Published:Updated:

வரலாற்றில் முதல் `சம்பவம்' செய்த பெண் சிங்கம்!

வயதான சிங்கம் உடல் பலமின்மையால் எளிய விலங்குகளை மட்டுமே அடித்துக் கொன்று உயிர் வாழும். என்னதான் சிங்கமாக வாழ்ந்திருந்தாலும் வயதான சிங்கத்தின் கடைசிக் காலம் பரிதாபத்துக்குரியது. ஒரு கட்டத்தில் மொத்த பலத்தையும் இழக்கிற சிங்கம் அதன் வாழ்நாள் எதிரியான கழுதைப்புலிகளுக்கு இரையாகிவிடும். இதுதான் சிங்கங்களின் தொன்றுதொட்ட வரலாறு. 

வரலாற்றில் முதல் `சம்பவம்' செய்த பெண் சிங்கம்!
வரலாற்றில் முதல் `சம்பவம்' செய்த பெண் சிங்கம்!

ன்றாகவே சேர்ந்து, வாழ்ந்துவிட்டு எதிர்பாராத ஒரு நாளில் ஏதோ ஒரு விஷயத்துக்காக 2 பேருக்கு மத்தியில் ஏதேதோ நிகழ்ந்து விடுகிறது. துரோகம், வஞ்சகம், சூழ்ச்சி என என்னவென்று சொன்னாலும் அது சம்பந்தப்பட்டவர்கள் பார்வையில் ஒரு மாற்றம் அவ்வளவுதான். மனிதன் விலங்கு என்ற பாகுபாடெல்லாம் மாற்றத்துக்குப் பொருந்தாது. சிங்கங்களைப் பொறுத்தவரை அ முதல் ஃ வரை எல்லாமே ஆண் சிங்கம்தான். கூட்டத்தை வழி நடத்துவதிலிருந்து அதன் எல்லைக்குள் குடும்பத்தைப் பாதுகாப்பது வரை எல்லாமே ஆண்தான். ஆண் பெண் சண்டைகளில் பெரிய காயங்கள் ஏற்படும். சமயங்களில் ஆண் சிங்கம் பெண் சிங்கத்தைக் கொலை செய்கிற சம்பவங்களும் உண்டு. உலகச் சிங்க வரலாற்றில் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தைக் கொன்றதாக வரலாறே இல்லை. அந்த வரலாற்றை இப்போது மாற்றி எழுதியிருக்கிறது ஸூரி என்கிற பெண் சிங்கம். 

சிங்கக் கூட்டத்தைப் பொறுத்தவரை தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஓர் அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயது வந்த பெண் சிங்கங்களும் ஒரு வயது வந்த ஆண் சிங்கமும் குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். ஆண் சிங்கங்களுக்கும் பெண் சிங்கங்களுக்கும் எப்போதாவது சண்டை மூளும். சண்டைகள் இரு பாலருக்கும் சில பல காயங்களுடன் முடிவுக்கு வரும். சில நேரங்களில் ஆண் சிங்கம் பெண் சிங்கங்களைக் கொல்வதும் நிகழும். ஆனால், ஆண் சிங்கத்தை, பெண் சிங்கம் கொன்றதாக வரலாற்றில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. குறிப்பாக உடலளவில் ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் என்பது 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டுக் கூட்டத்தைவிட்டு வெளியேற்றிவிடும். கூட்டத்தில் உள்ள இளைய ஆண் சிங்கம் தலைவனாக சார்ஜ் எடுத்துக்கொள்ளும். கூட்டத்திலிருந்து விரட்டப்பட்டபோது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட ஆண் சிங்கம்  வயது முதிர்ச்சியினாலும், பலமின்மையாலும் எளிய விலங்குகளை அடித்துக் கொன்று உயிர் வாழும். என்னதான் சிங்கமாக வாழ்ந்திருந்தாலும் வயதான சிங்கத்தின் கடைசிக் காலம் பரிதாபத்துக்குரியது. ஒரு கட்டத்தில் மொத்த பலத்தையும் இழக்கிற சிங்கம் அதன் வாழ்நாள் எதிரியான கழுதைப் புலிகளுக்கு இரையாகிவிடும். இதுதான் சிங்கங்களின் தொன்றுதொட்ட வரலாறு. 

ஆனால் நியாக் (Nyack) வாழ்வில் நடந்தது வேறு. அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் (Indianapolis) என்கிற மாகாணத்தில் செயல்பட்டு வரும் உயிரியல் பூங்காவில் ஸூரி என்கிற 12 வயதுப் பெண் சிங்கமும் நியாக் என்கிற 10 வயது ஆண் சிங்கமும் இருந்தன. கடந்த 8 வருடங்களாக இரண்டு சிங்கங்களும் ``உனக்கு நான் எனக்கு நீ” என்கிற கொள்கையின்படி பூங்காவில் வாழ்ந்து வந்தன. அதன் பலனாக 2015-ம் ஆண்டு ஸூரி 3 குட்டிகளை ஈன்றது. 2 ஆண் குட்டிகளும் 1 பெண் குட்டியும் அதில் அடங்கும். கடந்த 15-ம் தேதி எப்போதும் போல உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காகத் திறந்திருந்தது. ஸூரியின் 3 வயதுப் பெண் குட்டியான ஸுகரி (Sukari) சம்பவ நாளன்று தாய் தந்தையோடு ஒன்றாகவே இருந்தது. மற்ற 2 ஆண் குட்டிகளும் பருவம் எய்தியதால் தனித் தனிக் கூட்டுக்கு மாற்றப்பட்டிருந்தன. 

உயிரியல் பூங்கா ஊழியர்கள் திடீரெனச் சிங்கங்கள் இருந்த கூண்டை நோக்கிச் சத்தம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு 2 சிங்கங்களின் உறுமும் சத்தமும் ஆக்ரோஷமாகக் கேட்டிருக்கிறது. உடனே பூங்கா ஊழியர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். சிங்கங்களின் கூண்டை கவனித்த மொத்த ஊழியர்களும் பதறிப்போகிறார்கள். பெண் சிங்கமான ஸூரி ஆண் சிங்கத்தின் கழுத்தைக் கவ்வியபடி கிடந்திருக்கிறது. பொதுவாகச் சிங்கங்கள் இரையை வேட்டையாடும் பொழுது கழுத்தைக் குறிவைத்து வேட்டையாடும். அப்போதுதான் இரையை எளிதாகக் கொல்ல முடியும். தப்பிச் செல்லவும் முடியாது. அதே போன்று ஆண் சிங்கத்தின் கழுத்தை பெண் சிங்கம் பிடித்திருப்பதைப் பார்த்ததும் பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியாகிறார்கள். பூங்கா ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தின் கழுத்தை விடாமல் கொல்லும் நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறது. 

கடைசியில் ஆண் சிங்கத்தைக் காப்பாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய நியாக், பெண் சிங்கத்தின் கையால் இறந்த முதல் ஆண் சிங்கம் என்கிற பெயரை சுமந்து இறந்து போனது. பொதுவாக சிங்கங்கள் ஒன்றாக இணைந்து வாழும் குணம் கொண்டவை. என்னதான் அடித்துக் கொண்டாலும் பெண் சிங்கங்கள் இதுவரை எந்த ஆண் சிங்கத்தையும் தனி ஆளாக நின்று கொன்றதில்லை. சிங்கம் கொல்லப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை கொலைக்கு என்ன காரணமெனத் தெரியாமல் பூங்கா நிர்வாகம் குழம்பிப் போயிருக்கிறது. 

மிருகங்களின் ஆக்ரோஷத்தன்மையில் பெரும் பங்கு வகிப்பது அதன் புறச் சூழல்தான். காடுகளில் சுற்றித் திரியும் வரை, இந்த மிருகங்கள் தங்கள் குணாதியங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் காட்டுவதில்லை. அங்கே ஆண் சிங்கம்தான் எல்லாவற்றிலும் ராஜா. ஆனால், கூண்டுகளுக்குள் எல்லாமே மாறிவிடுகிறது. தொடர்ச்சியாகக் கூண்டுகளுக்குள் இருப்பதும், இது போன்ற நிலைக்குக் காரணம் என லைவ் சைன்ஸ் தளத்துக்குப் பேட்டியளித்து இருக்கிறார் ஃபன்சன்  . 

சில நாள்களுக்கு முன்னர், நிகழ்ந்த ஒரு சண்டையில் ஸூரி, ஆண் சிங்கத்தைத் தாக்கிய போதே ஆண் சிங்கமான நியாக் எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டவில்லை. அடுத்தடுத்த நாள்களில், அதிகாரத் தோரணையில் இருக்க வேண்டிய நியாக், சற்றே அடக்கி வாசித்து சப்மிஸ்ஸாவாக(Submissive) இருந்ததாம். சிம்பிளாகச் சொல்வதென்றால் சரண்டராகியிருக்கிறது. குட்டிகளும் பிறந்து 3 ஆண்டுகளைக் கடந்துவிட்டதால், தாய்மை என்னும் நிலையிலிருந்து ஸூரி முற்றிலுமாக மாறியிருந்தது. இவை அனைத்தையுமே காரணமாகச் சொல்கிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள். 

கால காலமாக நடக்காத விஷயங்கள் எல்லாம் திடீரெனத்தான் நிகழும். நியாக் விஷயமும் இப்போது அப்படித்தான்!