Published:Updated:

தண்ணீரின்றி செத்து விழுந்த 40 குதிரைகள்... என்ன நடக்கிறது ஆஸ்திரேலியாவில்?

`காலம் தாழ்த்தி எடுக்கப்படும் எந்த முயற்சியும் பலன் கொடுப்பதில்லை.’ இது ஆஸ்திரேலியாவுக்கானது மட்டுமல்ல... உலக நாடுகள் அனைத்துக்குமான கோட்பாடாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. 

தண்ணீரின்றி செத்து விழுந்த 40 குதிரைகள்... என்ன நடக்கிறது ஆஸ்திரேலியாவில்?
தண்ணீரின்றி செத்து விழுந்த 40 குதிரைகள்... என்ன நடக்கிறது ஆஸ்திரேலியாவில்?

துவரை எப்போதும் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறுமையும் வறட்சியும் ஏற்பட்டிருக்கிறது. கடந்தகாலத்தில் ஆஸ்திரேலியாவின் நிலைமை இந்தளவுக்கு மோசமானதாக இருந்ததே இல்லை. தென்னாப்பிரிக்கா சந்தித்த நீர் வறட்சியைப் போலவே தற்போது ஆஸ்திரேலியாவும் கடுமையான வறட்சியை எதிர்கொள்ளக் காரணம், கடந்த பல மாதங்களாக அங்கே மழை இல்லாததே. அதிலும் குறிப்பாக கிழக்கு ஆஸ்திரேலிய பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. நிலத்தடி நீரும் இந்தப் பகுதியில் வெகுவாகக் குறைந்துவிட்டது. எனவே, செய்வதறியாது தவிக்கின்றனர் மக்கள். 

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரத்தில் கடந்த 2 நாள்களாக 49.5 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. இது அந்நாட்டின் வரலாற்றிலேயே அதிக அளவு. அடிலெய்டு போலவே மேலும் 13 நகரங்கள் அதிக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி, கடும் வெப்பம், அதனால் ஏற்பட்ட வறட்சி எனப் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்?

24 மணி நேர இடைவெளியில் 44 பேர் தீவிர வெப்பநிலை காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அனைவரும் கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். 2017-ம் ஆண்டில் அதிக வெப்பநிலை கொண்ட நாடுகளில் நான்காமிடமும் 2018-ம் ஆண்டு மூன்றாமிடமும் பெற்றிருக்கிறது, ஆஸ்திரேலியா. 2019-ம் ஆண்டும் தொடர் வெப்பநிலை இருப்பதால் மக்கள் பெரிதும் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது காலநிலை மாற்றத்தால் உருவாகியிருப்பதாக அந்நாட்டு வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. வெப்பம் தாங்காமல் மனிதர்களே மருத்துவமனையில் தவிக்கும்போது, விலங்குகள் என்ன செய்யும். ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் உள்ள வறண்ட நிலத்தில் (முன்பு நீரோட்டம் இருந்த இடம்) காட்டுக் குதிரைகளின் உடல்கள் அதிக அளவில் இறந்து காணப்படுகின்றன. 

ரால்ப் டர்னர் என்ற உள்ளூர்வாசி வழக்கமாகத்தான் குளிக்கும் இடத்துக்குப் பயணம் செய்கிறார். அந்த இடம் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் 12 மைல் தொலைவில் உள்ள அலெய்ஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) என்ற இடத்தில் இருக்கிறது. அந்த இடத்தில் அவருடைய கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. அங்கே இருந்த ஓடை வறண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விபரீதமான காட்சி கண்ணுக்குத் தென்பட்டது. அங்கே டஜன் கணக்கில் ஓடையில் இருந்த தண்ணீர் வற்றியதால் 40-க்கும் மேற்பட்ட காட்டுக் குதிரைகள் தண்ணீரின்றி செத்துக்கிடந்தன. அதைப் பார்த்ததும் என்ன செய்வதென தெரியாமல் திகைத்திருக்கிறார்.

``நான் நம்பவில்லை. இதற்கு முன்பு அதைப்போன்று எதையும் பார்த்ததில்லை. அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டே சென்றேன். ஆனால், முடிவடையாமல் நீண்டுகொண்டே போனது. அந்த அளவுக்குப் பேரழிவு நிகழ்ந்துள்ளது’’ என்கிறார் ரால்ஃப் டர்னர்.

உள்ளூர் பழங்குடியினர் சமூகத்தின் செய்தித் தொடர்பாளரான ரோஹன் ஸ்மித் சொல்லும்போது, ``இரண்டு வருடங்களுக்கு முன்னால் குதிரைகள் வலுவானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தன. தண்ணீர் இல்லாமல் அவை இறந்ததை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. உள்ளூர் மக்கள் காட்டு விலங்குகளின் நலன்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். விலங்குகளின் நலன்களில் எப்போதுமே அக்கறை செலுத்துபவர்களுக்கு இது ஒரு கவலையான செய்திதான்’’ என்கிறார்.

மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்களுக்காகப் போராடும் கவுன்சில் ஒன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் அங்கு 50-க்கும் அதிகமான குதிரைகள் இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ``குதிரைகள் மற்றும் பிற விலங்குகள் அதிகமான வெப்பத்தால் உருவாகும் வறட்சியைச் சமாளிக்க தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றன. தற்போது அதிகமான நீராதாரங்கள் வெப்பத்தால் வறண்டு போய்விட்டன. அதனால் விலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. அங்கு மீதம் இருக்கும் 120 கழுதைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் தாகத்தால் இறக்காமல் காக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது. இதனால் உள்ளூர் அதிகாரிகள் அந்த 120 உயிரினங்களைக் காக்க நடவடிக்கைகள் எடுக்க முன்வந்துள்ளனர். 

குதிரைகள் தவிர, வௌவால்கள், குரங்குகள் போன்ற உயிரினங்களும் வெப்பத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முரே மற்றும் டார்லிங் ஆகிய இரண்டு ஆறுகள் வற்றிப்போனதால் கரையில் ஒரு மில்லியன் மீன்கள் வரை இறந்துள்ளன. ஆறுகள் வற்றியதும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருவது உலகறிந்த விஷயம். அதன் விளைவின் ஒருபகுதிதான் இதுவும். தற்போது இங்கே ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை உலகம் முழுவதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் எல்லாச் சூழலியலாளர்களும் உலக அரசாங்கங்களை உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசாங்கங்கள் காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கின்றன. 

`காலம் தாழ்த்தி எடுக்கப்படும் எந்த முயற்சியும் பலன் கொடுப்பதில்லை'. இது ஆஸ்திரேலியாவுக்கானது மட்டுமல்ல. உலக நாடுகள் அனைத்துக்குமான கோட்பாடாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.