Published:Updated:

"இங்கே வாழ்வதற்கு எல்லா உயிர்களுக்கும் உரிமை உண்டு".. உரக்கச் சொல்லும் 'ஊர்வனம்' அமைப்பு

"இங்கே வாழ்வதற்கு எல்லா உயிர்களுக்கும் உரிமை உண்டு".. உரக்கச் சொல்லும் 'ஊர்வனம்' அமைப்பு
"இங்கே வாழ்வதற்கு எல்லா உயிர்களுக்கும் உரிமை உண்டு".. உரக்கச் சொல்லும் 'ஊர்வனம்' அமைப்பு

'மனிதனுக்கு நீர்தேவைப்பட்டால் காசு கொடுத்து வாங்கிக்குவான், அப்பாவி விலங்குகள் என்ன செய்யும்... பாவம்' எனும் ஒற்றை வரியில் புதைந்து கிடக்கிறது உள்ளூர் தொட்டு உலக அரசியல். `எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் பாவித்து உரிமை வழங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கிறான்' என்ற ஜீவகாருண்யக் கொள்கையில் உடைகிறது ஒட்டுமொத்த அரசியலும். இறைவனின் படைப்பில் உயிர்கள் அனைத்தும் சமம் எனக் கருதும் உள்ளங்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றன.

கோடையின் கொளுத்தும் வெயில் வனவிலங்குகளையும் விட்டுவைப்பதில்லை. விலங்குகளும் பறவைகளும்  நீர்தேடி ஊருக்குள் வருவதும், விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் இயல்பாய் நடக்கும். கோடையில் ஏற்படும் வனவிலங்குகளின் உயிரிழப்பைக் குறைக்க பல முயற்சிகளை முன்னெடுத்துவரும் தன்னார்வ அமைப்பே  'ஊர்வனம்'.  மதுரை திருநகரைச் சேர்ந்த இந்த அமைப்பு, கடந்த பத்து ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான வனவிலங்குகளைக் காத்து அவற்றுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இதன் சேவை தொடர்கிறது. பல்லுயிர்த்தன்மை மாறாத இயற்கையின் வரமாய் இன்றளவும் திகழ்கிறது மதுரை, தென்பரங்குன்றத்தின் மலையடிவாரம். அங்கு வாழும் வன உயிர்களைக் காக்க அங்குள்ள தொட்டிகளைச் சுத்தம் செய்து வாரம் இருமுறை  நீர் நிரப்பி வருகிறது இந்தக் குழு. 35 இளைஞர்களின் தன்னார்வத்தில் உருவான இவர்களின் சேவை, மதுரை மட்டுமின்றி கம்பம், போடி, கள்ளிக்குடி, அருப்புக்கோட்டை என நீண்டுகொண்டே செல்கிறது.

"உலகத்தில் வாழ்வதற்கு எல்லா உயிர்களுக்கும் உரிமை உண்டு.   நம்முடைய சுயநலத்துக்காக இன்னொரு ஜீவனை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? மனித உயிருக்கு இணையான மதிப்பை மற்ற உயிர்களுக்கும் கொடுக்க வேண்டும். அந்த எண்ணத்தில்  உருவாக்கப்பட்டதுதான் ஊர்வனம்.  இதன்மூலம் தனித்துவிடப்பட்ட, காயப்பட்ட விலங்குகளுக்கு முதலுதவி செய்கிறோம். அவற்றை வனத்துறையின் அனுமதியோடு வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விடுவோம். வன விலங்குகள் மட்டுமில்லாமல் நகர்ப்புறங்களில் தொந்தரவு செய்யும் பாம்பு, குரங்கு, கீரி முதலியவற்றையும் கூண்டுவைத்து பிடித்து,  காட்டுக்குள் விடுவோம். இதுவரை 5000-க்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்திருக்கிறோம்.

வீடுகளுக்குள் பாம்பு வந்துவிட்டாலோ,  குரங்கு வந்துவிட்டாலோ எங்களைப் போன் செய்து கூப்பிடுவார்கள்.  தகுந்த உபகரணங்களுடன் அந்த விலங்குகளை மீட்டுவிடுவோம். பொதுவாக, பறவைகள் மற்றும் விலங்குகள் வெயில் காலங்களில் அதிகமாய் இறப்புக்கு உள்ளாகும். சாதாரணமாக மரத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு பறவை, டீஹைட்ரேடாகி  மயங்கி கீழே விழும். மின்கம்பிகளில் அடிபட்டு இறந்துபோகும், நீரைத் தேடி ஊருக்குள் வந்து விபத்துக்குள்ளாகும். நான்கு மாதங்கள், அவற்றின்மீது சரியான அக்கறை எடுத்துக்கொண்டால் அவைகளைக் காப்பாற்றிவிட முடியும்.

மரநாய், எறும்புத்தின்னி, மான், குரங்கு, காட்டுப்பூனை, முயல் முதலிய விலங்குகளையும், கூகை, மயில், நீர்காகம், கூழைக்கிடா, தேன்சிட்டு, காட்டுக்கோழி உள்ளிட்ட பறவைகளையும் காப்பாற்றி இருக்கிறோம். விலங்குகளை, நாம் எப்பவும் தள்ளிவைத்துப் பார்த்தே பழகிவிட்டோம்.  மனிதனுக்கு, உணவுக்கும் பொழுதுபோக்குக்கும் மட்டுமே மற்ற உயிரினங்கள் தேவைப்படுகின்றன. உணவில் மட்டுமில்லாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்பில்கூட அயல்நாட்டு மோகம்தான் நமக்கு அதிகம். இதனால்தான் உள்ளூர்ப் பறவைகள், விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

இயற்கையால் ஓர் உயிரினம் அழிவதற்கும், மனிதனின் செயல்களால் அழிக்கப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குறிப்பிட்ட ஓர் இனம் அழிக்கப்படும்போது மொத்த உணவுச்சங்கிலியில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி அழிக்கப்பட்டதுதான் பிணந்தின்னிக் கழுகுகள். பொதுவாக ஒரு பாம்பைக் கொல்லுவது வருடத்துக்கு ஆயிரம் எலிகளை உருவாக்குவதற்குச் சமம். ஒவ்வோர் உயிரினமும் ஏதோ ஒரு காரணத்துக்காகப் படைக்கப்பட்டதுதான். இதைப் புரிந்துகொண்டாலே உயிரினங்கள் காக்கப்படும்.

விலங்குகளைத் துன்புறுத்துவது குற்றம் என்று  வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972 (Wildlife Protection Act, 1972) சொல்கிறது. விலங்குகளைவைத்து வித்தை காட்டுவதும், கண்ணிவைத்து அவற்றை வேட்டையாடுவதும் இன்றளவும் நடந்துகொண்டுதான்  இருக்கிறது. அதனால் வனவிலங்கு குறித்த விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகிறோம். குறிப்பாய் மலைவாழ் மக்களுக்கு. மாணவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது மிகச்சுலபம். அதனால் பள்ளி, கல்லூரிகளை நோக்கியும் எங்கள் பயணம் தொடர்கிறது" என்கிறார்கள் ஊர்வனத்தின் ஒருங்கிணைப்பாளர்களான விஸ்வநாதன் மற்றும் சகாதேவன்.

பசிப் போக்கு, உயிர்களிடத்து அன்பு செய்,  தயவு காட்டு, மனதாலும் அவற்றுக்குத் தீங்கு நினைக்காதே எனும் சிந்தனைகள் பரவினால், மனம் இன்புறும். உலகம் செழிப்படையும்.