Published:Updated:

முகாமிலிருந்து காணாமல் போன யானை `வசீம்’! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 14

முகாமிலிருந்து காணாமல் போன யானை `வசீம்’! -  ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 14
முகாமிலிருந்து காணாமல் போன யானை `வசீம்’! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 14

வசீம் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு முன்பு அதன் காலடி தடங்களைக் கண்டறிந்தாக வேண்டும். அப்போதுதான் வசீம் எங்கிருக்கிறது என்பதைத் தெரிந்து பயணிக்க முடியும். பல யானைகள் உலவும் காட்டில் காலடித் தடம் என்பது சாதாரணமாக தென்படுகிற ஒன்று.

24 மணி நேரமும் தன்னை உயிர்ப்போடு வைத்திருக்கிற ஒரு விசித்திர உலகம் காடு. யானைகளிடமிருந்து தப்பித்த எறும்புகளும் இங்கே இருக்கின்றன, செந்நாய்களிடம் சிக்கிய யானைகளும் இங்கே இருக்கின்றன. அப்படி காடுகளில் காயம்பட்ட, நோய்வாய்ப்பட்ட காட்டு விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதும், அவற்றைக் கையாள்வதும் ஒரு கலை. அதை மிகச் சரியாக புரிந்துகொண்டு அங்கிருந்த விலங்குகளுக்கு சிகிச்சையளித்தவர் 'யானை டாக்டர்' கிருஷ்ணமூர்த்தி. எந்த நேரத்தில் எந்த விலங்குக்கு ஆபத்து என்றாலும் மருந்துப் பெட்டியை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போய் வருபவர். இன்று அவர் இல்லையென்றாலும் அவரைப் போன்ற பலரும் ஒவ்வொரு காட்டிலும் இருக்கிறார்கள். நிமிர்ந்துப் பார்த்தால் விண்ணை முட்டுமளவுக்குக் கதைகளை வைத்திருக்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள். அதில் ஒன்று வசீம் பற்றியது.

ஒரு மாதத்துக்கு முன்பு முதுமலையில்  கும்கி யானைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வனத்துக்கு மத்தியில், ஆற்றின் ஓரத்தில் இருக்கிற ஈட்டிமரம் என்கிற முகாமுக்குச் சென்றிருந்தேன். யானைகள் சூழ் உலகில் நுழைந்ததுமே செயற்கையாய் இருந்த என்னுடைய மொத்த உடலும் இயற்கைக்கு மாறியிருந்தது. காடு உயிர் என்றால் அங்கிருக்கிற ஆறுதான் அதனுடைய  ரத்தம். அது ஓடுகிற சத்தம் அவ்வளவு துல்லியமாய் கேட்டது. ஆற்றில் நான்கைந்து யானைகளை அதன் காவடிகள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். காவடிகள் சொல்லுகிறபடிக்கு யானைகள் அதன் உடலை வளைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. பிரஷ்ஷில் யானையைத் தேய்ப்பது தூங்குகிற ஓர் உலகத்தை எழுப்புவது போல ஒலித்துக்கொண்டிருந்தது. ஆற்றின் ஓரத்தில் நின்று ஒவ்வொரு யானையின் அசைவுகளையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவ்வளவு பெரிய உயிரினத்தை எவ்வளவு அழகாய் வேலை வாங்குகிறார்கள். யானையை  அதன் உலகத்துக்குள் சென்று அவ்வளவு பக்கத்தில் இதற்கு முன்பு பார்த்து பரவசமடைந்ததில்லை. ஆற்றில் வலது புறமாகப் படுத்து குளித்துக்கொண்டிருந்த ஒரு யானையை அதன் காவடி ஏதோ சொல்லி அழைக்கிறார், அடுத்த நொடி அந்த யானை எழுந்து நின்றுவிட்டு மீண்டும் இடது புறமாக படுக்கிற அந்த ஒரு நொடியின் பரவசத்தை பல நிமிடங்களுக்கு எனக்குள் தக்கவைத்திருந்தேன். வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்ததில் திடீரென ஒரு குரல் ``அந்தப் பக்கம் போவாதீங்க. அங்க மதம் பிடிச்ச யானை கட்டிருக்கு “ என்றது. பயந்து போய் திரும்பிப் பார்த்ததில் ஐம்பது மீட்டர் சங்கிலியால் ஒரு யானை கட்டிவைக்கப்பட்டிருந்தது. அதன் பெயர் வசீம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதுமலையில் ஒருநாள் மாலை 4 மணிக்கு வசீம் கட்டப்படாமல் முகாமில் இருக்கிறது. திடீரென அதன் மாவூத் மாண்பன் அசந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் ஓடிவிடுகிறது. அப்போது வசீம் யானைக்கு மதம் பிடிப்பதன் அறிகுறிகள் தென்பட்ட ஆரம்பக் காலம். யானையைக் காணாமல் மாவூத் எல்லா இடங்களிலும் தேட ஆரம்பிக்கிறார். முதுமலை யானைகள் முகாமின் எல்லையில் யானை இல்லை என்றதும் தகவலை வனத்துறைக்குத் தெரியப்படுத்துகிறார்கள். மற்ற நேரங்களில் யானை காட்டுக்குள் சென்றிருந்தால் அடுத்த நாள் காலையில் திரும்பி வந்துவிடும். ஆனால், மதம் பிடித்த வசீம் யானை எங்கும் செல்லும், என்ன செய்யும் என யாராலும் கணிக்க முடியாது. காணாமல் போன வசீமை உடனடியாக பிடித்தாக வேண்டும் என்பதால், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு யானையைத் தேடி முகாமிலிருக்கிற கால்நடை மருத்துவர் உள்பட 15 பேர் வனத்துக்குள் செல்கிறார்கள். முதுமலை முகாமில் இருக்கிற யானைகள் தவிர்த்து புலிகள் காப்பகத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கிற காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், முள்ளம்பன்றி, புழு, பூச்சி, பாம்பு, பல்லி, பறவைகள் என எல்லா விலங்குகளுக்கும் நேரம் காலம் பார்க்காமல் சிகிச்சையளிப்பதுதான் அவர்களின் வேலை. மருத்துவ உபகரணங்களை எடுத்துக்கொண்டு வாகனங்கள் செல்ல முடியாத இடத்துக்கெல்லாம் சென்றுவர வேண்டும். ஆபத்து எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் சிகிச்சையளித்து திரும்புவதெல்லாம் கத்தி மேல் நடப்பதற்குச் சமமானது. 

