Published:Updated:

``மனிதர்கள் என்ன செய்து வைத்திருக்கிறோம் எனத் தெரியுமா?!" - பல்லுயிர்ச் சூழலின் ஆபத்து

``மனிதர்கள் என்ன செய்து வைத்திருக்கிறோம் எனத் தெரியுமா?!" - பல்லுயிர்ச் சூழலின் ஆபத்து

கல்லூரியும் அதற்கான சாலையும் அந்தப் பகுதியில் கடைகளை வரவைக்கும். அந்தக் கடைகள் அங்கு குடியிருப்புகளை ஏற்படுத்தும். அதற்கு சாட்சியாக இப்போதே அங்கு சில இடங்களில் விற்பனைக்கான வீட்டுமனைகளைக் காணமுடிந்தது.

``மனிதர்கள் என்ன செய்து வைத்திருக்கிறோம் எனத் தெரியுமா?!" - பல்லுயிர்ச் சூழலின் ஆபத்து

கல்லூரியும் அதற்கான சாலையும் அந்தப் பகுதியில் கடைகளை வரவைக்கும். அந்தக் கடைகள் அங்கு குடியிருப்புகளை ஏற்படுத்தும். அதற்கு சாட்சியாக இப்போதே அங்கு சில இடங்களில் விற்பனைக்கான வீட்டுமனைகளைக் காணமுடிந்தது.

Published:Updated:
``மனிதர்கள் என்ன செய்து வைத்திருக்கிறோம் எனத் தெரியுமா?!" - பல்லுயிர்ச் சூழலின் ஆபத்து

திகாலை 5.30 மணியிருக்கும். அனைவரும் கிளம்பினோம். மூன்று பேருந்துகள். ஒவ்வொரு பேருந்தும் ஒவ்வோர் இடத்துக்குச் செல்கிறது. அய்யனார் அருவி, ராஜபாளையம் அணை, அய்யனார் கோயில் சாலையில் அமைந்துள்ள ராம்கோ பொறியியல் கல்லூரி. அந்த மூன்று இடங்களும்தாம் அன்று நாங்கள் பறவை நோக்குதலுக்குத் தேர்ந்தெடுத்த பகுதிகள். ராஜபாளையத்தில் நடைபெற்ற தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பின் ஒருபகுதியே இந்தப் பறவை நோக்குதல். பறவை நோக்குதல் என்பது பறவைகளின் வாழ்விடங்களுக்குச் சென்று அவற்றைக் கவனிப்பது. பல்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்கள் மற்றும் அவர்களோடு சாதாரண மக்களும் சேர்ந்து அப்படிக் கவனிப்பதன் மூலம் அவற்றைப் பற்றிய புதுப்புது பதிவுகள் கிடைக்கும். துறை சார்ந்தவர்களுக்குத் தெரியாததுகூட மக்கள் தினசரி பார்ப்பதன் மூலம் தெரிந்து வைத்திருப்பர். அவை ஆய்வுகளுக்கும் பயன்படும், பறவைகள் வரவு அதிகமிருக்கும் பகுதிகளைச் சூழலியல் ரீதியாகப் பாதுகாக்கவும் பயன்படும். பொதுமக்கள் மத்தியிலும் பறவை நோக்குதலை வளர்ப்பது மிக அவசியமானது. மக்கள் அதைக் கவனிக்குமாறு செய்துவிட்டாலே போதும். மற்றதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஆழ்வார்குறிச்சியின் வாகைக்குளம் அதற்குச் சிறந்த உதாரணம். போராட்டங்களின் வழியே அந்தக் குளத்தைக் காப்பாற்ற அப்பகுதி மக்களைத் தூண்டியது பறவை நோக்குதலே. அங்கு வருகைதரும், அங்கேயே வாழும் பறவைகளைப் பற்றித் தெரிந்திருந்ததால் மட்டுமே அந்த மக்கள் அழிக்கப்படவிருந்த குளத்தைக் காப்பாற்றி இன்று பறவைகளின் நிரந்தரமான வாழிடமாகத் தக்கவைத்துள்ளார்கள். மக்கள் அதைத் தெரிந்துகொள்ள வித்திட்டது அவர்கள் பார்த்த பறவைகள். அத்தகைய ஒன்றை ராஜபாளையம் மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக, தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பின் ஒருபகுதியாக நடைபெற்றது.

அதில் நாங்கள் சென்றது ராம்கோ பொறியியல் கல்லூரிக்கு. அந்தக் கல்லூரி வளாகத்துக்கு உள்ளும் அதைச் சுற்றியும் அமைந்திருக்கும் குன்றுகளும் கரடுகளும் புதர்க்காடுகளும் பல்வகைப் பறவைகளுக்கு வாழ்வாதாரமாக அமைந்திருக்கிறது. அன்றைய தொடக்கமே கொம்பன் ஆந்தையோடுதான். ஆனால், ஆந்தையைப் பார்த்தவுடன் அங்கு அந்தச் சூழலில் மனிதர்கள் நடமாட்டம் அதிகமானால் ஏற்படும் விளைவுகள் குறித்த அச்சமும் தொற்றிக்கொண்டது.

