Published:Updated:

நுங்கு நாள்கள்! - வாசகர் பகிர்வு #MyVikatan

ஒவ்வொரு பனை மரத்து நுங்கின் ருசியும், அதன் அடர்த்தியும் ஆழமும் ஒன்றுக்கொன்று வேறுபடும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நெடுநெடுவென கறுப்பு... கம்பீரம்... எல்லை சாமிபோல் ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்கள். அவை நம் மண்ணின் மாசற்ற வரங்கள். கிராமத்து மனிதர்களின் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பனை மரங்களின் பயணம் பின்னிப் பிணைந்தவை. அதன் ஒவ்வொரு பகுதியும் மனிதர்களின் நலனோடும் மகிழ்வோடும் உறவாடுபவை..! அதுவும் நுங்கின் அனுபவம் எத்தனை வயதானாலும் இன்னும் ஜில் ரகம். அவை எனக்குள் ஏற்படுத்திய, இன்னும் என்னைவிட்டு அகலாத அனுபவத் தாக்கங்கள் இங்கே..!

Representational Image
Representational Image

என்னைப் போன்ற கிராமத்துப் பிள்ளைகள் சற்று வளர்ந்து ஓட்டமும் நடையுமாக ஓடத் தொடங்குகையில் எங்களுக்கு ஹீரோ, அட்லஸ், பியர்லெஸ் போன்ற அப்போதைய பணக்கார வீட்டு வாகனமான சைக்கிள்களுக்கெல்லாம் வாங்க வசதி இருக்காது. நுங்கு வண்டிதான் நாங்கள் ஓட்டிய இ.எம்.ஐ கட்டாத, எரிபொருள் நிரப்பாத இயற்கையின் முதல் பைக். இதற்காக அழகான வடிவம் கொண்ட வட்ட வடிவ நுங்குகளைப் பளபளவென பிளேடுபோல் இருக்கும் அரிவாள்களால் சீவி, சக்கர ஓரங்களை அழகான டிசைனாய் வடிவமைத்து வாங்குவோம்.

இதை அழகாக வடிவமைப்பதற்காகவே உறவினர்கள் சிலர், பேர் சொல்லும் டிசைனராக வலம் வருவார்கள். இதற்காக அவர்களிடம் கெஞ்சிக் கதறி காத்திருந்து நுங்கு வண்டி தயார் செய்வோம். இரண்டு நுங்கு சக்கரங்கள். நடுவில், ஒரு அச்சு. அதை உருட்டுவதற்கு `வி' வடிவில் கவை என்று சொல்லக்கூடிய ஒரு நீண்ட கம்பு இருக்கும். அதை 100 சிசி பைக்காக ஊர் முழுக்க ஓட்டித் திரிகையில் நம் சமகாலத்து சேட்டை நண்பர்கள் தாங்கள் வைத்திருக்கும் பெரிய நுங்கு உருளைகளால் மோதி சேதமும் ஏற்படுத்துவார்கள்.

Representational Image
Representational Image

சண்டையும் நடக்கும். சில சமயம் பந்தயமும் நடக்கும். நாள் முழுக்க எங்கு சென்றாலும் இந்த வண்டியும் கூடவே வரும். இன்று தோற்றுப்போனால் நாளை எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வரும். இரவு உறங்கும்வரை இந்த வண்டி எங்கள் கூடவே இருக்கும். வீட்டு வாசலில் பார்க்கிங் செய்துவிட்டு, அம்மாவிடம் அப்பாவிடம் ஏராளமான திட்டுகளை வாங்கிக்கொண்டுதான் வீட்டுக்குள் படுக்கப்போவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோடைகாலம்தான் பனை நுங்கு சீஸன். பள்ளி முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை வேறு. சொந்தம் பந்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து வந்து கூடி இருக்கும். காலை கஞ்சியை முடித்துவிட்டு ஆடு மாடுகள் எல்லாம் அவிழ்த்து விடப்படும் வேளையில் நாங்களும் அருவாளும் கையுமாக வயலுக்கு நுங்கு வேட்டைக்குக் கிளம்புவோம். பனை மரம் ஏறுதல் என்பது கலை. சற்று தடுமாறினாலும் வாழ்க்கை முழுவதற்கும் அதுவே மோசமான நிலை. இப்படி பனை மரம் ஏறி உயிரிழந்தவர்களும், கை கால்கள் இடுப்பை பறிகொடுத்தவர்களும் இன்னும் பரிதாபமாக வாழ்ந்து வருகிறார்கள்.

