Published:Updated:

7 பயிர்களுடன் மதுரையில் வேளாண் பல் பயிர் பூங்கா... விவசாயிகள் ஏன் பார்வையிட வேண்டும்?

7 பயிர்கள்
7 பயிர்கள்

தீவன தட்டப்பயறு (கோ-9) இறவைப் பயிராக ஆண்டு முழுதும் நடவு செய்ய உகந்தது. தீவனத்துக்கு 50 முதல் 55 நாள்களும்.

பக்கத்து மாவட்ட விவசாயிகள் கூட இந்த 7 ரக பயிர்களை நேரடியாக வந்து பார்வையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய வழிமுறைகளைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் அறிமுகப்படுத்திய புதிய ரக பயிர்களைப் பரிந்துரை செய்யும் விதமாக மதுரை விவசாயக் கல்லூரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஒரே இடத்தில் ஏழு ரகங்களின் பயிர்களைப் பயிரிட்டு விவசாயிகளுக்கு எளிமையாகப் புரியும் வகையில் நேரடியாக விளக்கிப் பரிந்துரை செய்து வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வரும் விவசாயிகள் `பல் பயிர்ப் பூங்காவை’ பார்வையிட்டுச் செல்கின்றனர்.

7 வகை பயிர்கள் (தீவன தட்டைப்பயறு)
7 வகை பயிர்கள் (தீவன தட்டைப்பயறு)

இது குறித்து இதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் நம்மிடம், "சுமார் 60 சென்ட் நிலத்தில் சூரிய காந்தி, நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, தீவன தட்டைப்பயறு, வரகு, சோளம் ஆகிய 7 வகை பயிர்களை நடவு செய்து பல் பயிர்ப் பூங்காவாக ஒருங்கிணைத்துள்ளோம். சிறுதானிய பயிரான சோளத்தில் கோ-32 மற்றும் வரகு ரகத்தில் டி.என்.ஏ.யூ -86-ம் பயறு ரகத்தில் தட்டைப்பயிறு வம்பன் - 3 மற்றும் பாசிப் பயறில் வம்பன் 4-ம்

எண்ணெய் வித்துக்கள் ரகத்தில் நிலக்கடலை டி.எம்.வி -14 மற்றும் சூரிய காந்தியில் கோ-ஹெச்-3 ரகமும். தீவன வகையில் கோ 9-ம் இப்பகுதி விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்துள்ளோம். பல இடங்களில் இருந்து கொண்டு வந்து விதைகளை ஒரே இடத்தில் நடவு செய்து பல் பயிர்ப் பூங்காவாக மாற்றி ஒருங்கிணையப் பார்வையிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைத்துள்ளோம்.

ஆகஸ்ட் 6-ம் தேதி விதைக்கப்பட்ட இந்த விதைகள் பூ பூக்கும் மற்றும் காய் காய்க்கும் நிலையில் உள்ளது. இதை விவசாயிகள் நேடியாகப் பார்வையிடும்போது பயிர் நடவு செய்முறை, நிலத்தைப் பக்குவப்படுத்த தேவையான வழிமுறை, உரம், நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை நேரடியாகக் கேட்டு கலைத்துக்கொள்ள முடியும்.

இதில் நிலக்கடலை (டி.எம்.வி 14) பொறுத்தவரை 48% எண்ணெய் சத்துகளைக் கொண்டுள்ளது. இவை 95 - 100 நாள்கள் வரை வளரக்கூடியது. இறவை மற்றும் மானாவாரிக்கும் எல்லா பருவத்திலும் ஏற்ற ஒன்றாக இருக்கிறது.

7 பயிர்களுடன் மதுரையில் வேளாண் பல் பயிர் பூங்கா... விவசாயிகள் ஏன் பார்வையிட வேண்டும்?

