Published:Updated:

யானைகளின் கால்களிலும் `காது'கள் உண்டு... தெரியுமா? #UnknownFacts

யானைகளின் இந்த குணங்கள் பெரும்பாலானோருக்குத் தெரியாது.

யானைகளின் கால்களிலும் `காது'கள் உண்டு... தெரியுமா? #UnknownFacts
யானைகளின் கால்களிலும் `காது'கள் உண்டு... தெரியுமா? #UnknownFacts

பார்க்கப் பார்க்க கண்ணுக்கு விருந்தாக, மனதுக்கு மருந்தாக தன் ஆளுமையை நிரூபித்தபடி, எப்போதுமே ஈர்ப்பு விசையாய் நம்மை வசப்படுத்தி வசீகரித்து மயக்கத்தை உண்டாக்கி விடுகிறது, இயற்கை. இயற்கையில் ஒவ்வொரு படைப்புமே அழகுதான். அதில் முக்கியமானது, யானை. இயற்கையைப் பாதுகாப்பதில் யானைகளுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. பார்க்கப் பெரிய உருவமாக இருந்தாலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் கவரக் கூடியவை. பழங்காலம் முதலே மனிதர்களுடன் தொடர்பில் இருந்தவை; இப்போதும் இருப்பவை. யானையைப் பற்றிப் பல விஷயங்கள் நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் தெரியாத விஷயங்கள் பல இருக்கின்றன. 

யானைகளின் கால்களிலும் `காது'கள் உண்டு... தெரியுமா? #UnknownFacts

யானைகள் அழுமா...சிரிக்குமா என்ற விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால், யானை அழுவதற்கான சான்று இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 50 ஆண்டுகளாக ஒரு யானை சர்க்கஸில் வேடிக்கை காட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 50 ஆண்டுகளாகத் துன்புறுத்திப் பயன்படுத்தப்பட்டு வந்ததால், உடலில் பல காயங்கள் இருந்திருக்கிறது. அதை மீட்ட வனவிலங்குத் துறையினர் வெளியே இழுத்து வரும்போது அந்த யானை அழுது புரண்டிருக்கிறது. கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மார்க் பெக்கோஃப், லைட் சைன்ஸ் பத்திரிகையில் எழுதும்போது, `யானைகளில் ஆராய்ச்சி செய்யும்போது, அது உணர்ச்சி பொங்க அழுதது. யானை தவிர பிற விலங்குகளும் அழும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

யானைகள் கடுமையான தோல்களைக் கொண்டிருந்தாலும், அதிகமான சூரிய ஒளியைத் தாங்கும் தன்மை இல்லாதவை. அதனால், சூரியக் கதிர்களின் வெப்பத்திலிருந்து தப்பிக்க மணலை அள்ளி தங்களின் உடல் மீது போடுகின்றன. தனது குட்டிகள் தூங்கும்போது, தான் மறைவாக நின்று சூரிய ஒளியைத் தடுக்கும். இலங்கையில் உள்ள மேரி கேலோவே மிருகக்காட்சிச் சாலையின் யானை பராமரிப்பாளர், ``சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் வாழும் ஒரு பெண் ஆசிய யானை சாந்தியின் முதுகில் கொப்புளங்கள் அதிகமாகத் தோன்றின. ஏனென்றால் மற்ற யானைகளைப் போல, சாந்தி தனது தோலை மறைக்காமல் வெயிலில் இருந்தது. அதனுடன் இருந்த மற்ற யானைகள் அதிகமான வெயில் காலங்களில் நிழலில் நின்று தம்மைக் காத்துக் கொண்டன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

யானைகளின் கால்களிலும் `காது'கள் உண்டு... தெரியுமா? #UnknownFacts

ஆசிய யானைகள் கணிதத் திறமைகளைக் கொண்ட புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்றாகும். இதுவும் ஒரு ஆய்வில்தான் தெரியவந்திருக்கிறது. ஜப்பானில் உள்ள எனோ மிருகக்காட்சிசாலையில் ஒரு யானைக்குப் பயிற்சி கொடுத்து சோதனை செய்துள்ளனர். ஒரு கணினி தொடுதிரையில் பூஜ்ஜியத்திலிருந்து 10 வரை பல்வேறு அளவுகளைக் கொண்ட பழங்களின் படங்களை அதில் வருமாறு செய்திருந்தனர். அதில் அதிக எண்ணிக்கை கொண்ட பழங்களை எடுக்க வைக்கப் பயிற்சியளித்தனர். அந்தப் பயிற்சி பெற்ற யானை ஒவ்வொருமுறையும் அதிக எண்ணிக்கையில் கொண்ட பழங்களையே தேர்ந்தெடுத்தது. (ஒவ்வொருமுறையும் பழங்களின் வகை மாற்றப்பட்டது).

யானைகள் தங்களின் குடும்பத்தில் யாராவது இறந்து போனால் அந்த இடங்களைச் சரியாக கவனித்துக்கொள்ளும். அடிக்கடி அந்த இடத்துக்குப் போகும்போது, அதிகமான நேரம் நின்று, அந்த இடத்தையே சுற்றிவரும். புகழ்பெற்ற புகைப்படக்காரர் ஜான் சானி காட்டுக்குள் சென்று திரும்பும்போது, ஒரு யானை இறந்து எலும்புக் கூடாக இருந்த இடத்தைப் பார்த்து புகைப்படம் எடுக்க ஒதுங்கியிருக்கிறார். அப்போது தூரத்திலிருந்து யானை ஒன்று ஓடிவந்திருக்கிறது. உடனே மறைந்துகொண்டு அந்தச் செயலைக் கவனித்திருக்கிறார், ஜான். அந்த யானை, எலும்புக் கூட்டின் அருகில் சுற்றி வந்து தன் மரியாதையை வெளிப்படுத்தியிருக்கிறது. அந்தப் புகைப்படத்தை தன் புத்தகத்திலும் பதிவிட்டிருக்கிறார்.

யானைகளின் கால்களிலும் `காது'கள் உண்டு... தெரியுமா? #UnknownFacts

யானைகளும், ராக் ஹைரோக்ஸ்(rock hyrax) என்ற மிகச்சிறிய விலங்கும் நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் ஒரு சிறிய உரோமப் பகுதியைக் கொண்ட ஹைரோக்ஸ் எப்படி யானை உறவினராகும் என்று பலருக்கும் தோன்றலாம். விலங்குகள் மிகவும் மாறுபட்ட பரிணாமப் பாதையைப் பயணிப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டிருக்கின்றன. அதை வைத்துப் பார்க்கும்போது, மனடீ (manatee) மற்றும் ராக் ஹைராக்ஸ் என்ற இரண்டு இன விலங்குகளின் குண நலன்கள் இவற்றில் காணப்படுகின்றன. இந்த விலங்குகளின் முறுக்குப் பற்களிலிருந்து வளரும் தந்தங்களை உதாரணமாகக் காட்டுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளிலும் பல ஒற்றுமைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

யானைகள் எப்போதுமே தங்கள் மூத்தோரைச் சார்ந்தே வழிநடக்கும். மூத்தோருக்குத்தான் ஆபத்தானது எது, சரியானது எது என்ற செயல் தெரியும். அதனால் மூத்தோர் தனது கூட்டங்களுக்குள் இருக்கும் வரை யானை அவற்றின் வழிப்படிதான் பயணிக்கும். அதேபோல மூத்த யானைகள் தங்களின் அறிவுகளையும், அனுபவங்களையும் இளைய யானைகளுக்குக் கற்றுக் கொடுக்கும். 

யானைகளின் கால்களிலும் `காது'கள் உண்டு... தெரியுமா? #UnknownFacts

யானைகள் எப்போதும் குடும்பத்துடனேயே இணைந்து வாழும் தன்மை கொண்டவை. யானைகளுக்கு நீண்ட நாள் ஞாபக குணத்தைக் கொண்டிருப்பதால் எப்போதுமே குடும்பத்தை இழப்பதில்லை. அதேபோல குட்டியானை மாட்டிக் கொண்டால் பிளிறும் சத்தமும் தாய் யானைக்கு எளிதில் விளங்கிவிடும். தனது குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டாலோ தனிமைப்படுத்தப்பட்டாலோ அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகும். ஆராய்ச்சியாளர்கள் பிராட்ஷாவும், லாரின் லிண்டரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிறைச்சாலையில் உள்ள அனைத்து யானைகளும் மன அழுத்தம், மரண அச்சுறுத்தல் என அனைத்தையும் மிக அதிகமாக அனுபவித்திருக்கின்றன. அவை எல்லாம் ஒருவித மன அழுத்தத்தையே கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். 

யானைகள் தண்ணீரில் விளையாடுவது ஆச்சர்யமல்ல. அவற்றிற்கு நீந்தக் கூடிய திறனும் உண்டு. யானைகளால் தனது காலை பயன்படுத்தி தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்க முடியும். ஆழமுள்ள தண்ணீரைக் கடக்க நீச்சலையே யானைகள் பயன்படுத்துகின்றன. யானைகளால் தன் கால்களால் கேட்கவும் முடியும். யானைகள் மிகுந்த விழிப்புஉணர்வைக் கொண்டுள்ளன. கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியலாளர் கெய்ட்லின் ஓ கொன்னல்-ரட்வெல், `யானைகளின் குரல் மற்றும் கால் தண்டுகள் ஒரு அதிர்வெண்ணில் பிற யானைகளால் உணரப்படுவதைக் கண்டறிந்தார். கால் தண்டுகளின் மூலம் உணர்ந்த செய்தியைக் காதுகளுக்குக் கத்தும் தன்மை படைத்தவை, யானைகள்" என்பதையும் கண்டறிந்திருக்கிறார்.

யானைகளின் கால்களிலும் `காது'கள் உண்டு... தெரியுமா? #UnknownFacts

யானைகள் வெவ்வேறு மனித மொழிகளை வேறுபடுத்திக் கண்டறிகின்றன. தனிமனிதர்களை அடையாளம் கண்டுகொள்வதுபோல, வெவ்வேறு மனித மொழிகளையும், பேச்சாளரின் பாலினத்தையும் வயதையும் கூட யானைகளால் அடையாளம் காண முடியும். 2013-ம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் யானைகளின் கேட்கும் திறன் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. யானைகள் எப்போதுமே எதிரியையும், நண்பனையும் மறப்பதில்லை. யானைகள் மற்ற யானைகளையும், தனி மனிதர்களையும் பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்கும். பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் அடையாளம் காணக்கூடியவை. 

இயற்கை தனது ராஜ்ஜியத்தில் அனைத்து உயிரினங்களுக்கும் பல சிறப்பான பண்புகளைக் கொடுத்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதை அறிந்து கொள்ளும்போது இயற்கையின் மீதான பற்றுதல் கூடிக்கொண்டே செல்கிறது.