Published:Updated:

யானை யாரையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும்? - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 15

யானை யாரையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும்? - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 15
யானை யாரையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும்? - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 15

யானை ஒரு பிரமிப்பான பல ஆச்சர்யங்களைக்கொண்ட அதிசயமான உயிரினம். நின்று நிதானமாகக் கவனித்தால் கால்கள் இருக்கிற ஒரு பாறை நகர்ந்து செல்வது போலவே இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையில் பாறை என நினைத்து ஒரு யானையைக் கடந்து போன சம்பவங்களெல்லாம் எனக்கு உண்டு. யானைகள் அழகான ஆபத்து என்கிற ரீதியில்தான் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், முதுமலையில் கும்கி யானைகளை நேசிக்கிற ஒவ்வொருவரும் யானை சார்ந்தே அவர்களுடைய வாழ்க்கையைக் கட்டமைத்திருக்கிறார்கள். அதோடு குளிக்கிறார்கள், உணவருந்துகிறார்கள், தூங்குகிறார்கள், அதைக் கட்டி அணைத்துச் சிரிக்கிறார்கள்,  தும்பிக்கையில் தோள் சாய்ந்து அழுகிறார்கள். 

முதுமலையில் இருக்கிற கிருஷ்ணமூர்த்தி யானை குறித்த தகவல்கள் திரட்டும் பொழுது அதுகுறித்த ஒரு பிம்பத்தை எனக்குள் கட்டமைத்து வைத்திருந்தேன். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மூன்று யானைகள் குறித்து அந்தந்த யானைகளின் காவடிகளிடம் விசாரித்துக்கொண்டிருந்தேன். ஒரு யானையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த அதன் காவடி ``இதுதான் கிருஷ்ணமூர்த்தி” என்றார். இந்த யானையா 15 பேரைக் கொன்றது என்கிற அளவுக்கு அப்பாவியாய் குளித்துக்கொண்டிருந்தது. எனக்குள் கிருஷ்ணமூர்த்தி குறித்த பிம்பம் உடைந்து போனது அந்த இடத்தில்தான். யானை அவர் சொல்லுக்கு ஏற்ப திரும்பித் திரும்பிப் படுத்து குளித்துக்கொண்டிருந்தது. முதுமலை ஈட்டிமர முகாமில் நான்கைந்து யானைகள் இருந்தும் எளிதாகக் கடந்து போக முடிந்தது. ஆனால் கிருஷ்ணமூர்த்தியை அப்படி எளிதாகக் கடந்து போக  முடியவில்லை. மக்னா குறித்துக் கேள்விப்பட்டிருந்த கதைகள் எல்லாம் அதன் மீது ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருந்தது. கிருஷ்ணமூர்த்தி யானையைப் பக்கத்தில் பார்த்ததும் திக்கென்றுதான் இருந்தது. பதினைந்து பேரை கொன்றிருக்கிறது என்கிற ஒரு விஷயமே என்னை ஒரு வித பயத்தில் வைத்திருந்தது. யானை குளித்த பிறகு மீண்டும் முகாமுக்குக் கொண்டுவந்தார்கள். யானைக்குப் பக்கத்தில் போகலாமா என அதன் மாவூத்  கிருமாறனிடன் கேட்டேன், ``தைரியமா போங்க ஒண்ணும் பண்ணாது”என்றார். உள்ளுக்குள் ஒரு வித பயம் இருந்ததால் அவ்வளவு எளிதாக என்னுடைய உடல் யானையை நோக்கி முன்னேறவே இல்லை. முகாமில் இருந்த மற்ற யானைகளின் கால்கள் ஒரு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், கிருஷ்ணமூர்த்தியின் கால்கள் கட்டிவைக்கவில்லை என்பதும் யானையை நெருங்காமல் இருந்ததற்கு ஒரு காரணம்.

பக்கத்தில் சென்றதும் தும்பிக்கையைத் தூக்கியதும் இரண்டடி பின்னோக்கி வந்துவிட்டேன். பார்த்துக்கொண்டே இருந்த கிருமாறன் “நான் வளக்குற யானை எல்லாமே குழந்தைகள் மாதிரிதான். என்னை மீறி ஏதும் செய்யாது” என சொல்லிக்கொண்டே அதன் தும்பிக்கையில் தடவிக் கொடுக்கிறார். யானை தன்னுடைய உடலை மொழியாக மாற்றி கிருமாறனிடம் ஏதோ  சொன்னது போல இருந்தது. 

வசீம் யானையைப் போல கிருஷ்ணமூர்த்தி யானையும் முகாமிலிருந்து காணாமல் போயிருக்கிறது. 2011-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் ஒரு நாள் சங்கிலியால் கட்டப்படாமல்  இருந்த கிருஷ்ணமூர்த்தி யாருக்கும் தெரியாமல் காணாமல் போகிறது. அப்போது பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியைச் சார்ந்த ஒருவர் அதற்கு மாவூத்தாக இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு மதம் பிடிக்கிற காலம். அதற்கு முன்னதாக காணாமல் போனதால் ஒட்டுமொத்த வனத்துறை அதிகாரிகளும், மாவூத்துக்களும் யானையைத் தேடி முதுமலை காட்டுக்குள் செல்கிறார்கள். பொதுவாக முகாமிலிருக்கிற ஆண் யானைகள் காட்டுக்குள் சென்றால் இணை சேர்வதற்காக, பெண் யானைகள் கூட்டத்துக்குள் புகுந்து விடும். அப்படி பெண் யானைகளின் கூட்டத்துக்குள் சென்று விடுகிற முகாம் யானையைக் கண்டறிவது கடினமான காரியம். கிருஷ்ணமூர்த்தி யானைக்குத் தந்தம் இல்லை என்பதால் பெண் யானைகளின் கூட்டத்துக்குள் புகுந்திருக்கலாம் என்கிற ரீதியில் யானையைத் தேடுகிறார்கள். மிகப் பெரிய வனப்பகுதிக்குள் யானை எங்கே சென்றது எனத் தெரியாமல் தேட ஆரம்பிக்கிறார்கள்.  கிருஷ்ணமூர்த்தி காணாமல் போன முதல் நாள் எல்லோரும் காட்டுக்குள் சென்று தேடுகிறார்கள். ஆனால், கிருஷ்ணமூர்த்தி குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. யானையைத் தேடிப் போகிற வழியில் தென்படுகிற கிராம மக்களிடம் “யானை குறித்த தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும்” எனச் சொல்லி ஓர் அலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். இரண்டு குழுவாகப் பிரிந்து முதுமலை, சிங்காரா வனப்பகுதி எனச் சல்லடை போட்டுத் தேடுகிறார்கள்.

யானை காணாமல் போன நாளிலிருந்து நான்கு நாள்களாகத் தேடியும் யானையைக் கண்டறிய முடியவில்லை. யானை காணாமல் போன ஐந்தாவது நாள் மாலை 4:30 மணிக்கு சிங்காரா எஸ்டேட் பகுதியில் யானை இருப்பதாக அப்பகுதி கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுக்கிறார்கள். மாவூத்துகள், கால்நடை மருத்துவர், வனத்துறை ஊழியர்கள் என பத்து பேர் யானை இருக்கிற பகுதிக்குச் செல்கிறார்கள். யானையின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே, யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என்கிற முடிவுக்கு எல்லோரும் வருகிறார்கள். கிருஷ்ணமூர்த்தியின் மாவூத் அதன் அருகில் செல்லவே பயப்படுகிறார். யானை காணாமல் போனதில் எல்லோருமே பயத்தில் இருந்தனர். யானையை எப்படியாவது முகாமுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்திக்கு ஊசி செலுத்த முடிவெடுக்கிறார். அதன்படி அன்றைய மாலை 6:30 மணிக்கு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது. யானை பாதி மயக்கத்தில் இருக்கும்பொழுது நான்கு கால்களுக்கும் சங்கிலியை மாட்டுகிறார்கள். சிங்காரா எஸ்டேட் பகுதியில் இருந்து அன்றைய இரவு யானையை முகாமுக்குக் கொண்டு வருகிறார்கள். முதுமலை ஈட்டிமர முகாமில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கட்டி வைக்கப்படுகிறது. இப்படித்தான் கிருமாறன் கைகளில் கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்தது.

முகாமிலிருக்கிற யானைகள் தவிர்த்து முதுமலை வனப்பகுதியில் இருக்கிற விலங்குகள் வரை எல்லா விலங்குகளுக்கும் முதுமலை சரக கால்நடை மருத்துவர்தான் மருத்துவம் பார்த்தாக வேண்டும். முகாமிலிருக்கிற யானைகளைப் போல காட்டு யானைகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது. கால்நடை மருத்துவர்களுக்கு இருக்கிற முதல் சிக்கலே கூட்டமாக இருக்கிற யானைகளில் காயம்பட்டிருக்கிற யானையைக் கண்டறிவதுதான். கூட்டத்தில் இருக்கிற யானைக்கு சிகிச்சையளிக்க வேண்டுமானால் முதலில் காயம்பட்ட யானையைத் தனிமைப்படுத்த வேண்டும். அதற்குக் கூட்டத்தில் இருக்கிற மற்ற யானைகள் ஒத்துழைக்காது. காயம்பட்டிருக்கிற யானையைச் சுற்றி அரண் போல பாதுகாத்து மற்ற யானைகள் நிற்கும். கூட்டத்திலிருந்து தனிமைப்படுத்த சில நேரங்களில் கும்கி யானைகளைப் பயன்படுத்தும் நிகழ்வுகளும் நடக்கும். காயம்பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பார்கள். அதன்பிறகு காயத்துக்கு ஏற்றாற்போல சிகிச்சையளிப்பார்கள். காலில் காயம் இருந்தால் அதற்கு மருந்து வைத்துக் காட்டியதும் அதன் மேல் சகதியை பூசி விடுவார்கள். அதன் காலில் வெள்ளை வண்ணத்தில் பேண்டேஜ் இருந்தால் யானை அதை அப்புறப்படுத்திவிடும்  என்பதால் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். சிகிச்சை முடிந்ததும் யானையை அதன் போக்கில் விட்டு விடுகிறார்கள். அடுத்த நாள் அந்த யானையைக் கண்காணித்தாக வேண்டும். சிகிச்சை முடிந்த யானை அங்கிருந்து வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்திருந்தால் அப்படியே விட்டு விடுவார்கள். மாறாக அதே இடத்தில் வட்டமடித்தால் மீண்டும் சிகிச்சையளிப்பார்கள். தனக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்கிற யானை காயம்பட்ட காலை தரையில் அழுத்தமாக வைக்காமலே மெதுவாக நகரும். தாய் யானைக்கோ. குட்டி யானைக்கோ சிகிச்சை அளிப்பதில் வேறு விதமான சிக்கல்கள் இருக்கின்றன. இவை இரண்டில் யார் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது. கும்கி யானைகளைப் பயன்படுத்தித்தான் சிகிச்சையளிக்க வேண்டும்.

சிகிச்சை முடிந்ததும் யானைக்குக் கழுத்தில் அடையாளம் காண காலர் பட்டையை அதன் கழுத்தில் கட்டிவிடுவார்கள். பிறகு யானையை அதன் போக்கில் விட்டு விடுகிறார்கள். மோப்ப சக்தி அதிகம் கொண்ட, அவ்வளவு எளிதில் எதையும்  மறந்து போகாத  உயிரினம்  யானை. ஒரு முறை சிகிச்சை பெற்ற யானை,  தன்னைச் சுற்றி இருக்கும் மருந்து வாசனையை உள்வாங்கிக் கொள்ளும். அதன்பிறகு காட்டில் எதிர்பாராத விதமாகக் கால்நடை மருத்துவர்களை எங்கேனும் சந்திக்க நேர்ந்தால் விலகிப் போய்விடும். 

பல ஆண்டுகளாக யானைகள் குறித்த ஆராய்ச்சியில் இருப்பவர் முனைவர் ராமகிருஷ்ணன். இப்போது உதகை கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். 1999-ம் ஆண்டு யானைகள் குறித்த ஆராய்ச்சிக்காக சத்தியமங்கலம் வனப்பகுதியில் கரடி மாதன் என்கிற ட்ரக்கரோடு சென்றிருக்கிறார். ஒரு நாளைக்கு 20 கிலோ மீட்டர்கள் வரை யானையைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். அப்போது சத்தியமங்கலம் காட்டுப் பகுதி வீரப்பன் இருந்த இடம். அதிகாரிகள் போல பேன்ட், சட்டை போட்டுக்கொண்டு வனத்துக்குள் பயணித்தால் வீரப்பனால் ஏதேனும் சம்பவங்கள் நிகழும் என்பதால் லுங்கி அணிந்து கொண்டு சாதாரண மனிதர்களைப் போலவே பயணித்திருக்கிறார்கள். ஒரு நாள் எச்சரிக்கையாகப் பயணித்தும் திடீரென ஒரு யானையை எதிர் கொண்டிருக்கிறார்கள். தப்பிச் செல்ல முடியாத அளவுக்குச் சூழ்நிலை அமைந்திருக்கிறது. ராமகிருஷ்ணனுடன் பயணித்த மாதன் “சார் யானை திரும்பி ஒடுங்க" எனக் கத்தியிருக்கிறார். யானையைப் பார்த்து மாதன் கத்துகிறார். க்ளோஸ் என்கவுண்டர் என ராமகிருஷ்ணன் நினைத்திருக்கிறார். யானை அடித்துவிடும் என நினைத்து அப்படியே நின்றிருக்கிறார். மாதன் தொடர்ந்து யானையை நோக்கிக் கத்துகிறார். ஒரு சில நொடிகளில் யானை இருவரையும் தாக்காமல் விட்டு விட்டு விலகிச் சென்றிருக்கிறது. ராமகிருஷ்ணனால் நடந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை, தாக்கிவிடும் என நினைத்த யானை எப்படி விலகிச் சென்றது எனத் தெரியாமல் மாதனிடம் கேட்டிருக்கிறார். 

சில வருடங்களுக்கு முன்பு  அந்த யானை தந்த வேட்டையின்போது  துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பி வந்திருக்கிறது. உடலில் மூன்று குண்டுகள் வரை வாங்கியிருந்த அந்த  யானைக்கு சத்தியமங்கலம் வனப்பகுதியில் கால்நடை மருத்துவர் சிகிச்சையளித்திருக்கிறார். அப்போது மாதனும் உடனிருந்து யானைக்கு உதவியிருக்கிறார். அப்போது யானைக்கு ஹரிணி என பெயரிட்டிருக்கிறார்கள்.  மாதனுடைய வாசனை, அவருடைய குரல் போன்றவற்றை அடையாளம் கண்ட யானை அவர்களை எதுவும் செய்யாமல் திரும்பியிருக்கிறது. துப்பாக்கிக் குண்டுகள் பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட யானைகளுக்கு சிகிச்சை முடிந்ததும் அதன் கழுத்தில் காலர் என்கிற அடையாளம் காட்டும் பட்டை ஒன்றை அணிவிப்பார்கள். அதைக் கொண்டே ராமகிருஷ்ணனை தாக்காமல் சென்ற யானை ஹரிணி என மாதன் கூறியிருக்கிறார். 

கால்நடை மருத்துவர்களுக்கும், காட்டு யானைகளுக்கும் இருக்கிற மிகப் பெரிய அச்சுறுத்தல் பன்றிக்காய் எனப்படும் “அவுட்டுக்காய்”. காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைக்கப்படும் ஒரு வகை வெடி பொருளே பன்றிக்காய். வெடி மருந்துகள் நிரப்பப்பட்டு அழுத்தம் ஏற்பட்டால் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும். விலங்குகள் கடித்தால் உடனே வெடித்துவிடும். பன்றிகள் பன்றிக்காயை கடிக்கும்பொழுது அதன் தலை வெடித்து இறந்து விடும். யானைகள் கடித்தால்? 

பன்றிக்காயை கடித்த காட்டு யானை, கால்நடை மருத்துவர் இல்லாத முதுமலை... அடுத்த அத்தியாயத்தில்.

- தொடரும்....