Published:Updated:

உராங்குட்டான் பார்த்திருக்கிறீர்களா? இனி பார்க்கவே முடியாமலும் போகலாம்..!

உராங்குட்டான் பார்த்திருக்கிறீர்களா? இனி பார்க்கவே முடியாமலும் போகலாம்..!

அகதிகளாய் தெருவுக்கு வந்த உராங்குட்டான்களுக்கு இப்படித்தான் வாழ்க்கையையும், வலியையும் மனித இனம் கொடுத்திருக்கிறது.

உராங்குட்டான் பார்த்திருக்கிறீர்களா? இனி பார்க்கவே முடியாமலும் போகலாம்..!

அகதிகளாய் தெருவுக்கு வந்த உராங்குட்டான்களுக்கு இப்படித்தான் வாழ்க்கையையும், வலியையும் மனித இனம் கொடுத்திருக்கிறது.

Published:Updated:
உராங்குட்டான் பார்த்திருக்கிறீர்களா? இனி பார்க்கவே முடியாமலும் போகலாம்..!

எந்தப் பொருளாதார முன்னேற்றத்தைக் காரணம் காட்டி விரட்டி விரட்டி காட்டுக்குள் துரத்தப்பட்டதோ அதற்குப் பயந்து ஓடி ஓடி அலைந்ததில் கடைசியில் அந்த ஜீவன்கள்  வந்து நின்றது அதே பனை எண்ணெய் தோட்டத்துக்குள்தான். துப்பாக்கிகள், வெடி மருந்துகள், ஆயுதங்கள் என எதிர் கொண்டதில் பல ஜீவன்கள்  கொல்லப்பட்டன. குட்டிகள் அனாதைகளாகின. அனாதையான குட்டிகளை சர்வதேச கறுப்புச் சந்தையில் நல்ல விலைக்குக் கொண்டு போய் விற்பனைக்கு வைத்தார்கள். விற்பனைக்குப்  போன குட்டிகளை வாங்கிய மனிதர்கள் அவற்றை  வைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தி காசு பார்த்தார்கள். உராங்குட்டான்களுக்கு எதிரான எல்லா பாவங்களையும் பனை எண்ணெய் மரங்கள்தான் ஆரம்பித்து வைத்தன.

பாமாயில்  எனப்படுவது எண்ணெய்ப் பனை எனப்படும் ஒரு விதப் பனை மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய். நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ஒவ்வொரு நுகர்வு பொருள்களுக்குப் பின்னாலும் இது இருக்கிறது. பசை, மேக்கப் பொருள்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம், சோப் , சேம்பு, கண்டிஷனர்,  பவுடர் என  எல்லாப் பொருள்களிலும் இருக்கிறது. இவையெல்லாம் உலகம் முழுவதும் அத்தியாவசியப் பொருள் என்பதால், அதன் தேவை அதிகரிக்க ஆரம்பித்தது. பனை எண்ணெய் மரங்களை நட்டால் மட்டுமே அதற்கான  தேவையை சரி செய்ய முடியும். அதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் மழைக் காடுகளை குறி வைத்தன.  அதற்காக அவை தேர்ந்தெடுத்த நாடுகள் மலேசியா மற்றும் இந்தோனேஷியா. அங்கிருக்கிற போர்னியோ மற்றும் சுமத்ரா காடுகள் இயற்கையாகவே மழைக் காடுகள். அப்படியான இடத்தில் பனை எண்ணெய் மரங்கள் நன்கு வளரும். நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறோம் எனச் சொல்லி மலேசியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு வலை விரித்தன. மழைக் காடுகளை அழித்து பனை எண்ணெய் மரங்களை நடுவதென ஒப்பந்தம் போடப்பட்டது. காடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன . மிகப் பெரிய இயந்திரங்கள் கொண்டு காடுகளுக்குள் சாலைகளை அமைத்தனர். 

காடுகளுக்குத் தீ வைத்ததில் அங்கிருக்கிற விலங்குகள் எங்கே போகுமென அரசும் யோசிக்கவில்லை, பன்னாட்டு நிறுவனங்களும் யோசிக்கவில்லை. போர்னியோ மற்றும் சுமத்ரா மழைக்  காடுகள் முழுவதும் 3,00,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு விலங்குகள் உள்ளன. அதில் முக்கியமான விலங்கு உராங்குட்டான் எனப்படும் குரங்கு வகை. காடுகளில் வாழும் மனிதன் என்று அதற்கு அர்த்தம். இரக்கமே இல்லாமல் பல மனிதர்கள் வசிக்கிற நூறு குடிசைகளுக்கு தீ வைப்பதைப் போலத்தான் வைத்தார்கள். சுமத்ரா புலி, ஆசிய யானைகள், உராங்குட்டான்கள் எனப் பல விலங்குகள் சொந்த காட்டுக்குள் அகதிகளாகத் தனித்து விடப்பட்டன. உராங்குட்டான் மட்டுமல்ல எல்லா விலங்குகளும் நாலா பக்கத்துக்கும் சிதறி  ஓடின. சில விலங்குகள் தீக்கு இறையாகின. சில விலங்குகள் தீக்காயங்களுடன் தப்பிப் பிழைத்தன. பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் கல்லறையில் நினைத்ததைப் போல பனை எண்ணெய் மர தோட்டங்களை அரசு அனுமதியோடு பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கினார்கள்.

