
தணிகைமாறன் உட்பட நான்கு போராளிகளையும் ஆழிப்பேரலை காவு வாங்கியிருக்கிறது. அந்தச் செய்தியைக் கேட்டதும் மனம் ஒடிந்துபோனேன்.
காலையில் எழுந்ததும் சனங்கள் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போனேன். சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், உள்ளூர் சமூக அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டிருந்தன. அதிர்ச்சிமிக்க உயிரிழப்புகளை ஏற்க முடியாத பலர், மனம் பேதலித்து அழுது கொண்டிருந்தனர். போராளிகள் அவர்களை ஆற்றுப் படுத்தும் முகமாகக் கதைத்துக் கொண்டேயிருந்தனர். அழுது புரளும் நிலமாகப் போராளிகளின் தோள்களும் கரங்களும் சனங்களை நோக்கி நீண்டன. யாழ்ப்பாணத்திலிருந்து வாகனங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட உலர் உணவுப்பொதிகளை வெகுஜன அமைப்புகள் வழங்கிக்கொண்டிருந்தன. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் முகமாகவும் சிலர் உதவிகளைச் செய்தனர்.
போராளிகள் அமைத்திருந்த கூடாரத்துக்குள் நுழைந்தேன். வலம்புரியக்கா அப்போதுதான் வந்திருந்தார். “சனங்களுக்குச் சுகாதார அறிவுறுத்தல்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துங்கள். இவ்வளவு நெருக்கத்தில் தொற்றுநோய் வந்துவிடுமென எச்சரியுங்கள். கிடங்கை வெட்டி மலங்கழிக்கச் சொல்லுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துங்கள்” என்று நீலன் என்கிற சுகாதாரப் பிரிவு போராளியொருவர் ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார். எல்லோருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டது. நான் வலம்புரியக்காவின் சொற்களைச் செயலாக்கிக்கொண்டிருந்தேன்.
“அள்ளித் தந்த கடலே, எங்களை அள்ளிச் சென்றுவிட்டது” என்று ஒரு வயோதிகப் பெண் அழுதுகொண்டிருந்தாள். நான் அவளுக்கருகில் போயிருந்தேன். அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டு “அழாதேங்கோ ஆச்சி, கடல் மட்டும்தான் எங்களைக் கைவிடாமல் இருந்தது. இண்டைக்கு அதுவும் விட்டிட்டுது” என்றேன்.
“கடல் தந்த வாழ்க்கை
கருகிப் போச்சு
வாற
காலமெல்லாம்
சாம்பலாச்சு.
என் செல்ல மகனே...”
என்று குரலெடுத்துப் பாடத் தொடங்கினாள். அவளது சொற்கள் தடுமாறி விழுந்து எழும்பின. ஆற்ற முடியாத பெருவலியின் முன்னே மன்றாடக்கூட கடவுளற்ற காலம்போலிருந்தது. கடலின் மீதிருந்த நேசமும் வியப்பும் கலைந்துபோயின. அலைகளை மறித்து விளையாடிய என் சிறுபிராயத்தின் நீர்மை ததும்பிய நினைவுகளைத் தூக்கியெறிந்தேன். ஆழிப்பேரலையின் குரூரமான பற்களுக்கிடையில் மனித மாமிசங்கள் அரைபட்டுப்போயின. எனக்கருகே கண்ணீரோடு பாடிக்கொண்டிருக்கும் இந்த வயோதிகப் பெண்ணின் உள்ளே கொந்தளிக்கும் கடலை நான் தரிசிக்கிறேன். அந்தக் கடலில் அலைகள் இல்லை. உப்புக்காற்று இல்லை. அங்கு வெறுமனே கண்ணீரே மிதக்கிறது.

தணிகைமாறன் உட்பட நான்கு போராளிகளையும் ஆழிப்பேரலை காவு வாங்கியிருக்கிறது. அந்தச் செய்தியைக் கேட்டதும் மனம் ஒடிந்துபோனேன். `ஐயோ’வென அழுது துடித்தேன். குமணன் அண்ணாவின் உடல் கடலுக்குள் போய்விட்டதெனக் கதைத்தனர். தணிகைமாறனின் வீரச்சாவு செய்தியைக் கேட்டதும் வலம்புரியக்காவிடம் ஓடிப்போய்ச் சொன்னேன். சில நிமிடங்கள் அமைதி. காற்றின் ஒலியில் இழப்பின் கனம் கூடியிருந்தது. நான் அம்மாவிடம் சொல்வதற்காக வீட்டுக்குப் போனேன். அவளுக்கு ஏற்கெனவே தகவல் தெரிந்திருந்தது. கடலை ஒட்டியிருந்த போராளிகளின் முகாம்கள் அனைத்தும் ஆழிப்பேரலையால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்ற உண்மை துலங்கத் தொடங்கியது. நான் பவி மாமாவைத் தொடர்புகொள்ள பல வழிகளில் முயன்றேன். வலம்புரியக்கா தனது வோக்கியிலிருந்து பவி மாமாவை அழைத்துப் பார்த்தாள். தொடர்பு கிடைக்கவில்லை. ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ளிருந்து வருகை தருகிற நிவாரண அமைப்புகளில், அரச புலனாய்வுச் சக்திகள் ஊடுருவிவருவதாகவும், அவர்களை இனங்கண்டு வெளியேற்ற வேண்டுமெனவும் போராளிகளுக்கு எச்சரிக்கைவிடப்பட்டிருந்தது. நான் தணிகைமாறனின் வித்துடலைப் பார்க்க வேண்டுமென விரும்பினேன். `எனதருமை தணிகைமாறனே...’ என்று புலம்பிக்கொண்டிருந்தேன்.
