Published:Updated:

`புலியின் எலும்புகளையும் காண்டாமிருகத்தின் கொம்புகளையும் விற்கலாம்' - சீனா புதிய கொள்கை!

`புலியின் எலும்புகளையும் காண்டாமிருகத்தின் கொம்புகளையும் விற்கலாம்' - சீனா புதிய கொள்கை!
`புலியின் எலும்புகளையும் காண்டாமிருகத்தின் கொம்புகளையும் விற்கலாம்' - சீனா புதிய கொள்கை!

உலகம் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் வேளையிலே, அதிகம் வீழ்ச்சி காணுவது இயற்கைதான். அவ்வகையில் மிக அதிகமாகப் பாதிப்படைந்து வருவது விலங்குகள். அழிக்கப்படும் காடுகள் ஒருபக்கம் என்றால், நேரடியாகக் கொல்லப்படுவதும் வன விலங்குகளின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளது. வனவிலங்குகள் அழிவது என்பது அந்த இனத்திற்கான அழிவு மட்டுமல்ல, உயிரினங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கலந்து வாழும் இந்தப் பூமியில், ஒரு இனத்தின் அழிவு என்பது, நீண்டபெரும் உணவு சங்கிலியின், ஒரு இணைப்பு துண்டிக்கப்படுவது ஆகும். இது இயற்கை, உருவாக்கிய உலகம், அதைச் சார்ந்த மனிதன் என அனைத்தும் அழிவு நோக்கிப் பாயும் அடுத்த குறியீடாகவே இதைக் கொள்ள வேண்டும்.

உலகில் உள்ள வனப்பகுதியில் வாழும் மொத்த புலிகளின் எண்ணிக்கை 4,000 மட்டுமே, காண்டாமிருகங்கள் எண்ணிக்கை 30,000 மட்டுமே. இவ்விலங்கு பாதுகாப்புக்காக வன விலங்கு சரணாலயங்கள், தொடங்கி `புராஜெக்ட் டைகர்’ இயக்கம் வரை பல முயற்சிகளை இந்திய அரசும் உலக நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. அதன்காரணமாக வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியாவில் சட்டவிரோதமாக 20 கிலோ புலியின் பாகங்களை வைத்திருந்த இருவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். இதேபோல் போபால் நீதிமன்றம், கடந்த வருடம் ஐந்து பேருக்கு 125 புலிகளையும் 1,025 சிறுத்தைகளையும் கொன்ற வழக்கில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இப்படி இந்தியாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றில் வன விலங்கு பாதுகாப்புக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சீன அரசு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வன விலங்குகளின் பாகங்களை விற்பதற்கு உள்ள தடையை நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது. இந்த உத்தரவின்படி, சீனாவில் மருத்துவ ஆராய்ச்சி தேவைகளுக்கு புலியின் எலும்புகளும் காண்டாமிருகத்தின் கொம்புகளும் பண்ணையில் வளர்க்கப்படும் மிருகங்களிடம் இருந்து பெறுவது வர்த்தகம் செய்வது சட்டப்படி செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காடுகளில் வசிக்கும் புலி மற்றும் காண்டாமிருகங்கள் உடல் பாகங்கள், ஏற்றுமதி, இறக்குமதி பற்றி குறிப்பிட்டு எந்தத் தடையும் விதிக்கவில்லை.

ஆனால், வர்த்தகத்தில் எலும்புகளையும் கொம்புகளையும் வைத்து இது வன விலங்கா, அல்லது வளர்க்கப்பட்ட விலங்கா? என அறிவது சாத்தியமில்லை. ஆதலால், இது வன விலங்குகள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஆடு, மாடுகளைப் போல ஆயிரக்கணக்கான புலிகளை, இருநூற்றுக்கும் மேற்பட்ட பண்ணைகளில் வளர்த்து வருகின்றனர். புலிகள் பாதுகாப்பகம் என்ற பெயரில் இயங்கி வரும் இந்தப் பண்ணைகளில் இருந்து, அலங்கார பொருளாக புலித்தோலும், மற்றும் அணைத்து பாகங்களும், சட்ட ரீதியாகவே சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி விற்கப்படுகின்றன.

சீனாவின் குய்லின் புலிகள் வளர்ப்புப் பண்ணை 

Photo Source: Belinda Wright / Wildlife Protection Society of India

அமெரிக்காவில் மட்டும் 5,000 புலிகள் வீட்டில் வளர்க்கப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இது மொத்த ஆசியாவிலும் வனத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஓர் உயிருள்ள ஒரு வளர்ந்த (adult) புலியின் விலை 200 டாலர்கள் என ஒரு செய்தியறிக்கை சொல்கிறது.

போச்சிங் (poaching) எனப்படும் வன விலங்குகள் கொல்லப்படுவது பெரும்பாலும் அதன் உடல் பாகங்களுக்காகவே, குறிப்பாக யானைத் தந்தம், காண்டாமிருகத்தின் கொம்பு ஆகியவற்றுக்குக் கறுப்பு சந்தையில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. புலியைப் பொறுத்தவரை அதன் தோல், நகம், பல், எலும்புகள் என அனைத்து பாகங்களுக்கும் பெரும் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. புலியின் இறைச்சியை வாங்குவதற்கும் சீனாவில் பெரும் சந்தை இருக்கிறது. சீன மருத்துவத்தில், புலியின் அனைத்து பாகங்களிலும் ஏதாவதொரு மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. புலியின் ஆணுறுப்பை உண்பதால் ஆண்மை கூடும் என்ற நம்பிக்கை உலவுவதும், புலி வேட்டையை அதிகப்படுத்துகிறது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் சீனாவின் இந்த வர்த்தக கொள்கை வன உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என வனவிலங்கு ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Photosource: tigersinamerica.org

உலகின் புலிகள் தன் வாழ் இயல்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன. காடுகள் அழிக்கப்பட்டு, அதன் வாழ்விடம் குறைக்கப்பட்டதால், காட்டுப் புலிகள் வேகமாக அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. புலியைச் சார்ந்த வியாபாரங்கள் இருக்கும் வரை, பன்றிகளைப்போல கூண்டிலே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போ(பு)லி இனம் அழியாமல் இந்த வர்த்தக உலகம் பண்ணைகளில் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், சீனாவின் இந்தப் புதிய சட்டத்திலிருக்கும் ஓட்டையால் தனிப்பெரும் கம்பீரம் கொண்டு, தனக்கான எல்லையை வகுத்துக்கொண்டு, காடுகளில் அதன் இயல்பு மாறாமல் வீரமாய் வாழும் புலியினங்களில் எஞ்சியிருக்கும் 4,000 புலிகளுக்கும் நாம் குட்-பை சொல்லும் காலம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை.