Published:Updated:

`அந்தச் சிறு பறவையின் கதறலும், நியாயமும்தான் சலீம் அலி!'... நிஜ 'பக்ஷிராஜனின்' கதை

`அந்தச் சிறு பறவையின் கதறலும், நியாயமும்தான் சலீம் அலி!'... நிஜ 'பக்ஷிராஜனின்' கதை
`அந்தச் சிறு பறவையின் கதறலும், நியாயமும்தான் சலீம் அலி!'... நிஜ 'பக்ஷிராஜனின்' கதை

நம் இலக்கும், அதன் மீதான காதலும் நம்மை எந்த உயரத்துக்கும் அழைத்துச்செல்லும் என்பதற்கு இந்த `பக்ஷி ராஜனே' முழு உதாரணம்!

2.0-வில் வருவது போல, 'பறவை மனிதன்', இந்த உலகில் யாரும் இல்லை. ஆனால், 'பக்ஷிராஜன்' போல பறவையை நேசிக்கும் மனிதர்கள் நிறைய பேர் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கின்றனர். வெயில் காலங்களில் சிட்டுக்குருவிகளுக்குத் தண்ணீர் வைக்கும் நபர்களை, கடற்கரையில் தினமும் புறாக்களுக்கு உணவிடும் நபர்களை நீங்களும் எங்கேனும் பார்த்திருக்கக்கூடும். இப்படி தினசரி பறவைகள் மீது அக்கறை செலுத்தும் நபர்கள் ஒருபுறம்; அந்தப் பறவைகளின் மீதான அன்பால் தங்கள் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணிக்கும் நபர்கள் மறுபுறம். இதில் இரண்டாவது நபர்தான் சலீம் அலி. மன்னிக்க, 'சாலிம் அலி'. ஆம், பிறர் தன்னை இப்படி அழைப்பதைத்தான் அவர் விரும்பினார். 2.0 படத்தில், பறவைகளின் மீது பேரன்பு கொண்டவராகவும், அவற்றுக்காக தன்னையே இழக்கத் துணிபவராகவும் வருவாரே... பக்ஷி ராஜன்? அக்ஷய் குமார் நடித்த அந்தக் கதாபாத்திரன் இன்ஸ்பிரேஷனே சலீம் அலிதான். 

