Published:Updated:

இந்த 27,320 இந்திய யானைகள் இறந்தால் உங்களுக்கு ஓ.கே-வா?

யானைகள் மனிதக் கொடுமைகளையும் மீறி இந்தியாவில் உயிர்பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் இடையில் அவை, தம் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகின்றன.

இந்த 27,320 இந்திய யானைகள் இறந்தால் உங்களுக்கு ஓ.கே-வா?
இந்த 27,320 இந்திய யானைகள் இறந்தால் உங்களுக்கு ஓ.கே-வா?

ந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எங்கும் நீக்கமற நிறைந்திருந்த பேருயிர் யானை. கணேசா, விநாயகா, பிள்ளையார் என்று பல பெயர்களில் அவை வழிபடப்படும் அளவுக்கு நம் கலாசாரத்தில் கலந்துவிட்ட உயிரினம். இப்படியாக நம் சமூக, சூழலியல், ஆன்மிகப் பார்வைகளில் தவிர்க்கமுடியாமல் பேசப்படும் பேருயிர்கள் இன்று வாழிடங்களை இழந்து காடின்றித் தவித்துக்கொண்டிருக்கின்றன.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பல்லாண்டு கால நினைவுகளை உள்ளடக்கியது. கடந்த 2,600 ஆண்டுக்கால மனித வரலாற்றில் யானைகள் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளன. ஒரு காலத்தில் அவை கிட்டத்தட்டப் போர்க்கருவிகளாகவே பயன்படுத்தப்பட்டன. அரசர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலிருந்த நெருக்கமான உறவு காவியங்களிலும் இலக்கியங்களிலும் பேசப்பட்டன. மூன்றாம் நூற்றாண்டில்தான் யானைகள் அதிகளவில் போருக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதற்கும் முன்பிருந்தே அவை மனிதர்களோடு சுமுக உறவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. யானைகள் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு, பழக்கப்படுத்தப்பட்டு போர்களிலும் ஊர்வலங்களிலும் பயன்படுத்தப்பட்டன. காடுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும் வாழும் பழங்குடிகள்தாம் யானைகளைப் பிடிப்பார்கள். அது அரசர்களுக்கும் அவர்களது ராணுவத்துக்கும் பழக்கப்படுத்தப்பட்டன.

யானைகள் காடு, காடு சார்ந்த மக்கள், அரசர்கள், அவர்களது ராணுவம் என்று அந்த உறவு நீண்ட காலங்களுக்கு நிலைத்திருந்தது. இந்த உறவு தெளிவாக இருக்கவேண்டியதும் அரசுரிமை பாராட்டுவதற்கான தகுதியாக தெற்கு ஆசியப் பிரதேசங்களால் பார்க்கப்பட்டது. தெற்கு மட்டுமன்றி அது கிழக்கு ஆசியாவின் யூஃப்ரேட்ஸ், டிக்ரிஸ் நதியோர ராஜ்ஜியங்களுக்கும் பரவியது. அலெக்ஸாண்டர் காலத்திலும் அதற்குப் பிறகும் இந்தப் பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. எந்த அளவுக்கு என்றால், ராணுவக் கைத்திறனாக மட்டுமே அதுவரை பார்க்கப்பட்ட யானை அதன்பிறகு மிகப்பெரிய ஆயுதமாகப் பாவிக்கப்பட்டது. அதாவது ஒருவரிடம் 500 அல்லது 1,000 யானைகள் இருந்தால் அது இப்போது ஏவுகணைகள், டாங்கர்கள் இருப்பதைப்போல் கருதப்பட்டது. அந்த அளவுக்கு ராணுவத்தில் அப்போது யானைப்படை முக்கியமாகக் கருதப்பட்டது. என்னதான் யானைகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்திச் சுயநலமாகப் பயன்படுத்தினாலும் அவற்றுக்கான சுதந்திரத்தையும் கொடுத்த அவற்றைப் பேணவும் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

யானைகள் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டன. இருந்தாலும் வனத்தின் சில பகுதிகளை ``கஜாவனாஸ்" என்ற பெயரில் இப்போதைய காப்புக் காடுகளைப் போல் பாதுகாத்தார்கள். யாராக இருந்தாலும் யாருக்காக இருந்தாலும் அந்தப் பகுதிகளில் யானைகளைப் பிடித்தால் மரண தண்டனை வரை வழங்கப்பட்டது. அப்படியாக கஜாவனாஸ் என்று பாதுகாத்து வைக்கப்படும் வனப்பகுதிதான் யானைகளின் முக்கிய வாழிடங்களாக இருந்தன. அவை பிடிக்கப்படுதெல்லாம் அவற்றின் வழித்தடப் பாதையில்தான். அதன்மூலம் யானைக் கூட்டங்களின் தனிப்பட்ட வாழ்வையோ அவற்றின் இனப்பெருக்கத்தையோ குட்டிகளையோ தொந்தரவு செய்யாமலிருந்தார்கள். அதன்மூலம் யானைகளின் இருப்பும் அவற்றோடு மனிதர்களுக்கு இருந்த உறவும் இயற்கையின் சமநிலையும் பேணிப் பாதுகாக்கப்பட்டன.

இப்படியாக நீண்டகால மனித வரலாற்றில், அதுவும் முக்கியமாக இந்தியாவில் அவை சிறப்பாகக் கருதப்பட்டன. ஆனால் இன்று, எந்த மனிதனால் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டதோ அதே மனிதனால் அதிகக் கொடுமைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 101 முக்கிய யானை வழித்தடங்களில் 33% ஆக்கிரமிப்புகளால் நிரம்பி வழிகின்றன. இன்னொரு பக்கம் அவற்றின் வாழிடங்கள் தொழிற்சாலைகள், கட்டுமானங்கள், விவசாயம் போன்றவற்றுக்காகத் துண்டாடப்படுகின்றன. முக்கியமாகப் போக்குவரத்துக் கட்டுமானங்கள் அவற்றின் வாழிடங்களைத் துண்டாடிக் கொண்டிருக்கின்றன. அதிலும் மிக முக்கியமாக வனத்துக்குள் செல்லும் ரயில் பாதைகள். அவை அந்தப் பேருயிர்களைக் கொல்வதற்கான வேட்டைப்பொறிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. யானைகள் ஒற்றையாகவோ கூட்டமாகவோ ஒவ்வொரு வருடமும் ரயில்களில் அடிபட்டு இறந்துகொண்டுதானிருக்கின்றன. இருந்தாலும் அவற்றின் உடலை அப்புறப்படுத்துவதைத் தவிர பெரிதாக எதையும் இதுவரை நாம் செய்யவில்லை. அந்தப் பிரச்னை தீவிரமானதாகக் கருதப்படுவதுமில்லை கவனிக்கப்படுவதுமில்லை.

ரயில் பாதைகள் ஊடறுத்துச் செல்லும் யானை வாழிடங்கள், அதில் ஏற்படும் பிரச்னைகளும், அவை எதிர்நோக்கும் ஆபத்துகளும் பற்றி வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன. அதைச்செய்து முன்வைக்கும் ஆர்வலர்கள் மற்றும் அறிவியலாளர்களின் பரிந்துரைகள் கருத்தில் எடுக்கப்படுவதில்லை; ரயில்வே துறை இதை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதுமில்லை; அதை முன்னெடுப்பதற்குச் செய்யப்படும் பரிந்துரைகளைக் கவனிப்பதுமில்லை. இப்போது தேவை முதலுதவியல்ல. முழுமையான தீர்வு. அதை எட்டும் எண்ணமே இல்லாததுபோல் நடந்துகொள்வது சூழலியலாளர்களை வேதனையில் ஆழ்த்துகிறது.

அது மட்டுமே யானைகளைப் பாதிக்கும் பிரச்னையில்லை. தந்த வேட்டை பெரும்பாலும் இந்தியாவில் கட்டுப்படுத்தப் பட்டுவிட்டாலும் கடந்த சில வருடங்களில் மீண்டும் தொடங்கிவிட்டது. கேரளா, டெல்லி போன்ற இடங்களில் கைப்பற்றப்பட்ட தந்தங்களின் மூலம் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தந்தம் மட்டுமல்ல, யானையின் மற்ற பாகங்களும் இப்போது சந்தைகளுக்கு வரத் தொடங்கிவிட்டது. உதாரணத்துக்கு மியான்மரில் யானைத் தோலிலும் எலும்புகளிலும் ஆபரணங்கள் செய்து விற்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த வியாபாரம் தொடர்ந்தால் ஆண், பெண் இரண்டு யானைகளின் இருப்புமே ஆபத்துக்குள்ளாகும்.

2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 27,320 யானைகள் இருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த யானைகளின் எண்ணிக்கை இப்படியே பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு அவற்றின் வாழிடங்கள் பராமரிக்கப்பட வேண்டும். யானை வழித்தடம் வழியாகப் பாதைகளோ கட்டுமானங்களோ அமைக்கப்படும்போது ஒருமுறைக்குப் பத்துமுறை சிந்தித்து ஆலோசித்து முடிவு செய்யவேண்டும். யானைகள் மனிதக் கொடுமைகளையும் மீறி இந்தியாவில் உயிர்பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் இடையில் அவை, தம் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகின்றன. அந்தப் போராட்டம் வெற்றிபெறாமல் போனால் அந்தப் பேருயிர்களே இல்லாமல் போனால் அது மொத்த மனித இனத்தின் அழிவுக்குமே விடுக்கப்படும் எச்சரிக்கை.

யானைகள்தாம் மரங்களை வளர்க்கின்றன. ஆறுகளுக்குப் பாதை அமைக்கின்றன. ஆம், அந்தப் பேருயிர்கள்தாம் காட்டைக் கட்டமைக்கின்றன. அவையில்லையெனில் காடில்லை. காடில்லையெனில் நாடில்லை.