Published:Updated:

சிட்டுக்குருவி, பாறு, புறா... இந்தப் புள்ளினங்களே உலகின் சூப்பர் ஹீரோக்கள்... எப்படி?

சிட்டுக்குருவி, பாறு, புறா... இந்தப் புள்ளினங்களே உலகின் சூப்பர் ஹீரோக்கள்... எப்படி?

பறவைகள் மனிதர்களுக்கு இவ்வளவு உதவிகள் செய்கின்றன எனச் சொன்னால் நம்புவீர்களா?

சிட்டுக்குருவி, பாறு, புறா... இந்தப் புள்ளினங்களே உலகின் சூப்பர் ஹீரோக்கள்... எப்படி?

பறவைகள் மனிதர்களுக்கு இவ்வளவு உதவிகள் செய்கின்றன எனச் சொன்னால் நம்புவீர்களா?

Published:Updated:
சிட்டுக்குருவி, பாறு, புறா... இந்தப் புள்ளினங்களே உலகின் சூப்பர் ஹீரோக்கள்... எப்படி?

றவைகள் இல்லாத இவ்வுலகை கற்பனை செய்து பார்க்கமுடியுமா? நிச்சயமாக முடியாது. பறவைகள் உலகின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இதுதவிர, உணவு உற்பத்தி, பொருளாதாரம் மற்றும் மனித உடல்நலம் ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவை வெறும் கலாசாரத்திற்கான அடையாளம் கிடையாது. மனித வாழ்வில் அசைக்க முடியாத ஆணிவேர். உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றும் மனிதர்க்கு அடிப்படைத் தேவைகள். நம்மைப் போலவே, பறவைகளுக்கும் அடிப்படைத் தேவைகள் உண்டு. பறவைகளைப் பார்க்கும்போது சாதாரணமாக நினைக்கும் மனிதர்களுக்கு அவற்றின் செயல்பாடுகள் முழுமையாகத் தெரிவதில்லை. 

பறவைகள் ஒரு வருடத்திற்கு 400 - 500 மில்லியன் டன் பூச்சிகள் சாப்பிடுவதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. சீனாவில், ஹவுஸ் ஸ்விஃப்ட் (House Swift) என்ற இன பறவையானது மூன்றில் இரண்டு பங்கு விவசாய பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. அமெரிக்காவில் ஈவனிங் கிராஸ்பீக் (Evening grosbeak) என்ற பறவையானது, 1,820 டாலர் செலவழித்து போக்க வேண்டிய பூச்சிகளை அழித்து சூப்பர் ஹீரோவாகத் திகழ்கிறது. ஐரோப்பா முழுவதும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பறவைகளைப் பயன்படுத்திவரும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.

மகரந்தச் சேர்க்கையைப் பற்றி நினைக்கும்போது தேனீகளும், வண்ணத்துப்பூச்சிகளும்தான் சட்டென ஞாபகத்திற்கு வரும். ஆனால், சிட்டுக்குருவிகளும், தேன் குடிக்கும் பறவைகளும் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதுவும் அதிக உயரமான இடங்களிலும், கோடைக்காலங்களிலும் மகரந்தச் சேர்க்கையில் பறவைகளின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் சால்வியா இன தாவரத்தின் மகரந்தச் சேர்க்கையில் கால்வாசி தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை பறவைகளால் நடைபெறுகிறது. அந்தத் தாவரங்களின் பூக்கள் வாசனையற்ற நிலையில் இருப்பதால், தேனீகள் செல்லாது. அதனால் பறவைகளே மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கைகளின் மூலம் பறவைகள் மனிதர்களுக்கு நேரடியாகப் பயன்தருகின்றன. மனிதர்கள் உணவு அல்லது மருந்திற்காகப் பயன்படுத்துகின்ற தாவரங்களில் 5 சதவிகிதம் பறவைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டே கிடைக்கின்றன. 

மேல்நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும் கழுகுகளின் பார்வை எப்போதும் கீழே இருந்து கொண்டே இருக்கும். ஒரு பிணந்தின்னிக் கழுகு, அதன் வாழ்நாளில் 11,600 அமெரிக்க டாலர் மதிப்புள்ள கழிவு அகற்றும் வேலையைச் செய்கிறது. தெரு நாய்கள் இறப்பை (அதன் கழிவுகளை), கழுகுகள் சுத்தப்படுத்தும். ரேபிஸ் தாக்கப்பட்ட தெருநாய்களைப் பிணந்தின்னி கழுகுகள் உண்ணும். அவற்றைப் பிணந்தின்னிக் கழுகுகள் உண்பதால், அந்த நோய் மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்கப்படுகின்றது. ஆனால், சமீபகாலங்களில் அவற்றின் இறப்பு அதிகமாகி வருகிறது. இருபது வருடங்களுக்குமுன் வரையிலுமே வானில் நூற்றுக்கணக்கில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பாறு என்று அழைக்கப்படும் பிணந்தின்னிக் கழுகுகள் இன்று மிகச்சொற்ப எண்ணிக்கையிலேயே உயிர் வாழ்கின்றன. அவை இல்லாமல் போனதால் தெரு நாய்கள் இறந்து திறந்த வெளியில் விடப்படுகிறது. அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கி, 47,300 மக்கள் இறப்பைச் சந்தித்திருக்கிறார்கள். ஆகப்பெறும் துப்புரவாளர்களின் மதிப்பை நாம் உணராமல் போனதற்குத் தரும் விலை இந்த இறப்பு விகிதம்.

உணவு உண்ணும்போது விதைகளுடன் சேர்த்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டவை பறவைகள். அந்த விதையை எச்சமாக வெளியேற்றி புதிய தாவரங்கள் முளைக்கக் காரணமாக அமைகின்றன. ஓரிடத்தில் இருந்து தாவரங்களைப் பல இடங்களுக்கு இதன்மூலம் பரப்புகின்றன. இத்தகைய விதைப் பரவல் மனிதர்களால் சாத்தியப்படாத ஒன்று. உலகம் முழுவதும் கடல் தாண்டும் பல பறவைகள் நாடு விட்டு நாடு விதைகளை விதைக்கச் செய்து கொண்டிருக்கிறது. நியூசிலாந்தின் காடுகளில், 70 சதவிகிதம் தாவரங்கள் துய் போன்ற பறவைகளால் விதைக்கப்படுகின்றன. மைக்ரோனேசிய இம்பீரியல்-புறாக்கள் (Micronesian imperial pigeon) பலாவு தீவுகளில் உள்ள மிகப்பெரிய பறவையாகக் கருதப்படுகிறது. இது பலாவு தீவுகளில் விதைகளைப் பரப்புகிறது.

பறவைகளில் கடல் பறவைகள், பவளப்பாறைகளை வளர்ப்பதிலும், கடற்பாசிகளை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து வந்து திரும்பி செல்லும்போது கடலில் இருக்கும் பாறைகளில் தனது எச்சத்தை விதைத்துச் செல்லும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான தீவுகளில் காடுகள் வளர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் எச்சத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன.

சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் பறவைகளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல அறிவியல் கண்டுபிடிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதற்கு விமானத்தை உதாரணமாகச் சொல்லலாம். கெலாபேகோஸ் தீவில் வாழும் பின்சஸ் (finches) என்ற சிறு பறவை வகைகள் பற்றிய டார்வினின் ஆய்வுகள், அவருடைய பரிணாமவியல் கோட்பாடுகளை வடிவமைப்பதில் பேருதவி செய்தது. உதாரணத்துக்கு பின்சஸ் பறவைகளின் அலகுகள் உணவு கிடைப்பதற்குத் தகுந்தவாறாக நீளமாகவும் சிறியதாகவும் அடுத்து வரும் சந்ததிகளில் மாறுவதுண்டு. அந்த நிலத்தில் வாழ்வதற்குத் தக்க வகையில் அவற்றின் உடலமைப்பை இயற்கை மாற்றியமைக்கிறது. அதைப் பற்றிய புரிதலே பரிணாமவியல் கோட்பாட்டில் தகவமைப்பு குறித்த விஷயங்களை ஆராயவும் அதை விளக்கவும் டார்வினுக்கு வழிவகுத்தது. இவை மட்டுமல்ல, கண்டுபிடிப்புகளுக்கு ஐடியாக்களை அள்ளித் தருவதோடு சூழலியலுக்கும் தனது பங்குகளை முழுமையாகக் கொடுக்கின்றன பறவைகள். காலநிலை மாற்றத்திற்கான ஆரம்பக்கால எச்சரிக்கையையும் பறவைகளை வைத்தே அறிந்து கொள்ளலாம். 

இதுபோன்ற பல காரணங்களுக்காக உலகத்தில் பறவைகளின் இருப்பு முக்கியமானதாக இருக்கிறது. பண்டைக்காலம் தொட்டே பறவைகள் கடவுளாக வணங்கப்பட்டும் கடவுளின் ஊர்தியாக உருவகப்படுத்தப்பட்டும் வந்துள்ளன. அதற்குக் காரணம் நம் முன்னோர்கள் தம் வாழ்வியலில் பறவைகளின் பங்கையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவற்றின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டதே. அந்தப் புரிதலை நாம் இழந்துவிட்டதே இன்றைய பல பிரச்னைகளுக்கும் காரணம். நன்றியறிதலைக் கற்றுக்கொண்ட மனிதர்கள் அதை மற்ற உயிர்களிடத்திலும் காட்ட வேண்டும். மற்ற உயிர்கள் என்ற பட்டியலில் பறவைகளுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஏனென்றால், பறவைகள் இல்லா உலகம் முழுமையடையாது.