Published:Updated:

புத்தம்புது காலை: மண்ணுக்கும் விண்ணுக்கும் சம்பந்தம் உண்டென சொல்லும் மிளகாய்!

தங்கமும், கரன்சியும் வந்தபிறகு அவனது வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. இப்படி மனிதன் உலகமயமாகத் தொடங்கியபோதே, உழவுத்தொழிலிலும் உலகமயமாதல் நிகழத் தொடங்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இரண்டு வாரங்களுக்கு முன்பு ISS எனப்படும் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில், நாசா விஞ்ஞானிகள் சில மிளகாய்ச் செடிகளை வளர்த்து சாதனை செய்துள்ளனர்.

இந்த ஐஎஸ்எஸ் எனப்படும் விண்வெளி நிலையம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டு, தற்சமயம் இந்த இரு நாடுகள் மட்டுமன்றி கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி வீரர்களும் தங்கி, வான்வெளியை ஆராயும் இடமாக இருந்து வருகிறது. 2000-ம் ஆண்டு முதல், அதாவது இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நாம் வாழும் உலகிற்கு வெளியே, ஸ்பேஸ் ஸ்டேஷனில் குறைந்த வெளிச்சம், குறைந்த ஈர்ப்பு விசை, அழுத்தநிலை மாற்றங்கள், கதிரியக்க பாதிப்புகள் இவற்றையெல்லாம் தாண்டி மனிதர்களே வசித்து வரும்போது, இவர்கள் மிளகாய் செடிகளை வளர்ப்பதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம்? அதற்கு மனிதன் வளர்ந்த வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

International Space Station
International Space Station

"இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்காக மனிதர்கள், குறுக்கீடுகள் எதுவுமில்லாமல் வாழ்ந்து கொண்டும், இனப்பெருக்கம் செய்து கொண்டும், அதேசமயம் விலங்குகளை வேட்டையாடியும், காய்கனிகளை சேகரித்தும் பசியாறி வந்தனர்" என்கிறது யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ்.

ஆம்... பிரபஞ்சப் பிரளயத்தில் பூமி உருவாகி, பின் உயிரினங்கள் தோன்றி, அதில் மனித இனம் தோன்றியது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே என்றாலும், சுமார் பத்தாயிரம் ஆண்டுகளாக மனித குலத்தின் வரலாற்றை மாற்றி எழுதியதில் agriculture என்ற விவசாயத்திற்கு பெரும்பங்கு உண்டு என்பதே உண்மை.

உண்மையில் 'Agricultura' எனும் லத்தீன் மொழியிலிருந்து வந்தது தான் ஆங்கிலத்தின் Agriculture. Agri என்றால் நிலம், Culture என்றால் பண்படுத்துதல் அல்லது விதைத்தல். அதாவது 'நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுதல்' என்பதே இதன் பொருளாகும். விவசாயம் மண்ணை மட்டுமல்ல... அதுதான் மனிதனையும் முதன்முதலில் பண்படுத்தியது எனலாம்.

காட்டில் வேட்டையாடி உண்டு, குகைகளில் வாழ்ந்த மனிதன், அங்கு விளைந்த காய் கனிகளையும்தான் உண்டுவந்தான். அதேசமயம், ஆற்றங்கரைக்கு வந்தவன் மனிதன் நீரில் கிடைத்த மீனையும், கரையில் கிடைத்த காய்கனிகளையும் கண்டபின் வேட்டையை விட இது சுலபமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதே என்று அங்கேயே தங்கிவிட்டான். குகைகளைப் போல மழைக்கும் வெயிலுக்கும் தப்ப கூரை வேண்டுமே என்று யோசித்தவன், குடிசைகளைக் கட்டினான். பிறகு, காட்டில் கிடைத்து ஆற்றங்கரையில் கிடைக்காத காய், கனி மரங்களை அருகிலேயே வளர்க்க எண்ணி, விதைகளைக் கொண்டுவந்து கரைகளில் விதைத்தபோதுதான் அவனது விவசாயத்திற்கும் விதையும் விதைக்கப்பட்டது.

அதுவரை கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தவன், முதன்முதலாக திட்டமிட்டு உணவை உற்பத்தி செய்ய யோசிக்கத் தொடங்குகிறான்.

வேட்டையாடும் மனிதன்
வேட்டையாடும் மனிதன்

அப்போதுதான் முதன்முறையாக, அதுவரை தான் வாழ்ந்த இயற்கையிலிருந்து பிரியவும் ஆரம்பிக்கிறான். சின்னச்சின்னதாய் கற்களாலும் குச்சிகளாலும் கருவிகள் செய்து, கிழங்குகளை நடும்போது மண்ணை கவனிக்கிறான். மழை வெயிலையும் கவனிக்கிறான். இயற்கையில் இருந்து பிரிந்த அதே மனிதன் இயற்கையை உற்றுநோக்கி கணக்கிட ஆரம்பிக்கிறான். பிறகு தானியங்களின் பயனை உணர்ந்து அதைப் பயிரிட ஆரம்பிக்கிறான்.

