Published:Updated:

"சின்னத்தம்பி ஜே.சி.பி.ல சிக்கியதும் கதறி அழுதுட்டோம்!" - உருகும் வனத்துறை ஊழியர்கள்

சின்னத்தம்பி... பெயருக்கு ஏற்றார் போல படு சுட்டி. ஆனால், உருவத்தில் பெரியத்தம்பி. சிறு குழந்தையைப் போன்ற உள்ளம். சேட்டை அதிகமாக இருந்தாலும், இதுவரை ஒருவரைக் கூட தாக்கியதில்லை. அந்த அளவுக்கு மனிதர்களுடன் நெருக்கமாக வாழ்ந்துவிட்டது. கடைசியில் அதுவே, சின்னத்தம்பிக்கு எதிராக அமைந்துவிட்டது.

"சின்னத்தம்பி ஜே.சி.பி.ல சிக்கியதும் கதறி அழுதுட்டோம்!" - உருகும் வனத்துறை ஊழியர்கள்
"சின்னத்தம்பி ஜே.சி.பி.ல சிக்கியதும் கதறி அழுதுட்டோம்!" - உருகும் வனத்துறை ஊழியர்கள்

னித மிருகங்கள் மோதலில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை என்று தினசரி பல விலங்குகளை இழந்து வருகிறோம். மீதம் இருக்கும் விலங்குகளையும் ஒவ்வொன்றாக இடமாற்றம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் விநாயகன். இந்த மாதம் சின்னத்தம்பி.

யார் இந்த சின்னத்தம்பி?

கோவை கணுவாய், தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாகச் சுற்றி வந்த யானை தான் சின்னத்தம்பி. பெயருக்கு ஏற்றார் போல படு சுட்டி. ஆனால், உருவத்தில் பெரியத்தம்பி. சிறு குழந்தையைப் போன்ற உள்ளம். சேட்டை அதிகமாக இருந்தாலும், இதுவரை ஒருவரைக் கூட தாக்கியதில்லை. அந்த அளவுக்கு மனிதர்களுடன் நெருக்கமாக வாழ்ந்துவிட்டது. கடைசியில் அதுவே, சின்னத்தம்பிக்கு எதிராக அமைந்துவிட்டது. அந்தப் பகுதியில் கனிம வளங்களைச் சுரண்டும் சமூக விரோதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகளை, விளை நிலங்களை சேதப்படுவதாகக் கூறி ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிவிட்டனர்.

யானை ஊருக்குள் வந்தால் அதை வேடிக்கை பார்ப்பதுடன், மனிதர்களுக்கும், அவற்றுக்குமான உறவு முடிந்துவிடும்.  ஆனால், விநாயகன், சின்னத்தம்பி யானைகளை இடமாற்றம் செய்ய உள்ளனர் என்ற தகவல் வெளியானதும், கண்ணீர்விட்டு அழுத பழங்குடி மக்கள், போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள், சின்னதம்பிக்காக ரசிகர் மன்றம் தொடங்கிய இளைஞர்கள் என்று எங்கும் பாசப் போராட்டம்தான். அப்படிப்பட்ட மக்கள் சின்னத்தம்பி யானையை இடமாற்றம் செய்ததும் சும்மா இருப்பார்களா?. தங்களது நாயகனைக் கடைசியாக பார்ப்பதற்காக, செங்கல் சூளைகளுக்கு மண் எடுப்பதற்காகத் தோண்டப்பட்ட பல நூறு ராட்சத கால்வாய்களையும் தாண்டி வந்து கண்ணீருடன் சின்னத்தம்பிக்கு பிரியா விடை கொடுத்தனர்.

சமூக ஆர்வலர் ஜோஷ்வா, "காட்டு யானைகளுக்குப் பெயர் வைப்பது பழங்குடி மக்களிடம் காலம் காலமாக இருக்கும் நடைமுறை. மற்ற யானைகளைப் போல் இல்லாமல் விநாயகன், சின்னத்தம்பி இரண்டும் மனிதர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியது. இதனால், விநாயகன், சின்னத்தம்பி வந்தால் அவர்களைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டமே வரும். இந்தப் பகுதியில் 350 செங்கல் சூளை நிறுவனங்கள் இயங்குகின்றன. அதில், விரல் விட்ட எண்ணக் கூடிய நிறுவனங்கள் தாம் உரிய அனுமதியுடன் இயங்கி வருகின்றன. இவர்களுக்கு, அரசியல், பணம் படைத்தவர்களின் துணை இருக்கிறது. வனத்தை விட்டு வந்தாலே, செங்கற்களுக்காக எடுக்கப்பட்ட மண் குழிகளில்தான் யானைகள் கால் வைக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. இதனால், வெளியில் வந்த இந்த யானைகள் இங்கேயே தங்கிவிட்டன. இது சிலருக்கு பிடிக்கவில்லை.

பல ஆண்டுகள் நம் பகுதியில் சுற்றி வந்த யானைகளை, இனி இங்கே பார்க்க முடியாது என்கிறபோது மனது மிகவும் வலிக்கிறது. அதே நேரத்தில், இங்கே புழுதிக் காட்டில் கிடந்து கஷ்டப்படுவதை விட, அங்குள்ள சோலைக்காட்டில் அந்த இரண்டு யானைகளும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.  இனி மேலாவது யானைகளையே குற்றம்சாட்டாமல், நம்முடைய தவறுகளை சரி செய்வதைப் பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால், இயற்கையின் பதில் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் இருக்கும்" என்றார்.

தடாகம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ், "விவசாயத்துக்கு உயிர் நாடியே மண்தான். ஆனால், இந்தப் பகுதியில் அந்த மண்ணைக்

கொள்ளையடிப்பதற்கு எதிராக எந்த விவசாயியும் கேள்வி கேட்கவில்லை. அடுத்த தலைமுறை இந்த மண் இல்லாவிடின் எப்படிப் பிழைப்பார்கள்? 15 ஆண்டுகளில் இந்த பூமியை அழித்துவிட்டனர். இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் யானைகளை இடமாற்றம் செய்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. கனிம வள கொள்ளையர்களுக்கு இந்த இரண்டு யானைகளும் தொந்தரவாக இருக்கின்றன.  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கும் வனத்துறை, மக்களின் கோரிக்கையை ஏன் ஏற்பதில்லை?  இதைத் தடுப்பதற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்னத்தம்பி சில நேரங்களில் கூட்டமாகவும் வருவான், சில நேரங்களில் தனியாகவும் வருவான். அவனால் இங்கு எந்த பிரச்னையும் இல்லை. வனப்பகுதியில் அவற்றுக்கு என்ன தேவை என்பதை ஆய்வு செய்து, அந்த வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக, கனிம வளக் கொள்ளையர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், நம் அடுத்த தலைமுறை செழிப்பாக வாழும்" என்றார்.

சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத், "கனிம வளக் கொள்ளையர்கள், வனத்துறை வெட்டிய அகழி அருகே வந்து 300

அடிவரை குழி தோண்டி எடுக்கிறார்கள். சமீபத்தில் அந்தக் குழியில் விழுந்து ஒரு மாடு இறந்தே விட்டது. யானைகளுக்கும் இதனால், தொந்தரவுகள் இருக்கத்தான செய்யும்? எதற்காக, அவர்களைப் குழி தோண்ட அனுமதிக்க வேண்டும்? இந்தப் பகுதியில் எத்தனையோ யானைகள் இருக்கின்றன. ஆனால், எந்த யானை பிரச்னை செய்தாலும் விநாயகன், சின்னத்தம்பி பெயரைத்தான் சொல்கின்றனர். உண்மையில், இவற்றால் எந்த பிரச்னையும் இல்லை. அப்படி இருக்கும்போது, இவற்றை  ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும்.? இந்த இரண்டு யானைகளும்  இதுதான் பூர்விகம். வனப்பகுதியில் அதற்குச் சரியான உணவு கிடைக்காதபோது, அது உணவு தேடி வெளியில் வரதான செய்யும்? இரண்டு யானைகளையும் மீண்டும் கோவையிலேயே விட வேண்டும்" என்றார்.

வனவேட்டைத் தடுப்பு காவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ரங்கசாமி, "இரண்டு யானைகளையும் நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு மேலாகச் பார்த்து வருகிறோம். சின்னத்தம்பி நாங்கள் பேசுவதை எல்லாம் புரிந்து கொள்வான். எப்பேர்ப்பட்ட விலங்காக இருந்தாலும், சின்னத்தம்பி அவற்றுடன் செட் ஆகிவிடுவான். எப்போதுமே, தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தை வைத்திருப்பான். ஒருமுறை, சேற்றில் கால்வைத்து வழுக்கி நான் சின்னத்தம்பியின் காலடியில் விழுந்துவிட்டேன். எல்லோரும் பதற்றப்பட்ட நிலையில், சின்னத்தம்பி நான் எழுந்து செல்லும்வரை காத்திருந்து பிறகு நடந்து சென்றான். அந்த யானையை லாரியில் ஏற்றுவதற்கே எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மிகுந்த மனவருத்தத்துடன் தான் நாங்கள் பணி செய்து வருகிறோம்" என்றார்.

ரங்கசாமி மட்டுமல்ல, வனத்துறையில் பல ஊழியர்கள் விநாயகன், சின்னத்தம்பி யானை இடமாற்றத்தால் கவலையில் உள்ளனர். "சின்னத்தம்பி ஜே.சி.பி-யில் சிக்கியவுடன் பயந்துவிட்டோம். அதிர்ஷ்டவசமாக ஏதும் நடக்கவில்லை. இருந்தும் அப்போது  கதறி அழுதுவிட்டோம். எங்களது குடும்பத்தினரும் டி.வி-யில் பார்த்து அழுதுவிட்டனர்" என்று விநாயகன், சின்னத்தம்பி யானைகளுக்காகக் கண்ணீர் விடுகின்றனர்.

கிட்டத்தட்ட 24 மணி நேரப் போராட்டம். மயக்க ஊசி போட்டு, குடும்பத்தைவிட்டுப் பிரித்து, கயிறு கட்டி, கும்கிகளால் குத்தி, ஜே.சி.பி-யால் தாக்கி என்று சின்னத்தம்பிக்கு ஏராளமான தொந்தரவுகள். லாரியில் செல்லும்போது கூட கடும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட சின்னத்தம்பி, டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் இறக்கிவிட்டவுடன், அங்கிருந்த மனிதர்களை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு, ஆரவாரமின்றி அமைதியாக சென்றுவிட்டது.

சின்னத்தம்பி இப்போதும் மனிதர்களை நம்பிக்கொண்டுதான் இருக்கிறான். அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டே…