Published:Updated:

மலைவாழ் விவசாயிகள் Vs வனத்துறை... போராட்டச் சூழலில் தேனி!

மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து, விவசாயம் செய்துவரும் மலைவாழ் விவசாய மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறது மாவட்ட வனத்துறை. இதனால் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கி வருகிறது.

மலைவாழ் விவசாயிகள் Vs வனத்துறை... போராட்டச் சூழலில் தேனி!
மலைவாழ் விவசாயிகள் Vs வனத்துறை... போராட்டச் சூழலில் தேனி!

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களில் உள்ள மேகமலை வன உயிரின சரணாலயத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து, விவசாயம் செய்துவரும் மலைவாழ் விவசாய மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறது மாவட்ட வனத்துறை. மேகமலை மற்றும் தும்மக்குண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர், ராஜீவ் நகர், வெள்ளிமலை, காந்திகிராமம், வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், கோடாலியூத்து, காமராஜபுரம், பஞ்சதாங்கி, மஞ்சனூத்து, யானைகஜம், உப்புத்துறை ஆகிய கிராமங்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள மலைவாழ் விவசாய மக்களை மலையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் வனத்துறை இறங்கியுள்ளதால் தேனியில் எப்போது வேண்டுமானாலும் பதற்றமான சூழல் உருவாகும் நிலை உள்ளது.

அதன் ஒருபகுதியாக அ.ம.மு.க கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து கடந்த திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டனர். பலர், மலைக்கிராமங்களில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வரும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து அனுப்பினார் ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ். ஒரு பக்கம் மலை விவசாயிகளை வனத்துக்குள் இருந்து எப்படி வெளியேற்றுவது என வனத்துறை யோசித்துக்கொண்டிருக்க, அதை எப்படி எதிர்ப்பது என அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். மேற்கண்ட இவ்வளவு விவகாரங்களுக்கும் காரணம் கடந்த 2018 அக்டோபர் 10-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு. என்ன உத்தரவு அது? அதன் பின்னணி என்ன? 

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு:

மேகமலை வனப்பகுதி கடந்த 2009-ம் ஆண்டு வன உயிரின சரணாலயமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் (G.O M.S No-118) அவ்வனப்பகுதியில் வசித்து விவசாயம் செய்துவரும் மக்களின் வாழ்விடம் மற்றும் விவசாயப் பரப்புகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கொண்டுவரப்பட்டன. அதன் அடிப்படையில், அம்மக்களை வனத்துக்குள் இருந்து வெளியேறும்படி வனத்துறையால் அறிவுறுத்தப்பட்டது. பல தலைமுறைகளாக வசிக்கும் இடத்தைவிட்டு திடீரென வெளியேறச் சொல்வதை அம்மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அரசின் முடிவை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் செல்ல தயாரானார்கள். அப்போதைய அ.தி.மு.க, இப்போதைய அ.ம.மு.க-வைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், MVK ஜீவா, தங்கராஜ், K.R ராமச்சந்திர ராஜா ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2010-ம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தனர். அதில், பாரம்பர்யமாக, நான்கு தலைமுறைகளுக்கு மேலாக விவசாயம் செய்து வாழ்ந்துவரும் இடத்தை விட்டு வெளியேறச் சொல்லும் வனத்துறையின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. இவ்வழக்கானது பல்வேறு கட்டங்களைக் கடந்து, கடைசியாகக் கடந்த 2018 அக்டோபர் 10-ம் தேதி நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வுக்கு வந்தது.

அப்போது வாதிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், ``மேகமலை வன உயிரின சரணாலயத்துக்குள் 19 பழங்குடியின குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர். அதில் சிலர் விவசாயம் செய்கிறார்கள். மற்றவர்கள் வனத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு பருத்தி, கொட்டை முந்திரி மற்றும் வணிகப் பயிர்களை பயிர்செய்துவருகிறார்கள். சிலர், கஞ்சா போன்ற சட்டவிரோத பயிர்களையும் பயிர்செய்கிறார்கள். மரங்களையும் வெட்டிக் கடத்துகிறார்கள். இவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பகுதியானது வைகை ஆற்றின் பிறப்பிடம். ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வைகை ஆற்றின் பிறப்பிடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் பயிர் செய்துகொண்டிருப்பதால் மக்களின் குடிநீர் ஆதாரம் அழிக்கப்படுகிறது. மேலும் Bio Diversity முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அது. யானைகள், புலிகளின் வாழிடம். இவர்கள் ரிட் மனு தாக்கல் செய்திருப்பதால் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ரிட் மனுவானது சட்ட உரிமையுள்ள தனிப்பட்ட நபர்களால் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும். வனமானது தனிப்பட்ட யாருக்கும் உரிமையானது இல்லை. ஒட்டுமொத்த மனித குலத்திற்குச் சொந்தமானது. எனவே, ரிட் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

அதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, “ரிட் மனுதாரர்கள் கடந்த முறையும் ஆஜராகவில்லை. இந்த முறையும் ஆஜராகவில்லை. இந்த ரிட் மனுவானது பொதுநலன் சார்ந்தது மாதிரி தெரியவில்லை. அப்படி பொதுநலன் சார்ந்தது என்றால், வனத்தைக் காக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அபராதத்துடன் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மனுதாரர்கள் ஆஜராகவில்லை என்பதனால், இந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்கிறேன். இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” என்றார்.

வனத்துறைக்கு கிரீன் சிக்னல்:

நீதிபதியின் கண்டிப்பும் அதிரடி தீர்ப்பையுமே வனத்துறை எட்டு ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்தது. காரணம் புலிகள் காப்பகம் என்ற அதன் இலக்கு! மேகமலை வன உயிரின சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் இரண்டையும் இணைத்து, மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் என்ற பெயரில் புலிகள் காப்பகத்தை அமைக்கத் தீவிரம் காட்டிவருகிறது வனத்துறை. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்ட வனத்துறைக்கு, இடைஞ்சலாக இருந்தது மேகமலையில் உள்ள மலைவாழ் விவசாய மக்கள்தான். நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து விவசாயம் செய்துவரும் அம்மக்களை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என வனத்துறைக்கு நன்கு தெரியும். நீதிமன்றத்தில் இருந்த ரிட் மனுக்கள் வனத்துறையை மேலும் அமைதியாக்கியிருந்தது. தற்போது பெறப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பானது இதுநாள் வரை மலையில் விவசாயம் செய்தவர்களை வன ஆக்கிரமிப்பாளர்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது மட்டுமல்லாது, அவர்களைச் சட்ட ரீதியாக வெளியேற்றவும் வழிவகுக்கும். அதற்கான வேலைகளில் வனத்துறை தீவிரமும் காட்டிவருகிறது. மூன்று நாள்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவை வனப்பகுதியில் உள்ள அம்மக்களிடம் அழைத்துச் சென்றது வனத்துறை. அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சித்தலைவர். “நான் அவர்களைச் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியவே அங்கு சென்றேன்! அவர்களை நான் வனத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று சொல்லவில்லை” எனப் பத்திரிகையாளர்களிடம் கூறினார் அவர்.

``அவ்வளவு எளிதில் நான் உங்களைக் கைவிட மாட்டேன். எப்போதும் உங்களுடனே இருப்பேன். அது நம் இடம். நாம் ஏன் வெளியேற வேண்டும்?” என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் பேசினார் தங்க தமிழ்ச்செல்வன்.

``உயர் நீதிமன்றம் அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில், வனச்சட்டம் 1882 மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், வன உரிமைச் சட்டம் 2006-ன் படி 2005-க்கு முன் 75 வருடம் வனத்துக்குள் வாழ்ந்த மக்களுக்கு அவர்களின் நிலம் சொந்தம் என்கிறது. அம்மக்கள் 75 வருடத்துக்கு மேலாக அங்கேதான் வாழ்ந்துவருகிறார்கள். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஓர் ஆணையம் அமைத்து விசாரணை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கலாம்” என்று நம்மிடம் தெரிவித்தார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சண்முகம்.

ஆதாரம் இருக்கிறது என்றால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கலாமே என நாம் கேட்டதற்கு, “தனிப்பட்ட நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் அது. நாங்கள் நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். சட்டப்படி இப்பிரச்னையை எதிர்கொள்வோம்” என்றார். 2006 வன உரிமைச்சட்டப்படி தங்களது இடத்துக்கான உரிமை கோரி, போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து மக்களும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

பதற்றமான சூழ்நிலையில் தேனி:

``வருடத்தில் எட்டு மாதங்கள் வைகை ஆற்றில் தண்ணீர் வரும். ஆனால், இப்போது ஒரு முறை தண்ணீர் வருவதே அதிசயம். வைகை ஆற்றின் பிறப்பிடமாக உள்ள மேகமலையில் விவசாயம் என்ற பெயரில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பல ஆயிரம் ஏக்கர் விரிந்துள்ள தனியார் எஸ்டேட்களை காலி செய்ய வேண்டும். அங்கிருக்கும் பெரும்பாலான மக்கள் கூலிவேலைக்குத் தனியார் எஸ்டேட்களுக்கு செல்பவர்கள்தான். அந்த எஸ்டேட் முதலாளிகள் அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்துள்ளனர். அவர்களின் தூண்டுதலில்தான் எல்லாம் நடக்கிறது. அவர்களை வனத்தில் இருந்து வெளியேற்றினால்தான் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வைகை ஆற்றை நம்மால் காப்பாற்ற முடியும்” என்கிறார்கள் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

``மேகமலையை முழுமையான ஓர் சரணாலயமாக மாற்ற முடியாமல் தடுத்துவைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கேட்டால் விவசாயம் செய்கிறோம், இது எங்கள் இடம் என்கிறார்கள். இதனால் சரணாலயம் உருவாவதும், தொடர்ந்து புலிகள் காப்பகம் உருவாவதும் தடைப்படுகிறது. எல்லாம் கணக்கிடப்பட்டிருக்கிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது” என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

``மக்களை நாங்கள் வெளியேற்றவில்லை என்கிறார்கள். ஆனால், எங்களுக்கு வனத்துறையிடம் இருந்து அதிக அழுத்தம் வருகிறது. சில இடங்களில் நேரடியாக மிரட்டல் விடுகிறார்கள். பயிர்களைச் சேதப்படுத்துகிறார்கள். ஏற்கெனவே எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல்தான் இங்கே இருக்கிறோம். வன விலங்குகளுக்கு மத்தியில், உயிரைப் பொருட்படுத்தாமல் காட்டுக்குள் இருக்கும் எங்களால் மட்டுமே வனத்தைக் காக்க முடியும். நாங்களும் இல்லை என்றால் வனத்துறை செய்யும் தவறுகளைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. அதனால்தான் எங்களை வெளியேற்றப் பார்க்கிறார்கள். நாங்கள் வெளியேற மாட்டோம். எங்களை வெளியேற்ற நினைத்தால் ஒட்டுமொத்த மலைக்கிராம மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். எங்கள் நிலத்தைக் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம். எங்கள் உயிரையும் கொடுப்போம்” என்கிறார்கள் மலைவாழ் விவசாய மக்கள்.

``கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகைப்போராட்டத்தில் கலந்துகொள்ள மேகமலை வனப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்களை போலீஸார் திட்டமிட்டு வழியிலேயே தடுத்துவிட்டனர். எந்தத் தடையும் இல்லாமல் அவர்கள் அனைவரும் வந்திருந்தால் குறைந்தது 3,000 பேர் வந்திருப்பார்கள். நிச்சயம் பிரச்னை உருவாகியிருக்கும். இதை அறிந்துதான், நான்கு டி.எஸ்.பி, 5-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், 10-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறை ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி ஒரு போலீஸ் பட்டாளம் எந்தப் போராட்டத்துக்கும் இதுவரை குவிக்கப்பட்டதே இல்லை. இதை வைத்தே இந்தப் பிரச்னையின் வீரியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வனத்துறையின் தீவிரம், அதி தீவிரமானால், நிச்சயம் அது பிரச்னைக்கு வழிவகுக்கும். வனத்துறைக்கும் அம்மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் அது ஓர் கலவரமாகக்கூட மாறலாம். இதை மாவட்ட நிர்வாகம் நன்கு அறியும். எனவே, முடிந்தவரை இப்பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஒருபக்கம் மலைவாழ் விவசாய மக்கள்; மறுபக்கம் வனத்துறை. மோதல் உருவானால், அது கலவரமாகும் வாய்ப்பு மிக அதிகம். என்ன செய்யப்போகிறது மாவட்ட நிர்வாகம்?