அலசல்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 37

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

ஆலமரத்தின் விழுதில் தொங்கியபடியிருக்கும் கபிலனின் சடலம், நிறைய அடி காயங்களோடு இருந்தது. அவரின் நடுத்தொண்டையில் பெரிய உளி ஒன்று செருகப்பட்டிருந்தது.

அலறிக்கொண்டு கண்களைத் திறந்தேன். இந்தக் கனவினுள்ளே படர்ந்திருந்த இருட்டு, விழித்த பின்னும் என்னை பயங்கரமாக அச்சுறுத்தியது. அக்கா நித்திரையிலிருந்தாள். நான் கனவை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியும் பல அடுக்குகளாக என்னை நடுங்கச் செய்தது. மருதன் தன்னுடைய இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்திருப்பாரா என்கிற தவிப்பும் கவலையும் என் நித்திரையைத் தகர்த்தன. மருதனுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது. அவரைச் சூழும் அனைத்து ஆபத்துகளும் கரையவேண்டுமென வேண்டிக்கொண்டேன். நித்திரை வருவதாயில்லை. புரண்டு படுத்தால் ஒரு நினைவு, நிமிர்ந்து படுத்தால் இன்னொரு நினைவெனப் படுக்கையே ஒவ்வாமையாக இருந்தது.

அதிகாலையானதும் குளித்து முடித்துவிட்டு கோயிலுக்குச் செல்ல ஆயத்தமானேன். அக்கா அப்போதுதான் படுக்கையைவிட்டு எழும்பினாள். “சரியான குளிராகக் கிடக்கு, அந்தத் தொப்பியைப் போட்டுக்கொண்டு போ” என்றாள். கண்ணாடித் தட்டில் கிடந்த பனித்தொப்பியைப் போட்டுக்கொண்டு கோயிலுக்கு விரைந்தேன். வீதியில் எப்போதும்போல ராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். என்னுடைய நடையில் வேகத்தைக் கூட்டி விரைந்தேன்.

கோயிலுக்கு முன்னால் நிற்கும் ஆலமரத்தின் விழுதொன்றில் மனிதனொருவன் தொங்கிக்கொண்டிருப்பதைப்போல தெரிந்தது. விடிந்தும் விடியாத பூமியின் கண்கள், விழுதாக அசையும் ஒருவனின் உடலைக் கண்டு காற்றை வீசியது. கோயிலுக்கு வந்த நான்கைந்து பேராக அருகில் சென்று பார்த்தோம். நான்தான் அடையாளம் கண்டு முதலில் சொன்னேன்.

“இது கபிலன் அண்ணா.”

“எந்தக் கபிலன்?”

“இவர் பூதவராயர் கோயிலடியாள்.”

“இவன் கொம்பனியோட ஆளே.”

இன்னொருவர் “நாங்கள் இதில நிக்க வேண்டாம் போகலாம், கோயிலில பூசை நடத்தவும் வேண்டாம். ஐயரிட்ட ஓடிப்போய்ச் சொல்லுங்கோ” என்றார்.

“முதலில இப்பிடியொரு பிரச்னை நடந்திருக்கெண்டு கிராம சேவையாளரிட்ட போய்ச் சொல்லவேணும்.”

“எத்தனை நூற்றாண்டு மரமிது. இந்த விழுதுகளைப் பிடிச்சு என்ர தாத்தனே ஆடியிருக்கிறான். இண்டைக்கு ஒருத்தனை அதில கட்டித் தொங்கவிட்டிருக்கிறாங்கள். நாங்கள் என்ன பாவம் செய்தமோ... ஆர்தான் எங்களை இப்பிடிச் சாபமிட்டதோ...”

ஆலமரத்தின் விழுதில் தொங்கியபடியிருக்கும் கபிலனின் சடலம், நிறைய அடி காயங்களோடு இருந்தது. அவரின் நடுத்தொண்டையில் பெரிய உளி ஒன்று செருகப்பட்டிருந்தது. அந்தரத்தில் நின்ற அவரின் கால்விரல்கள் வானை நோக்கியிருந்தன. குருதி, மண்ணின் மீது காய்ந்திருந்தது. இலையான்கள் மாம்பழத்தை மொய்ப்பதைப்போலச் சத்தமிட்டபடி கபிலனைச் சூழ்ந்திருந்தன. கபிலன் அண்ணாவின் அம்மாவினால் இந்தத் துயரத்தை தாங்க முடியாது. ஒரேயொரு புத்திரனை இழந்துவிட்டாள். அவனைச் சுமந்த கருவறையில் இனி ஓலத்தின் பெருநெருப்பு சுழன்று தாக்கும். அவள் திரும்பிப்பெற முடியாதவாறு தன்னுடைய பிள்ளையை இழந்த செய்தி ஊரெங்கும் பரவியது. சாவின் கும்மிருட்டில் எங்கள் மன்றாட்டங்கள், ஒரு மின்மினியளவுக்குக்கூட வெளிச்சத்தைத் தரவில்லை. அழுவதற்கும் அச்சப்படுவதற்குமென திணிக்கப்பட்ட இந்த வாழ்க்கையை நான் எங்கே புதைப்பேன் இறைவா!

கடவுள்... பிசாசு... நிலம்! - 37

பல நூற்றாண்டு வயதுகொண்ட ஆலமரத்தின் விழுதொன்றிலிருந்து கபிலனின் பிரேதத்தைக் கீழே இறக்கிய போலீஸார், நீதிவான் முன்னிலையில் சில குறிப்புகளை எடுத்துக்கொண்டனர். நீதிவான் எந்தப் பெறுமதியுமற்ற தனது பார்வையால் சட்டச் சடங்குகளைச் செய்து முடித்து, பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். கபிலனின் கழுத்தில் கிடந்த உளியைவிடவும் அவனது உடலில் கிடந்த காயங்கள் பார்த்தவர்களை கதிகலங்கச் செய்தன.

வீட்டுக்குச் சென்றேன். வேட்டியை அவிழ்த்தெறிந்து உடுப்பை மாற்றினேன். அக்காவிடம் சொன்னேன். “கபிலன் அண்ணாவைச் சாக்கொண்டு போட்டாங்கள்.’’ அக்காவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளுக்கு அவர்மீதெல்லாம் நல்ல அபிப்பிராயம் கிடையாது. எப்போது பார்த்தாலும் பெம்பிளைப் பிள்ளைகளை நக்கல் செய்யக்கூடியவர். “கபிலன் ஒரு ஊத்தவாளி ஆள், அவனோட பழகாத” என அடிக்கடி சொல்லும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் கேட்டாள்.

“ஆர் செய்தது?”

“ஆருக்குத் தெரியும்... கோயில் ஆலமரத்தில தூக்கில போட்டிருந்தது. தொண்டையில ஒரு பெரிய உளியை ஏத்தியிருக்கிறாங்கள்.”

“நீ இப்ப ஏன் கபிலன் வீட்டுக்குப் போறாய்? அங்க பிரேதத்தைக் கொண்டு வந்ததுக்குப் பிறகு போ.”

“இல்லையக்கா. நான் போகவேணும். அவற்ற அம்மாவ நினைக்க தலை சுத்துது. ஒரேயொரு பிள்ளை. கடைசியாய் இப்பிடி ஆயிற்றுதே.”

“நானும் வாறன். இரு.”

அக்காவும் நானும் கபிலனின் வீட்டுக்குச் சென்றோம். சனங்கள் குழுமியிருந்தனர். கபிலனின் அம்மா மயங்கிக்கிடந்தாள்.

கபிலனின் பிரேதம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட மதியமாகியிருந்தது. மயக்கத்திலிருந்து மீண்ட கபிலனின் அம்மா, அவனைத் தழுவித் தழுவி மாரில் அடித்து அழுதுகொண்டிருந்தாள். மரண வீட்டின் அழுகுரல் வானைப் பிளந்தது. தாய்மார்களின் அழுகுரல் கண்ணீரின் தொப்பூழ்க்கொடியாக நிலத்தைச் சூழ்ந்தது. மார்பிலும் தலையிலும் அடிவயிற்றிலுமாக அடித்தழும் பெண்களின் ஒப்பாரி எழப்போகும் அனல்காற்றின் அறிவிப்பாகத் தோன்றியது. மருதன் அங்கே ஒரு ஓட்டோவில் வந்திறங்கினார். கொஞ்ச நேரத்தில் என்னைத் தனக்கு அருகில் அழைத்து சும்மா கதைத்துக்கொண்டிருந்தார். வெற்றிலைத் தட்டிலிருந்து சீவலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, பீடியை எடுத்துப் பற்றவைத்தார்.

“நீங்கள் பீடி குடிப்பியளா?”

“ஓமடா... இப்ப இதைப் பார்த்து அதிர்ச்சி அடையாத... நீ எனக்கொரு உதவி செய்யவேணும்” என்றார்.

அவர் சொன்னதும் நான் வீட்டினுள்ளே போகத் தயாரானேன். என்னைக் கண்டதும் கபிலனின் அம்மா, “ஐயோ ஆதீரா, உன்ர கொண்ணனைக் கொண்டுட்டாங்களே, கபிலா எழும்படா உன்ர ஆதீரன் வந்திருக்கிறான்... உனக்கு விருப்பமான வன்னி வந்திருக்கிறான்” என்று அலறினாள். கபிலனின் அறைக்குள் சென்றேன். அவருடைய அறையில் இந்திய கிரிக்கெட் வீரர் `சௌரவ் கங்குலி’ புகைப்படம் ஒட்டப்பட்டிருந்து. மேசையில் ஒரு வானொலி இருந்தது. அவர் விளையாடும்போது போட்டுக்கொண்டு வரும் சப்பாத்து, மூலையில் இருந்தது. பழைய அலமாரியைத் திறந்து பார்த்தேன். அதற்குள் ஒரு புதிய பெட்டியில் சில ஒலிநாடாக்கள் இருந்தன. இளையராஜா பாடல்கள், தேவா பாடல்கள் என்று வகைப்படுத்தி அடுக்கப்பட்டிருந்தன.

கடவுள்... பிசாசு... நிலம்! - 37

அந்த அலமாரிக்குள் இருந்த பழைய பெட்டியைத் திறந்தேன். அதற்குச் சில உடுப்புகளும் கைத்துப்பாக்கியும் இருந்தன. நான் அந்தக் கைத்துப்பாக்கியை எடுத்து என்னுடைய உடலுக்கும் உடுப்புக்கும் இடையே செருகிக்கொண்டு வெளியே நடந்துவந்தேன். சனங்களைக் கடந்து, ராணுவ உளவாளிகளைக் கடந்து மரண வீட்டிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியை நான் எங்களுடைய வீட்டுக்கு எடுத்துப்போகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கவே தலையில் ரத்தத்தின் சூடு எரியத் தொடங்கியிருந்தது. என்னை நானே எச்சரிக்கிறேன். ஆனால் நான் அஞ்சவில்லை. முதன்முறையாக ஒரு கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நடந்துபோகிறேன் என்பதே வீரயுகத்தின் வரலாற்றில் நானுமொரு கதாபாத்திரம் என்பதைப்போல எனக்குள் ஒரு பெருமிதம் ஊறத் தொடங்கிற்று.

ஏற்கெனவே மருதன், கபிலனின் வீட்டிலிருந்து எங்களுடைய வீட்டுக்குப் போய்விட்டார். நான் அக்காவுக்கும் சொல்லாமல் அங்கிருந்து நடக்கத் தொடங்கியிருந்தேன். மரண வீட்டுக்கு ஆட்கள் வந்துகொண்டேயிருந்தனர். கபிலனின் நண்பர்கள் தளும்பத் தளும்ப மது அருந்திவிட்டு வீண் பேச்சுகளில் இருந்தனர். நான் பூதவராயர் கோயிலடி பிரதான சாலைக்கு வந்தேன். எந்தத் தயக்கமுமில்லாமல் மிக இயல்பாக நடக்க வேண்டுமென்ற சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது. மேல் மாடி ராணுவ முகாமைக் கடந்துவிட்டால் பெரிய ஆபத்துகள் இல்லை. அந்த இடத்தை நெருங்குகிறபோது சனங்கள் சோதனை செய்யப்படுவது தெரிந்தது. வேறு வழிகள் இல்லை. ஆனால், இனித் திரும்பியும் செல்லக் கூடாது. வந்த திசையை மறுத்துத் திரும்பிச் சென்றால் அவர்கள் என்னை முழுக்க முழுக்கச் சந்தேகப்பட்டுவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். நான் நடந்து வந்து சோதனை செய்யப்படும் இடத்தை நெருங்குகையில் நின்றுகொண்டிருந்த சிப்பாய் என்னைப் பார்த்துச் சிரித்து “எங்க போறது?” என்று கேட்டான்.

“நான் வீட்ட போறன் சேர்.”

‘சரி, போ’ என்று கையசைத்தார்.

கும்பிட்ட கடவுள் கைவிடவில்லை. என்னைக் காப்பாற்றிவிட்டார். திரும்பிப் பார்க்காமல் நடந்து அவர்களின் பார்வையிலிருந்து விலகியதும், பிரதான சாலையைவிட்டு வீடுகளுக்குள்ளால் போனேன். சிலரின் வீட்டு நாய்கள் என்னை இரையாக்கத் துடித்தன. ஆனால், நான் கற்களைக்கொண்டு அவற்றை எதிர்கொண்டேன். இன்னும் ஐந்து நிமிடங்களில் வீட்டை அடைந்துவிடலாம். கொஞ்ச தூரத்தில் வருகிற வைரவர் கோயிலைக் கடந்துவிட்டால் பின்னர் ஓடிப்போய்விடலாமென்று நினைத்துக்கொண்டேன். என்னுடைய அடிவயிற்றை முட்டிக்கொண்டிருக்கும் கைத்துப்பாக்கியை மெல்லத் தொட்டுப் பார்த்தேன். என்னுடைய உடலின் சூடும் அதில் பரவியிருந்ததுபோலும். கையை விசுக்கென எடுத்துக்கொண்டேன். வைரவர் கோயிலை அடைந்தபோது அங்கே இரண்டு ராணுவத்தினர் கிணற்றில் நீரள்ளிக்கொண்டிருந்தனர். நான் வியர்த்து விறுவிறுத்து வருவதைப் பார்த்ததும், என்னைத் தங்களை நோக்கி வருமாறு அழைத்தனர். நான் அவர்களை நோக்கிப் போக விரும்பவில்லை. ஆனால், அவர்களிடமிருந்து தப்பவும் எண்ணவில்லை. ஆனால், ராணுவத்தினரில் ஒருவன் என்னை நோக்கி வரத் தொடங்கினான்.

“ஐயோ... மருதன் அண்ணா நான் பிழை செய்திட்டன்” என்று மட்டும் மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். என்னிலிருந்து இருபதடிகள் தூரத்தில் நிற்கும் ராணுவச் சிப்பாயின் கண்களையே நானும் பார்த்துக்கொண்டு நின்றேன்!

(நீளும்...)