Published:Updated:

காயமான கால்கள்.. மெலிந்த தேகம்.. மீண்டும் முதுமலைக்குத் திரும்பியது மசினி யானை!

காயமான கால்கள்.. மெலிந்த தேகம்.. மீண்டும் முதுமலைக்குத் திரும்பியது மசினி யானை!
காயமான கால்கள்.. மெலிந்த தேகம்.. மீண்டும் முதுமலைக்குத் திரும்பியது மசினி யானை!

திருச்சி சமயபுரம் கோயில் யானை மசினி, முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டுவரப்பட்டது.

முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்ட மசினி என்ற யானை, கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி சமயபுரம் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. கோயிலுக்குச் சென்ற நாளில் இருந்து அந்தச் சூழல் ஒத்துவராமல் மசினி யானையின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதனிடையே, கடந்த மே மாதம் மசினி யானை சமயபுரம் கோயிலில் வைத்து பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றது. முதுமலை போன்ற இயற்கையான சூழலில் வளர்ந்த மசினி யானையை, திருச்சிக்குக் கொண்டு சென்றதன் காரணமாகவே அதன் குணத்தில் மாற்றம் ஏற்பட்டு பாகனைக் கொன்றதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து மசினி யானையை முதுமலைக்கு மீண்டும் கொண்டுசெல்லக் கோரி  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

ஆனால், மசினி யானை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அது தஞ்சை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், மசினி யானையை மீண்டும் முதுமலைக்குக் கொண்டு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மசினி யானை நேற்று இரவு தஞ்சாவூரிலிருந்து லாரி மூலம் புறப்பட்டு இன்று மாலை முதுமலைக்குக் கொண்டு வரப்பட்டது. முகாமுக்குள் நுழைந்த யானைக்குக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பின்னர் அழைத்துச் செல்லப்பட்டது. ஆனால், மிகவும் சோர்வாக காணப்பட்ட மசினி யானை நடக்கவே மிகவும் சிரமப்பட்டது.

``யானைகளைக் காட்டிலேயே வாழவிட வேண்டும். கோயில் சூழ்நிலை யானைகளுக்கு ஏற்றதல்ல.  அதனால்தான், அதன் குணநலன் மாறியுள்ளன. குறிப்பாக, மசினியின் கால்களில் புண்கள் ஏற்பட்டு மிகவும் மெலிந்து காணப்படுகிறது. இதனால், மசினி கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, யானைகளைக் கோயில் வாசல்களில் நிறுத்துவதைத் தடை செய்ய வேண்டும்" என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்ரியா, ``மசினி யானை மீண்டும் தனது சொந்த வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மசினி யானைக்கு உடலில் காயங்கள் உள்ளன. இதனால், உடல்நலமும் குன்றி காணப்படுகிறது. யானைக்கு சிகிச்சை அளிக்க இரண்டு கால்நடை மருத்துவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். யானையைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யானையின் உடல்நலம் விரைவில் குணப்படுத்தப்படும்" என்றார்.