Published:Updated:

”நெருப்பில் குதிக்கும்... பனியை உண்ணும்!" - ஃபீனிக்ஸ் பற்றிய சுவாரஸ்ய கதைகள்

அமெரிக்காவில், சான்ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தின் கொடியிலும் ஃபீனிக்ஸ் பறவை இடம் பெற்றுள்ளதைக் காண முடியும். இதுதவிர, லண்டனிலும், சீனாவிலும் ஃபீனிக்ஸ் பறவைக்காக சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

”நெருப்பில் குதிக்கும்... பனியை உண்ணும்!" - ஃபீனிக்ஸ் பற்றிய சுவாரஸ்ய கதைகள்
”நெருப்பில் குதிக்கும்... பனியை உண்ணும்!" - ஃபீனிக்ஸ் பற்றிய சுவாரஸ்ய கதைகள்

நாவல்களுக்கும் திரைப்படங்களுக்கும் நல்ல கதைப் பொருள், ஃபீனிக்ஸ் பறவை. ஒருமுறை வாழ்க்கையில் அடிபட்டு, பிரச்னையில் விழுந்து, அதிலிருந்து மீண்டு வரும் நிகழ்வை ஃபீனிக்ஸ் பறவையுடன்தான் பெரும்பாலும் ஒப்பிடுவோம். அது என்ன வகையான பறவை? அது உண்மையா... அப்படி ஒரு பறவை இருந்திருக்கிறதா?

ஃபீனிக்ஸ் பறவை, நமது புராணங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் பறவை பாரசீகம், கிரேக்கம், எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளின் புராணக் கதைகளில் இடம்பெற்ற கற்பனையான ஒரு நெருப்புப் பறவை. ஃபீனிக்ஸ்  ஒரு புனிதமான 'தீ' பறவையாக வர்ணிக்கப்படுகிறது. புராணக் கதைகளின்படி, கற்பனை பறவையான இதன் தோற்றம், கடும் சிவப்பு நிற உடலையும், தங்க நிறத்திலான வால் பகுதியையும் கொண்டு காணப்பட்டதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபீனிக்ஸ் பறவையின் அலகு சேவலுடையது போல இருக்கும். அதன் முகம், தைலான் குருவியினுடையது போலிருக்கும். பாம்பின் கழுத்து, வாத்தின் மார்பு, ஆமையின் முதுகு, கலைமானின் கால்கள், மீனின் வாலைக் கொண்டிருக்கும் அழகான பறவையாக அது உருவகப்படுத்தப்படுகிறது. 

ஃபீனிக்ஸ் பறவையின் நிறம் பற்றி ஒவ்வொரு புராணக்கதைகளிலும் ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது, 500 முதல் 1,000 வருடங்கள் வரை வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ புராணக் கதைகளிலும், சீன ஓவியங்களில் உள்ள குறிப்புகளிலும் சில அரேபியக் கதைகளிலும் ஃபீனிக்ஸ் பறவை குறிப்பிடப்படுகிறது. சில வர்ணனைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், ஃபீனிக்ஸ் பறவை குணங்களில் சொல்லப்படும் கருத்துகள் பொதுவாக ஒத்துப்போகிறது.

ஃபீனிக்ஸ் பறவை, தனது ஆயுள் முடிந்துவிட்டது என்று உணரும் நேரத்தில், தாமாகவே ஒரு மரத்தின் சிறு கிளைகளை ஒடித்துக் கூடு ஒன்றை அமைத்து, அதில் தனக்குதானே தீ வைத்துக்கொள்ளும். தீ வைத்துக்கொண்ட ஃபீனிக்ஸ் பறவையும் அதன் கூடும் முற்றாக எரிந்து தீர்ந்ததும், அதில் எஞ்சிய சாம்பலில் இருந்து புதிய ஃபீனிக்ஸ் பறவை அல்லது புதிய ஃபீனிக்ஸ் பறவையின் முட்டை தோன்றுவதாகவும், அதிலிருந்து அழகான சிறிய ஃபீனிக்ஸ் பறவை ஒன்று வெளியே வரும் எனவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு மீண்டும் பிறக்கும் ஃபீனிக்ஸ் பறவைதான் வாழ்நாளைத் தானே நிர்ணயித்துக்கொண்டு வாழத் தொடங்கும் எனப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதவிர, தனது தந்தையின் சாம்பலை ஒரு பந்துபோலச் செய்து, அந்த குட்டிப்பறவை ஹெலியோபோலீஸ் என்ற கிரேக்க நகரத்திற்குப் பறக்கும். அங்கிருக்கும் சூரியக் கடவுள் கோயிலில், தந்தைப் பறவைக்கு இறுதிச் சடங்கை முடித்துவிட்டு மீண்டும் அரேபியா திரும்பிவிடும் எனச் சொல்லப்படுகிறது. அரேபியக் கதைகளிலும்கூட இந்தப் பறவை இடம் பெற்றுள்ளது. செந்தூரமும் தங்க நிறமும் கலந்த இறகுகளைக் கொண்ட பறவையாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரேபியாவில் ஒரு குளிர்ந்த நீர்க் கிணறு ஒன்றின் அருகில் வசிப்பதாகக் கற்பனைக் கதையில் குறிப்பிடப்படுகிறது. 

 ஆப்பிரிக்காவில் இந்தப் பறவை வாழ்ந்ததாகவும், அது கற்பனையான பறவை அல்ல எனவும் நம்பப்படுகிறது. ஃபீனிக்ஸ் பறவைகள், தமது முட்டைகளை நெருப்பில் இருந்து வரும் சாம்பலில் இடும் இயல்பைக் கொண்டதாம். இதைக் கண்ட அன்றைய மக்கள், இந்தப் பறவைகள் நெருப்பில் இருந்து பிறப்பதாக தவறாகப் புரிந்துகொண்டதாகவும், அதனால் அவைபற்றி பல்வேறு கட்டுக்கதைகள் உருவாகியது எனவும் ஆப்பிரிக்காவில் ஒரு கருத்து நிலவுகிறது.

சீனப் புராணக் கதைகளில் வரும் ஃபீனிக்ஸ், ஒழுக்கமான பண்புகளுடன் கருணையின் அடையாளமாகக் குறிப்பிடப்படுகிறது. பனித்துளியை மட்டுமே உண்ணும் பறவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மூங்கில் பூக்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும்.  சீன ஃபீனிக்ஸ் பறவையின் இறகுகள் கறுப்பு, வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து காணப்படும். சீன ஃபீனிக்ஸ் பறவை, பாம்பைப் பார்த்தால், தனது சிறகை விரித்து கால் நகங்களால் தாக்கும் என்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கொடியிலும் ஃபீனிக்ஸ் பறவை இடம் பெற்றுள்ளதைக் காண முடியும். இதுதவிர, லண்டனிலும், சீனாவிலும் ஃபீனிக்ஸ் பறவைக்காக சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கற்பனையான கதைகளாய் இருந்தாலும், அவற்றின் ஆரம்பப் புள்ளி ஓர் உண்மைச் சம்பவம்தான் என்பது இன்னொரு புராணத்தை நம்புவோரின் கருத்து.

உண்மையோ பொய்யோ கேட்க சுவார்ஸ்யமா, நல்லா இருக்கில்ல என்பது தான் பீனிக்ஸ் கதைகளின் சாராம்சம்.