வாழ்க்கையின் ஆரம்ப நாள்களில், ஒருநாள் ஒரு சிறிய பறவை தன்னிடம் வந்து தஞ்சம் புகுந்து அவருடைய வாழ்க்கையின் போக்கையே மாற்ற, அதன்பின் பறவைகளைக் கொன்றுவேட்டையாடி வந்த அவர் அந்தப்பறவை இனத்துக்காகவே தன் சொந்த வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார். அப்படி என்னதான் செய்தார் இவர்? நவம்பர் 12,1896-ல் பம்பாயில் பிறந்தார் சலீம் அலி. ஒரு வயது இருக்கும்போது தந்தையும், மூன்று வயதாக இருக்கும்போது தாயும் மறைந்தார்கள். மாமாவான அம்ருதின்தான் அனைவரையும் பார்த்துக்கொண்டார். காரணம் மாமாவுக்கு குழந்தைகள் யாரும் இல்லை. சலீம் உட்பட ஒன்பது சகோதர, சகோதரிகளை தன் சொந்தக் குழந்தைகளைப்போல வளர்த்து வந்தார். மாமா வேட்டையாடும் தொழில்புரிபவராக இருந்தார். அப்போது அடிக்கடி நவாப்களுக்காகவும், ராஜாக்களுக்காகவும் அவர் அடர்ந்த காடுகளில் வேட்டையாடினார். மூத்த சகோதரனான ஹமித் வேலைபார்த்த காட்டுப்பகுதிக்கு சலீம் அவ்வப்போது சென்று வந்தார். இயற்கை ஆராய்ச்சிக்கும், பறவை ஆராய்ச்சிக்கும் இந்தப் பயணம்தான் மையம் என்றாலும் சலீமை பறவை உலகின் பக்கம் முழுமையாகத் திருப்பிவிட்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று, வீட்டில் சமையல்காரனாக இருந்த நாணு. அவர் பழைய சாமான்களை வைத்து ஒரு கிளிக்கூடு கட்டித்தந்தார். அதில் சலீம் பறவைகளை வளர்த்துவந்தார். இப்படித்தான் சலீம் அலி பறவைகளைப் பற்றி ஆராய்ச்சியில் வீட்டில் முதல் பாடம் படிக்கத்தொடங்கினார். இரண்டாவது காரணம், துப்பாக்கி சுடுவதில் திறமைசாலியான சலீம் குருவிகளை எப்போது பார்த்தாலும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கி வந்தார். அதில் ஒரு குருவி சுட்டவுடன் நேராக வந்து அவர் கால்களைத் தொட்டு உயிருக்காகக் கெஞ்சுவதுபோல இருந்தது. அது அவருக்கு மிகவும் வித்தியாசமானதாகப் பட்டது. அது என்னவென்று சலீம் கேட்க, மாமாவுக்குத் தெரியவில்லை. அதனால் சலீமை பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு கண்ட காட்சிகள் அவரை அசரவைத்தன. ஒன்றிரண்டு இல்லை. ஆயிரக்கணக்கிளான பறவைகளை உயிரற்ற வடிவத்தில் சிறுவன் சலீம் பார்த்தார். ஆச்சர்யப்பட்டார். சங்கத்தின் பொறுப்பில் இருந்த பெர்லார்ட் துரை அங்கிருந்த எல்லா பறவைகளையும் சலீமுக்கு சுற்றிக்காட்டினார். இங்கிருந்துதான் சலீமுக்கு பறவையைப் பற்றிய ஆர்வம் அதிகரித்தது என்று கூறலாம். மனிதனுக்கு சொந்தப்பெயரும், குடும்பப்பெயரும் இருப்பதுபோல ஒவ்வொரு பறவைக்கும், விலங்குக்கும் இரண்டு பெயர் இருக்கிறது. இந்தியாவில் நாட்டுக்காகம் என்றும், காட்டுக்காகம் என்றும் வேறுபட்ட இனங்கள் இருப்பதை பெர்லார்ட், சலீமுக்கு சொல்லிக்கொடுத்தார். பெர்லார்டை ஒரு தோழராக பார்த்த சலீம் அலி, தானும் ஒரு பறவை ஆராய்ச்சியாளனாக ஆக வேண்டும் என்று லட்சியத்தை மனதுக்குள் விதைத்துக்கொண்டார்.

1914-ல் சலீம் பர்மாவுக்குப் போனார். சகோதரர் அக்தரும், அவருடைய குடும்பமும் ரங்கூனில் வசித்து வந்தார்கள். பர்மா வாசம் சந்தோஷமாக இருந்தபோதிலும் பறவை ஆராய்ச்சி அத்தனை திருப்தியாக சலீமுக்கு இருக்கவில்லை. புத்தகங்களோ, பைனாக்குலரோ இல்லாமல் பறவைகளைப் பார்த்தார். பார்வை குறைவுள்ள ஒருவர் கண்ணாடி அணியாமல் எழுத்துகளைப் பார்ப்பதுபோல் இருந்தது அது. பிற பறவை ஆராய்ச்சியாளர்களுடைய தொடர்பும் Bombay Natural History societyயுடன் இருந்த தொடர்பும்தான் சலீம் அலிக்கு உற்ற துணையாக இருந்தது. பர்மா செல்வதற்கு முன்பு 1913-ல் வகுப்புகளுக்குச் சரிவர செல்லமுடியாமல் போனாலும், பாம்பே பல்கலைக்கழகம் நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் ஒரு மாதிரியாகத் தேறினார்.1917-ல் மாமா இறந்ததனால் சலீம் பம்பாய்க்குத் திரும்பினார். தாதர் கல்லூரியில் அவர் வணிகவியல் படிக்கத் தொடங்கினார். அதே சமயத்தில் செயின்ட் சேவியர் கல்லூரியில் அவர் விலங்கியல் பிரிவிலும் சேர்ந்தார். தாதர் கல்லூரியின் வணிகவியல் பாடங்கள் சலீமை நெருக்கிக் கொண்டிருந்தாலும், சலீம் விலங்கியல் படிப்பதற்காக சேவியர் கல்லூரிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது, காலையில் தாதர் கல்லூரியில் வணிகவியலும், மதியத்தில் சேவியர் கல்லூரியில் விலங்கியலும்  படித்துக் கொண்டிருந்தார். அங்கு விலங்கியல்துறையின் தலைவராக இருந்த பிளாட்டர், பறவைகள் பற்றிய எல்லா நிபுணத்துவத்தையும் சலீமுக்கு கார்பன் காப்பி எடுப்பதைப் போல பாடத்தை விளக்கினார். பறவைகளின் குடும்ப விவரங்கள், உடல் அமைப்புகள், வாழ்க்கை முறைகள், வெளித்தோற்றங்கள், சிறப்பியல்புகள் என்று எல்லாவற்றையும் கற்கத்தொடங்கிய சலீம், ஒரு முழு பறவையாளராக மாறத்தொடங்கினார்.

