்நாத் கோழிகள் மூலம் ரூ.45,000, நாட்டுக்கோழிகள் மூலம் ரூ.10,000, கின்னிக்கோழிகள் மூலம் ரூ.20,000, பஞ்சகவ்யா விற்பனை மூலம் ரூ.7,000, மண்புழு உர விற்பனை மூலம் ரூ.40,000, நர்சரிகள் மூலம் ரூ.10,000, மூலிகை வளர்ப்பு மூலம் ரூ.1,000, நாட்டுவிதைகள் விற்பனை மூலமா ரூ.5,000. ஆக மொத்தம் மாசம் ரூ.2,18,000 லாபமா கிடைக்குது’’ என்றவர் நிறைவாக,

‘‘கடந்த அஞ்சு வருஷமா இதைக் கொஞ்சம் கொஞ்சமா ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணை மாதிரி இந்த இடத்தை உருவாக்கியிருக்கிறேன். இதைப் பார்க்க விவசாயிகள், மாணவர்கள்னு பலரும் வந்துட்டுப் போறாங்க. அதோடு, விவசாயத்தை நேர்த்தியா பண்றது எப்படினு உணர்த்துற பயிற்சி மையமா இந்தப் பண்ணையை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்” என்று உற்சாகமாகச் சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, வி.பி.செல்லமுத்து, செல்போன்: 99940 55060.

நாட்டுக்கோழி முட்டைகள்

“இதைத்தவிர, நாட்டுக்கோழி வகையில 65 முட்டைக்கோழிகள் வெச்சிருக்கிறேன். அதுக மூலமா மாசம் சராசரியா 1,200 முட்டைகள் கிடைக்குது. ஒரு முட்டை ரூ.15-க்கு விலை போகுது. அந்த வகையில மாசம் ரூ.18,000 வருமானம் கிடைக்கும். அதுல செலவுபோக, மாசம் ரூ.10,000 கையில் நிக்கும்.”

கின்னிக் கோழிகள்

“என்கிட்ட 75 கின்னிக் கோழிகள் இருக்குது. அதுகளோட குஞ்சுகளை விற்பனை செய்றேன். ஒருமாசக் குஞ்சுகள் ரூ.200 விலையில மாசம் 150 குஞ்சுகள் விற்பனை ஆகும். அந்த வகையில, மாசம் ரூ.30,000 வருமானம் கிடைக்குது. அதுல, செலவு போக ரூ.20,000 நிகர லாபமா கிடைக்கும். அதேபோல், கறிக்காக 15 வான்கோழிகளையும் வளர்த்துக் கிட்டு வர்றேன். அதை இன்னும் விற்க ஆரம்பிக்கல.”

350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!

வழிகாட்டிய பசுமை விகடன்

‘‘நான் தீவிரமா இயற்கை விவசாயம் செய்றதுக்குக் காரணம், பசுமை விகடனும், அதுமூலமா கருத்துகளைப் பரப்புன நம்மாழ்வாரும்தான். பசுமை விகடன்ல இலவச பகுதியா வர்ற சந்தைப் பகுதி எனக்கு ரொம்பப் பயன்பட்டுச்சு. பலமுறை அதுல தீவனப்புல் விதைகள் பற்றி விளம்பரம் பண்ணினேன். அதைப் பார்த்துட்டு சென்னை, கடலூர், சேலம்னு பல மாவட்டங்கள்ல இருந்தும் விதைகள் வாங்குனாங்க. இப்பவும் வாங்கிகிட்டு இருக்காங்க. அதேபோல, நான் கோழி வளர்க்க ஆரம்பிச்சப்ப, போதுமான அனுபவம் இல்லாம ரொம்பச் சிரமப்பட்டேன். அப்போ பசுமை விகடன்ல வந்த கோழி வளர்ப்புக் கட்டுரைகள், பண்ணையாளர்கள் அனுபவங்களைப் படிச்சுதான் பல தகவல் களைத் தெரிஞ்சுகிட்டேன். இப்படிப் பல விஷயங்கள்ல பசுமை விகடன் எனக்கு வழிகாட்டியாக இருக்கு” என்கிறார் செல்லமுத்து.