தாள முடியாத துயரத்தோடு பன்னிச்சைத் தாயிடம் போய் அழுதேன். மரத்தைக் கட்டியணைத்துத் தலையால் மோதினேன். `நான் யாழ்ப்பாணம் போகப்போகிறேன்’ என்று பயணம் சொன்னேன். அடுத்தநாள் காலையிலேயே நானும் அக்காவும் பேருந்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தோம். பூட்டம்மா எங்களைக் கண்டதும் தேத்தண்ணி போட்டுத் தந்தாள். அம்மா சுட்டுத்தந்த பனங்காய்ப் பணியாரத்தை பூட்டம்மாவிடம் கொடுத்தோம்.
“கடல் அடிச்சுக்கொண்டு போச்சுதாமே, கொம்பனிக்கும் பெரிய இழப்பாமே... அப்பிடியோ?” பூட்டம்மா கேட்டாள்.
“ஓம், நிறையச் சனங்கள் செத்துப்போய்ட்டினம். இயக்கத்துக்கு இழப்பு பெரிசாய் இல்லையெண்டுதான் நினைக்கிறன். ஆனால் உண்மை என்னெண்டு தெரியேல்ல.”
“ஆனால், இஞ்ச அப்படித்தான் கதைக்கிறாங்கள்.”
அக்காவும் நானும் அமைதியாக இருந்தோம். பூட்டம்மாவிடமிருந்து விடைபெற்றோம். எங்களுடைய வீட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தோம். நாளைக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டுமென நினைத்துக்கொண்டேன். வீடு ஏற்கெனவே திறந்திருந்தது. உள்ளே மருதன் இருந்தார். எந்தத் தகவலும் சொல்லாமல் இவர் வந்திருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டேன். எங்களைக் கண்டதும் “இப்பதான் உங்களுக்கு யாழ்ப்பாணம் ஞாபகத்துக்கு வந்ததோ” என்று கேட்டார். அக்கா எதுவும் கதைக்கவில்லை. அவள் பிறந்தநாளுக்கு அழைத்திருக்கக்கூடும். ஆனால், மருதன் வரவில்லை. ஆழிப்பேரலையால் வன்னி எவ்வளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறதெனக் கேட்டார்.
“முல்லைத்தீவு கடுமையான சேதமாம். ஆனால் நான் வடமாரட்சி கிழக்குக்குப் போனான். சனங்கள் பாவம். கொலைகாரக் கடல்” என்றேன்.
மருதன் அண்ணாவுக்கு வன்னிப் புதினங்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் அப்படியே அக்காவின் பிறந்தநாள் விழாவைப் பற்றிக் கேட்டார். யார் யார் வந்தார்கள், எப்படி நடந்ததெனக் கேட்க ஆவலாக இருந்தார். தன்னால் வர முடியாமல் போயிற்று எனக் கவலையோடு சொன்னார்.
“எல்லாரும் வந்தவே, நீங்கள்தான் வரவில்லை. மனமிருந்தால் வந்திருந்திருக்கலாம்.”
“மனமெல்லாம் இருந்தது. அதுக்குள்ள வேலைத் திட்டமொன்று வந்திட்டுது.”
“எப்ப பார்த்தாலும் வேலைத் திட்டம்.”
மருதன் அண்ணா எதுவும் கதைக்கவில்லை. எனக்கு அப்போதுதான் ஓவியன் புதைத்த ராணுவச் சீருடை ஞாபகத்துக்கு வந்தது. அவர்கள் புதைத்த இடத்துக்கு ஓடினேன். அந்த இடம் மீண்டும் தோண்டப்பட்டிருப்பது தெரிந்தது. மருதனிடம் கேட்டேன்.
“காந்தியண்ணா புதைச்சிட்டு போன ராணுவச் சீருடையை யாரோ வந்து எடுத்திருக்கிறார்கள்.”
“ஓம், நான் நிக்கேக்கதான் வந்து எடுத்துக்கொண்டு போனவே.”
“ஆர் வந்தது?”
“ஓவியன் எண்டு ஒருத்தர் வந்தவர்.”
“ஒருத்தரோ, ஏனெண்டால் உங்களுக்கு அவரைத் தெரியாது பாருங்கோ, ஏன்தான் இப்பிடிப் பொய் சொல்லுறியளோ...”
மருதன் சிரித்தபடி “ஆதீரா நாங்கள் சொல்லுற பொய்யும், காண்பிக்கிற அப்பாவித் தன்மையும்தான் எங்களுக்குக் கவசம்” என்றார்.
