Published:Updated:

`அவ்னி' புலியை வேட்டையாட வந்திருக்கும் ஷாஃபத் அலி கான்... யார் இவர்?

தன்மீது தொடரப்பட்ட வழக்குகள் பற்றி ஒருமுறை கான் பேசினார், ``என்மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் நான் எப்போதுமே விடுதலையாகி விடுவேன். தமிழக முதலமைச்சர் மீது சுமத்தப்பட்ட வழக்கே நிலுவையிலிருக்கிறது. அவரைவிட நான் மிகச் சிறியவன்தான். இருந்தாலும் என் வழக்குகள் அப்படி நிலுவையில் நிற்காது விரைவிலேயே முடிந்துவிடும்."

`அவ்னி' புலியை வேட்டையாட வந்திருக்கும் ஷாஃபத் அலி கான்... யார் இவர்?
`அவ்னி' புலியை வேட்டையாட வந்திருக்கும் ஷாஃபத் அலி கான்... யார் இவர்?

``அனைத்து விலங்குகளும் மனிதன்மீது ஒருவித பயத்தோடுதான் பிறக்கின்றன. நாம் அவற்றுக்கு அந்த பயத்தை அவ்வப்போது ஞாபகப் படுத்தவேண்டும்."

டிக்கும்போதே ஓர் இனம்புரியாத கோபம் கொப்பளிக்கிறதா? இதைச் சொன்னவர் யார் என்பதைச் சொல்லும்முன் அவர் சொன்ன இன்னொன்றையும் சொல்கிறேன்,

``விலங்குகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகின்றது. நம் காடுகளால் அந்த எண்ணிக்கையைக் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் மனித-விலங்கு எதிர்நோக்குதல் ஏற்பட்டுச் சேதங்கள் விளைகின்றன. அதைத் தடுக்க வேட்டைதான் சிறந்த வழி. இதுவும் ஒருவகையில் பாதுகாப்பு நடவடிக்கைதான்."

இதையெல்லாம் சொன்னவர் வேறு யாருமில்லை. இன்று 170 சதுர கி.மீ பரப்பளவுள்ள பந்தர்கவாடா காட்டுக்குள் 13 பேரின் மரணத்துக்குக் காரணமான பெண் புலியைச் சுட்டுப்பிடிக்கக் காத்திருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த நவாப் ஷாஃபத் அலி கான். மேன் ஈட்டர் (Man eater) என்று உச்சநீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு 200 பேர் கொண்ட தனிப்படை தேடிக்கொண்டிருக்கும் அவ்னி என்ற பெண் புலிதான் அவரது இலக்கு. அதை வேட்டையாடுவதற்காக மகாராஷ்டிர வனத்துறையால் வரவழைக்கப்பட்ட வேட்டைக்காரர். அவர் சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்ட இரண்டு விஷயங்களில் அடிப்படையாகப் பலருக்குக் கேள்விகள் தோன்றலாம். அந்தக் கேள்விகள்,

விலங்குகளிடம் ஏன் பயத்தை விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவற்றுக்குச் சுதந்திரமாக நிம்மதியாக வாழ உரிமையில்லையா. விலங்குகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. அதைக் கிரகித்துக்கொள்ளக் காடுகள் இல்லையென்பது யார் தவறு. நாம் காடுகளை அழித்து ரிசார்ட்களும், தொழிற்சாலைகளும் கட்டியதற்குத் தண்டனையை அவை அனுபவிக்க வேண்டுமா.

அவ்னியைச் சுட்டுக்கொல்ல ஷாஃபத் அலி கானை அனுமதிக் கூடாதென்று விலங்குநல ஆர்வலர்களும் சூழலியலாளர்களும் குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தும் பந்தர்கவாடாவைச் சுற்றியிருக்கும் 18 கிராமங்களின் மக்களுடைய பாதுகாப்பு கருதி வனத்துறை அவரை வரவழைத்துள்ளது. யார் இந்த ஷாஃபத் அலி கான்?

அவருடைய தாத்தா ஆங்கிலேய ஆட்சியில் யானை வேட்டைக்காரராக இருந்தவர். ஹைதராபாத்தைச் சேர்ந்த உயர்குடிக் குடும்பத்தில் பிறந்த அவர், நீலகிரி மலைப்பகுதியில் வளர்ந்தார். தற்போது 60 வயதான அவர், 5 வயதில் துப்பாக்கி ஏந்தி வேட்டையாடுவதையே பொழுதுபோக்காகக் கொண்டு வளந்தவர். பொழுதுபோக்குக்காக வேட்டையாடுவது 1972-ம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. இன்றும் காட்டுக்குள் விலங்குகளை வேட்டையாடுவதில் அவருடைய உதவியை வனத்துறையை நாடுமளவுக்கு அவரது அனுபவங்கள் இருக்கின்றன.

கடந்த வருடம் ஜூலை மாதம் டடோபா தேசியப் பூங்காவிலிருந்து 2 பேரைக் கொன்ற ஒரு பெண் புலியை இடம் மாற்ற அவரது உதவியை நாடினார்கள். ஆகஸ்ட் மாதம் பீகாரில் 15 பேரைக் கொன்ற வெறிபிடித்த யானையைச் சுட்டுக்கொன்றார். அதேபோல் மகாராஷ்டிராவில் 7 பேரைக் கொன்ற சிறுத்தையைச் சுட்டுக்கொன்றார். இப்படியாகப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வனவிலங்குகளைக் கொல்ல பல உதவிகளைப் பல மாநில வனத்துறைகளுக்குச் செய்துள்ளார். அதேசமயம் அவர்மீது சில குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டு பீகாருக்குச் சென்றவர் திரும்பிவரும் வழியில் நீலான் என்ற ஒருவகை மறிமான் இனத்தைச் சேர்ந்த 250 மான்களைப் பொழுதுபோக்காகச் சுட்டுக்கொன்றார். அதற்கு அவரளித்த விளக்கம், ``நான் சுடவில்லையென்றால் வேறு யாராவது சுடப்போகிறார்கள். இதிலென்ன இருக்கிறது" என்பதுதான்.

1991-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் ஆயுத வியாபாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர். 2005-ம் ஆண்டு கர்நாடக சி.ஐ.டி சட்டவிரோதமாக வேட்டையாடியதற்காகக் கைதுசெய்தது. 1972-ம் ஆண்டு காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டத்தின்படி வழக்கு செய்தார்கள். அவர் பொழுதுபோக்கு வேட்டைகளில் ஈடுபடுவதற்காக பொக்கபுரம் காட்டுப்பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி தலம் அமைத்திருப்பதாகக் கர்நாடக வனத்துறை ஐ.ஜி-க்குத் தகவல் வந்தது. அப்போது, ``ஷாஃபத் அலி கானின் முந்தைய குற்றங்கள் பற்றி நான் அறிவேன். வனப்பகுதிக்குள் அடிக்கடி அவர் காணப்படுகிறார். அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் ஆந்திர எல்லைக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமாகச் சுற்றும் ஆபத்தானவர். அதனால் அனைத்துக் காவலர்களையும் எச்சரித்துள்ளேன். சந்தேகத்துக்குரிய நபர் என்பதால் அவர்மீது ஒரு கண் வைத்துள்ளோம்" என்று அவர் 2005-ம் ஆண்டு கூறியுள்ளார்.

கான் அவர்மீது பதியப்பட்ட வழக்குகளிலிருந்து எளிதாகத் தப்பித்துவிடுகிறார். அதற்குக் காரணம் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் அவருக்குள்ள அரசியல் தொடர்புகளும், வனத்துறை உடனான நெருக்கமும்தான். பணக்காரர்களுக்காகச் சட்டவிரோதமாக அவர் பொழுதுபோக்கு வேட்டையை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள் எதுவும் அவரை நிறுத்தி வைக்கவில்லை. 2014-ம் ஆண்டு இமாசலப் பிரதேசத்தில் இரண்டு சிறுத்தைகளைக் கொன்றபோதுதான் சூழலியல் ஆர்வலர்கள், விலங்குநல ஆர்வலர்கள் அவரைப் பற்றிப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். ஏனென்றால் அம்மாநில அரசாங்கத்தால் அவர் அழைக்கப்பட்டது மனித வேட்டையாடும் ஒரு புலியைக் கொல்வதற்காக. அதுவே காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டப்படி தவறுதான். மாநில வனத்துறையில் பணிபுரியும் ஒருவர் மட்டுமே மக்களுக்குப் பேரபாயமாக விளங்கும் விலங்கைச் சுட்டுக்கொல்ல அதிகாரம் உண்டு. அந்தச் சட்டத்துக்கு விரோதமாகத்தான் அவர் அழைக்கப்பட்டார். வந்தவர் சொன்ன வேலையோடு சொந்த வேலையாக இரண்டு சிறுத்தைகளையும் வேட்டையாடிவிட்டுச் சென்றார்.

தன்மீது தொடரப்பட்ட வழக்குகள் பற்றி ஒருமுறை கான் பேசினார், ``என்மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் நான் எப்போதுமே விடுதலையாகி விடுவேன். தமிழக முதலமைச்சர் மீது சுமத்தப்பட்ட வழக்கே நிலுவையிலிருக்கிறது. அவரைவிட நான் மிகச் சிறியவன்தான். இருந்தாலும் என் வழக்குகள் அப்படி நிலுவையில் நிற்காது விரைவிலேயே முடிந்துவிடும். வேட்டையாடுவதற்கு அரசாங்கத்திடம் லைசன்ஸ் வாங்கிய இவர்தான் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்திரபூர் காட்டில் 53 காட்டுப்பன்றிகளைச் சுட்டுக் கொன்றார். அடுத்த மாதமே மீண்டும் வந்து மேலும் 50 காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதாக அறிவித்தவர். இந்த வேட்டையை நிகழ்த்தும்முன் அவர் மாநில வனத்துறையிடம் எந்த அனுமதியும் வாங்கவில்லை.

அந்தப் பகுதியில் 120 புலிகள் வாழ்கின்றன. அவற்றின் உணவுக்குக் காட்டுப் பன்றிகளும் மான்களுமே இங்கு அதிகம் கிடைக்கின்றன. அப்பகுதியின் வனத்துறை அதிகாரிகளின் கவலை இவர் உருவாக்கிய இந்தப் பேரிழப்புக்குப் பிறகு அதிகமானது. அதற்குக் காரணம் இவர் செய்த பன்றி வேட்டையால் புலிகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளைத் தூக்கிச்செல்வது, மனிதர்களை வேட்டையாடுவது போன்ற அபாயங்கள் அப்பகுதியில் அதிகமாகின. கடந்த ஆண்டு சந்திரபூரிலிருந்த ஒரு பெண் புலி மனிதர்களை வேட்டையாடியதால் அது `போர்' விலங்குகள் சரணாலயத்துக்கு இடம்மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரணங்களால் அவ்னியை வேட்டையாட வந்துள்ள ஷாஃபத் அலி கானுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

``அடிப்படையில் மனிதர்கள் வாழுமிடம் புலிகளுக்கானதில்லை. அடுத்த 3 வருடங்களில் மனித-விலங்கு எதிர்நோக்குதல் இன்னும் அதிகமாகும். அப்பொழுது பாதிக்குப் பாதி புலிகளை நாம் கொல்லவேண்டி வரலாம். ஏனென்றால் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகின்றது. ஆனால், காடு குறைந்துகொண்டே இருக்கிறது." எனக் கூறும் திரு. ஷாஃபத் அலி கான் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்,

இந்த நிலம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல; நம்மைவிட விலங்குகளுக்குத்தான் அதில் அதிகப் பங்குண்டு.