போர்னியோ மற்றும் சுமத்ராவின் மழைக் காடுகளை அழித்து பனை எண்ணெய் தோட்டங்களை நிறுவியது அங்கிருக்கிற ஏழை கிராம மக்கள்தான். அதனால் அம்மக்களின் பொருளாதார வளர்ச்சி உயரும் என அரசு நம்பியது. வறுமையிலிருந்த மக்களும் நம்பினார்கள். தென்கிழக்கு ஆசியாவில் பனை எண்ணெய் உற்பத்தி பல மக்களுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதால் பெரிதாக எந்த எதிர்ப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் அப்போது சந்திக்கவில்லை. பனை எண்ணெய் உற்பத்தியால் உள்ளூர் மக்கள் போதிய அளவுக்கு வருமானமும் பெற்றார்கள். தங்களை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்குப் பனை எண்ணெய் தோட்டத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். இன்றைய தேதியில் உலக பாமாயில் உற்பத்தியில் மலேசியா இரண்டாமிடமும் இந்தோனேஷியா மூன்றாவது இடமும் வகிக்கின்றன. அதற்காகப் பலி கொடுக்கப்பட்ட இனம் உராங்குட்டான்.

கடந்த 20 ஆண்டுகளில் பாமாயில் உற்பத்தி காரணமாக 50,000 க்கும் மேற்பட்ட உராங்குட்டான்கள்  இறந்துள்ளதாக அரசு தகவல்கள் சொல்கின்றன. காடழிப்பு காரணமாக ஒவ்வொரு வாரமும் 20-க்கும் மேற்பட்ட உராங்குட்டான்கள் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டது. உராங்குட்டான்கள் வாழ்கிற இடங்கள் கனரக இயந்திரங்கள் மற்றும் தீ வைத்து அழிக்கப்பட்டன. உராங்குட்டான்கள் உணவு தேடி காடு மேடு என அலைந்தன. உணவுத் தேடி திரிகிற உராங்குட்டான்கள் பனை மர தோட்டத்துக்குள் புகுந்தன. பசி. எதையாவது தின்றாக வேண்டிய கட்டாயத்தில் பனை எண்ணெய் செடிகளைத் தோண்டிப் போட்டன. இதனால் இடையூறுகளை எதிர்கொண்ட பன்னாட்டு பாமாயில் நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஊழியர்களை வைத்து உராங்குட்டான்களை கொல்ல வைத்தார்கள். தனியாக வந்த உராங்குட்டான்கள் தயவு தாட்சண்யம் இன்றி துப்பாக்கியாலும், ஏர் கன்களாலும் சுடப்பட்டு கொல்லப்பட்டன. குட்டியோடு இருக்கிற தாய் உராங்குட்டான்கள் கொல்லப்பட்டு, குட்டி உராங்குட்டான்கள் சட்ட விரோத சந்தைக்கு விற்பனைக்குச் சென்றன. விற்கப்படுகிற உராங்குட்டான்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. அல்லது தாய்லாந்து மற்றும் பாலி போன்ற நாடுகளில் பொழுதுபோக்கு பூங்காக்களில் பயன்படுத்தப்படுகின்றன.