1918, டிசம்பரில் தெஹினாவை திருமணம் செய்துகொண்டார். இந்திய விலங்கியல் கழகத்தில் (Zoological survey of india) ஒரு பறவையாளார் வேலை காலியாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு சலீம் பெருமகிழ்ச்சி அடைந்தார். ஆனால், முறையான பல்கலைக்கழக பட்டம் எதுவும் அவருக்கு இல்லாததால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. அப்போதிருந்த பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இயற்கை வரலாற்றுப் பிரிவில் Bombay Natural History Society-யின் உறுப்பினராக இருந்த, ஸ்டான்போர்ட் சேகரித்து அனுப்பிய specimen-களை ஆராயும் பணி  சலீமுக்கு கிடைத்தது. பறவைகளைப் பற்றி தான் படித்ததை அங்கு வரும் குழந்தைகளுக்கு சொல்லுவதில் சலீமுக்கு மிக்க மகிழ்ச்சி. வெகு நாள்களாக அவருக்கு, தான் இன்னும் முழுமையடையவில்லை என்று மனக்குறை இருந்துகொண்டே இருந்தது. இரண்டு ஆண்டுகளே prince of Whales India மியூசியத்தில் வேலை பார்த்த சலீம், சோர்வு அடைந்து, தனது பதவியைத் துறந்தார். பறவைகள் பற்றி முறையாக கற்க வேண்டும் என்ற உந்துதல் அவரை பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச்சென்றது. Prince of Whales India மியூசியத்தில் சலீம் ஆராய்ந்து வந்த ஸ்டான்போர்ட் என்ற ஜெர்மானியருடைய சேகரிப்புகள் மூலம் அவருடைய நட்பு சலீமுக்கு கிடைத்தது. அவர் மூலம் சலீம்அலி பெர்லின் சென்றார். அங்கு பறவைகளை பகுத்தறிந்து தரம் பிரிக்கும் டாக்சானமி மாணவராக சேர்ந்தார். பறவைகள் பற்றிய அறிவியல் பிரிவில் மிகமுக்கிய பாடங்களான பறவைகளுக்கு வளையம் இடுதல், பட்டை கட்டுதல் Bird Ring, Bird Banding ஆகிய இரண்டையும் சலீம் அலி கற்றுக்கொண்டிருந்தது ஜெர்மனியில் இருந்துதான். பறவைகள் எங்ககெல்லாம் பறந்துபோகிறது என்பதைப் பற்றி அறிய இந்தச் செயல் பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய அளவில் பயன்படும். பறவைகளைப் பிடித்து அவைகளுடைய காலில் உலோகத்திலோ அல்லது பிளாஸ்ட்டிக்காளோ ஆன வளையத்தைப் போடும் முறைக்கு Bird Ringing என்று பெயர். வளையம் காலில் மாட்டப்பட்ட தேதியும், முகவரியும் வளையத்துக்குள் எழுதப்பட்டிருக்கும். பறவையை யாராவது பிடித்தால் வளையத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே சர்வதேச சட்டம் ஆகும். சட்டம் இருந்தாலும், அதைப் பின்பற்றுபவரும், கடைபிடிப்பவரும் இருக்க வேண்டும் அல்லவா? ஜெர்மானியர்கள் இதற்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்தார்கள்.