அக்காவுக்கு வீட்டைத் துப்புரவு செய்யவேண்டிய தேவை இருக்கவில்லை. மருதன் வீட்டைச் சுத்தப்படுத்தியே வைத்திருந்தார். ``நான் மாலையில் கிரிக்கெட் விளையாடப் போக வேண்டும், நீங்கள் வருகிறீர்களா?’’ என்று மருதனிடம் கேட்டேன். ``இல்லை எனக்கு கிரிக்கெட் பிடிக்காது’’ என மறுத்துவிட்டார்.
தணிகைமாறன்போல எத்தனையோ பேரை ஆழிப்பேரலை காவு வாங்கியிருக்கும். ஆனால், இயக்கம் அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அது அவர்களுடைய படைத்துறை சார்ந்த நிலைப்பாடாக இருக்கலாம். மனம் தவித்தது. யார் யாருக்கெல்லாம் இப்படி நேர்ந்ததோ என்று அச்சப்பட்டேன். வீட்டில் கிடந்தபடி யோசித்துக்கொண்டிருந்தேன். மாலையாகியும் விளையாடப் போக மனம் உந்தவில்லை. கோயில் வாசலில் அமர்ந்திருந்து தேவாரம் பாடினால் சுகப்படுமென்று எண்ணினேன். “மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு” என்று பாடிக்கொண்டே கோயில் வாசலில் அமர்ந்தேன். நாளை காலையில் பள்ளிக்கூடம் போக வேண்டும். அதுவொரு வதை. சோதனைச்சாவடியைக் கடந்துபோவது அவமானம். ஆனாலும், போக வேண்டுமென்று உறுதிபூண்டேன். மருதன் வந்தார்.

“என்ன கடுமையான யோசனையா இருக்கு?”
“ஒண்டுமில்லை. சும்மா இருக்கிறன்.”
“கிரிக்கெட் விளையாடப் போகேல்லையா?”
“இல்லை, டக்கெண்டு மனம் மாறிட்டுது.”
“ஓ... அப்பிடி என்ன சோகம்?”
“ஒண்டுமில்லை, தணிகைமாறன் அண்ணாவின்ர இழப்பிலருந்து என்னால மீள முடியேல்ல. உங்களுக்கு அவரைத் தெரியுமா?”
“இல்லை.”
“உங்களுக்குத் தெரிஞ்சாலும் தெரியாதெண்டுதான் சொல்லுவியள்.”
“இல்லை... ஆதீரா எனக்கு உண்மையிலும் தெரியாது.”
“நம்பிட்டன்.”
“நீங்கள் நம்பேல்ல, ஆனால் எனக்கும் உண்மையிலும் தணிகைமாறனைத் தெரியாது.”
“சரி விடுங்கோ.”
மருதனுக்கும் எனக்குமிடையே நிலவிய அமைதி அந்தியாய்ச் சிவந்திருந்தது. மெல்ல மெல்ல இருள் சூழ்ந்தது.
அடுத்தநாள் காலையில் பள்ளிக்கூடத்துக்குப் பேருந்தில் போய்க்கொண்டிருந்தேன். எதிரே துப்பாக்கிகளின் வெடியோசை. பேருந்தை நிறுத்திவிட்டு எல்லோரையும் தலையைக் குனிந்து இருக்குமாறு ஓட்டுநர் சத்தம் போட்டார். எங்களுடைய பேருந்து நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து சரியாக எண்பது மீட்டரில் இரண்டு பேரைச் சுட்டுவீழ்த்திய உந்துருளி யொன்று மிகவேகமாகப் புகையைக் கக்கியபடி பறந்தது. வீதியின் நடுவே இரண்டு பிணங்கள் கிடந்தன. பேருந்துகளைவிட்டு மாணவர்கள் இறங்கி ஓடினர். கொன்றவர்கள் யார்... கொல்லப்பட்டவர்கள் யார்? வீதியே மர்மமான இடத்தைப்போலிருந்தது. அதற்குள் அங்கு போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட பிணங்களைச் சமாதான நீதிவான் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். அவர்களுக்கருகில் கிடந்த கைத்துப்பாக்கியையும் போலீஸார் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் நடந்து சில நிமிடங்களில், வீதி மீண்டும் இயல்புக்குத் திரும்பியது. எஞ்சியிருந்த மாணவர் களை ஏற்றிக்கொண்டு பேருந்து பயணத்தைத் தொடங்கியது. சோதனைச் சாவடியை அடைந்தபோது அங்கு ஏதோ கைகலப்பு நடப்பதைப்போல இருந்தது. நாங்கள் பேருந்தைவிட்டு கீழே இறங்கி நடந்துபோனோம். குழுமியிருந்த மாணவர்களுக்கும் படையினர் ஒருவருக்கும் வாக்குவாதம் முற்றியிருந்தது. வார்த்தைகள் தடிமனாக விழத் தொடங்கின. ஏதோ நடந்துவிடும்போலத் தோன்றியது. நான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு எட்டிப்பார்த்தேன்.
ரத்தம் வடிய அமர்ந்திருந்தார் தவா அண்ணா.
(நீளும்...)