பழமரக்கன்றுகள், நாட்டு விதைகள்

350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!

பழமரச்சாகுபடி குறித்து பேசிய செல்லமுத்து, ‘‘சின்ன இடத்தில பழத் தோட்டமும் போட்டிருக்கிறேன். தவிர, கொய்யா, மாதுளை, பப்பாளி உள்ளிட்ட பழமரக்கன்றுகளை உற்பத்தி செஞ்சு, விவசாயிகளிடம் நேரடி விற்பனை பண்றேன். மாசம் ரூ.25,000-க்குப் பழமரக்கன்றுகள் விற்பனையாகும். செலவுபோக இதுல ரூ.10,000 லாபமா வரும். வீட்டைச் சுற்றி, மூலிகைத் தோட்டம் அமைச்சிருக்கிறேன். தூதுவளை, கண்டங்கத்திரினு 20 வகையான மூலிகைச் செடிகளை வளர்த்துக்கிட்டு வர்றேன்.

இந்த மூலிகைச் செடிகள் விற்பனைமூலம் மாசம் ரூ.1,000 கிடைக்குது. இதைத்தவிர, ஒரு ஏக்கர் நிலத்தில், நாட்டு ரகக் கத்திரி, மிளகாய், வெண்டை, தக்காளி, அவரை, பீர்க்கன், சுரை, அரசாணி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செஞ்சு, விதைகளை மட்டும் சேகரிச்சு, விற்பனை செய்றேன். ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகள்ல இருந்தும் விவசாயிங்க வந்து, மொத்தமா விதைகள வாங்கிட்டுப் போறாங்க. இந்த வகையில, மாசம் ரூ.5,000 கிடைக்குது” என்றார்.

காசு கொடுக்கும் கடக்நாத்

350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!

கடக்நாத் கோழிகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துப் பேசிய செல்லமுத்து, ‘‘என்கிட்ட 200 கடக்நாத் கோழிகள் இருக்கு. அதைக் கோழியா விக்கமாட்டேன். முட்டையாகவும் ஒரு மாச குஞ்சுகளாகவும்த்தான் விற்பனை செய்றேன். ஒரு முட்டை ரூ.30. மாசம் 1,000 முட்டைகள் கிடைக்குது. அதுமூலமா ரூ.30,000 வரை வருமானம் கிடைக்குது. அதேபோல், மாசம் 300 கோழிக்குஞ்சுகள் வரை விற்பனை செய்றேன். ஒரு குஞ்சு ரூ.150-க்கு விலைபோகுது. அதுமூலம் மாசம் ரூ.45,000 கிடைக்கும். ஆக மொத்தம் கடக்நாத் கோழி மூலமா மாசத்துக்கு ரூ.75,000 கிடைக்கும். அதுல தீவனம், பராமரிப்புச் செலவு ரூ.30,000 போக, ரூ. 45,000 லாபம் கிடைக்குது’’ என்றார்.

மண்புழு உரம்!

350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!

‘‘பஞ்சகவ்யா தயாரிச்சு மாசம் 50 லிட்டர் வரை விற்பனை செய்றேன். ஒரு லிட்டர் ரூ.200-க்கு கொடுக்குறேன். அதுமூலமா கிடைக்குற 10,000 ரூபாயில, செலவு போக மாசம் ரூ.7,000 லாபமா நிக்கும். 10 வருஷமா மண்புழு உரம் தயாரிச்சுக்கிட்டு வர்றேன். மாசம் 6 டன் விற்பனை செய்றேன். கிலோ ரூ.10 ரூபாய்க்கு விலை போகுது. அந்த வகையில் எனக்கு மாசம் ரூ.60,000 கிடைக்குது. அதுல செலவு ரூ.20,000 போனாலும் ரூ.40,000 லாபமா நிக்குது’’ என்கிறார் செல்லமுத்து.

350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!
350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!
350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!
350 ஆடுகள்... 355 கோழிகள்... மாதம் ரூ.2,18,000 லாபம்!