பனை எண்ணெய் வளர்ச்சியால் அழிந்து வரும் பட்டியலில் இருந்த உராங்குட்டான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்தன. ஆனாலும், அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் அதைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. எல்லோருமே உராங்குட்டான்களை ஒரு பூச்சியாகவே கருத ஆரம்பித்தார்கள். மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் பனை மரங்கள்தான் இன்றைய தேதியில் பண மரம். இந்தோ­னே­ஷியா, மலே­சியா 2 நாடு­க­ளி­ல் மட்டும் 90 சத­விகி­த பாமா­யில் உற்­பத்­தி­ செய்யப்படுகிறது. 1990-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை­யி­லான கால­கட்­டத்­தில் பாமா­யில் உற்­பத்­திக்­காக மட்­டுமே 8 சத­விகித வனப்­ப­ரப்பை உல­கம் இழந்திருப்பதாகச் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்தது. மலேசிய பாம் எண்ணெய் வாரியம் 2017 வெளியிட்ட அறிக்கையின்படி பனை எண்ணெய் உற்பத்தி 19.9 மில்லியன் டன்களில் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் இந்தோனேஷியா பாம் எண்ணெய் அசோசியேஷன் கடந்த ஆண்டு உற்பத்தி 36.5 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. மலேசிய அரசு 2018-ம் ஆண்டில் பனை  உற்பத்தியின் அளவையும், ஏற்றுமதியின் இலக்கையும் 20 சதவிகிதமாக உயர்த்தி இலக்கு நிர்ணயித்திருக்கிறது.  சுற்றுச் சூழல் மாறுபடுவதையும், உராங்குட்டான்களின் அழிவையும், மழைக்காடுகள் அழிப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டி  2018-ம் ஆண்டின் இறுதிக்குள் அதன் சொந்த-பிராண்ட் உற்பத்திகளிலிருந்து பனை எண்ணெய் முழுதும் அகற்றப்படும் என்றும், ஆண்டுக்கு 500 டன்னுக்கும் அதிகமான காய்கறி எண்ணெய் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் என்றும் கடந்த வாரம் ஐஸ்லாந்து அரசு அறிவித்திருக்கிறது. இதற்குப் பதிலளித்த இந்தோனேஷியா-மலேசியா பனை கவுன்சில் இங்கிலாந்தின் சூப்பர்மார்க்கெட் ஐஸ்லாந்து வாடிக்கையாளர்களைத் தவறாக பயன்படுத்துகிறது எனக் குற்றம் சுமத்தியிருக்கிறது. 

இன்னொரு பக்கம், பாம் எண்ணெய் தொழிலாளர்களை அழைத்துச் செல்லவும் மற்றும் காடுகளுக்குத் தேவையான உபகரணங்களைக் கொண்டு செல்வதற்காகவும்  உருவாக்கப்பட்ட சாலைகள், சட்ட விரோத சந்தைக்காக விலங்கினங்களைத் தேடுகின்ற வேட்டைக்காரர்களுக்குச் சாதகமாக மாறியது. சுற்றி இருந்த எல்லா சூழ்நிலைகளும் உராங்குட்டான்களுக்கு எதிராகவே அமைந்தன. கடத்தப்பட்ட உராங்குட்டான் குட்டிகளை வாங்குகிறபொழுது போக்கு நிறுவனங்கள், சர்க்கஸ் கம்பெனிகள் அவற்றுக்கு பயிற்சி கொடுத்து குத்துச் சண்டை போட்டியை நடத்தி காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சொல்வதைக் கேட்காத உராங்குட்டான்களுக்கு  மின் அழுத்தமும், சிகரெட்டால் சூடும் போடுகிறார்கள். போட்டிக்குப் பயன்படுத்தப்படும் உராங்குட்டான்களுக்கு பாக்சிங் உடை கொடுக்கப்படுகிறது.  போட்டியைத் தொடக்கி வைக்கிற உராங்குட்டானுக்கு பெண்கள் அணியும் பிகினி உடை கொடுக்கப்படுகிறது. சூழ்ந்திருந்த மனிதர்கள் கரகோஷம் எழுப்ப போட்டி துவங்குகிறது. போட்டி துவங்கியதும் இரண்டு உராங்குட்டான்களும் சண்டை போடுகின்றன. நடுவராக இருக்கும் மனிதன் அவற்றுக்கு இடையில் சண்டையை ஆரம்பித்து வைக்கிறார். இடை இடையில் ஒரு உராங்குட்டான் வந்து தண்ணீர் கொடுக்கிறது. சண்டையிட மறுக்கும் உராங்குட்டானை நடுவர்  தலைகீழாக தூக்கி வீசுகிறார். கீழே விழுந்த உராங்குட்டானுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் உடை அணிந்த உராங்குட்டான் ஒன்று வருகிறது. அங்கு வருகிற ஒரு உராங்குட்டானை மேடைக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் அப்படியே தூக்கி வீசுகிறார். அகதிகளாய் தெருவுக்கு வந்த உராங்குட்டான்களுக்கு இப்படித்தான் வாழ்க்கையையும்,வலியையும் மனித இனம் கொடுத்திருக்கிறது. 

ஒரு இனத்தை அழித்து  அதன் கண்ணீரிலிருந்து  கிடைக்கிற பொருளைத்தான்  தினமும் முக அழகுக்கும் சிகை அழகுக்கும் பயன்படுத்துகிறோம்.