Published:Updated:

கஜா புயலின் தாக்கம் - தனுஷ்கோடி கரையோரத்தில் தாமதமாகத் தொடங்கிய ஆமை முட்டை சேகரிப்பு

கஜா புயலின் தாக்கம் - தனுஷ்கோடி கரையோரத்தில் தாமதமாகத் தொடங்கிய ஆமை முட்டை சேகரிப்பு
கஜா புயலின் தாக்கம் - தனுஷ்கோடி கரையோரத்தில் தாமதமாகத் தொடங்கிய ஆமை முட்டை சேகரிப்பு

கஜா புயலின் தாக்கத்துக்குப் பின்  மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை  பகுதிகளில் ஆமை முட்டையிடத் தொடங்கியுள்ளன

பரந்து விரிந்து கிடக்கும் கடற்பரப்பின் தூய்மைக் காவலனாக விளங்குவன ஆமைகள் ஆகும். இந்திய கடல் பரப்புகளில் 5 வகையான ஆமைகள் உள்ளன. சமீப காலங்களாக மாறிவரும் தட்ப வெட்ப சூழலாலும், சுற்றுச்சூழல் மாசினாலும், மனிதர்களின் இரக்கமற்ற செயலாலும் இந்த ஆமை இனங்கள் அரிதாகி வருகின்றன. ஆமை இனங்கள் கடலில் வாழ்ந்தாலும் அவை முட்டை இட்டு குஞ்சு பொரிப்பதற்குக் கடற்கரையோர மணல் பரப்புகளையே நாடி வருகின்றன. ஆமைகள் உருவாகும் கடலோர பகுதிகள் சமீப காலமாகக் கட்டுமானம், சாலைகள், கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் போன்றவையாக மாறி வருகின்றன. இதனால் தங்களின் வாழ்விடச் சூழலை இழந்து தவிக்கின்றன ஆமைகள்.

 பொதுவாக ஆமைகள் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை முட்டையிடத் தொடங்குகின்றன. தனுஷ்கோடியின் வட கடல் பகுதியான பாறடி முதல் அரிச்சல்முனை வரை ஆமைகள் முட்டையிடும் பகுதியாகும். தமிழகக் கடலோரப் பகுதிகளில் இந்த ஆண்டு கஜா புயலின் தாக்கத்தால் ஆமைகள் முட்டை இட வருவது தடைபட்டதால் முட்டை சேகரிக்கும் பணி தாமதமானது.   

 இந்நிலையில் முதன்முதலாக இன்று தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் ஆமை முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இன்று காலை அரிச்சல் முனை பகுதியில் மண்டபம் வன உயிரின காப்பகத்தின் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வன ஊழியர்கள் சித்தாமை முட்டைகளைச் சேகரித்தனர். இந்தச் சேகரிப்பின்போது 105 முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த ஆமை முட்டை சேகரிப்பின்போது 1,071 முட்டைகள் கிடைத்தன. இம்முறை குறைவான முட்டைகள் கிடைத்துள்ளன. கண்டெடுக்கப்பட்ட முட்டைகள் அனைத்தும் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள குஞ்சு பொறிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வனச்சரகர் சதீஷ் கூறுகையில், ``கஜா புயலின் தாக்கத்தால் இந்த ஆண்டு ஆமைகள் முட்டையிட வருவது ஒரு மாத காலம் தாமதமாக நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 1,071 முட்டைகள் கிடைத்தன. ஆனால், இன்று தனுஷ்கோடி பகுதியில் பத்தில் ஒரு பங்கு முட்டைகளே கிடைத்துள்ளன. இதேபோல் கடந்த இரு நாள்களில் கீழக்கரை பகுதியில் 130 முட்டைகளும், தூத்துக்குடி பகுதியில் 126 முட்டைகளும் கிடைத்துள்ளன. இருந்த போதிலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 20,000-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு உதவியாகக் கடலோர பகுதிகளில் கரை வலை மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் காலை 6 மணிக்கு மேல் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டும். ஏனெனில், அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரையிலான நேரத்தின் போதுதான் கடல் ஆமைகள் முட்டையிடுவதற்காகக் கரையை நோக்கி வருகின்றன. எனவே, அவ்வாறு வரும் ஆமைகள் கரையோர மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளில் சிக்கிவிடக் கூடாது. கடலின் தூய்மை காப்பாளனாக விளங்கும் ஆமைகளைப் பாதுகாக்க கரையோர மீனவர்களும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.