கால்நடை மருத்துவரோடு வசீமை தேடி பயணித்த 15 பேரில் பலர் முதுமலையில் பல யானைகளுக்கு மாவூத்துக்களாக இருப்பவர்கள். பதினைந்து பேரும் யானையின் காலடியைத் தேடி வனத்துக்குள் செல்கிறார்கள். வசீமைத் தேடி வனத்துக்குள் செல்லும்பொழுதே இருள் சூழ ஆரம்பிக்கிறது. இரவில் வசீம்  எங்கிருக்கும் என்கிற எந்தத் தகவலும் குழுவில் உள்ளவர்களுக்குத் தெரியாது என்பதால், கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்துத் தேட ஆரம்பிக்கிறார்கள். வசீம் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு முன்பு அதன் காலடி தடங்களைக் கண்டறிந்தாக வேண்டும். பல யானைகள் உலவும் காட்டில் காலடித் தடம் என்பது சாதாரணமாக தென்படுகிற ஒன்று. ஆனால், பதினைந்து பேருக்கும் இருந்த ஒரே நம்பிக்கை வசீமின் காலில் 20 மீட்டர் நீளத்துக்குச் சங்கிலி கட்டப்பட்டிருந்ததுதான். சங்கிலி இருப்பதால் யானையால் அதிக தூரம் போக முடியாது என்பதை உணர்ந்த ஒட்டுமொத்த குழுவும் யானையின் தடத்தோடு சேர்த்து சங்கிலியின் தடத்தையும் தேடினார்கள். இருள் சூழ ஆரம்பிக்கிறது. இரவு எட்டு  மணி வாக்கில் வசீம் யானையின் சங்கிலி தடத்தைக் கண்டு பிடித்துவிடுகிறார்கள். டார்ச் லைட் உதவியுடன் எல்லோரும் மிகுந்த கவனத்துடன் அதைப் பின்தொடர்ந்து  செல்கிறார்கள். இரவு 11 மணிக்கு ஓரிடத்தில் வசீம் இருப்பதை உறுதி செய்கிறார்கள். மதம் பிடித்திருக்கிறது என்பதைக் கால்நடை மருத்துவர் கண்டறிகிறார். இரவு நேரத்தில் யானையை ஊசி செலுத்தி பிடிப்பது ஆபத்தில் முடியும் என்பதால் யானையைக் காலையில் பிடித்து முதுமலைக்குக் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்து அங்கிருந்து மீண்டும் முதுமலைக்குத் திரும்பிவிடுகிறார்கள். 
 
அடுத்த நாள் காலை 4 மணிக்கு  வசீம் இருக்கிற இடத்துக்குக் கிளம்பத் தயாராகிறார்கள். வனத்துக்குள்  வசீம் யானை ஏதேனும் பிரச்னையில் ஈடுபட்டால் அதைச் சமாளிப்பதற்கு கும்கி யானைகள் இருந்தால் உதவியாக இருக்கும் என நினைக்கிற கால்நடை மருத்துவர் விஜய் மற்றும் காமாட்சி யானைகளின் மாவூத்துக்களை அழைத்து 6 மணிக்கு யானைகளை வசீம் இருக்கிற இடத்துக்கு அழைத்துவரச் சொல்கிறார். காலை 4 மணிக்குக் கிளம்பிய குழு 5:30 மணிக்கு யானை இருக்கிற இடத்துக்கு வந்து சேருகிறார்கள். ஆனால், யானை அங்கு இல்லை. மீண்டும் காலையில் யானை எங்கிருக்கிறது எனத் தேடுகிறார்கள். 5:30 மணிக்குத் தொடங்கிய தேடல் 7 மணிக்கு மேலும் தொடர்ந்தது. இரவு பார்த்த இடத்திலிருந்து யானை  4 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கடந்து சென்றிருந்தது. காலை 7:30 மணிக்கு யானையைக் கண்டுபிடிக்கிறார்கள். 

20 அடி  தூரத்திலிருந்து கால்நடை மருத்துவர் யானையின் நடவடிக்கையைக் கவனிக்கிறார். யானையின் மாவூத் யானையை நெருங்கி இன்னொரு காலில் சங்கிலி போட முயல்கிறார். ஆனால், யானை பிடிகொடுக்காமல் மாவூத்தை பயமுறுத்துகிறது. யானை ஆக்ரோஷத்தோடு இருப்பதை உணர்கிற கால்நடை மருத்துவர் 30 நிமிடங்களுக்குப் பிறகு  யானைக்கு ஊசி செலுத்த முடிவெடுக்கிறார். வசீம் யானை 3 டன் இருப்பதால் அதற்கு 2 மில்லி மயக்க மருந்தைச் செலுத்துகிறார். மயக்க மருந்து செலுத்திய 20 நிமிடங்களில் யானை சோர்வான நிலைக்குச் செல்கிறது. அந்த நேரத்தைப் பயன்படுத்தி யானையைப் பிடிக்க முயல்கிறார்கள். மாவூத் மாண்பன் சங்கிலியை மாட்ட முயலும் பொழுது தும்பிக்கையால் அடித்து விடுகிறது. நல்ல வேளையாக மாண்பன் தப்பித்து விடுகிறார். மேலும், நேரம் கடத்தினால் ஆபத்து என்பதை உணர்கிற மற்ற மாவூத்துகள் யானையின் பின்னால்  சென்று  சங்கிலியை மாட்டி விடுகிறார்கள்.  கால்நடை மருத்துவர் வசீம் யானைக்கு  முன்பாக சென்று நிற்கிறார். யானை தும்பிக்கையால் கால்நடை மருத்துவரைப் பிடித்து இழுக்க முயல்கிறகிறது. இதை பார்த்துக்கொண்டிருந்த மாவூத் ஒருவர் நொடியும் தாமதிக்காமல் கால்நடை மருத்துவரைப் பிடித்து இழுத்து விடுகிறார். சில நொடிகளில் மிகப் பெரிய ஆபத்து தவிர்க்கப்படுகிறது. ஒரு சில நொடிகள் தாமதித்திருந்தாலும் கால்நடை மருத்துவர் மிகப் பெரிய ஆபத்தை சந்தித்திருப்பார்.  முதுமலையில் இருந்து கிளம்பிய கும்கி யானைகள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்கின்றன. 7:30 தொடங்கிய போராட்டம் காலை 11 மணி வரை தொடர்ந்தது. அவற்றின் உதவியுடன் நான்கு கால்களுக்கும் சங்கிலி மாட்டப்படுகிறது. கும்கிகள் உதவியுடன் பிற்பகல் 3  மணிக்கு வசீம்  யானையை முதுமலை முகாமுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். 

முகாமில் இருந்து தப்பித்து வளர்ப்பு  யானைகள் காட்டுக்குள் ஓடுவது இது முதல் முறை அல்ல,  இரண்டாவது முறை. இதற்கு முன்பு ஓடிப் போன  இன்னொரு யானை 12 குண்டுகள் வாங்கி,  15   பேருக்கு மேல் கொன்ற  "மக்னா"  கிருஷ்ணமூர்த்தி.... 

தொடரும்….


கடந்த அத்தியாயத்தில் மசினி யானை குறித்து எழுதியிருந்தோம். முதுமலை சரகத்தில் மீட்கப்பட்ட காட்டு யானை குட்டிதான் மசினி . கடந்த மாதம் 25 தேதி காலை 11 மணிக்கு முக்கிய செய்திகளிலும் பிரேக்கிங் செய்திகளிலும் மசினி யானை முன்னிலைப்படுத்தப்பட்டது. கோவிலின் கருவறைக்கு பின்புறம் கட்டி வைக்கப்பட்டிருந்த மசினி திடீரென முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.  அதன் மாவூத் கஜேந்திரன் மசினியை கட்டுக்குள் கொண்டுவர எவ்வளவோ  முயற்சிக்கிறார்,  ஆனால் மசினி எதையும் கண்டு கொள்ளாமல் அங்குமிங்கும் ஓட ஆரம்பிக்கிறது. எதிர்பாராத விதமாக கஜேந்திரனையும்  தாக்குகிறது. அவர் நிலை தடுமாறி கீழே விழுகிறார், யானை ஆக்ரோஷமாக இருந்ததால் உதவிக்கு யாரும் வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது.   கஜேந்திரனை தாக்கிய யானை அவரை மிதித்தே கொன்று விடுகிறது. பின்னர் யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்து வேறு இடத்தில் கட்டி வைக்கிறார்கள். இப்போது வரை சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இனி கோயிலுக்கு எந்த  யானையும்  வேண்டாமென கோவில் நிர்வாகம் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறது. மசினி மீண்டும் முதுமலைக்கே கொண்டு செல்லப்பட இருக்கிறது.”

அடுத்த கட்டுரைக்கு