Representational Image
Representational Image

எங்கள் ஊர் வயல் முழுக்க பனை மரங்கள்தான். ஆனாலும், ஒவ்வொரு பனை மரத்து நுங்கின் ருசியும், அதன் அடர்த்தியும் ஆழமும் ஒன்றுக்கொன்று வேறுபடும். சதைக் காய்ச்சியா, கொட்டைக் காய்ச்சியா, இனிப்பா, சலிப்பா என்று இதன் சுவை அறிந்து பனைகளின் பட்டியல் எங்கள் கைவசம்தான் இருக்கும். அதுவும் களவாணி நுங்கு என்று சொல்லக்கூடிய அடுத்தவர் வீட்டு பனை மரங்களுக்கு அலாதி சுவை இருக்கும்.

நம் சொந்த மரங்களில் சுற்றமும் நட்பும் சூழ நுங்குகளை பனையின் மரத்தடியிலே உட்கார்ந்து சாப்பிடுவோம். அடுத்தவர் வீட்டுப் பனை என்றால் எங்காவது புதர் மறைவில்தான் நுங்கு விருந்து நடந்தேறும். கண்மாய்க் கரை, கோயிலையொட்டிய பொது இடங்களில் வளரும் பனை மரங்கள் என்றால் கிராமத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானலும் வெட்டிச் சுவைக்கலாம். அடுத்த கிராமத்து ஆட்கள் இங்கே நுழைந்து நுங்கு திருட்டில் ஈடுபட்டால், அவர்களின் கிராம எல்லைவரை விரட்டிச் சென்றுவிட்டுத்தான் திரும்புவோம். பல நேரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்களின் அருவாள்கள், கைலிகள், துண்டுகள்கூட பறிமுதல் ஆகும்.

Representational Image
Representational Image

நுங்குகளைத் திருடிவிடக் கூடாது என்பதற்காகச் சிலர் இலந்தை மற்றும் வேலிக்கருவை முள்களை பனைமரங்களில் ஏற முடியாதபடி கட்டிவைத்திருப்பார்கள். இதையும் தாண்டி நுங்குத் திருடர்களின் புத்தியில் உரைக்க வேண்டும் என்பதற்காக அறுந்த செருப்பும், பழைய விலக்குமாறும்கூட சில மரங்களில் தொங்கிக்கொண்டே இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கை வரிசை காட்டுபவர்களும் இருப்பார்கள்.

ஒரு பனை மரத்திலிருந்து அடுத்த மரத்துக்குத் தாவி நுங்குகளை வெட்டும் நுண்மான் நுழைபுல நுங்கு வெட்டியாளர்களும் இருப்பார்கள். அவர்கள் வெட்டி வெட்டிப்போட கீழே அமர்ந்திருக்கும் நாங்கள் அதன் முகத்தைச் சீவி, கண்கள் மெதுவாக வெளியே தெரியும் வரை சீவுவோம். அப்படி சீவும்போது நுங்கின் கண்களிலிருந்து நம் முகத்தில் தண்ணீர் பீறிட்டு அடித்து ஜில்லிட வைக்கும்.

Representational Image
Representational Image

``டேய் நான் கீழே இறங்கி வர்றதுக்குள்ளேயும் எல்லாத்தையும் காலி பண்ணிடாதீங்கடா...” என்ற குரல் பனைமரத்தின் உச்சியிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கும். 

உச்சியில் நின்று நுங்கு வெட்டும் நண்பனின் கண்கள் பூமியில்தான் இருக்கும். எத்தனை குலை நுங்கு மிச்சம் இருக்குமோ..? என்ற பதைபதைப்பில்தான் ஒவ்வொரு வெட்டும் விழும். பனை உச்சியைக் கொண்டைக்கட்டு என்று சொல்வோம். அதைக் கையால் லாகவமாகப் பற்றி அமர்ந்துகொண்டுதான் நுங்குகளை வெட்ட முடியும். அப்படிப் பற்றும்போது சில வேளைகளில் பாம்புகளும் உடும்புகளும் அங்கே படுத்திருக்கும். ஆனால், பாம்பைக் கண்டுவிட்டால் சத்தமிடாமல் சரசரவென நுங்கு வெட்டியாளரின் பயணம் உடனே பூமிக்குத் திரும்பும். பதற்றத்தில் அங்கிருந்து குதித்து கை கால்களை உடைத்துக்கொண்டவர்களும் உண்டு. 

நுங்கு குலைகளை வெட்டித் தள்ளிவிட்டு நெஞ்சுகளில் வீரத் தழும்புகளாய் கோடுகள் சுமந்து கீழே இறங்கினால் சீவிய நுங்குகள் தயாராக இருக்கும். சாமிக்குப் படையல் போடுவதுபோல் வரிசையாகப் பரப்பி இருக்கும். நான்கு முதல் ஐந்தாறு பேர் கொண்ட எங்கள் நட்புக் குழு நுங்கு வேட்டைக்குத் தயாராகும். கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் போட்டிபோட்டு வாய்க்குள் நுங்கைத் தள்ளும். இளநுங்கின் ருசி எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்க வைக்கும்.

Representational Image
Representational Image

சில சமயங்களில் முற்றிய நுங்குகள் கடுக்காய்கள் ஆகிவிடும். அதை அவ்வளவு எளிதில் கடித்துவிட முடியாது. செரிமானமும் நடக்காது. வயிறுதான் வலிக்கும். எனவே, அவையெல்லாம் புறக்கணிக்கப்படும். இள நுங்கும், இளம் கடுக்காய்கள் மட்டுமே செல்லுபடியாகும். வட்ட வரிசையாய் நுங்குகள் காலியாகிக் கொண்டே இருக்கும். வயிறு முட்ட குடித்த நுங்குகள் எளிதில் ஜீரணம் ஆகாது. நெஞ்சுக்குள்ளேயே நிற்கும்.

இதற்காக அப்போது கோடையிலும் நிறைந்திருக்கும் கண்மாய்க்குள் குதிப்போம். வடக்கே ஆரம்பித்து கண்மாயின் தெற்குப் பகுதிவரை சில கிலோ மீட்டர் தூரத்துக்கு நீச்சலும், முக்குளிப்பும், விளையாட்டும் நடக்கும். கண்கள் சிவந்து கண்மாயைவிட்டு கரையேறுகையில் ஜீரண மண்டலம் முற்றிலும் பணி புரிந்திருக்கும். நாளைக்கு எந்தப் பனை? என்பதை இன்றே முடிவு செய்து வீட்டுக்குத் திரும்புவோம். வசவுகளும் திட்டுகளும் வாசலிலேயே காத்து நிற்கும். ஆனால், அவையெல்லாம் காற்றோடு காற்றாய் கரைந்து போய்விடும். அடுத்த நாளும் திட்டமிட்டபடியே வேட்டை நடக்கும்.

Representational Image
Representational Image

இப்படி நுங்கின் காலம்... கிராமத்து வாழ்வின் பெரும் சுவைமிகு காலம். ஆனால், இன்று ஊருக்குப் போனால், வயல்களில் பனைகளைக் காணவில்லை. கேரளாவின் செங்கல்சூளைகளுக்கு ஐம்பதுக்கும் நூறுக்கும் சாம்பலாகிப் போய்விட்டன. ஆனால், மரம் இருந்த தடங்கள், நுங்கு குடித்த இடங்கள், பனை மரம் ஏறிய தழும்புகள், அரிவாளுக்கு பறிகொடுத்த விரல்கள் மட்டுமே இப்போதைக்கு நுங்கின் அடையாளமாக நின்று கொண்டிருக்கின்றன.

நகர்ப்புறங்களுக்கு நகரத் தொடங்கிய வாழ்க்கையால் அங்கு கிடைக்கும் நுங்குகளை ஆசைப்பட்டு வாங்கினாலும், அவற்றுள் பழைய பால்யத்தின் ருசியும் சுவையும் இல்லை..! எல்லாம் சப்பென்றே இருக்கின்றன... இன்றைய வாழ்க்கையைப்போலவே..!

- பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு