Published:Updated:

அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனம்; அமேசான் காடுகளுக்கு நண்பன் - ஜான் பெர்கின்ஸ் | இன்று ஒன்று நன்று - 28

ஜான் பெர்கின்ஸ்
News
ஜான் பெர்கின்ஸ்

`ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்கிற புத்தகத்தின் வழியாக மூன்றாம் உலக நாடுகள் மீது நடத்தப்படுகிற காலனிய போக்கின் மீது கேள்வி எழுப்பியவர், ஜான் பெர்கின்ஸ்.

Published:Updated:

அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனம்; அமேசான் காடுகளுக்கு நண்பன் - ஜான் பெர்கின்ஸ் | இன்று ஒன்று நன்று - 28

`ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்கிற புத்தகத்தின் வழியாக மூன்றாம் உலக நாடுகள் மீது நடத்தப்படுகிற காலனிய போக்கின் மீது கேள்வி எழுப்பியவர், ஜான் பெர்கின்ஸ்.

ஜான் பெர்கின்ஸ்
News
ஜான் பெர்கின்ஸ்

நீங்கள் வாழ்கிற வாழ்க்கை உங்களுடையது தானா? நீங்கள் எடுக்கிற முடிவுகள் நீங்களாக எடுப்பவை தானா? என்ன சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும், எப்படியான அமைப்பில் வாழ வேண்டும் என்பவை உங்களால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கின்றனவா? இல்லை எல்லாவற்றிற்கும் பின் கார்ப்ரேட்டுகள் இருக்கின்றனவா. கதைக்கு பின் உள்ள உண்மையான கதை என்ன? ஜான் பெர்கின்ஸ் உண்மையான கதையை வெளிக் கொண்டுவந்தவர். மூன்றாம் உலக நாடுகளை விழுங்க நினைக்கும் வல்லரசின் போக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். வளர்ச்சி என்கிற பெயரில் உலகின் வளங்களைக் காவு வாங்கும் செயல்திட்டங்களைக் கேள்விக்கு உட்படுத்தியவர். எல்லோரின் பிறந்தநாளும் நமக்கு முக்கியமானவை அல்ல. ஆனால் கண்கள் கட்டப்பட்ட காட்டில் உழன்று கொண்டிருந்த மக்களுக்கு அவர்களை அவர்களுக்கே அறிய சிறிய வெளிச்சம் தேவையாக இருந்தது. அந்தப் பணியைச் செய்த ஜான் பெர்கின்ஸ் அவரது பிறந்தநாளில் கொண்டாடப்பட்டத்தக்கவர்.

"ஒரு கையில் இலட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. நீங்கள் எங்கள் விளையாட்டிற்கு உடன்பட்டால் இவை அனைத்தும் உங்களுக்குதான். இன்னொரு கையில் துப்பாக்கி. எது வேண்டும் எனத் தீர்மானியுங்கள். நான் ஈரான், இந்தோனேஷியா, ஈக்குவிடார், பனாமா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும்போது கூறிய வார்த்தைகள் இவை. இப்படியே சொல்லவில்லை. ஆனால் இதே பொருளில் தான் சொல்லியிருந்தேன்" ஜான் பெர்கின்ஸ் TEDx உரையை இவ்வாறு தொடங்குகிறார்.

