Published:Updated:

உஷார்... இதுவும் முதுமலைக் காடுதான்! - மசினக்குடியில் நடப்பது என்ன?!

கார் டிரைவர், ``இந்தாங்க ப்ரோ டீக்கு இந்தக் காசைக் கொடுங்க” என 200 ரூபாயை நீட்டினார். ”வேண்டாங்க” என்றேன். ``இல்ல இது உங்க பணம்தான். மசினக்குடியில் நீங்க டிக்கெட் எடுத்ததுக்கு கமிஷனா எனக்குக் கொடுத்தாங்க” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

உஷார்... இதுவும் முதுமலைக் காடுதான்! - மசினக்குடியில் நடப்பது என்ன?!
உஷார்... இதுவும் முதுமலைக் காடுதான்! - மசினக்குடியில் நடப்பது என்ன?!

து உயரமான மலையில் பயிரிடப்பட்டிருந்த தேயிலைத் தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த அழகிய குடியிருப்பு. இங்கு நின்று குன்னூர் நகர் முழுவதையும் பார்க்கலாம். அன்று மூன்றாவது நாள், காலை 5 மணி அளவில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே வந்தேன். உறைய வைக்கும் குளிர். உடல் நடுங்கியது. இருள் முழுமையாக விலகவில்லை. தூரத்தில் தெரிந்த தெரு விளக்குகளும், குடியிருப்புகளின் விளக்குகளும் நட்சத்திரக் கூட்டங்கள் போல் காட்சி அளித்தன. மீண்டும் அறைக்குச் சென்று நண்பர்களைத் தயாராகச் சொன்னேன். ``டேய்…இன்னைக்கு கசகசனு வேணாம். நேரா முதுமலைக்குப் போவோம்” என்றான் நண்பன். உண்மைதான், முதல் இரண்டு நாள்கள் கோவை குன்னூர், கோத்தகிரி, ஊட்டி எனப் பல இடங்கள் சுற்றி வந்தாலும் எதையும் ரசிக்க நேரம் கிடைக்கவில்லை.

காலை உணவை முடித்து விட்டு முதுமலை கிளம்பினோம். காரில் ஏறியதும் கூகுள் மேப்பைப் பார்த்த நண்பன், ``மணி இப்போ 9.55. இங்கிருந்து சரியா 2.15 மணி நேரத்துல முதுமலை போயிடலாம்” என்றான். குன்னூரிலிருந்து ஊட்டி, அங்கிருந்து மைசூர் செல்லும் சாலை வழியாக முதுமலை செல்ல வேண்டும். ஊட்டியில் வெப்பநிலை குளுகுளுவென இருந்தாலும், மலைகளில் மரங்களைக் காட்டிலும் கட்டடங்களே அதிகம் இருப்பதால், எப்போதும் எனக்கு அது மார்கழி மாதத்தில் சென்னையைக் காண்பது போன்ற ஒரு பெருநகர வாடையே வீசும்.

ஊட்டியிலிருந்து மைசூர் சாலையில் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு இடையே எங்கள் கார் சென்றது. மலைகள் மீது கட்டப்பட்டிருந்த வீடுகளைப் பார்க்கும்போது, சீறாக, அடுக்கி வைக்காத அட்டைப் பெட்டிகளைப் போல் தோன்றின. அது கர்நாடகா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையை நோக்கிச் செல்லும் சாலை என்பதால், இரு மாநிலப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களை அதிகம் காண முடிந்தது.

சாலையில் செல்லச் செல்ல நெருக்கடியான வீடுகள் குறைந்து ஆங்காங்கே ஒரு சில வீடுகள் மட்டும் தோன்றின. தேயிலைத் தோட்டங்கள் மறைந்து மரங்களால் அலங்கரிக்கப்பட்ட அடர்ந்த காடுகள் வரவேற்றன. சிறிது தொலைவு சென்ற பிறகு சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வலதுபக்கச் சாலையில் ஒரு சோதனைச் சாவடியில் எங்களை வழிமறித்தார்கள். அவர்களிடம் "முதுமலை செல்ல வேண்டும்" என்றோம். "இடது பக்கமாகச் செல்லுங்கள்" என்றார்கள். அது கூடலூர் வழியாக முதுமலைக்குப் செல்லும் சுற்றுப்பாதை. 20 கி.மீ தொலைவு கூடுதலாகச் செல்ல வேண்டும். அனுமதி கிடைக்காததால் கூடலூர் சாலையில் வண்டியைத் திருப்பினோம். குழிகள் இல்லாத தெளிவான அந்தச் சாலை, கூடலூர் இருக்கும் பள்ளத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. போகும் வழியில் `பைக்காரா படகு இல்லம் 9 கி.மீ’ என்ற பலகையைக் கவனித்தோம். "அங்கே போகலாம்" என்றனர் நண்பர்கள்.

மலைகளுக்கு நடுவே தேங்கிய நீரில் கடல் போல் காட்சி அளித்தது பைக்காரா. மோட்டார் படகில் ஒரு ரவுண்ட் அடிக்க முடிவுசெய்தோம். 8 இருக்கைகள் கொண்ட படகைத் தேர்வு செய்தோம், 20 நிமிடப் பயணத்துக்கு 750 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏரியில் எங்களைப் போல நிறைய சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சவாரி செய்து இயற்கையை ரசித்தனர். இடையிடையே அதிவேகப் படகுகளும் நீரைக் கிழித்துக்கொண்டு அங்கும் இங்குமாகச் சென்றது. அதை முடித்து, மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

மதிய உணவுக்காகக் கூடலூரை அடுத்த மலை அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வண்டியை நிறுத்தினோம். எங்குப் பார்த்தாலும் பசுமை, வீசும் குளிர் காற்று, இதமான வெயில், தூய்மையான நீர் ஓடிய சிறு ஆறு, ஆற்றைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட பாலத்தின் இரு முனைகளிலும் சில கடைகள். எவ்வித மாசும் படியாத அந்தக் கிராமம் ரம்மியமாகக் காட்சி அளித்தது. பிரிய மனமில்லாத அந்த இடத்தைவிட்டு முதுமலைக்கு வழிகேட்டுக் கிளம்பினோம். சில மணித்துளி பயணங்களிலே முதுமலை வனவிலங்கு சரணாலய நுழைவுவாயில் எங்களை வரவேற்றது. சோதனைச் சாவடியில் வனத்துறை காவலர் "இரவு 8 மணிக்குள் திரும்பி வந்துவிடுங்கள்" என்றார்.

உள்ளே நுழைந்தோம். புதிதாகப் போடப்பட்ட தார்ச்சாலை பளபளத்தது. ஆங்காகே வேகத்தடைகளும், 30 கி.மீ வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்ற தட்டிகளும் இருந்தன. இருபுறமும் அடர்ந்த மூங்கில் காடுகள், சாலையையொட்டி வலதுபுறம் ஒரு காட்டாறு. பாறைகளின் இடையே முட்டிமோதிச் செல்லும் நீரின் சத்தம், எங்கோ தூரத்தில் விழும் அருவியின் சத்தம் எனத் தனக்கே உரிய  பாணியில் காடு எங்களை வரவேற்றது. விலங்குகளின் பாதுகாப்புக்காகச் சாலையின் இரு பக்கங்களிலும் 100 அடிக்குப் புற்கள் வெட்டி சுத்தம் செய்யப்பட்டிருந்தது. திடீரென காரை நிறுத்தச் சொல்லி இடது பக்கம் கையை நீட்டி ``தோ பார்ரா.. மான்” என்றான் நண்பன். மிக அருகிலேயே கூட்டம் கூட்டமாக மான்கள். எங்களைக் கண்டு எந்தப் பதற்றமும் இல்லாமல் மேய்ந்துகொண்டிருந்தன. காரை மெதுவாக ஓட்டச்சொல்லி சாலையின் இரு பக்கங்களையும் பார்த்துக்கொண்டே சென்றோம் சிங்கவால் குரங்குகள் மரங்களில் தாவித் தாவி விளையாடிக்கொண்டிருந்தன.

