Published:Updated:

"வன ஊழியர்களுக்குச் சவாலாக நின்றது விநாயகன் யானை!" - கோவை வன அலுவலர் பெருமிதம்

"வன ஊழியர்களுக்குச் சவாலாக நின்றது விநாயகன் யானை!" - கோவை  வன அலுவலர் பெருமிதம்
"வன ஊழியர்களுக்குச் சவாலாக நின்றது விநாயகன் யானை!" - கோவை வன அலுவலர் பெருமிதம்

இது மக்களோட மக்களாகப் பழகிய யானை. அதனால்தான் எளிதில் பிடித்துவிட்டனர். இங்குள்ள வனப்பகுதியில் நீர், உணவு கிடைக்கிறதா என்பதை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, யானைகளுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

``அவன் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். எதிர்ல குழந்தைங்க வந்தாகூடத் தொடமாட்டான். `கையெடுத்து போடா ராசா'னு சொன்னா, போய்டுவான். அவன வேற இடத்துக்கு மாத்தறது கஷ்டமா இருக்கு“ விநாயகன் யானையைப் பற்றிக் கேட்டவுடன் பெரும்பாலான கோவை மக்கள் உதிர்க்கும் வார்த்தைகள் இவை...

விநாயகன்

விநாயகன். கோவை மாவட்டத்தில் இருந்த மிகப்பெரிய ஆண் யானை. கம்பீரமான தோற்றம். அமைதியான குணம். மாங்கரை, தடாகம், பெரியதடாகம், ஆனைக்கட்டி பகுதிகளில் காட்டு யானைகளுக்கு அதன் குணநலன்களைப் பொறுத்து பெயர்சூட்டுவது வழக்கம். மிகவும் அமைதியாக இருப்பதால் இந்த யானைக்கு விநாயகன் என்று கடவுளின் பெயரைவைத்தனர். விநாயகனைவிடச் சிறிய உருவம், அதேநேரத்தில், படுசுட்டி என்பதால் மற்றொரு யானைக்கு சின்னதம்பி என்று பெயரிட்டனர்.

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல யானைகள் வந்தாலும், இந்த இரண்டு யானைகளும்தாம் மக்களிடம் பிரபலம். ``இந்த யானைகளைக் கேரளாவில் யாரோ வளர்த்து, இங்கே கொண்டுவந்துவிட்டுள்ளனர். மனிதர்களுடன் நன்கு பழகியதால்தான், அது நம்மைத் தாக்குவதில்லை” என்றெல்லாம் இந்த இரண்டு யானைகள் குறித்துப் பேசப்பட்டன. அதேநேரத்தில், விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்துவதாக இந்த யானைகள்மீது புகார் கூறப்பட்டது. இந்த இரண்டு யானைகளையும் இடமாற்றம் செய்வதற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சமூக வலைதளங்களில் #SaveChinnathambi, #Save Vinayagan ஹேஷ்டேக்குகள் வைரலாகின.

ஆனால், வனத்துக்குள், அதற்கு என்ன பிரச்னை என்று ஆய்வு செய்யாமலேயே விநாயகன் முதுமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டான். அடுத்ததாக சின்னதம்பி யானைக்கும் ஸ்கெட்ச் போட்டுவிட்டனர். விநாயகன் மற்றும் சின்னதம்பி யானைகள் குறித்து கேட்டால், ஒவ்வொரு மக்களும் ஓராயிரம் நெகிழ்ச்சிக் கதைகளைச் சொல்கின்றனர்.

``இது அருமையான யானை. நண்பன்னா நண்பன். இந்த யானை சில ஆண்டுகளுக்கு முன்பு குடல்புழு நோயால் பாதிக்கப்பட்டபோது பொது

மக்களும், வனத்துறையும் சேர்ந்துதான் அதிலிருந்து விநாயகனை மீட்டோம். அப்போதிலிருந்து பொதுமக்கள் யாரையும் இந்த யானை சீண்டாது. இந்த ஏரியாவில் தண்ணீர் பிரச்னை அதிகம்.  தண்ணீர் அதிகம் இருக்கும்போது, யானைகள் இங்கே வராது. தண்ணீருக்காகத்தான் இங்கே வருகிறது. அப்படி வரும்போது ஏதாவது சாப்பிடும். ஆனால், இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது. இரவு வந்தால், விடியும்போது மீண்டும் வனப்பகுதிக்குச் சென்றுவிடும்.

தொடர்ந்து விரட்டியதால் ஒருமுறை வனத்துறை ஊழியரைத் தாக்கியது. அவ்வளவுதான். இது மக்களோட மக்களாகப் பழகிய யானை. அதனால்தான் எளிதில் பிடித்துவிட்டனர். இங்குள்ள வனப்பகுதியில் நீர், உணவு கிடைக்கிறதா என்பதை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, யானைகளுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்கிறார் மாணிக்கராஜ்.

வன வேட்டைத் தடுப்புக் காவலர்களின் மாநில அமைப்பாளர் சுந்தர்ராஜ், ``மருதமலை டு காரமடைதான் விநாயகனின் ஏரியா. குறிப்பாக, கடந்த 6 மாத காலமாக இந்த யானையுடன் நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம். விநாயகனைப் பொறுத்தவரை எங்களுடைய வன ஊழியர்களுக்குச் சவாலாக எதிர்த்து நிற்கும். பட்டாசுக்கு எல்லாம் பயப்படாது. அசால்டாக நிற்கும். ஒரு குழந்தை மாதிரிதான் அதை நாங்கள் கையாள்வோம். எங்களுடைய வன வேட்டைத் தடுப்புக் காவலர் ஒருவர் இறந்திருந்தாலும், மற்றபடி இதனால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. விநாயகன் இப்படி லாரியில் நிற்பதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதை இடமாற்றம் செய்வது வருத்தம்தான். இருந்தாலும் இனியாவது இந்தப் பட்டாசு, சைரன் சத்தங்கள் இல்லாமல் வனத்தில் ராஜாவாக நிம்மதியாக வாழ்வதற்கு வன வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சார்பில், விநாயகனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

 ``சின்னதம்பிதான் கொஞ்சம் சேட்டை பண்ணுவான். ஆனா, விநாயகன் ரொம்ப அமைதியா இருப்பான். விநாயகன் வந்துருக்கானு தெரிஞ்சாலே ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து, வண்டி பிடிச்சுபோய் வேடிக்கை பார்ப்போம். போட்டோ எடுப்போம். பக்கத்துல இருந்துகூடப் பார்ப்போம். எங்களுக்கான ஒரே பொழுதுபோக்கு விநாயகனையும், சின்னதம்பியையும் ரசிப்பதுதான். சமூக வலைதளங்களில்கூட இந்த யானைகள் குறித்துதான் போட்டோ, வீடியோ போடுவோம். பயிர்ச் சேதம் என்பது தவறுதான். அந்த ஒரே காரணத்துக்காக இவற்றை இடமாற்றம் செய்வதும் தவறுதான். இவற்றால், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை ஒரு நல்ல நண்பனைப் பிரிந்துவிட்டோம். சின்னதம்பியையும் இடமாற்றம் செய்துவிட்டால் எங்களது நிலைமை மிகவும் கஷ்டம்” என்று முடித்தார் கல்லூரி மாணவர் சரவணன்.

``ஆக்கிரமிப்பு, கனிமவளச் சுரண்டல்கள் என்று கோவை வனப்பகுதியும், வனவிலங்குகளின் வாழ்விடமும் சிதைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாங்கரை, தடாகம், சின்னத்தடாகம் பகுதிகளில் செங்கல்சூளைகளுக்காகப் பல நூறு அடிகளுக்கு ராட்சதக் குழிகள் தோண்டப்படுகின்றன. யானை வழித்தடங்களில் கான்கிரீட் காடுகள் முளைத்துவருகின்றன. இதெல்லாம் தெரியாமல் தங்களது முன்னோர்கள் காட்டிய பாதையில் வரும் யானைகளை, வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வைக் கொடுக்காது. மேலும், வனத்தைக் காக்கும் வனவிலங்குகளை அடுத்தடுத்து வேறு இடத்துக்கு மாற்றுவது கோவைக்கும் நல்லதல்ல" என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

மனித – விலங்கு மோதல்களில் எப்போதும் மனிதனே வெற்றிபெறுவான். அதற்குச் சமீபத்திய உதாரணம்தான் விநாயகனும், சின்னதம்பியும்.

அடுத்த கட்டுரைக்கு