புள்ளிவிபரம் (மாதிரி படம்)
புள்ளிவிபரம் (மாதிரி படம்)
pixabay

ஜான் பெர்கின்ஸ் பொருளாதார அடியாளாகத் தன்னுடைய பணியைத் தொடங்கியவர். பொருளாதார அடியாட்கள் மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்களின் வளங்களைக் கொள்ளையடிக்க வல்லரசுகளுக்கு வழியை உருவாக்கிக் கொடுப்பவர்கள். ஏற்கெனவே வறுமையில் இருக்கும் நாடுகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு, உட்கட்டுமானம் போன்ற பணிகளுக்காக உலக வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஐக்கிய நிறுவனம் போன்றவற்றில் கடன் பெற வைப்பார்கள். இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் அமெரிக்க நாட்டின் மிகப்பெரும் நிறுவனங்களுக்கே தரப்படும். பணம் நாட்டை விட்டு வெளியே போகாது. அதற்கு பதிலாக அளவில்லாத வளங்களைக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கையில் கிடைத்திருக்கும். அந்த ஏழை நாடு இன்னும் வறிய நிலையிலேயே இருக்கும். அந்த நாடுகளின் தலைவர்கள் சாம தான பேத தண்டம் என எல்லா வழிகளிலும் தங்களுக்கு சாதகமாக மாற்றப்படுவர். மாறாதவர்கள் காணாமல் போவார்கள், விமான தாக்குதலோ காரணமே தெரியாமல் மரணமோ சம்பவிக்கும். இதற்காக ஏவப்படும் படையை 'குள்ளநரிகள்' என்கிறார் ஜான். 'வேட்டைக்கார முதலாளித்துவம்' எனச் சாடுகிறார் ஜான் பெர்கின்ஸ். "உலகின் 5 சதவிகித அமெரிக்க மக்கள் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளங்களைப் பயன்படுத்துகிறோம்"

ஜான் பெர்கின்ஸ் பணியாற்றிய மெய்ன்ஸ் நிறுவனம் அரசு சாராத தனியார் அமைப்பு. ஆனால் அமெரிக்காவின் உளவுத் துறையான CIA, பல பெரிய நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கும் நிறுவனம். நாளை ஏதேனும் குற்றச்சாட்டு எழுந்தால் அரசு தப்பிக்கொள்ள இதுபோன்ற ஏற்பாடு. எப்படி பொருளாதாரம் இன்றைக்கு வேலை செய்கிறது. நம்மை ஒரு முடிவு எடுக்க வைக்க எவையெல்லாம் காரணிகளாக அமைகின்றன என்பவை குறித்து மிக விரிவாகவே ஜான் அந்த நூலில் பேசியிருக்கிறார். ஜான் பெர்கின்ஸ் மிக உயரிய பதவிகளில் நாடுகளையே பந்தாடும் நிலையில் இருந்தாலும் அவரது மனம் எளிய கிராமப்புறத்தில் வளர்ந்த சிறுவனுடையது. நியூ ஹம்ப்ஸ்பியர் வாழ்வில் அவரது அப்பாவும் அம்மாவும் பள்ளி ஆசிரியர்கள். அப்பா இராணுவத்தில் இருந்து திரும்பி வந்த பிறகு ஆசிரியராக ஆனவர்.

ஜான் பெர்கின்ஸ்
ஜான் பெர்கின்ஸ்
johnperkins.org

பணம், அதிகாரம், பெண்கள் உள்ளிட்டவை மீதான கனவு காணும் இளைஞனாக ஆர்வத்தோடு இருந்தவருக்கு எல்லாமும் கிடைக்கும் போது ஒரு கட்டத்தில் தான் செய்து கொண்டிக்கிற செயலின் தீவிரத்தை உணரத் தொடங்குகிறார். ஒரு வழி பாதை. திரும்ப வழியில்லை என்ற போதும் தீரத்தோடு விலகி வருகிறார். வந்த பிறகும் அரங்கேறும் படுகொலைகள், தீவிரவாதம் போன்றவற்றை பார்த்த பின் அவற்றில் தன்னுடைய அனுபவத்தை எழுதத் தலைப்படுகிறார்.

எழுதிய பிறகு அதனை வெளியிட மனம் வாய்க்கவில்லை. தன்னுடைய நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார், "இந்த அச்சுறுத்தலை கையூட்டுகளை நான் கடந்து வரக் காரணம் சொல்ல வேண்டுமென்றால் சுருக்கமான பதில், என் மகள் ஜெஸிகா தான். நான் இந்த நூலை வெளிடுவது குறித்த அச்சத்தை என் மகளிடம் பகிர்ந்த போது அவள் கூறினாள், 'அவர்கள் உனக்கு முடிவு கட்டினால் விட்ட இடத்தில் இருந்து நான் தொடர்வேன். நான் பெறப் போகும் பேரக் குழந்தைகளுக்காக இதை நாம் செய்தே ஆக வேண்டும்' " என்றாள்.

ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம் நூல்
ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம் நூல்
goodreads

இரண்டாவதாக அவர் கூறும் காரணம் தான் பிறந்து வளர்ந்த நாட்டின் மீது இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு. அதன் அடுத்த பாகமான "பொருளாதார அடியாளின் புதிய ஒப்புதல் வாக்குமூலம்" என்கிற நூலை ஜான் பெர்கின்ஸ் 2016 இல் வெளியிட்டார். முதல் பாகம் 2004 இல் வெளிவந்தது. இதுவரை 35 க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் நியூ யார்க் பெஸ்ட் செல்லரில் தொடர்ந்து 70 வாரங்கள் இருந்தும் சாதனை படைத்துள்ளது.

அசாத்தியமான மனிதர், பல்வேறு அரசியல் கொலைகளுக்கு பின்னிருக்கும் சதியையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். "சதிகளை ஆராய்பவர் எனக் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். நான் சதிகளின் பின்னிருக்கும் உண்மைகளைப் பேசுபவன்" என்கிறார் ஜான்.

கொரோனா பேரிடர் காலத்திற்கு நடுவே 2020 இல் அவரது புத்தகம் 'Touching the Jaguar' வெளியாகியுள்ளது. இன்றைய காலத்தில் மக்கள் தங்களுடைய வாழ்வில் பெரும் தடைகளாக இருப்பவற்றை எப்படி களைய வேண்டும் எனப் பேசியிருக்கிறார்.

பொருளாதார அடியாள் நூலின் அடுத்த பாகம்
பொருளாதார அடியாள் நூலின் அடுத்த பாகம்
amazon

"நான் முதலாளித்துவத்தை சேர்ந்தவன் தான். முதலாளித்துவம் தான் அறிவியல், கலை, தொழில்நுட்பம் போன்றவற்றில் மாற்றத்தைக் கொண்டு வரும். ஆனால் Milton Friedman கூறியது போல குறுகிய இலாப நோக்கம் கொண்டதாக நிறுவனங்கள் மாறி வருவது தான் பிரச்னைக்கு காரணம். நீண்ட கால நோக்கில் இயற்கை வளங்களுக்கும் நாட்டுக்கும் இலாபம் தரக் கூடியதாக நிறுவனங்கள் மாற வேண்டும். நீங்கள் நினைத்தால் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். 1773 போரில் இங்கிலாந்து படையை பலம் பொருந்தியதாக எல்லோரும் நினைச்சாங்க. 1500 பேர் கொண்ட பிரிட்டிஷ் படையை, ஜார்ஜ் வாஷிங்கடன் பிரெஞ்சு வீரர்கள்- அமெரிக்காவின் தொல்குடி மக்கள் என 900 பேர் கொண்ட படையால் எதிர்த்தார். ஜார்ஜ் வெற்றி பெற்றார். 'பிரிட்டிஷ் ஒன்றும் பலம் பொருந்தியவர்கள் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் மரங்களுக்கு பின்னால் ஒளிவது தான்'என்றார் ஜார்ஜ். அந்த முறை தான் இப்போது நமக்கும் தேவைப்படுகிறது. எளிய வாழ்வை வாழுங்கள்" என அறைகூவல் விடுகிறார் ஜான் பெர்கின்ஸ். புதுப்பிக்கத்தக்க வளங்கள் சார்ந்தும் பழங்குடியின வாழ்வியல் சார்ந்தும் இயற்கை சூழலியலை பாதுகாக்கும் பொருட்டும் பெரிய நிறுவனங்களுக்கு நாடுகள் பலியாவதைத் தடுக்கவும் இவர் முன்னெடுப்பது இன்றைய உலகிற்கு தேவையான விஷயங்கள். நலமான எதிர்கால உலகைச் சமைக்க அவரின் எழுத்துக்கள் வழி அமைக்கின்றன. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜான் பெர்கின்ஸ்.