Published:Updated:

கரடி, சிறுத்தை, யானைகள் வாழும் காட்டில் `தனி ஒருவர்' லட்சுமி பாட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கரடி, சிறுத்தை, யானைகள் வாழும் காட்டில் `தனி ஒருவர்' லட்சுமி பாட்டி!
கரடி, சிறுத்தை, யானைகள் வாழும் காட்டில் `தனி ஒருவர்' லட்சுமி பாட்டி!

தொடர்ந்து போவது யானைகள் நடமாடும் காட்டுப் பாதை என்பதால் மிகுந்த பயத்துடனே போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் யானையின் சாணம் கிடந்தது இன்னும் பயத்தை அதிகரித்தது.

னிதனுக்கும் யானைகளுக்குமான மோதல் சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம், யானை மிதித்து ஒருவர் மரணம் என்கிற செய்திகளை நிறையப் படிக்க முடிகிறது. ஆனால், காலம்காலமாக நீலகிரி காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எப்படி யானைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் யாரையும் யானைகள் தாக்குவதில்லையா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. அது குறித்த தெரிந்துகொள்ளதான் இந்தக் கரிக்கையூர் பயணம்...

நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது கரிக்கையூர். கோத்தகிரியிலிருந்து 30 கிலோ மீட்டர். கரிக்கையூரைச் சுற்றிய மலை முழுவதும் ஆதிவாசி இன மக்களே அதிகம் வசிக்கிறார்கள். கரிக்கையூருக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பேருந்து செல்கிறது. மற்ற நேரங்களில் ஜீப்தான். அதுவும் சில நேரங்களில் மட்டும்தான், மற்ற நேரத்தில் எந்த வாகனத்தையும் எதிர் பார்க்காமல் நடந்தே சென்று விடுகிறார்கள். யானை, கரடி, சிறுத்தை இருக்கிற காடுகளுக்குள் பயணிப்பது ஆபத்தான ஒன்று. ஆனால் மக்கள் அதற்கு பழகியிருக்கிறார்கள். 

ஒரு நல்ல குளிரான நாளில் காலை பத்து மணிக்கு காரில் கிளம்பினேன். சோலூர்மட்டம் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. அதைத் தாண்டிவிட்டால் தென்படுகிற எல்லோரும் சொல்கிற ஒரே வார்த்தை ``பார்த்து போங்க எந்த நேரமும் யானைவரலாம்” என்பதுதான். கரிக்கையூருக்குப் போவதற்கு 10கிலோ மீட்டருக்கு முன்பே ஓரிடத்தில் சாலையின் நடுவில் யானையின் சாணம் கிடந்தது. புதியதா பழையதா என்கிற கேள்வியில் சாணத்தைச் சோதித்துப் பார்த்ததில் சாணம் கொஞ்சம் சூடாக இருந்ததால் இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக யானை கடந்திருக்கலாம் என யூகித்துக் கொண்டேன். தொடர்ந்து போவது யானைகள் நடமாடும் காட்டுப் பாதை என்பதால் மிகுந்த பயத்துடனே போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் யானையின் சாணம் கிடந்தது இன்னும் பயத்தை அதிகரித்தது. யானை குறித்த பயத்தில் பயணித்ததால் மற்ற விலங்குகள் குறித்து யோசிக்காமல் இருந்துவிட்டேன். ஒரு வளைவில் கார் திரும்பியதும் கரடி ஒன்று திடீரென காருக்கு முன்னால் பாய்ந்துவிட்டது. ஒரு நொடி மொத்த உடலும் நடுங்கி அடங்கியது. 

