Published:Updated:

நாம் மட்டுமல்ல; நம் குப்பைகளும் விலங்குகளுக்கு எமன்தான்... எப்படி?

துரை.நாகராஜன்

விலங்குகள் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை உண்பது உத்தரகாண்டில் மட்டுமல்ல... உலகம் முழுவதும் நடப்பதுதான் பெரும்சோகம்.

நாம் மட்டுமல்ல; நம் குப்பைகளும் விலங்குகளுக்கு எமன்தான்... எப்படி?
நாம் மட்டுமல்ல; நம் குப்பைகளும் விலங்குகளுக்கு எமன்தான்... எப்படி?

வீன உலகில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் இரசாயன கழிவுகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவைதான் அனைத்து குப்பைத்தொட்டிகளையும் ஆக்கிரமித்திருக்கின்றன. இப்பொருட்களின் தீமைகள் விலங்குகள் மற்றும் பறவைகளிடம் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இப்போது வெளியாகியிருக்கும் ஆய்வு ஒன்று ரசாயனப் பொருட்கள் மற்றும் தீமை விளைவிக்கும் பொருட்களால் விலங்குகளின் உணவுப்பழக்கமே மாறுகின்றன என்பதை உறுதி செய்திருக்கிறது.

இதில் முக்கியமான குற்றவாளி பிளாஸ்டிக் கழிவு. இவை சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்துவதோடு நிற்பதில்லை. அதை உட்கொள்ளும் விலங்குகளின் இனப்பெருக்கச் செயற்பாடுகளையும் பாதிக்கிறது. சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, மண்ணில் கொட்டப்படுகிறது. மண்ணில் இருக்கும் பிளாஸ்டிக்குகளை உண்ணும் விலங்குகளின் தோற்றம் மற்றும் குணநலன்கள் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. 

ஆய்வாளர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் இருக்கும் குப்பைக் கிடங்குகளில் விலங்குகளின் வருகை, உணவு உட்கொள்ளுதல் போன்ற அவற்றின் நடத்தைகளை அகச்சிவப்பு கேமரா (infrared camera-traps) மூலம் இரண்டு மாதங்களாகத் தொடர்ச்சியாகக் கண்காணித்தனர். அதில் அங்கு வந்த விலங்குகள் மற்றும் பறவைகள் தங்கள் உணவுகளை எடுத்துக் கொண்டிருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 32 உயிரினங்கள் குப்பை மேட்டில் உணவுகளை எடுத்துக் கொண்டன. இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்வதும், அங்கு குப்பை கூளங்கள் அதிகமாகச் சேர்வதும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. 

நைனிடாலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்களிலும் 200-க்கும் மேற்பட்ட பறவைகளும், 75 விலங்குகளும் வந்து சென்றுள்ளன. தேர்ந்தெடுத்த இடங்களில் உணவு எச்சங்கள், கண்ணாடி பாட்டில்கள், உலோக கேன்கள், விளக்கு பல்புகள், அட்டைப் பெட்டிகள் முதலியன போன்ற கழிவுப்பொருட்களால் அந்த இடம் நிரம்பியிருந்தது. 

விலங்குகள் மற்றும் பறவைகளின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு, ஆராய்ச்சியாளர்கள் அவற்றை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்தனர். முதல் குழுவில், அவற்றில் 19 வகையான நீண்ட அலகினைக் கொண்ட பறவைகள். அவை பிளாஸ்டிக் கழிவுகளுக்கு உள்ளே இருந்த உணவை எடுத்துக் கொள்வதாகப் பதிவு செய்தனர்.

இரண்டாவது குழுவில் அணில் போன்ற முன் கைகளால் எடுத்து உண்ணக்கூடிய விலங்கினங்களில் இரண்டு வகைகள் இருந்தன. மூன்றாவது குழுவில், நாய்கள் போன்ற வாயை நேரடியாக வைத்து உண்ணக்கூடிய விலங்குகள் இருந்தன. வாயை வைத்து நேரடியாக உணவை எடுத்துக் கொள்ளும் விலங்குகள் பொருட்களைப் பிரித்து உணவை எடுத்துக் கொள்ளாமல் அப்படியே உணவாக எடுத்துக் கொள்கிறது. அவற்றால் பிளாஸ்டிக்குகளை தனியாகப் பிரிக்கவும் முடியவில்லை. 

பறவையோ அல்லது விலங்கோ 2.8 நிமிடங்கள் அந்த குப்பை கூளத்தில் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சியில் மூன்றாவது மற்றும் இரண்டாவது வகை விலங்குகளை விட முதல் குழுவான பறவைகள்தான் அதிகமான பிளாஸ்டிக்குகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவல்களையும் உறுதி செய்திருக்கின்றனர். ஏனெனில் கை இல்லாமல் மேயும் விலங்குகளை விட, பறவைகள்தான் அந்த குப்பை கூளங்களுக்கு அதிகமாக வருகை தந்திருந்தன. அவை உணவு எடுத்துக் கொள்ளும்போதும் பிளாஸ்டிக்குகளை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டது. 

"பொதுவாக விலங்குகள் இயற்கையான தன்மை கொண்டவை. அவற்றின் உணவுப் பழக்க முறைகள் இயற்கையானது. அது இப்போது மாறி விலங்குகள் மனிதர்களின் உணவுகளின் மீதங்களை உணவாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இதனால் சூழலியலில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகத் தொடங்கியது" என்கிறார் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தின் சூழலியல் மற்றும் உயிரியல் ஆய்வாளரும் சூழலியல் ஆர்வலருமான கீதஞ்சலி கேட்லம்.

பறவைகள் மற்றும் விலங்குகள் எடுத்துக் கொண்ட உணவே, அவற்றுக்குத் தீங்கிழைத்தது. அந்த உணவை அவை எடுத்துக்கொண்டது நம் கழிவுகளில் இருந்து. நம்மிடம் சரியான கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பம் இல்லை. குறிப்பாக இயற்கை தளங்களும் வனப்பகுதிகளும் சுத்தமாக இல்லை. உதாரணமாக ஒரு விலங்கு பிளாஸ்டிக்கை உணவாக எடுத்துக் கொள்கிறது என வைத்துக்கொள்வோம். அதைச் சாப்பிடும்போது செரிமானப் பாதையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப் பகுதியில் புண்கள் அதிகமாக உருவாகும். அந்தக் காயங்களால் உயிரினங்களின் வளர்ச்சி தடைப்படும். உடலில் குறைபாடுகள் ஏற்படும். இறுதியில் மரணம் அடையும். நாம் வீசும் குப்பைகள் இப்படி அவற்றின் உயிருக்கே உலைவைக்கின்றன.

நம்மைச் சுற்றியிருக்கும் விலங்குகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமெனில் கழிவுகளை ஒரே இடத்தில் தேங்க விடக்கூடாது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குப்பைகளைக் கொண்டு சென்று கழிவுகளைப் பிரித்தெடுப்பதை விட அவை உருவான இடத்திலேயே பிரித்தெடுக்கப்பட்டு மேலாண்மை செய்யவும் மறுசுழற்சி செய்யவும் வேண்டும். எடுத்துச் செல்ல முயன்றால் அனைத்து கழிவுகளையும் கொண்டு செல்லமுடியாது. அதனால் பெரும்பாலான கழிவுகள் அப்படியே போடப்படும். அந்தத் தேக்கம்தான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம். அங்கேயே கழிவு மேலாண்மை செய்வதன் மூலம் ஓர் இடத்தில் அதிகமாகக் குவியும் குப்பைகளைக் குறைக்க முடியும். அப்போதுதான் விலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று கூறுகிறது இந்த ஆய்வு முடிவு. 

இப்படி விலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது உத்தரகாண்டில் மட்டுமல்ல... உலகம் முழுவதும் நடப்பதுதான் பெரும் சோகம்.