Published:Updated:

‘மரம் வளர்க்கிறதும் விவசாயம்தான்!’ நம்மாழ்வார் வழிகாட்டிய நுட்பம்!

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
பிரீமியம் ஸ்டோரி
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

நினைவுகள்

‘மரம் வளர்க்கிறதும் விவசாயம்தான்!’ நம்மாழ்வார் வழிகாட்டிய நுட்பம்!

நினைவுகள்

Published:Updated:
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
பிரீமியம் ஸ்டோரி
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
யற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு இணைந்து பயணித்தவர்கள், அவர் மூலமாக இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த முயற்சிகளை முன்னெடுத்தவர்கள் தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஆதவன் தீட்சண்யா.
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வருகிறார். நம்மாழ்வார் சிறப்பிதழுக்காக அவரிடம் பேசினோம். “தமிழ்நாடு பசுமை இயக்கத்தைச் சேர்ந்த ஈரோடு வெ.ஜீவானந்தம் மூலமாகத்தான் நம்மாழ்வார் அறிமுகம் கிடைத்தது. 1997-ம் ஆண்டுவாக்கில் ஓசூரில் உள்ள டி.வி.எஸ் கல்வி நிறுவனம் சார்பில் ‘டி.எஸ்.சீனிவாசன் கிராம பயிற்சி மையம்’ நடத்திட்டு இருந்தாங்க. அதன்மூலமா இயற்கை வேளாண்மை சார்ந்த ஒரு பண்ணை அமைக்க முயற்சி எடுத்தாங்க. அந்தப் பண்ணையை நம்மாழ்வாரைக் கொண்டு அமைக்க ஏற்பாடு பண்ணிணாங்க. இயற்கை வேளாண்மை இடுபொருள்கள், பாரம்பர்ய விதைகளைக் கொண்டு அந்தப் பண்ணையை அமைச்சு காட்டினார் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் உதவியாளர் குமரவேல், டி.வி.எஸ் பள்ளி ஆசிரியர் சொ.சேதுபதி, மருத்துவர் சுதா உள்ளிட்ட நண்பர்கள் விவசாயம், சுற்றுச்சூழல் குறித்து விவாதித்துக்கொண்டிருப்போம். அந்த நேரத்துல, நம்மாழ்வார் ஓசூருக்கு வந்திருந்த போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூலமாக இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

‘மரம் வளர்க்கிறதும் விவசாயம்தான்!’ நம்மாழ்வார் வழிகாட்டிய நுட்பம்!

டி.வி.எஸ் பண்ணையில் அவர் இருக்கும்போதே, எங்களுடைய தொலைபேசி ஊழியர் குடியிருப்புக்கு அழைச்சிட்டு வந்தேன். வீட்டைப் பார்த்ததும் ‘ஒரு மாடித்தோட்டம் போடலாமேய்யா... மகாராஷ்டிராவுல இருக்கிற தபோல்கர் மாடித் தோட்டம் அமைச்சு அதுல திராட்சை, காய்கறிகள் வளர்த்துப் பெரிய சாதனை பண்ணியிருக்கிறாரு’ என்றார். ‘போடலாம் ஐயா...’ என்று சொன்னேன்.

‘மாடித்தோட்டத்துக்கு நிறைய செலவு செய்யக் கூடாது. எளிமையா வளர்க்கிற முறையைத் தெரிஞ்சுக்கணும்’னு சொல்லி, சில நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்தார். பிறகு, சிமென்ட் பைகள்ல மண்ணைக் கொட்டி வெண்டை, அவரை, கத்திரிக்காய், தக்காளினு 60 பைகள்ல வளர்த்தோம். அப்போது ‘வெல்வெட் அவரை’ என்ற ஒரு ரகத்தை நடவு பண்ணினோம். அது நல்லா கொடி ஓடி, வீட்டு மொட்டை மாடி முழுக்கப் பசுமை கட்டுச்சு. தொடர்ந்து இந்த மாடித்தோட்டத்தை ரெண்டு வருஷம் பராமரிச்சுட்டு வந்தோம்” என்றவர் சற்று இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

‘மரம் வளர்க்கிறதும் விவசாயம்தான்!’ நம்மாழ்வார் வழிகாட்டிய நுட்பம்!

பிறகு, நிலத்துல ஏதாவது செய்யணும்னு தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பக்கத்துல அலுமேலுபுரத்தில் இருக்கும் எங்க நிலத்துக்கு நம்மாழ்வாரை அழைச்சிட்டு வந்து காட்டினோம். எங்கப்பா தான் அப்ப விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தார். எங்க நிலத்துக்குக் கொஞ்ச தூரத்தில கொட்டா மலை இருக்கு. அந்த மலையை நோக்கி எங்களை அழைச்சுட்டுப் போனார் நம்மாழ்வார். அங்க வனத் துறையால் உருவாக்கப்பட்ட காப்புக் காடுகளைப் பார்வை யிட்டார். பார்த்துவிட்டு, ‘எப்போதுமே மரக்கன்று, அதுக்கடியில் உள்ள தண்ணீரைச் சீக்கிரமா உறிஞ்சுக்கும். கன்றி லிருந்து ஓரடி தள்ளி குழி அல்லது பள்ளமெடுத்து அதுல தண்ணி ஊத்திவிட்டோம்னா தண்ணீர் பயன்பாடு மிச்சமாவதுடன் கன்றுக்கான ஈரம் கூடுதல் காலத்துக்குக் கிடைக்கும். மரக்கன்றுகளோட வளர்ச்சியும் சீராக இருக்கும்’ என்று முன்பொருமுறை தான் சொன்ன யோசனை அங்கு செயல்படுத்தப் பட்டிருப்பதாகச் சொன்னார். எங்க நிலத்தைப் பார்த்துட்டு அப்பாவிடம், ‘நீங்கள்லாம் மரபு விவசாயத்தைப் பின்பற்றிட்டு வர்றீங்க. பத்து வகையான தானியங்களை சாகுபடி செஞ்சிட்டு வர்றீங்க. நிலத்துல உழைக்கிறதுதான் விவசாயம்னு நினைச்சிட்டு இருக்கீங்க. மரங்கள வளர்க்கிறதும் விவசாயம்தான். மர விவசாயமும் வருமானம் கொடுக்கும். முயற்சி செஞ்சு பாருங்க’னு சொன்னார். அப்போ எங்களோட நிலம் கூட்டு நிலமா இருந்ததால, அவரோட யோசனையைச் செயல்படுத்த முடியல.

குடியிருப்பில் வளர்ந்து நிற்கும் மரங்கள்
குடியிருப்பில் வளர்ந்து நிற்கும் மரங்கள்

அதற்குப் பிறகு ஓசூர்ல ‘ஈரம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திச் சில சுற்றுச்சூழல் பணிகளை முன்னெடுத்தோம். அப்போதைய ஓசூர் மாசுக் கட்டுப்பாட்டுப் பொறியாளர் ராஜசேகர், குடியிருப்பு நலச்சங்கங்கள், தொழிற்சாலை சங்கங்கள் இணைந்து ஓசூர் நகர் முழுக்கப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டோம். இந்த நிகழ்வுகள்ல நம்மாழ்வார் கலந்துகிட்டாரு. தெருக்கள்ல நடுற மரக்கன்றுகளை அந்தந்தத் தெருவுல இருக்கிற ஒருவர் பாதுகாக்கணும்னுங்கற அடிப்படையில அதைச் செயல்படுத்தினோம். எப்போதும் மரம் நடுறது எளிது. அதைப் பராமரிச்சு வளர்க்கறதுதான் கஷ்டம். நாங்க நட்டு வெச்ச மரக்கன்றுகள் போதிய பராமரிப்பு இல்லாம அழிஞ்சிடுச்சு. ஆனா, ஓசூர் பேருந்து நிலையத்துக்கு எதிரே இருக்க பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்துல நான், நண்பர்கள் பழனிச்சாமி, பெரியசாமி, நட்ட 67 மரங்கள் அழியாம வளர்ந்து நிக்குது. சில தெருக்கள்லயும் மரங்கள் இருக்குது” என்றவர் நிறைவாக,

“நம்மாழ்வாரோடு இயற்கை விவசாயம் பற்றித் தொடர் விவாதம் நடத்தியிருக்கிறோம். இயற்கையில் கிடைப்பவற்றைச் சேகரித்து உணவாக்கிக் கொள்வதைக் கடந்து எப்போது நமக்குத் தேவையானவற்றை விளைவிக்கத் தொடங்குகிறோமோ அப்போதே விவசாயம் என்பதே ஒரு மனிதச் செயல்பாடாகிவிடுகிறது.

அதாவது, விவசாயம் என்பதே செயற்கையானதுதானே என்றெல்லாம் கேட்டிருக்கிறோம். அதற்கெல்லாம் தன் கண்ணோட்டத்தில் அவர் சொன்ன பதில்களில் எனக்கு முழு உடன்பாடில்லை யென்றாலும் உழவு, விதை, எரு, பாசனம் என்பதில் நம்மாழ்வார் வலியுறுத்தி வந்த விஷயங்கள் நம்முடைய நீண்ட வேளாண் மரபின் தொடர்ச்சி. வேதி உரங்கள், பூச்சிக் கொல்லிகள், மரபணு மாற்று விதைகள் மண்ணின் வளத்தை குன்றச் செய்வதுடன் உடல்நலத்துக்கும் தீங்காகிப் போகும் என்று அவர் நடத்திய கருத்தியல் போராட்டம் மதிக்கத்தக்கது. மரபு, பாரம்பர்யம் என்கிற முக்காடிட்டுக் கொண்டு அடிப்படைவாத அமைப்புகள் சொல்வதற்கும் நம்மாழ்வார் சொன்னதற்கும் வேறுபாடு இருப்பதாகவே நான் நம்புகிறேன்” என்று விடைகொடுத்தார்.

இலைதழைகளில் வளரும் செடிகள்!

மா
டித்தோட்ட பைகளில் செடி வளர்ப்பது குறித்துப் பேசிய ஆதவன் தீட்சண்யா,

“‘மண்ணுக்குள்ள எந்த இலைதழைகளை வெட்டிப் போட்டாலும் அதை மண்ணு சாப்பிட்டு உரமா மாத்திக் கொடுத்திடும்’னு நம்மாழ்வார் சொன்னார். அதன்படி பைகளின் அடியில் பார்த்தீனியம், எருக்கன், நொச்சி இலைதழைகளைப் போட்டு, கொஞ்சம் எருவையும் சேர்க்க வேண்டும். அதற்குமேல் செம்மண் அல்லது நல்ல வளமான மண்ணைப் பையின் பாதியளவு நிரப்பிவிட வேண்டும். அதில் விதையையோ, செடியையோ நட்டு வைத்தால் அது முளைத்து வந்துவிடும். தினமும் கொஞ்சம் தண்ணி போதுமானது. இதோடு கொஞ்சம் அமுதக் கரைசலைத் தெளித்தால் போதும். மாடித்தோட்டத்தில் செடிகள் நன்றாக வளரும்” என்றார்.

வாங்க, விற்க வழிகாட்டும் பசுமை சந்தை பகுதி இந்த இதழில் இடம் பெறவில்லை.