வட கடலில் எலிகோ சதுப்புநிலப்பகுதியைப் பறவைகள் வந்து தங்குவதற்கேற்றவாறு ஒரு சரணாலயமாக மாற்றினார்கள்.1930-ல் பெர்லினில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய சலீம் Prince of Whales மியூசியத்தில் நிதிப்பற்றாக்குறை காரணமாக விரிவுரையாளர் பதவி எடுக்கப்பட்டுவிட்டதால் மும்பையில் கடலோர கிராமமான kihim-ல் வசிக்கத்தொடங்கினார். கடலோர கிராம வாசம், இந்தியப் பறவைகள் பற்றிய ஆய்வில் ஒரு விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை உலகுக்குத் தந்தது எனலாம். அந்தக் கடலோரக் கிராம வாசம் சலீம் அலிக்கு தூக்கணாங்குருவியைப் (Weaver bird) பற்றி விரிவான ஆய்வுகளுக்கு வழிவகுத்துக் கொடுத்தது. இந்த ஆராய்ச்சிகள் தொடங்கியதே ஒரு சுவாரஸ்யமான விஷயமாக இருந்தது. குத்துச்செடிகள் மண்டிக்கிடந்த ஒரு பகுதியின் வழியாக நடந்கும்போது, ஒரு தூக்கணாங்குருவியை அலி பார்த்தார். அந்தக் குருவி அவரிடம் ஏற்படுத்திய ஆர்வம் அதன்பிறகு, அந்தக் குருவிகளைப் பற்றி ஏராளமான ஆய்வுகளில் ஈடுப்படவைத்தது. கேரளாவில் சலீம் அலி வந்தபோது திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் சலீம் அலிக்கு பறவை ஆய்வுக்கு 45,000 ரூபாயை வெகுமதியாகத் தந்தன. தென்னிந்தியாவின் அழகொழுகும் மலைத்தொடர் சலீம் மனதைக் கவர்ந்தது. தன்சுயசரிதை நூலில் சலீம் அலி இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். பெரியாறு நதிக்கரையில் தட்டக்காடு பகுதியின் இயற்கை வனப்பு அவர் மனதைக் கொள்ளைகொண்டது. அவருடைய பெயராலேயே இன்று அது வழங்கப்படுகிறது. கேரளாவில் அவருடைய பறவைகள் ஆய்வு  மக்களிடையே செல்வாக்கு பெற்றதாக இருந்தது. 1939-ல் சலீம் அலிக்கு உற்ற துணையாக இருந்துவந்த அவருடைய மனைவி தெஹ்மினா ஒரு சிறு அறுவை சிகிச்சைக்குப்பின் மரணம் அடைந்தார். இந்தப்பிரிவு சலீம் அலியை மிகவும் பாதித்து. இதற்குப் பிறகு சலீம் அவருடைய சகோதரி காமூ குடும்பத்தாருடன் வசிக்க ஆரம்பித்தார். சலீம் அலி, மனைவி இறந்தபிறகு தன் முழுநேரத்தையும் பறவை ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார்.

மலைக்காடை (Mountain Quail ) என்ற பறவையைப் பற்றிய ஆய்வுகளில் சலீம் அலியால் முழுமையாக வெற்றிகாண முடியவில்லை. இன்று வரையும் அந்தப் பறவையைப் பற்றி அதிக விவரங்கள் அறியப்படவில்லை. பின்னர், சலீமுக்கு பறவைகளைப் படம் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. ஜிப்சன் என்ற பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருந்த Loke Wantho என்பவருடன் இணைந்து பறவைகள் படம் எடுப்பதில் ஈடுபட்டார். சலீம் அலிக்குப் பறவைகளை அவற்றின் இயற்கையான சூழ்நிலையிலேயே ஆராய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. Loke-டன்சேர்ந்து சலீம் பறவைகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். சலீம் அலி பல முதுகலை மாணவர்களையும், பல முனைவர் பட்ட மாணவர்களையும் பறவையியல் பிரிவில் வழிகாட்டியாக இருந்து சிறந்த முறையில் வழிநடத்தினார். இந்தியாவில் பறவை ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைய சலீம் அலியின் பங்கே அதிகம். பறவையியல் தொடர்பாக நிதி உதவிகள் கிடைப்பதற்கு காரணகர்த்தாவாக அவர் இருந்தார். ICAR- Indian Council for Agriculture Research-ல் பறவையியல் தொடர்பாக பொருளாதாரப் பிரிவு ஒன்றைத் தொடங்க காரணமாக இருந்தார்.சுதந்தர இந்தியாவில் பறவைகள் பாதுகாப்பில் சலீம் அலியின் பங்கு மகத்தானது. அப்போது பிரதமர்களாக இருந்த நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் ஆதரவுடன் சலீம் அலி இந்தியாவில் பறவைகள் குறித்து ஆய்வுகளை மேம்படுத்த பணியாற்றினார். இந்திரா காந்தி அவர்களே பறவைகள் பற்றி அறிவதில் ஆர்வம்கொண்டவர். 1942-ல் இந்திரா காந்தி, நைனிடால் சிறையில் இருக்கும்போது, டோராடுன் சிறையில் இருந்த நேரு சலீம் அலி எழுதிய ‘இந்திய பறவைகள்‘ (The Book of Indian Birds ) என்ற புத்தகத்தைப் பரிசாக அனுப்பிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சலீம் அலி, பரத்பூர் (ராஜஸ்தான்) பறவைகள் சரணாலயத்தை வடிவமைப்பதிலும், அமைதிப் பள்ளத்தாக்கு (கேரளா) தேசியப் பூங்கா உருவாவதிலும் முத்திரைகள் பதித்தார். மதநம்பிக்கைகள் அறிவியலுக்கு குறுக்கீடாக இருக்கக்கூடாது என்று கருதினார். வேட்டையாடுதலைக் கடுமையாக எதிர்த்த சலீம், அதே நேரத்தில் ஆராய்ச்சிக்காக சில பறவைகளை நாம் தியாகம் செய்துதான் ஆக வேண்டும் என்ற கருத்தும் கொண்டிருந்தார். முதன்முதலில் பறவைகுறித்த சிந்தனைகளுக்கு தன்னை தூண்டிய அந்தக் குருவியின் கதறலுக்கு நியாயம் சேர்ப்பதுபோல இருந்தன அவரின் செயல்பாடுகள். 1960-களில் இந்தியாவின் தேசியப் பறவையாக எந்தப் பறவையைத் தேர்ந்தெடுப்பதென்பது குறித்து ஆலோசனைகள் நடந்தன. சலீம் அலி ஆபத்தான நிலையில்அழிந்துகொண்டிருந்த கானமயில் (The Great Indian Bustard ) பறவையைத் தேசியப்பறவையாக வைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தார். ஆனால் Pea Fowl தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. அங்கீகாரங்களும், பட்டங்களும் தாமதமாக கிடைத்தாலும், பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை கொடுத்து கௌவுரவித்தன. 1967-ல் சலீம் அலி The Gold Medal of British Ornithalogist விருது பெற்ற முதல் வெளிநாட்டுக் குடிமகன் என்ற பெருமையைப் பெற்றார். 1969-ல் ஜான்.சி.பிலிஸ் அமைப்பால் வழங்கப்படும் சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு union-க்கான நினைவு மெடலை பெற்றார். இந்திய அரசு சலீம் அலியை 1958-ல் பத்ம பூஷன் விருது வழங்கியும், 1976-ல்பத்ம விபூஷண் வழங்கியும் கௌரவித்தது.1985-ல் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசாங்கம் அவருடைய மறைவுக்குப் பின் கோவையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தை (Salim Ali Centrefor Ornithology and natural history) நிறுவியது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் சலீம் அலி சுற்றுச்சூழல் மற்றும் சூழல் அறிவியல் பள்ளியை (SalimAli School of ecology and environmental sciences ) நிறுவியுள்ளது. கோவா அரசு சலீம் அலியின் பெயரில் பறவைகள் சரணாலயம் அமைத்துள்ளது. கேரளாவில் வேம்பநாடு பகுதியில் உள்ள தட்டக்காடு பறவைகள் சரணாலயம், அவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது. பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனம் மும்பையில் அமைந்துள்ள பகுதிக்கு சலீம்அலி சவுக் என்று பெயரிடப்பட்டுள்ளது. கிட்டி தொங்கலாங்யா என்பவர் பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனத்தில் இருந்த ஒரு அபூர்வமான வௌவாலுடைய மாதிரியைக் கண்டறிந்தார். அதற்கு அவர் Latidens Salim Ali என்ற பெயரிட்டார். இந்த அபூர்வ வௌவால் இனம் அவ்வகை ஜீன் இனத்திலேயே (Genus latidens) தற்போது உலகில் இருக்கும் ஒரே மாதிரி வடிவம் ஆகும். மரங்கொத்திகளில் ஒரு துணை இனத்துக்கு 1972-ல் சலீம் அலியின் நினைவாக Dinopium Benghalense Tehminae என்று விசிலராலும், கின்னோர் என்ற பறவை ஆர்வலராலும் பெயரிடப்பட்டது. சலீம் அலி பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனத்தின் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை, பறவைகள் பற்றிய அறிவை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியதோடு, விழிப்பு உணர்வையும் உண்டாக்கியது. அவர் எழுதிய பல படைப்புகள் இன்னும் அச்சிடப்படாமலேயே உள்ளன.1930-ல் அவர் எழுதிய ‘Stoppingby the Woods on a Sunday Morning என்ற கட்டுரை 1984-ல் அவருடைய பிறந்தநாளன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் மறுபடியும் வெளியிடப்பட்டது. சலீம் அலியின் படைப்புகளிலேயே மிகவும் புகழ்பெற்ற புத்தகமான ‘The Book of Indian Birds' விசிலர் எழுதிய ‘Popular handbook of birds’ என்ற நூலின் பாணியில் எழுதப்பட்டது. 1941-ல் வெளிவந்த இந்தப் புத்தகம் உடனடியாக 46,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்ததுடன், பல இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

