Published:Updated:

ஒப்பாரி! - கவிதை #MyVikatan

விரிசல் கண்ட ஓடு வழியே வெயிலு வந்து விழுகுது...

Representational Image
Representational Image

காத்தடி காலத்துக்கு முன்னயே

மராமத்து பாக்கச் சொன்னேன்

மண்டி கெடக்க மண்சொவத்த

காரப் பூச்சு பூசச் சொன்னேன்

விரிசல் கண்ட ஓடு வழியே வெயிலு வந்து

விழுகுது மச்சான்... அடுப்பங்கற வெக்கையில எனக்கொண்ணும் நோகாது

Representational Image
Representational Image

புள்ள படுக்குற நடுவீடும் பல்லிளிச்சுக்

கெடக்கு மச்சான்னு தலப்பாடா அடிச்சுக்கிட்டேன்

காலணா காசுன்னாலும் அது

காளையவன் தந்தது மாமா

நாம என்னன்நாளும் வாழ்ந்துபுரலாம்

தொழுவத்தயாவது தூருவாரு

ரெண்டு தரக்கா வந்த சார

என் கண்ணுலயே பட்டுச்சுன்னு

பல தடவ கூப்பாடு போட்டு வச்சேன்...

வாழையெல்லாம் மயிலு வந்து

ஆண்டுக்கிட்டு கெடக்கு மச்சான்

மட்ட உரிச்சா கண்ணுயவாது படும்னு

தெனந்தோரும் சொல்லி வச்சேன்...

கோழிக்கொரு கூடு

உனக்கொரு வீடு

கழிஞ்சு கெடக்க பசுக்கு பளிச்சுன்னு ஓடு

சூரியனே அண்டாத அளவுக்கு அம்மாம்பெரிய வீடு

எல்லாம் நடக்கும் புள்ளன்னு காலந்தாழ்த்தி போட்டியே மச்சான்

Representational Image
Representational Image

ஒத்த காத்துல

ஓன்னு பேஞ்ச மழையில

ஒண்ணுமே இல்லாம போச்சே மச்சான்

விடுஞ்சா பொங்க

இங்கன வெள்ளையடிக்க சொவரும் இல்ல

ஒரக்க கத்துர சேவலும் இல்ல

மாடு கட்டுன தொழுவமும் இல்ல

காலணா கொடுத்த காளையும் இல்ல...

வாழவச்ச அம்புட்டையும் சாவுகொடுத்து வாழுறது

வசம்பத் தின்னு உசுரு வளக்குற கதையா இருக்கு மச்சான்

பொங்கச் சீரு தந்த அரசாங்கம்

பொங்கித் தின்ன வழிதரல

ஆயிரம் ரூவா காசுல

அத்தனையும் எங்கிட்டு நான் வாங்க...

Representational Image
Representational Image

போட்டெரிக்க இந்தப் போகிக்கு உன்னையும் என்னையும் தவிர இங்கன ஒண்ணும் இல்ல

ஊர் வாழ உழவு பண்ண ஒண்ணுமில்லா இந்த வாழ்க்கைக்கு சூரிய பொங்கல் தான் எதுக்கு...

டெல்டா மாவட்ட

ஓலைக் குடிசைக்குள் ஓர்

உழவன் பொஞ்சாதியின்

உயிர் இருக்க ஒப்பாரிப் பாடல்..!

-மாடக்குளம் .இரா.மு.தனசேகரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/