நாகரீகத்தை நோக்கி நகர்ந்த முதல் கண்டுபிடிப்பு கலப்பையாய் இருக்கலாம் என்று கூறும் வரலாறு, முதல் கலப்பையைச் செய்தது ஒரு பெண் என்கிறது. கற்களின் முனையைக் கொண்டே முதல் கலப்பையைச் செய்த மனிதன் முதலில் தானே ஏர் இழுத்துதான் நிலத்தை உழுதிருக்கிறான். பிறகு அதேசமயத்தில் தங்களை அண்டிப் பிழைக்க வந்த மிருகங்களை சேர்த்துக் கொண்டவன், அவற்றில் மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் என சில விலங்கினங்களை ஏர் உழுவதற்கும், ஆடுகள், கோழிகள், பன்றிகள் என சில விலங்கினங்களை களைகளை நீக்கவும், இறைச்சிக்காகவும் வளர்ப்புப் பிராணிகளாக மாற்றிக் கொள்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலப்பையை பெண் கண்டுபிடித்ததால் நிலத்தையும் நதியையும் பெண்ணாக நினைத்த மனிதன், அதை வணங்கத் தொடங்குகிறான். வானிலை, பருவங்களை அவன் உன்னிப்பாக கவனித்தாலும் இயற்கை அவனை ஏமாற்றும்போது அதை ஏற்றுக்கொள்ள சடங்குகளை உருவாக்குகிறான்.

நதிக்கரையிலிருந்து சற்று தள்ளியிருந்தவன் நீர்ப்பாசன அமைப்புகளான கால்வாய்களை உருவாக்க, நீர் வளம் பெருகியது. அதேசமயம், பயிர்சுழற்சி முறையால் மண்வளம் கூடி, தாவர வளர்ப்பு புதுப்புது சிறப்புக் கூறுகளுடன் செழித்தது. உணவுப்பயிர்களை பயிரிடத் தொடங்கியதும், அந்தந்த மண்ணிற்குத் தகுந்தவாறு தானியங்களும், கிழங்குகளும், காய்கனிகளும் பயிரிடுவது என விவசாயம் நீட்சி அடைகிறது.

அதிக உற்பத்தியை எதிர்காலத்திற்கென சேமிக்கப் பழகுகிறான். சேமிப்பு வருகையில் திருட்டும் கொள்ளையும் வருகிறது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விவசாயத்தை அடிப்படையாய் வைத்து ஊர்கள், நாடுகள் உருவாகின்றன. இப்போது தனது சேமிப்புக்கு அதிகமானதை இந்த ஊரிலிருந்து கொண்டு கொடுத்து அங்கு விளைந்ததை வாங்கிக்கொள்ள பண்டமாற்றும், மிகுந்த எடைப்பொருட்களைக் கொண்டு செல்ல சக்கரங்கள் கொண்ட வண்டியும் வருகிறது.

விவசாயம்
விவசாயம்

பயணங்கள் ஆரம்பித்ததும் மனிதன் இன்னும் நாகரீகம் அடைகிறான். பண்டமாற்றிலிருந்து பணம் வருகிறது. முதலில் அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்றவன், பின்னர் அருகிலுள்ள நாடுகளுக்குச் செல்கிறான். கருவிகள் துல்லியம் அடைகின்றன.

அருகிலுள்ள நாடுகள் போதாதென்று கடல்கடந்து, அங்கு என்ன இருக்கிறது என்று பார்க்கிறான். உணவு, செல்வம், அதிகாரம், ஆக்கிரமிப்பு என்று அவனது ஆசைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

தங்கமும், கரன்சியும் வந்தபிறகு அவனது வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. இப்படி மனிதன் உலகமயமாகத் தொடங்கியபோதே, உழவுத்தொழிலிலும் உலகமயமாதல் நிகழத் தொடங்குகிறது.

அதிலும் அவனது பணிகளை எளிதாக்கும் தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. சொட்டு நீர்ப் பாசனம், டிராக்டர்கள் எனத் தொடங்கி, விதைக்கும் கருவிகள், களையெடுக்கும் இயந்திரங்கள், தெளிப்பான்கள், அறுவடை இயந்திரங்கள் என்று தொழில்நுட்பம் அனைத்தையும் ஆட்டோமேட்டிக்காக மாற்றிவிட, மனிதனின் உழைப்பு நன்கு குறைகிறது.

கூடவே, செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் எல்லாம் வந்த அதேவேளையில் ஒட்டு, கலப்பின வகைகள் தாண்டி மரபியல் விதைகளும் நுழைகின்றன.

மரபியல் விதைகள் வரும்போதே, ஒரு தக்காளி இன்ன சுவையில்தான் இருக்க வேண்டும், ஒரு கத்திரிக்காயில் இத்தனை விதைகள்தான் இருக்கவேண்டும், அவற்றின் நிறம் இதுவாக இருக்க வேண்டும், அவை இவ்வளவு வேகமாக வளர வேண்டும் என்பதை எல்லாம் அவனே முடிவு செய்ய ஆரம்பிக்கிறான்.

இதே சமயத்தில் ரேடியோ, புத்தகம், டிவி, சினிமா, கம்ப்யூட்டர், மொபைல் என்று அவன் தகவல் தொடர்புகள் மாறிக்கொண்டே வந்ததுபோல, பயணங்களும் கப்பலிலிருந்து கார், பஸ், ட்ரெய்ன் என்று முன்னேறியவன் பிறகு விமானத்திற்கு வந்தான்.

நிலங்களைக் கடந்து, கடலைத் தாண்டி பக்கத்து நாடுகளைப் பார்த்தவன், விமானம் வந்ததும் நிலவைத் தாண்டி மற்ற கிரகங்களைப் பார்க்க ஆசைப்பட்டான். விமானம் ராக்கெட் ஆகியது, இப்போது ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைத்து வானத்திலும் போய் உட்கார்ந்து, அங்கே தனது உணவை உற்பத்தி செய்ய முயல்கிறான்.

காய்கறி
காய்கறி

ஆம்... ஐஎஸ்எஸ் என்ற ஸ்பேஸ் ஸ்டேஷனில் இதற்குமுன் சில கீரை வகைகளையும், முள்ளங்கி மற்றும் ஜின்னியா பூக்களைப் பயிரிட்டு முயன்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் Chile Pepper என்ற நமது பச்சை மிளகாய் விதைகளை விதைத்து, விண்வெளியிலும் விவசாயம் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளனர். ஆனால் விண்வெளியில் இருக்கும் குறைந்த வெளிச்சம், குறைந்த ஈர்ப்பு விசை, கதிரியக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ள, இவர்கள் செயற்கை மண்ணை உருவாக்கி, LED பல்புகள் மூலம் செயற்கை சூரிய ஒளியை உருவாக்கி, விதைகளை கண்ணாடி அடுக்குகளில் விதைத்து, விதைகள் வளர நீர் மற்றும் உயிர்ச்சத்துகளை ஹைட்ரோபோனிக் முறையில் அளித்து, அதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர்.

உண்மையில் இந்த விவசாய முறை, விண்வெளியில் வசிக்கும் ஆராய்ச்சியாளர்களின் உணவுத் தேவைகளுக்கான முயற்சிதான் என்றாலும், இதுபோன்ற சூழலை செவ்வாய்க் கிரகம் மற்றும் நிலவில் உருவாக்கி, வான்வெளி விவசாயத்தை மேம்படுத்தி, பூமியிலுள்ள மனிதர்கள் நம் அனைவரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகின்றனர் இந்த விஞ்ஞானிகள்.

புத்தம் புது காலை : பொதுவெளியில் தாய்ப்பால் ஊட்டுவதும், சோறூட்டுவது போலத்தான்... தயக்கம் வேண்டாம்!

இன்றைய சூழ்நிலையில், அது செலவு மிகுந்ததாய், தேவையில்லாததாய், வீண்வேலையாய்க் கூடத் தோணலாம். ஆனால், அன்று யாரோ ஒருவன் வனத்திலிருந்து ஒரு விதையைக் கொண்டுவந்து நிலத்தில் விதைத்தது தான் இன்றைய நமது அத்தனை வசதிகளுக்கும் ஆரம்பம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்த விண்வெளிப் பச்சை மிளகாய் ஏதோ ஒரு பெரிய துவக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பாரம்பர்ய விதைகள்
பாரம்பர்ய விதைகள்

எது எப்படியோ, எவ்வளவு தொழில்நுட்பங்களும், ஆராய்ச்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்தாலும், இயற்கையிலேயே நிலமும், நீரும், காற்றும் நிறைந்த நமது பூமியைக் காட்டிலும் சிறந்ததொரு இடம் இல்லை என்பதை இவை உணர்த்துவதோடு, நாம் வாழும் பூமியைக் காக்கவேண்டும் என்ற புரிதலையும் இவை ஏற்படுத்துகின்றன என்பதே உண்மை.

நாளை நமக்குக் கிடைக்கவிருக்கும் விதைகள் குறைந்த, காரம் இல்லாத பச்சை மிளகாயை விட, இன்று நம் கையில் இருக்கும் காரம் மிகுந்த பச்சை மிளகாய் மிக இனிமையானது அல்லவா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு