Published:Updated:

பாம்புகளில் இவன் ராட்சசன்... சூப்பர் ஸ்பெஷல் பிளாக் மாம்பா! #ThrillRead

பிளாக் மாம்பாவின் விஷம் மிகவும் கொடியது. மனிதனைக் கொல்ல வெறும் இரண்டு சொட்டு விஷமே போதும். முதல் சொட்டிலேயே நரம்பு மண்டலத்தை ஸ்தம்பிக்க வைத்துவிடும்.

பாம்புகளில் இவன் ராட்சசன்... சூப்பர் ஸ்பெஷல் பிளாக் மாம்பா! #ThrillRead
பாம்புகளில் இவன் ராட்சசன்... சூப்பர் ஸ்பெஷல் பிளாக் மாம்பா! #ThrillRead

கொலைகார ராட்சசன்... ஆப்பிரிக்காவின் `பிளாக் மம்பா' பாம்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா, படுபயங்கர விஷம் கொண்ட பாம்பு வகைகளில் முக்கியமானது. முக்கால் டன் எடையுள்ள மாட்டை, கடித்த பத்தாவது நிமிடம்... மாடு இறந்து கீழே விழும். மற்ற பாம்புகள், தன்னைத் தொந்தரவு செய்பவர்களைக் கொடூரமாகத் தாக்கும். ஆனால் இந்த `பிளாக் மம்பா' சைக்கோ வகையைச் சேர்ந்தது. விலங்குகளையும், மனிதர்களையும் தேடித்தேடிக் கடிக்கும். 

உலகிலே வேகமாக ஊர்ந்து செல்லும் பாம்பும் இதுதான். ஆப்பிரிக்காவின் மிக நீளமான பாம்பாகவும், உலகின் மிக நீளமான பாம்புகளில் இரண்டாவது பாம்பாகவும் திகழ்கிறது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான உயிரினங்களை உணவாக உட்கொள்கிறது. நீளத்திலும் விஷத்திலும் ராஜநாகத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. `பிளாக் மாம்பா' என்று அழைக்கப்பட்டாலும் பெரும்பாலும் இவை கறுப்பு நிறத்தில் காணப்படுவது அல்ல. மேற்புறத்தில் ஆலிவ் நிறத்திலிருந்து சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதியில் வெளிர் நிறத்திலும் இருக்கும். ஆனால், இவற்றின் வாயில் உள் பகுதி கறுப்பு நிறமாக இருப்பதால் இவை பிளாக் மாம்பா என அழைக்கப்படுகின்றன. தான் அச்சுறுத்தப்படும்போது கறுப்பான வாயை அகலமாகத் திறந்து எதிரிகளிடம் எச்சரிக்கை கொடுக்கும். பிளாக் மாம்பாவின் தலைப் பகுதி முக்கோண வடிவத்தில் ஏறக்குறையச் சவப்பெட்டியின் வடிவத்தில் இருக்கும். எளிதில் சுருண்டு கொள்ளக்கூடிய, வேகமாக ஊறக்கூடிய, எதிரிகளைத் தாக்கி அழிக்கக் கூடிய வலிமையான உடலமைப்பைக் கொண்டது. இவை சுமார் 8 அடி முதல் 14 அடி வரை வளரக் கூடியது. 11 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டது. 

தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் புல்வெளிகள், மலைப் பரப்புகள் மற்றும் மரம் அடர்ந்த வனாந்தரப் பரப்புகள் உள்ளிட்ட இடங்களில் வாழும் பாம்புகள் மரக்கிளைகள், பாறைப் பொந்துகளில் வசிக்கவே விரும்புகின்றன. மனிதனின் ஓட்டத்தைக் காட்டிலும் அதி விரைவாக ஊர்ந்து செல்லும் திறன் படைத்தவை. மணிக்கு 20 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது. சாதாரணமாக மூன்றில் ஒரு பகுதி உடலைத் தரையிலிருந்து உயர்த்தி ஓடும். இவை ஓடும்போது அச்சுறுத்தலுக்கு ஆளானால் சுமார் 4 அடி உயரத்தில் உடலை உயர்த்தி ஓடும். ஆனால், எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே தனது வேகமான ஓட்டத்தைப் பயன்படுத்தும், இரையைத் தேட வேகமான ஓட்டத்தைப் பயன்படுத்துவதில்லை. பகலில் வேட்டையாடச் செல்லும். கூட்டாகவோ அல்லது ஜோடியாகவோ இரையைத் தேடச் செல்லும். இரையைத் தேடச் செல்லும் முன்னர் சூரிய ஒளிபடும் மரக்கிளைகளில் சுருண்டு குளிர்காயும். 

கீரிகள்தான் மாம்பாக்களின் முதன்மையான உணவாகும். இவை பொதுவாக அதிகமாக இளம் பாம்புகளையும், முட்டைகளையும் உணவாக உட்கொள்கின்றன. அடுத்த பாம்பின் நஞ்சுக்கு எதிர்ப்புத் திறனுள்ள இவை, பொதுவாக இளம் பாம்புகளையே தாக்குகின்றன. தான் அச்சுறுத்தும்போது ஆக்ரோஷமாக எதிர்கொண்டு பலமுறை எதிரியைத் தாக்கும். சிறிய பாலூட்டி இனங்கள், பறவைகள் மற்றும் பிற வகை பாம்புகளை உணவாக உட்கொள்பவை. இவை கடிக்கும் முதல் கடியிலேயே எதிரியின் உடலில் விஷத்தைச் செலுத்திவிடும். அதன் பின்னர் எதிரி வீழும் வரை காத்திருந்து உணவாக எடுத்துக்கொள்ளும். பெரிய அகன்ற தாடையைக் கொண்டிருப்பதால் பெரிய இரையைக் கூட லாகவமாக விழுங்கி விடுகின்றன. இவை குளிர்காலத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இனச்சேர்க்கையில் ஈடுபடும் பெண் மாம்பாக்கள் 6 முதல் 25 முட்டைகள் வரை இடுகின்றன. முட்டையிட்ட பின்னர் பெண் மாம்பாக்கள் முட்டைகளிடம் வராது. மூன்று மாதங்கள் கழித்து முட்டையிலிருந்து குட்டி பிளாக் மாம்பாக்கள் பிறக்கின்றன. ஒவ்வொரு குட்டியும் 16 இன்ச் முதல் 24 இன்ச் நீளம் வரை இருக்கும்.

பிளாக் மாம்பாவின் விஷம் மிகவும் கொடியது. மனிதனைக் கொல்ல வெறும் இரண்டு சொட்டு விஷமே போதும். முதல் சொட்டிலேயே நரம்பு மண்டலத்தை ஸ்தம்பிக்க வைத்துவிடும். பாதிக்கப்பட்டவுடன் முடமாக்கி விடும். பிளாக் மாம்பா பாம்புக்கு விஷ முறிவு மருந்துகள் இருந்தாலும், பரவலாகக் கிடைப்பதில்லை. இதற்கு டிமாண்டுகளும் மிக அதிகம். பிளாக் மாம்பா கடித்த அடுத்த 20 நிமிடத்துக்குள் உயிர் பிரிந்துவிடும். அரிதான சில தருணங்களில் மட்டுமே பாதிக்கப்பட்டவர் 30 நிமிடங்கள் முதல் 3 மணிநேரம் வரை உயிரோடு இருக்க முடியும். ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை எதிரியின் உடலில் செலுத்தும் தன்மை படைத்தது. அதில் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே சாதாரண மனிதன் இறந்து போக நேரிடும். உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடும்.