நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...

தீவனத்தில் கவனம்... அதிகரிக்கும் லாபம்!கால்நடைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல், ஓரளவுக்கு நிலையான வருமானத்தைத் தரக்கூடிய விவசாய உபதொழில், கால்நடை வளர்ப்புதான். அதேசமயம், கால்நடை வளர்ப்பில் அதிகச் செலவு பிடிப்பது தீவனத்துக்குத்தான். அதனால், தீவன மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டால், நல்ல லாபம் எடுக்க முடியும். அந்த வகையில், நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூகா, நமனசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான முருகப்பன், சிவபிரபு ஆகியோர். இவர்கள் இருவருமே இளநிலைப் பொறியியல் பட்டதாரிகள்.

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...

ஒரு மதிய வேளையில் கால்நடைச் சிறப்பிதழுக்காக இவர்களது நாட்டுக்கோழிப் பண்ணைக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தார், முருகப்பன். “அப்பா மலேசியாவுல மளிகைக்கடை வெச்சிருக்காங்க. நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சுட்டு மலேசியாவுல ஒரு கம்ப்யூட்டர் கம்பெனில வேலை செஞ்சேன். கொஞ்ச நாள்லயே ஊர் திரும்பி,  இப்போ  மலேசியாவுக்கு மளிகை பொருள்களை ஏற்றுமதி செஞ்சுட்டுருக்கேன். ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு இயற்கை விவசாயத்துல இறங்குனேன்.

எங்க குடும்பத்துக்கு மொத்தம் 14 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 7 ஏக்கர்ல மா இருக்கு. மீதி 7 ஏக்கர் சும்மாதான் இருக்கு. நானும் என்னோட நண்பர் சிவபிரபுவும் சேர்ந்து 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதுல இயற்கை விவசாயம் செய்றோம். அவர் ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துட்டுருக்கார். நான்தான் விவசாயத்தைக் கவனிச்சுக்குறேன். இந்த ஆறு ஏக்கர் நிலத்துல அஞ்சரை ஏக்கர் நிலத்துல நெல், நிலக்கடலைனு போட்டிருக்கோம். வேலியில் தேக்கு கன்னுகளை நடவு செஞ்சுருக்கோம். அரை ஏக்கர் நிலத்துல ரெண்டு வருஷமா நாட்டுக்கோழிப் பண்ணை நடத்திட்டுருக்கோம்” என்ற முருகப்பன் கோழிக் கொட்டகைக்கு அழைத்துச் சென்றார். 

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...

“கோழிக்கொட்டகையை, வெயில் தாக்காத மாதிரியும் நல்ல காற்றோட்டம் இருக்குற மாதிரியும் அமைச்சுருக்கோம். கொட்டகையைச் சுத்தி புங்கன் மரங்களும் வேப்பமரங்களும் இருக்கு. அதனால, எப்பவும் நிழல் இருக்கும். 90 அடி நீளம், 30  அடி அகலத்துல கொட்டகை அமைச்சிருக்கோம். தரையிலிருந்து 2 அடி உயரத்துக்கு மட்டும் சுவர் அமைச்சு, அதுக்கு மேல 6 அடி உயரத்துக்கு வலை அமைச்சுருக்கோம். மேல சீமை ஓடுகளை வேய்ஞ்சிருக்கோம். சுவரோட மேற்பகுதியைச் சரிவாக அமைச்சிருக்குறதால அதுல கோழிகள் உட்கார முடியாது. கோழிகள் வலை ஓரமா உக்காந்து இருந்தா, கீரி, உடும்பு, பாம்புகளால பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புருக்கு.

கொட்டகையை மூணு அறைகளாகப் பிரிச்சுருக்கோம். 1 நாள் முதல் 15 நாள்கள் வயதுடைய குஞ்சுகள் முதல் அறையிலும், 15 முதல் 45 நாள்கள் வயதுடைய குஞ்சுகள் இரண்டாம் அறையிலும், 45 முதல் 125 நாள்கள் வயதுடைய கோழிகள் மூன்றாம் அறையிலும் வெச்சு பராமரிக்கிறோம். எப்பவும் பண்ணையில ஐந்நூறுல இருந்து அறுநூறு உருப்படிகள் இருக்குற மாதிரி பராமரிக்கிறோம். மாசத்துக்கு 100 கோழிகள் வரை விற்பனை செய்றோம்” என்ற முருகப்பன் நிறைவாக வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...

“நாங்க வளர்க்குறது எல்லாமே அசில் ரகங்கள் + நாட்டுக்கோழிகள். புதுக்கோட்டை கால்நடைப் பண்ணையில் இருந்து ஒருநாள் வயதுடைய குஞ்சுகளை 25 ரூபாய் விலையில் வாங்கிட்டு வந்து, 120 நாள்கள் வரைக்கும் வளர்த்து விற்பனை செய்றோம்.

ஒன்றரை கிலோ எடையில ஒரு கோழி 300 ரூபாய்னு விற்பனை செய்றோம். 100 கோழிகள் விற்பனை மூலம் மாசத்துக்கு 30,000 ரூபாய் கிடைக்குது. அதுல 7,500 ரூபாய் செலவு போக மாசத்துக்கு 22,500 ரூபாய் லாபமாகக் கிடைக்குது” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, முருகப்பன், செல்போன்: 94421 50511

இயற்கை மருத்துவம்

கோ
ழிகளுக்கு வரும் நோய்களுக்கு இயற்கை வைத்தியம்தான் செய்து கொள்கிறார், முருகப்பன். அதுகுறித்துப் பேசியவர், “கோழிகளுக்குச் சளி பிடித்தால்... 1 கிலோ தீவனத்தோடு 100 கிராம் குப்பைமேனி இலைப்பொடியைக் கலந்து (200 கோழிகளுக்கு) மூன்று நாள்களுக்குக் கொடுப்போம்.

மழைக்காலத்தில் வெள்ளைக் கழிச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்க... வாரத்துக்கு இரண்டு முறை 1 கிலோ தீவனத்துடன் 100 கிராம் துளசிப்பொடியைக் கலந்து கொடுக்குறோம். கோழிக்குஞ்சுகளுக்கு முதல் 7 நாள்களுக்குத் தினமும் 2 லிட்டர் தண்ணீரில் 4 ஸ்பூன் குளுக்கோஸைக் கலந்து கொடுத்திடுவோம். இதனால, கோழிக்குஞ்சுகள் சுறுசுறுப்பா இருக்கும்” என்றார்.

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...

இறைச்சியின் சுவையைக் கூட்டும் கொத்தமல்லி!

கோ
ழிகளுக்கான தீவனம் குறித்துப் பேசிய முருகப்பன், “ஒருநாள் முதல் 15 நாள்கள் வரை வயதுடைய குஞ்சுகளுக்குத் தினமும் ஒரு கிலோ வீதம் குஞ்சுத்தீவனம் கொடுக்குறோம். 15 நாள் வயசுக்கு மேல... கடையில் கிடைக்கிற கோழித்தீவனத்தை (அடர் தீவனம்) வாங்கி, 30 கிலோ தீவனத்துக்கு 70 கிலோ கம்புனு கலந்து கொடுக்குறோம். 45 நாள்கள் வரை தினமும் 2 கிலோ (200 கோழிகளுக்கு) அடர்தீவனம் கொடுக்குறோம். 45 நாள்ல இருந்து 75 நாள்கள் வரை தினமும் 3 கிலோ அடர்தீவனம் கொடுக்குறோம். 75 நாள்ல இருந்து 120 நாள்கள் வரை தினமும் 4 கிலோ அடர்தீவனம் கொடுக்குறோம். 1 நாள் வயசுல இருந்து 120 நாள்கள் வயசு வரைக்கும், ஒரு கோழிக்கு அதிகபட்சம் 2 கிலோ அடர்தீவனம்தான் கொடுக்குறோம்.

15 நாள்களுக்கு மேல் வயதுள்ள கோழிகளுக்கு, வாரத்துக்கு ரெண்டு நாள் கொத்தமல்லித்தழை கொடுப்போம். ஒரு நாளைக்கு 1 கிலோ வீதம் ரெண்டு நாளைக்கு 2 கிலோ கொத்தமல்லித்தழை கொடுக்குறோம். அதேபோல வாரத்துக்கு ரெண்டு நாள் 2 கிலோ பெரிய வெங்காயத்தைச் சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கிப் பரவலாகத் தரையில் போடுவோம். கொத்தமல்லித்தழை, பெரிய வெங்காயம் ரெண்டையுமே கோழிகள் நல்லா விரும்பி சாப்பிடுது. அதனால, நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகரிக்குது. கறியில் சுவையும் கூடுது. முட்டைகோஸ், சௌசௌ ரெண்டையும் சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கி ஒண்ணா கலந்து 2 கிலோ அளவுல வாரத்துக்கு ரெண்டு நாள் கொடுக்குறோம். கடைகள்ல விற்பனையாகாமல் இருக்கிற காய்கறிகள், உதறும்போது உதிருற கொத்தமல்லித்தழைனு கழிவுகளைத்தான் வாங்குறோம். அழுகுன காய்களைத் தவிர்த்துடுவோம். எங்களுக்குக் காய்கறிக்கழிவுகள் இலவசமாவே கிடைக்குது.

கொட்டகையில் வளர்க்குற நாட்டுக்கோழிகள் ஒண்ணோட ஒண்ணு சண்டை போட்டு கொத்திக்காம இருக்குறதுக்காக அலகை வெட்டி விடுவாங்க. அப்படி அலகு வெட்டப்பட்ட கோழிகளுக்குச் சந்தையில விலை கிடைக்காது. நாங்க, தரையில காய்கறிகளைப் போடுறதால அதைக் கோழிகள் கொத்திச் சாப்பிடும்போது தானாகவே அலகு மழுங்கிடுது. அதனால, கோழிகள் சண்டை போட்டாலும் காயம் ஏற்படுறதில்லை” என்றார்.