அதைப் பார்க்கையில் மனதுக்குள் ஏற்பட்ட நெருடலுக்குக் காரணமும் இருக்கத்தான் செய்தது. கல்லூரிக்காகப் போடப்பட்டிருந்த தார்ச்சாலையில் நின்றுதான் பார்த்துக்கொண்டிருந்தோம். கம்பிவேலி போடப்பட்டிருந்த அந்த வனப்பகுதியை யொட்டித்தான் கல்லூரிக்கான சாலை போகின்றது. அந்தப் பகுதியில் எந்தவித வீடுகளோ குடியிருப்புகளோ காணப்படவில்லை. அது உலர்ந்த இலையுதிர் காடு. சமீப காலமாகக் கல்லூரிகளும் பள்ளிகளும் நகரத்திலிருந்து தள்ளி அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இப்படியோர் இயற்கையான சூழலில்தான் அமைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலை, சுத்தமான காற்றைத் தொலைத்துக்கொண்டிருக்கும் நாமும் குழந்தைகள் அப்படியோர் அமைதியான சூழலில் படிப்பதையே பெரிதும் விரும்புகிறோம். நமக்குள் விதைக்கப்பட்ட அந்த விருப்பங்கள்தாம் நிறுவனங்களுக்கு நீரூற்றி வளர்த்துவிட்டது. அவர்களும் மலை அடிவாரங்கள், அமைதியான புதற்காடுகளைத் தேர்ந்தெடுத்துக் கட்டுமானங்கள் அமைக்கிறார்கள். அந்தக் கட்டுமானங்களுக்குச் செல்வதற்குத் தேவைப்படும் சாலைகளும் காட்டை ஊடறுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஏனென்றால் அவை அமைவதே காட்டுக்குள் அல்லவா!

வனத்துறை பாதுகாக்கும் வனப்பகுதிகளையே காடுகள் என்று சொல்லிப் பழகிவிட்டோம். மனிதர்கள் வாழும் பகுதிகளைச் சுற்றியும் பல காடுகள் உள்ளன. நம்மருகே இருக்கும் அடர் மரங்களையும், புதர்ச்செடிகள் நிறைந்த நிலப்பகுதிகளையும் காடாகக் கருதுவது சிரமம்தான். என்ன செய்வது, அவையும் காடுகள்தாம். அவையும் பாதுகாக்கப்பட வேண்டியவைதாம். அதை மறுக்கமுடியாது. அப்படியொரு காட்டை வெட்டிச்செல்லும் கல்லூரிச் சாலையில் நின்றுதான் அதன் ஒருபுறமிருந்த காட்டுக்குள் பாறையின்மீது அமர்ந்திருந்த கொம்பன் ஆந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

கல்லூரியும் அதற்கான சாலையும் அந்தப் பகுதியில் கடைகளை வரவைக்கும். அந்தக் கடைகள் அங்கு குடியிருப்புகளை ஏற்படுத்தும். அதற்கு சாட்சியாக இப்போதே அங்கு சில இடங்களில் விற்பனைக்கான வீட்டுமனைகளைக் காணமுடிந்தது. அந்த மனைகளைப் பார்க்கையில் சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற நகரங்களின் புறநகர்ப் பகுதிகளே நினைவுக்கு வந்தன. அவையும் முன்னர் இதைப்போன்ற காடுகளாகவே பல்வகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவே இருந்தன. சென்னைப் புறநகர் சாலைகள், கோவை-பாலக்காடு சாலைகள், பெருந்துறை-ஈரோடு சாலைகள் இதுமாதிரியான ஊடுருவல்களால் உருவான குடியிருப்புகளும் அவற்றால் வளர்ந்த குறுநகரங்களும் நிறைந்தவை. அந்த ஊடுருவல்கள் முதலில் சாலையாக, கடைகளாக, வீட்டுமனைகளாக உருவெடுக்கிறது. நீர்நிலைகளைச் சீரழிக்கிறது. சிறிது சிறிதாக அப்பகுதியின் பல்லுயிர்ச்சூழலை அழித்து மனிதர்கள் மட்டுமே வாழும் ஓருயிர்ச் சூழலாக மாற்றிவிடுகிறோம். அந்தச் சூழல் மற்ற உயிரினங்களைப் பற்றிக் கவலைப்படாததாகவே எப்போதும் இருக்கிறது. அப்படி இருப்பதால்தான் அதை ஓருயிர்ச் சூழல் என்கிறேன். 