அதேபோல் சூரிய காந்தி (கோ-ஹெச் 3) 90 - 95 நாள்கள் வளரக்கூடியது. இறவை பருவத்தில் ஆண்டு முழுதும் நடவு செய்யக்கூடிய ஒன்று. தனியார் ரகங்களுக்கு ஈடாகப் போட்டி போட்டு வளரக்கூடியது. 42.0% எண்ணெய் கிடைக்கக்கூடியது.

பாசிப்பயறு (வி.பி.என் 3) பொறுத்தவரை 65 - 70 நாள்கள் வளரக்கூடியது. செடி நுனியில் காய்ப்பு கிடைக்கும். சீரான முதிர்வுத் தன்மை அடையும். இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதும் எளிமை.

தட்டைப்பயறு (வி.பி.என் -3) 75 - 85 நாள்கள் வளரக்கூடியது. புரட்டாசி பட்டத்துக்கு ஏற்றது. மானாவாரியில் ஹெக்டேருக்கு 1,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். சீரான முதிர்ச்சி மற்றும் 25.2 புரோட்டீன் கிடைக்கக்கூடிய மகத்தான பயிராகும்.

சோளம் (கோ-32) 105 - 110 நாள்கள் வளரக்கூடியது. தானியங்கள் மற்றும் தீவனத்துக்கு ஏற்றது. குத்து ஈ, தண்டு துளைப்பான், அடிச்சாம்பல் மற்றும் கதிர் பூசணி நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.

7 ரக பயிர்களுடன் அதிகாரிகள்
7 ரக பயிர்களுடன் அதிகாரிகள்

வரகு (டி.என்.ஏ.யூ 86) ரகம் 95 - 110 நாள்கள் வளரக்கூடியது. ஆடிப்பட்ட சாகுபடிக்கு ஏற்றது. சாயத்தன்மையுடன் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. காரிப்பூட்டை நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டது.

தீவன தட்டப்பயறு (கோ-9) இறவைப் பயிராக ஆண்டு முழுதும் நடவு செய்ய உகந்தது. தீவனத்துக்கு 50 முதல் 55 நாள்களும். விதைக்கு 90 முதல் 95 நாள்களுக்கு ஏற்றது. 21.5% புரோட்டீன் நிறைந்தது. சுவை மற்றும் செரிமானத்துக்கு ஏற்ற ஒன்றாகவும் இருக்கிறது.

பல் பயிர்ப்பூங்காவை பார்வையிட்ட சிவகங்கை விவசாயிகள் தங்ளுக்கு பயனுள்ள வகையில் இருப்பதாகத் தெரிவித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. மேலும், இந்தப் பல்பயிர்ப் பூங்காவில் விதை தொழில்நுட்ப வல்லுநர் மேனகா, மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணகுமார், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் உஷா ராணி, வேளாண் விரிவாக்கத் தொழில்நுட்ப வல்லுநர் செல்வராணி, மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ஆரோக்கிய மேரி, தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் பழனிக்குமார், பண்ணை மேலாளர் காயத்ரி தேவி ஆகியோர், பார்வையிடும் விவசாயிகளுக்கு சந்தேகங்களுக்கு பதில் அளிக்கின்றனர்.

வரகு பயிர்
வரகு பயிர்

இன்னும் ஒரு மாதம் வரை இந்தப் பல்பயிர்பூங்காவை பார்வையிடவும், பின்னர் ஒவ்வொரு பயிராக காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் அறுவடைக்கு வந்துவிடும்" என்றார்.

மேலூர் விவசாயிகள் சிலர், ``மதுரை வேளாண்மைக் கல்லூரியில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களில் பல்வேறு பயிற்சிகள் அளிப்பது தெளிவுபெற முடிகிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள பல் பயிர்பூங்கா எங்களுக்கு அறிமுகம் இல்லாத புதிய பயிர்களைப் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பகுதிக்குத் தேவையான பயிர்களை எளிமையாகத் தேர்வு செய்யலாம். பக்கத்து மாவட்ட விவசாயிகள் கூட இந்த 7 ரக பயிர்களை நேரடியாக வந்து பார்வையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு