Published:Updated:

`` `கோட்டிக்கார' சுரேஷ்தான் அந்தக் கருப்பி!" - `பரியேறும் பெருமாள்' மாரி செல்வராஜ்

அவரது மனைவி கற்பமாய் இருப்பது தெரிய வந்தது. தன் பிளாக்கிதான் பிள்ளையாகப் பிறக்க இருப்பதாகச் சொல்லி அவ்வளவு அழுவார். அழுகையும் சிரிப்பும் கலந்த அடுத்த தலைமுறைக்கான அழுகை அது. உண்மையில் சிலருக்கு நாய்களைப் போல மாமருந்தெல்லாம் உலகில் இல்லவே  இல்லை.

`` `கோட்டிக்கார' சுரேஷ்தான் அந்தக் கருப்பி!" - `பரியேறும் பெருமாள்' மாரி செல்வராஜ்
`` `கோட்டிக்கார' சுரேஷ்தான் அந்தக் கருப்பி!" - `பரியேறும் பெருமாள்' மாரி செல்வராஜ்

#Pariyerumperumalpetchallenge என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களின் செல்லப் பிராணியான நாயோடு இருக்கும் புகைப்படங்களை அதன் கதைகளோடு பதிவேற்றி வருகிறார்கள். கருப்பி, குட்டி, மணி, ஸ்வீட்டி, ஜிம்மி, பிளாக்கி எனப் பார்த்துப் பார்த்துப் பெயர் வைத்திருக்கிறார்கள். பதிவேற்றப்பட்ட எல்லாக் கதைகளிலும் ``நான் இல்லாமல் அவனுமில்லை, அவனில்லாமல் நானுமில்லை" என்பது போலவே  இருக்கிறது. 

எனக்குத் தெரிந்த ஒருவர் அவரது நாயை, நாய் என்று சொன்னாலே அவ்வளவு கோபப்படுவார். ஜிம்மினு கூப்ட சொல்லி எத்தன தடவ சொல்லிருக்கிறேன் என அதட்டுவார். கோயம்புத்தூரில் இருக்கும் இன்னொரு நண்பன் தன்னுடைய திருமணப் பத்திரிகையில் வீட்டில் இருக்கிற நாயின் பெயரையும் சேர்த்திருந்தார். என்னடா நாய் பேர பத்திரிகையில் போட்டு இருக்க என்றதும், ``ஃபேமிலி மெம்பர் நண்பா" என்றான். சென்னையில் இருக்கிற அண்ணன் அவர்; சினிமா குறித்த ஒரு உரையாடல் நிகழ்ச்சிக்குப் போன இடத்தில் கருப்பாய் இருந்த நாய் ஒன்று பிடித்துப் போக, பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கி வந்தார். பிளாக்கி எனப் பெயரிட்டு அதற்கு வாழ்க்கை கொடுத்திருந்தார். பிறகு பிளாக்கியே அவருக்கு வாழ்க்கையாகிப் போனது. பிளாக்கியை விட்டுக் கொடுத்து இப்போது வரை அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. பார்த்துப் பல வருடங்கள் ஆகியிருந்த அவரது குடும்பப் புகைப்படத்தை இணையத்தில் பார்க்க நேர்ந்தது. படத்தின் ஓரத்தில் அவ்வளவு பெருமையாக பிளாக்கி நின்று கொண்டிருந்தது. நாய்தானே என வெறுமனே கடந்துபோக முடியாத பல நாய்களை அந்த ஒரு புகைப்படம் போகிற போக்கில் எனக்கு நினைவுபடுத்திவிட்டுப் போனது. 

திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தையே இல்லாமல் இருந்த தம்பதி. அவர்களுக்கு எல்லாமே அவர்களது வீட்டில் இருந்த கருப்பிதான். கணவர் வேலைக்குச் சென்றுவிட்டால், மனைவிக்குத் துணை பிளாக்கிதான். அதோடு பேசுவது, அழுவது, சிரிப்பது என எல்லாமுமாக இருந்தது பிளாக்கி. திடீரென ஒரு நாள் பிளாக்கி இறந்துவிட இரண்டு பேரும் சித்த பிரம்மை பிடித்தவர் போல இருந்தார்கள். எப்படி மீண்டு வருவார்களோ என நினைத்த அடுத்த வாரத்தில், காலம் அவர்களை வேறு ஒரு வழியில் மீட்டெடுத்தது. அவரது மனைவி கர்ப்பமாய் இருப்பது தெரிய வந்தது. தன் பிளாக்கிதான் பிள்ளையாக பிறக்க இருப்பதாகச் சொல்லி அவ்வளவு அழுவார். அழுகையும் சிரிப்பும் கலந்த அடுத்த தலைமுறைக்கான அழுகை அது. உண்மையில் சிலருக்கு நாய்களைப் போல மாமருந்தெல்லாம் உலகில் இல்லவே  இல்லை.

பரியேரும் பெருமாள் பட பாடலில் வரும் கருப்பி பாடல் வெளியான சமயம் திருச்சியிலிருக்கிற எனக்குத் தெரிந்த அக்கா ஒருவர் எப்போதும் ஒரு நாய் சூழவே இருப்பார். கருப்பி பாடல் வெளியான நாள் கருப்பி பாடலைப் பதிவேற்றி தன் நாயினுடைய பாசம் குறித்து உணர்வுபூர்வமாக எழுதியிருந்தார். காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்ததேயில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் அவரது நாய் திடீரென இறந்து போனது. இறப்பு இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப் போயிருக்கலாம் என எண்ண வைத்த இறப்பு அது. அதன் பிறகு இப்போது வரை அது குறித்தே பேசுவார். எப்போதும் இழப்பு குறித்தே பேசுகிறார் என நினைக்கத் தோன்றும், உண்மையில் இறப்பின் வலி இழந்தவர்களுக்குத்தானே தெரியும். கருப்பி பாடலுக்கு முன் நாய்களை மையப்படுத்தி தமிழில் படங்கள் வந்திருக்கிறது. பாடல்களும் வந்திருக்கின்றன. ஆனால், சமீபத்தில் இப்படி ஒரு தாக்கத்தை கருப்பி பாடல்  மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது என நினைக்கிறேன். இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜும் இருவருமே எழுதியிருக்கிறார்கள். ஊரே அவரவரின் கருப்பி கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், உண்மையான கருப்பி யார் எனக் கேட்டேன். 

``எனக்கும் நாய்க்குமான ஒரு உறவு இருந்தது. வீட்டில் அதற்கு சுரேஷ் எனப் பெயர் வைத்திருந்தோம். நல்ல பாசமாக வளர்ந்த நாய். ஒருநாள் வீட்டில் இருந்த பாட்டியை நாய் கடித்துவிட்டது, அதற்கு பிறகும் சில சம்பவங்கள் நடந்தன. ஊரில் இருக்கிற எல்லோரையும் நாய் கடிக்கப் பாய்கிறது என ஊரில் இருந்த எல்லோருமே நாயை `கோட்டிக்கார’ நாய் என அழைத்தார்கள். எல்லோரையும் கடிக்க முயற்சி செய்கிறது எனத் தவறாக நினைத்து அந்த நாயை எல்லோரும் சேர்ந்து கொன்றுவிட்டோம். நாயின் காலை பாட்டி மிதித்ததால்தான் தற்காப்புக்காக நாய் கடித்தது என்பதை யாரும் ஏற்கத் தயாராக இல்லை. நாயினுடைய பக்கம் இருக்கிற நியாயத்தை நாங்கள் யோசிக்கத் தயாராக இல்லை. அதனால்தான் சுரேஷை இழந்தோம். சுரேஷ் மட்டுமல்ல இங்கே ஒவ்வொரு நாயும் ஏன் பிறக்கிறோம், எதற்கு ஒருவனின் கட்டளைக்கு அடிபணிகிறோம், எதற்கு சாகிறோம் என்கிற எந்த அடிப்படை காரணமும் தெரியாமலே இறந்து போய்விடுகின்றன. நாயை எப்போதும் மனிதன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகிறான். தனக்குத் தேவையான போது அதைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சுகிறான், அன்பு செலுத்துகிறான், பிடிக்காத நேரங்களில் சங்கிலியால் கட்டிவைக்கிறான். எப்போதும் மனிதன், தன்னுடைய கட்டளைகளுக்கு நாய் செவி சாய்க்க வேண்டுமென்று விரும்புகிறான், அதை நாய் மீறும்போது அதை அடிக்கிறான், வீட்டை விட்டுத் துரத்திவிடுகிறான், கொன்றுவிடுகிறான். இது நாய்களுக்கு மட்டும் பொருந்திப் போவதில்லை, இது அப்படியே  மனித சமூகத்துக்கும் பொருந்திவிடுகிறது. நம்முடைய ஆதிக்கத்துக்கும் அன்பிற்கும் இடையே பெரிய வேறுபாடில்லை. பரியேறும் பெருமாள் கருப்பிகளுக்கான படமாக மட்டுமல்ல; சமூகத்துக்கான படமாக இருக்குமென நம்புகிறேன்" என்றார். 

``கருப்பி'என் கருப்பி
நகத்தடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படித்தான் திரிவேனோ....!