சென்னையின் பழைய மகாபலிபுரம், கிண்டி போன்ற சாலைகள் அனைத்துமே ஓருயிர்ச்சூழல் நிறைந்தவையே. அங்கு அடிக்கடி காட்டுப்பூனைகளும், மான்களும் விபத்துக்குள்ளாகின்றன. அவற்றுக்குக் காரணம் அந்த விலங்குகள் சாலைகளுக்கு வந்ததால் என்று நினைக்கிறோம். உண்மை அப்படியான இழவுகள் நிகழ்வது நாம் அவற்றின் வாழ்விடத்துக்குள் போட்டுக்கொண்ட சாலைகளால். அந்த மாதிரியான சாலையில் நின்றுதான் நான் கொம்பனைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அது பாட்டுக்குச் சாலையிலிருந்து தள்ளியிருக்கும் பாறையில்தானே அமர்ந்துள்ளது என்று அப்படியே கடந்துசெல்ல முடியவில்லை. அந்தப் பகுதியின் பூச்சிகளைப் பிடிக்கத் தவளைகளும் சிறுபறவைகளும் வாழும். அவற்றை வேட்டையாடப் பாம்புகள் வாழ்கின்றன. அந்தப் பாம்புகளை கொத்திக்கொண்டு போகத்தான் கொம்பன் காத்துக்கொண்டிருந்தது. அதிகமான காட்டுயிர்கள் இரவில்தான் வெளியே வரும். அப்போது இந்த உயிர்களில் பூச்சிகள் வெளிச்சத்தைத் தேடிச் செல்லும். சாலையின் மின் விளக்குகளும், வாகன வெளிச்சங்களும் அவற்றை ஈர்க்கவே பூச்சிகள் அதை நோக்கிச் செல்லும். அதைச் சாப்பிடத் தவளைகளும், சிறுபறவைகளும் செல்லும். அதைத் தொடர்ந்து பாம்புகள், அவற்றைத் தொடர்ந்து கொம்பன் போன்ற ஆந்தைகள். இதே தொடர்ச் சங்கிலியில் அவை அனைத்துமே சாலைக்கு வரும். அங்கு கடந்துபோகும் வாகனங்களின் சக்கரங்கள் அவற்றைச் சுரண்டியெடுத்தவாறு சீறிப்பறக்கும். இருபுறமும் இயற்கை ததும்பும் சூழலில் வாகனம் ஓட்ட அனைவருக்கும் ஆசைதான். அந்த ஆசைக்கு நாம் பலிகொடுக்கும் உயிர்களின் மதிப்பையும் அறிந்தபிறகு அந்த ஆசைகளை அமல்படுத்துவோம். அப்போது கொஞ்சமாவது எச்சரிக்கை உணர்வு வரும்.

அந்தக் கல்லூரிச் சாலை அமைந்திருந்த இடம் முழுவதும் சிட்டு வகைப் பறவைகள் அதாவது புள்ளினங்கள் அதிகம் வாழும் பகுதி. நாங்கள் பறவை நோக்குதலுக்காகச் சில மணிநேரங்களே சென்றிருந்தோம். அந்தச் சில மணிநேரங்களிலேயே பல்வகைச் சிட்டுகளையும், சிற்றுயிர்களையும் வேட்டையாடிப் பறவைகளையும் பார்க்கமுடிந்தது. கதிர்குருவி, தவிட்டுக் குருவி, சிறிய தவிட்டுப் புறா, தேன் சிட்டு, தையல் சிட்டு, உன்னிக் கொக்கு, குருட்டுக் கொக்கு, அரசவால் ஈப்பிடிப்பான், நீளவால் கீச்சான் போன்ற வகைப் பறவைகளைச் சாலையில் நின்றவாறே பார்க்கமுடிந்தது. சாலையைத் தாண்டி புதர்க்காடுகளை ஊடுருவிச் சென்றோம். அங்கும் பல்வகைப் புள்ளினங்களைப் பார்க்கமுடிந்தது.

தேன்சிட்டுகளின் கூடுகளையும், நிலத்தில் புதர்களுக்குள் கூடமைக்கும் இரவுப்பக்கிகளின் கூடுகளையும் பார்க்கமுடிந்தது. அதுபோகத் தெற்கத்திப் புதர்பாடி, செம்மீசைச் சின்னான், வெண்புருவச் சின்னான் போன்ற சின்னான் வகைப் புள்ளினங்கள், நீலமுகப் பூங்குயில், மாங்குயில், பனங்காடை, கௌதாரி, கருப்பு அரிவாள்மூக்கன், சிறிய அரிவாள்மூக்கன் என்று எத்தனையோ வகைப் புள்ளினங்களைப் பார்க்கமுடிந்தது. அவ்வளவு பல்லுயிர்ச் சூழல் நிறைந்த பகுதியின் வழியில் வளர்ந்து கொண்டிருந்த வீட்டுமனைகளைப் பார்த்தேன். தினந்தோறும் நகர்ப்புறச் சாலைகளில் நிகழும் இழவுகள் ஒருநாள் அங்கும் நடைபெறும். அந்த மனைகள் அப்படி நடைபெறப்போகும் இழவுகளுக்கான இடுகாடாக மாறக் காத்துக்கொண்டிருக்குப்பதாகவே தோன்றியது.