1964-ல் சலீம் அலி எழுதத்தொடங்கி 1974-ல் நிறைவு செய்த பத்து தொகுதிகள் அடங்கிய, ``பறவைகள் பற்றி அறிவியல் உலகின் பைபிள்" என்று வர்ணிக்கப்படும் 'The Hand Book of birds of india and Pakistan' என்ற புத்தகத்தின் முதற்பதிப்பு இன்றும் போற்றி பாதுகாக்கப்படுகிறது. இந்த நூலின் இரண்டாம் பதிப்பு அவருடைய மறைவுக்குப்பின் மற்றவர்களால் திருத்தம் செய்யப்பட்டு ,வெளியிடப்பட்டது. சலீம் அலி பல பிராந்திய பறவை ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். அவை ‘TheBirds kutch’, `Indian hill birds', ‘The birds of kerala’, `The birdsof Sikkim', `Hand Book of Indian Birds’  போன்றவை ஆகும். இது தவிர சலீம் அலி சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் `Commom Birds' என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்த நூல் இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நூல் ஆகும்.1985-ல் சலீம் அவருடைய சுய சரிதையான  `ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' நூலை எழுதினார்.சலீம் அலி எழுதிய எழுத்துகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பு அவருடைய கடைசி மாணவர்களில் ஒருவரான தாரா காந்தி என்பவரால் தொகுத்து 2007-ல்வெளியிடப்பட்டது. பங்களாதேஷ் அரசு, சலீம் அலியைத் தனது நாட்டின்‘சுற்றுச்சூழல் காவலனாக மதித்துப் போற்றியது. `The Book of Indian Birds' என்ற புத்தகமே ஒரு இயற்கை வரலாற்றுப் பெட்டகம் ஆகும். பறவை ஆராய்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த சலீம் அலி என்ற மனிதகுலத்தின் மகத்தான உயிர்ப்பறவை 1987 ஜூன் 20-ம் நாள் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இவ்வுலகத்தை விட்டு நிரந்தரமாகப் பறந்துபோனது.

பறவைகள் ஆராய்ச்சியில் உலகத்தின் முன்னால் இந்தியாவைத் தலைநிமிர்ந்து நிற்கவைத்த அந்த மாமனிதன் `இந்தியாவின் பறவை மனிதன்“ என்று போற்றப்படுவது பொருத்தமானதே. ஒரு சிறிய காட்டுக் குருவியின் கண்களில் வீசிய கடைசி நிமிஷ ஒளிபட்டு தன்வாழ்க்கையே அந்தப் பறவைகளின் உலகத்துக்காக ஒளி உமிழும் மெழுகாக மாற்றிக்கொண்ட அந்த மனிதனை இந்தியர்களாகிய நாம் விடிகாலையில் நம்மை எழுப்பும் காக்கை குருவிகளில் இருந்து இரவின் தனிமையில் இருக்கும்போது வானில் குரல் எழுப்பிச் செல்லும் ராத்திரி பறவைகள் வரை ஒவ்வொரு பறவையைப் பார்க்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும். ``பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்" என்று போற்றப்படும் சலீம் அலியின் வாழ்விலிருந்து நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியது ஒன்று இருக்கிறது. இவர் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கியபோது இவரிடம் அபரிதமான நிதிமூலமோ, அல்லது உதவக்கூடிய நபர்களோ இல்லை. ஆனாலும், பறவைகள் மீதான காதலால் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தார். நம் இலக்கும், அதன் மீதான காதலும் நம்மை எந்த உயரத்துக்கும் அழைத்துச்செல்லும் என்பதற்கு இந்த 'பக்ஷி ராஜனே' முழு உதாரணம்!

Photo Courtesy: Salim Ali Foundation

அடுத்த கட்டுரைக்கு