இதற்கு முன்பும் பல இடங்களில் பல நூறு மீட்டர் தூரத்தில் கரடியைப் பார்த்திருக்கிறேன். கரடி குறித்த சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேள்வி பட்டிருக்கிறேன். கரடி கடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் எங்கள் ஊரிலேயே இறந்திருக்கிறார்கள். ஆனால், கரடி இப்போது பத்து அடி தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. எங்கே காரில் பாய்ந்து விடுமோ என்ற பயம் என்னை ஆக்கிரமித்திருந்தது. கரடியைப் பார்த்ததும் காரை நிறுத்திவிட்டேன். காரை நிறுத்தியதும் சில நொடிகள் காரை பார்த்துக் கொண்டே இருந்தது திடீரென எதிர் சாலையில் ஓட ஆரம்பித்தது. காட்டுக்குள் சென்ற பின்பும் ஒரு நிமிடம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

காலை 11:30 மணிக்குக் கரிக்கையூர் போய்ச் சேர்ந்தேன். நீலகிரி மாவட்டத்தில் இருந்தாலும் கரிக்கையூரின் முக்கியப் பயிராக காபி தோட்டங்களே நிறைந்திருக்கின்றன. பலா மரங்களுக்கு இடையே ஊடு பயிராக காபியைப் பயிரிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு காபித் தோட்டத்தின் எல்லையிலும் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பலாப்பழ சீசன் என்பதால் அந்தப் பகுதி முழுவதும் பலாப்பழ வாசனை காற்றில் கலந்திருந்தது. மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்கள் இரண்டாகப் பிளந்து சிதறிக்கிடந்தன. குரங்குகள் பலாப்பழங்களை தோண்டிக்கொண்டிருந்தன. வக்கனமரம் என்கிற பகுதி வரைதான் காரில் பயணிக்கமுடியும், அதற்கு மேல் காரில் பயணிக்க முடியாது, ஜீப்பில் மட்டுமே பயணிக்க முடியும். காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். சாலையில் கிடந்த யானைச் சாணங்களை பின் தொடர்ந்து சென்றேன். சில இடங்களில் பலாப்பழங்கள் சிதறிக் கிடந்தன. அங்கிருந்த காபித் தோட்டத்திலிருந்து வந்த ஒருவரிடம் விசாரித்ததில் யானைகள் இருக்கிற இடத்துக்கு இன்னும் கீழே போக வேண்டும், அங்கே சில வீடுகள் இருக்கின்றன என்றார். யானை குறித்து கேட்டதற்கு ``நான்கு மணிக்கு மேல் இங்க வரும்” என்றார். அவர் காட்டிய ஒத்தையடி பாதையில் பயணிப்பதற்கு உண்மையாகவே பயமாக இருந்தது. சுற்றிலும் ஆளே இல்லை. குருவிகளின் சத்தமும் பூச்சிகளின் சத்தமும் கேட்டுக் கொண்டேயிருந்தன. ஏற்கெனவே கரடியைப் பார்த்திருந்ததால் அதுவும் சேர்த்து என்னைப் பயமுறுத்தியது. ஒரு கிலோ மீட்டர் நடந்து போனதும் ஓரிடத்தில் புகை வருவது தெரிந்தது. மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்த பிறகே உள்ளே தைரியமாக நுழைந்தேன்.

இரண்டு வீடுகள் இருந்த இடத்தில் பாட்டி ஒருவர் வனத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். அந்த வீட்டின் திண்ணையில் வயதான ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்கள் இருக்கிற வீட்டுக்கு மின்சார வேலிகள் எதுவுமே இல்லை. காட்டின் மையப்பகுதியில் அவர்களின் வீடு அமைந்திருக்கிறது. எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் வசித்து வருகிறார்கள். ``எப்படி இங்கே வசிக்கிறீர்கள்” என்கிற கேள்வியைக் கேட்டு விடலாம் என்று தோன்றியது. ``யாருப்பா நீ? இங்க என்னா பண்ணுற?" என்று அவரே கேள்வியை ஆரம்பித்தார். ``சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன்” பாட்டி என்றேன். சற்றும் யோசிக்காமல் அடர்ந்த வனத்தைக் காட்டி ``கீழே போய் பாத்துட்டு போ சாமி, அங்கதான் யானை இருக்கு” என்றார். ``விளையாடாதிங்க பாட்டி இங்க யானை வருமா” என்றேன். ``இப்போ இந்த இடத்தைச் சுத்தி அஞ்சாறு யானை இருக்கு, எப்போ மேல வரும்னே தெரியாது என்றவர், இப்போதான் வழியில கிடந்த பலாப்பழங்களை சுத்தப்படுத்திக் கழுவிவிட்டு வந்து  குளித்தேன் என்றார். அந்தப் பாட்டியின் பெயர் லட்சுமி. வயது எப்படியும் 60 க்கும் மேலிருக்கும். வயது குறித்து கேட்டதற்குத் தெரியாது என்றே பதிலளித்தார். மூன்று பக்கம் காடுகளாலும், ஒரு பக்கம் பலா மரங்களாலும் சூழப்பட்டிருக்கிறது லட்சுமி பாட்டியின் வீடு. ``உங்களைப் பற்றி சொல்லுங்க பாட்டி" என்றேன். ``பரம்பரை பரம்பரையா இங்கதான் இருக்கோம், என்னோட பசங்க எல்லாம் நாட்டுக்கு (வெளியூர்) போய்ட்டாங்க, நானும் என்னோட வீட்டுக்காரரும்தான் இருக்கோம், மாசத்துக்கு ஒரு முறை பசங்க வந்து அரிசி வாங்கிக் குடுத்துட்டு போவாங்க, வேற எதுக்கும் இங்க வர மாட்டாங்க, நாங்களும் இத விட்டு எங்கயும் போனது கிடையாது. என்னால இந்தக் காட விட்டுட்டுப் போக முடியாது,செத்தாலும் இங்கதான் சாவேன்" என்றார் . 

``இங்க தினம் தினம் யானை வரும், எப்போ எங்க நிக்கும்னே தெரியாது, ரெண்டு மூணு தடவ நேருக்கு நேர் பார்த்திருக்கேன், இதுவரை எங்களை எந்த யானையும் தொந்தரவு பண்ணுனது இல்ல, நைட் தூங்கும் போது வீட்டு மேல கரடியோ சிறுத்தையோ ஏறிடும், அதோட கால் அசைவுகளை என்னால உணர முடியும், நெறைய தடவ ஓட்டப் பிரிச்சிருமோனு பயமா இருக்கும். அப்படி எதுவும் நடக்கல. கரடி, சிறுத்தை, யானைன்னு எவ்வளவோ பார்த்துட்டோம். ஆனா இது வரை அதுங்கனால எந்தப் பாதிப்புமில்ல. 15 வருசத்துக்கு முன்னாடி வரை இவ்வளவு யானைகளெல்லாம் இல்லை, இப்போதான் இவ்வளவு யானைகளை பாக்க முடியுது, யானைகளை அது போக்குக்கு விட்டுடணும், கண்டதைத் தின்னுட்டு அது வழியில போய்டும். இப்போ வரைக்கும் யானையை விரட்டுனது இல்ல. இந்தக் காட்டுக்கு அதுங்கதான் எசமான். அதுங்கள தொந்தரவு பண்ணாம இருந்தாலே போதும்” என்றார்.

``மொபைல் நெட்வொர்க் எதுவுமே இல்லாத இடத்தில் ஏதாவது ஆபத்து என்றால் எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?”என்று கேட்டேன். ``இந்த மண்ணில் இருக்க ஒவ்வொருவருக்கும் ஆபத்து நேரத்துல எப்படித் தப்பிக்கிறதுனு நல்லாவே தெரியும், பொழுது சாய்றதுக்குள்ள நீ  ரோட்டுக்குப் போய்டுப்பா. ஏதாவது வந்துருச்சுனா அப்பறம் எங்க ஓடுறதுனு கூட உனக்குத் தெரியாது, ஆபத்தாயிடும் மொதல்ல கிளம்பு” என்றார். 

பலாப்பழ வாசனைக்கு யானைகள் எதுவும் வீட்டுக்கு வந்து விடக் கூடாது என்பதால் தினமும் இதே வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். சொந்தங்கள், பிள்ளைகள் என யாரும் இல்லாத வாழ்க்கையைப் பற்றி லட்சுமி பாட்டியும் அவரது கணவரும்  கவலைப்பட்டதே இல்லை. இனி கவலைப்பட போவதுமில்லை.... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு