Published:Updated:

நீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள் எங்கு கிடைக்கும்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள்  எங்கு கிடைக்கும்?’’
நீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள் எங்கு கிடைக்கும்?’’

புறாபாண்டி

பிரீமியம் ஸ்டோரி

‘‘எங்கள் வயலில் உள்ள நெற்பயிர் நூற்புழுத் தாக்குதலால் வெளிர் நிறத்துடன், வளர்ச்சிக் குன்றி உள்ளது. இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?’’

கே.நாகபூஷணம், திருவள்ளூர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நூற்புழுவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ச.சுப்ரமணியன் பதில் சொல்கிறார்.

‘‘நெல் வேர் நூற்புழு, நெல் வெண்நுனி இலை நூற்புழு, நெல் வேர் முடிச்சு நூற்புழு என மூன்று வகையான நூற்புழுக்கள் நெற்பயிர்களைத் தாக்குகின்றன. நெல் வேர் நூற்புழு தாக்குதல், ஏறத்தாழத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இந்நூற்புழுக்களின் பாதிப்பினால் சுமார் 10-12 சதவிகிதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக மண்ணில் காணப்படும் இந்நூற்புழுக்கள் ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு நாற்றுகளின் வேர், பாசனத்தின்போது பாய்ச்சப்படும் நீர், வயல் வேலைகளின்போது பயன்படுத்தப்படும் ஏர், டிராக்டர் மற்றும் வயலில் வேலை செய்யும் வேலையாள்கள் மூலம் பரவுகிறது.

நீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள்  எங்கு கிடைக்கும்?’’

நாற்றங்காலில் இந்நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட பயிர்கள் செழிப்புற்று, வெளிர் நிறத்துடன் வளர்ச்சிக் குன்றி இருக்கும். மேலும், பாதிக்கப்பட்ட பயிர்களின் வேர்கள் கறுமை கலந்த செந்நிறத்துடன் இருக்கும். நடவு வயலில் பாதிக்கப்பட்ட பயிர்களில், தூர்களின் எண்ணிக்கை குறைவாகவும், வெளி இலைகள் மஞ்சள் நிறத்துடனும், சராசரி வளர்ச்சி இல்லாமல் குட்டையாகவும் இருக்கும். பாதிக்கப்பட்ட பயிர்கள் அறுவடைக்கு வருவதற்குச் சுமார் இரண்டு வாரக் காலம் தாமதமாகும்.நூற்புழுக்கள் தாக்காத பயிர்களான காய்கறிகள், நிலக்கடலை, பருத்தி, உளுந்து மற்றும் சிறுதானியப் பயிர்களைப் பயிர்ச் சுழற்சியில் பயிரிடுவதன் மூலம், இந்நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

நெல் வெண்நுனி இலை நூற்புழு என்பது விதை மூலம் பரவக்கூடியது. இந்நூற்புழுக்களின் சேதாரம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நூற்புழுக்களின் தாக்குதலால் பயிரின் விளைச்சல் சுமார் 15-20 சதவிகிதம் வரை குறைகிறது. நெல் விதைகளில் உறக்க நிலையில் இருக்கும் இந்நூற்புழுக்கள், விதைத்த பின்பு முளைவிட்டு வளரும் பயிருடன் சேர்ந்து நகர்ந்துகொண்டே இலை நுனியினை அடைகிறது.

நீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள்  எங்கு கிடைக்கும்?’’


பாதிக்கப்பட்ட பயிர்களின் இலை நுனிகள் மஞ்சள் நிறமடைந்து, பின்பு காய்ந்து சாட்டை போன்று சுருண்டு காணப்படும். வளர்ந்த பயிர்களில் நூற்புழு பாதிப்பினால் கண்ணாடி இலை (அ) பூட்டை இலை என்று சொல்லக்கூடிய இலை சுருண்டு விடுவதால், அதிலிருந்து வெளிப்பட வேண்டிய கதிர்கள் சரிவர விடுபடாமல் இருக்கும். நெற்பயிரின் பூக்கும் பருவத்தில், இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிப்பதால் நெல் மணிகள் சரியாக உருவாகாது. ஆகையால், நெற்கதிரில் பதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பொதுவாகப் பாதிக்கப்பட்ட பயிரின் வீரியமும், வளர்ச்சியும், விளைச்சலும் குறைவாக இருக்கும்.

நூற்புழுக்கள் பெரும்பான்மையாக விதை மூலம் பரவுவதால், விதைகளை ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வீதம் 12 மணி நேரம் நல்ல சூரிய வெயிலில் உலர்த்தி விதைகளில் உள்ள நூற்புழுக்களை அழிப்பது நல்ல பலனைத் தரும். நெல் அறுவடைக்குப் பின்னர் வயலில் உள்ள தாள்களை அகற்றி எரிப்பதன் மூலமும் இந்நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

அண்மைக்கால ஆராய்ச்சியின்படி நெல் வேர் நூற்புழு மற்றும் நெல் வெண் நுனி இலை நூற்புழு இரண்டையும் குறைந்த செலவில் பயிர் வளர்ச்சியூக்கி பாக்டீரியாவான சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸை உபயோகித்து உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி நெல் விதைகளை கிலோ ஒன்றுக்கு 10 கிராம் பாக்டீரியத்துடன் விதைநேர்த்தி செய்து நாற்றங்காலில் விதைத்த பின்பு, அதே பாக்டீரியத்தை நடவு வயலில் ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு கிலோ என்ற அளவில் தேவையான நீருடன் கலந்து நாற்றுநட்ட 45, 55 மற்றும் 65-ம் நாள்களில் தெளிப்பதன் மூலம் இந்நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

சமீபகாலமாக நெல் வேர்முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் மிக அதிகமாகத் தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் காணப்படுகிறது. இந்நூற்புழுக்கள் தாக்குதலால் விளைச்சல் சுமார் 50 சதவிகிதம் வரை குறைகிறது. இந்நூற்புழுக்களின் தாக்குதலினால் நாற்றுகள் அதிகளவில் மடிந்து நாற்றங்கால் எரியூட்டப்பட்ட தோற்றத்துடன் காணப்படும். மேலும், நாற்றுகளின் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறத்துடன் கூடிய இலையுடன் காணப்படும். நடவு வயலிலும் பயிர் வளர்ச்சி குன்றிக் குறைவான தூர் எண்ணிக்கையுடன் காணப்படும். மேலும், வேர்களில் முடிச்சுகள் காணப்படும். வேர் நுனியில் கொக்கு போன்ற முடிச்சு இந்நூற்புழு தாக்குதலின் மிக முக்கிய அறிகுறியாகும். விளைச்சல் அளவு 50 சதவிகிதம் வரை குறையும்.

இந்நூற்புழுக்களை உயிரியல் முறையில் சூடோமோனஸ் ஃபுளூரசன்ஸ் மூலம் விதைநேர்த்தி (10கி / கி.கி. விதை), நாற்றுகளை நனைத்தல் (1.5 கி.கி. /ஹெக்டேர்), நடவு வயலில் இடுதல் (2.5 கி.கி /ஹெக்டேர்) மற்றும் தொண்டைக்கதிர் பருவத்திற்குப் பிறகு 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தும் (1கி.கி/ஹெக்டேர்) இந்நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். நெற்பயிருடன் இதரப் பயிர்களான காய்கறி, பயறு, உளுந்தினைப் பயிர்ச் சுழற்சி செய்வதன் மூலமும் இந்நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். நூற்புழுக்கள் தாக்குதல் குறித்து, மேலும் தகவல் தேவைப்பட்டால், எங்கள் துறையைத் தொடர்பு கொள்ளலாம். அருகில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களிலும் (கேவிகே)ஆலோசனை பெறலாம்.’’

தொடர்புக்கு: பயிர் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422 6611264.

‘‘எங்கள் மாட்டுப் பண்ணைக்கு இளம் பசுங்கன்றுகள் வாங்க விரும்புகிறோம். எங்கு தரமான கன்றுகள் கிடைக்கும்?’’

எம்.சிவப்பிரியா, மாமல்லபுரம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாட்டில் கால்நடைப்பல்கலைக்கழம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையின் கால்நடைப் பண்ணைகள் பரவலாக உள்ளன. இந்தப் பண்ணைகளில் அவ்வப்போது, இளம் கிடேரிக் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சில சமயம், கறவை மாடுகளும்கூட விற்பனைக்குக் கிடைக்கும். இந்த இரண்டு பண்ணைகளிலும் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக இந்தப் பண்ணைகளில் ஜெர்சி, சிந்தி, கலப்பினங்கள் விற்பனை செய்யப்படும். குறிப்பாகச் செட்டிநாடு பண்ணையில் பாரம்பர்ய இனமான தார்பார்க்கர் இனமும், மாதவரம் பண்ணையில் சிந்தி இனமும் வளர்க்கப்படுவதோடு விற்பனையும் செய்யப்படுகின்றன.

நீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள்  எங்கு கிடைக்கும்?’’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளவர்கள், காட்டுப்பாக்கம் முதுநிலை கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் முன்பதிவு செய்து மாடுகளை வாங்கிக் கொள்ளலாம். இதுதவிர வேளாண் அறிவியல் மையங்களில் தனியார் பண்ணைகள் குறித்த விவரங்கள் பெற்றும் மாடுகளை வாங்கலாம். மேலும், காட்டுப்பாக்கம் முதுகலை அறிவியல் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் ஆண்டு முழுவதும் மாடு வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி நடத்தப்படுகிறது.

நீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள்  எங்கு கிடைக்கும்?’’



21 நாள்கள் வழங்கப்படும் இப்பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் கிடைக்கும். இச்சான்றிதழ் மூலம், வங்கிக்கடன் பெறுவதில் முன்னுரிமை கிடைக்கும். இப்பயிற்சிக்குத் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். மாட்டுப்பண்ணை நடத்துபவர்கள், இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொள்ளும்போது, மாடுகள், கன்றுகள் கிடைக்கும் விவரங்கள், பண்ணை நிர்வாகம், நோய், தீவன மேலாண்மை... போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம் பண்ணையை லாபத்துடன் நடத்தலாம்.’’

தொடர்புக்கு,
தொலைபேசி: 044 27452224

நீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள்  எங்கு கிடைக்கும்?’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,  பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்,

99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு