Published:Updated:

நிலமகளின் பிரசவம்! - கவிதை #MyVikatan

Representational Image
Representational Image

கடலைக்கொடி வேர்தேடி முதல்செடி பறித்து தூர்மண் உதறி...

செவக்காட்டு புஞ்சையில்

விதைத்திருந்த கடலை

நிறைசூழியாய்

அறுவடைப் பருவத்திலிருக்க

ராத்தூக்கம் பிடிக்காமல்

பறிப்புத் தோது பார்க்க

வெள்ளென விடியக் கிளம்பிய

தாத்தனின் தோளில்

தொற்றிக்கொள்கிறாள் பேத்தி.

Representational Image
Representational Image

ஈசான மூலையில் இறங்கி

கீழ்த்திசை கும்பிட்டு

கிளை வாய்க்கால் மறைத்துக்

கிளைபரப்பிக் கிடக்கும்

கடலைக்கொடி வேர்தேடி

முதல்செடி பறித்து

தூர்மண் உதறி

மணி பிரித்து

தோலுரித்த பருப்பை

முறம்போல் அகன்ற

வலக்கரத்தில் நிரப்பி

குலதெய்வப் படையலாய்

கையேந்தி தருகிறார் பேத்திக்கு...

நெல் கொத்தும் கிளியாக

ஒவ்வொன்றாய் பொறுக்கி

சிறு வாய் நிறைத்தவள்

கடைசிப்பருப்பை

முள்ளி எடுத்த பின்

தாத்தனின் உள்ளங்கையில்

மேழி பிடித்து

மண் வெட்டி

காய்ப்பேறிய வடுக்களை

பிஞ்சு விரல்களால்

வாஞ்சையாய் தடவுகிறாள்

மெல்லுவதை மறந்தபடி...

Representational Image
Representational Image

பேரன்பின் ஊற்றாக

கடைவாய் வழி

சிந்தியொழுகும் கடலைச்சாறு

செம்மண் மேனியில் வெண்ணிறத்தில்

தாய்ப் பாலாய்ப் படர்ந்து

அறிவிக்கிறது

நிலமகளின் பிரசவிப்பை...

- நாராயணபுரம் கணேசவீரன்

அடுத்த கட்டுரைக்கு