சிறிது தூரம் சென்றதும் வலது பக்கம் உள்ள காட்டாற்றில் யானைகள் நீர் அருந்திக்கொண்டிருந்தன. சில யானைகள் ஆற்றுக்கரையில் மேய்ந்து கொண்டிருந்தன. விலங்குகளை அவை வாழும் சூழலில் நேரடியாகக் காண்பது ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது. சில மணி நேரங்கள் அங்கேயே நின்றோம். எச்சரிக்கையையும் மீறி நண்பர்கள் செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்தனர். நான் மனதை வேறு எங்கும் திசை திருப்பாமல் அந்தச் சூழலை முழுமையாக அனுபவிக்க விரும்பினேன். அங்கிருந்த அந்த நிமிடங்களில் மரங்களையும், செடிகொடிகளையும், மலைகளையும், ஆற்றையும், நீரையும் அங்கு வாழும் விலங்குகளையும், பூச்சிகளையும் முழுமையாக நேசித்தேன். ஒரு தெளிந்த மனதோடு காரில் அமர்ந்தேன். நினைவில் ஜெயமோகனின் வரிகள்... ``காட்டைப் புரிஞ்சுக்கணும்னா காட்டிலே வாழணும். பணம், புகழ், அதிகாரம், லொட்டு, லொசுக்கு எல்லாத்தையும் உதறிட்டு நீயும் இந்தக் குரங்களை மாதிரி, யானைகளை மாதிரி இங்க இருக்கணும்...”

முதுமலை சரணாலயத்துக்குச் சென்றால் வனத்துறையினர் காட்டுக்குள் அழைத்துச் செல்வார்கள்; இன்னும் நிறைய விலங்குகளைப் பார்க்கலாம் எனக் கிளம்பினோம். சரணாலய அலுவலகம் செல்ல எவ்வளவு தூரம் எனத் தெரியவில்லை. வனப்பகுதி என்பதால் கூகுள் மேப் வேலைசெய்யவில்லை. சில கிலோமீட்டர் தொலைவில் நாங்கள் சென்ற சாலை இரண்டாகப் பிரிந்தது. அந்த இடத்தில் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதுதான் முதுமலையாக இருக்குமோ எனச் சந்தேகம் எழுந்தது.

வலது பக்க சாலையில் காட்டாற்றைக் கடக்கப் போடப்பட்ட பாலத்தின் முனையில் நின்றிருந்த ஒருவரிடம், "இதுதான் முதுமலையா" என விசாரித்தோம். அவர் வலது பக்கம் கைநீட்டி ``இப்படியே போங்க வரும்” என்றார். ஐந்தாறு கிலோ மீட்டர் சென்றிருப்போம். நிறைய  கடைகள் இருந்தன. சாலையின் இருபுறமும் மலையேறும் ஜீப்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. ஒரு கடையின் விளம்பரப் பலகையில் `மசினக்குடி’ என எழுதப்பட்டிருந்தது. விசாரித்த பிறகுதான் தெரிந்தது நாங்கள் முதுமலையில் நின்றுதான் முதுமலைக்கு வழி கேட்டிருக்கிறோம். அங்கிருந்தவர் ஏன் தவறாக வழி சொன்னார் எனக் குழம்பிக்கொண்டிருந்தபோது ஒருவர் வந்து ``நீங்க ஜீப்ல காட்டைச் சுத்திப் பாக்கணுமா... அங்க போங்க. 4 டைப் இருக்கு. எது புடிச்சிருக்கோ போங்க” என்றார்.

ஒரு வெள்ளைக் கட்டடம். அங்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு வனத்துறைக்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. "இது முதுமலை காட்டுக்குள் அழைத்துச் செல்லும் இடமா?" எனக் கேட்டோம். அங்கு இருந்த சில ஜீப் டிரைவர்கள் ``இதுவும் முதுமலை காடுதான். இங்க 4 விதமாப் போகலாம் சார். டைமிங்குக்கு ஏத்தமாதிரி காசு” என்றனர். அங்கிருந்த பலகையில் `டீஃப் பாரஸ்ட் பகுதியை ஜீப்பில் சுற்றிப் பார்க்க 5 பேருக்கு (2.30 மணி நேரம்) 2,500 ரூபாய்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நாங்கள் டீப் ஃபாரஸ்ட் ஆப்ஷனைத் தேர்வுசெய்தோம். நாங்கள் 7 பேர் என்பதால் கூடுதலாக 300 ரூபாய் கொடுத்தோம். பயணம் தொடங்கியது. சிறிது தூரம் சென்றதுமே எங்களால் கணிக்க முடிந்தது. இது நாங்கள் காலையிலிருந்து பார்த்து வந்த காட்டுக்கு முற்றிலும் மாறான ஒரு வறட்சியான காட்டுப்பகுதி. அங்கு குள்ளமாக வளர்ந்த முள் மரங்களே அதிகம் தென்பட்டன. ``ஜீப்பை திருப்பச் செல்லு போவோம்” என்றான் ஒருவன். ``வந்துட்டோம் என்னதான் இருக்குனு பாத்துடுவோம்” என்றான் இன்னொருவன். ஓரிரு இடங்களில் காட்டு மாடுகளையும், மான்களையும் பார்த்திருப்போம். அவ்வளவுதான். முதுமலையில் பார்த்த யானையைக் கூட இங்குப் பார்க்க முடியவில்லை.

எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணிப்பவன் நான். ஆனால், ஒவ்வொரு பயணமும் எதோ ஓர் அனுபவத்தைக் கொடுக்கும் என்பது என் நம்பிக்கை. நண்பர்களுடனான இந்த மூன்று நாள் பயணத்தை நான்தான் திட்டமிட்டிருந்தேன். ஜீப்பில் காட்டைச் சுற்றிப் பார்க்கும் இந்தப் பயணம் அவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது என்ற எண்ணம் உறுத்திக்கொண்டே இருந்தது. ``இனி ட்ரிப் போட்டா இந்தப் பக்கமே வரக்கூடாது. ஒண்ணுமே இல்லாததுக்கு 2,500 ரூபாயா?” எனச் சலிப்புடன் கூறினான் நண்பன். இரவு 7 மணி. மசினக்குடியிலிருந்து ஊட்டிக்குக் கிளம்பினோம். மலைகளின் மீது செங்குத்தாக ஏறிய சாலை, பல ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டிருந்தது. 

ஊட்டியை நெருங்கினோம் குளிர் காற்று வீசத் தொடங்கியது. காரை ஒரு டீக்கடை அருகே நிறுத்தினோம். கார் டிரைவர், ``இந்தாங்க ப்ரோ டீக்கு இந்தக் காசைக் கொடுங்க” என 200 ரூபாயை நீட்டினார். ”வேண்டாங்க” என்றேன். ``இல்ல இது உங்க பணம்தான். மசினக்குடியில் நீங்க டிக்கெட் எடுத்ததுக்கு கமிஷனா எனக்குக் கொடுத்தாங்க” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

``மசினக்குடியில ஜீப்ல போறதுக்காக டிக்கெட் எடுக்கும்போது ஒரு கும்பல், என்னைத் தேடி வந்து `அந்த 7 பேரைக் கூட்டிட்டு வந்தது நீங்கதானே’னு எங்கிட்ட கேட்டாங்க. நான் ஆமான்னு சொன்னேன். உடனே இந்தப் பணத்தைக் கொடுத்தாங்க. முதுமலையில் நாம வழி கேட்டோமே... அவரும் இவங்க ஆள்தானாம். அங்கேயே நம்ம வண்டி நம்பரை நோட் பண்ணி வச்சி சொல்லி இருக்கார் அவர். எல்லாரையும் இப்படிதான் ஏமாத்துறாங்க போல. நீங்க ஜீப்ல போன பிறகு ஒரு அம்மா அங்க வந்து, `ஒண்ணுமே இல்லாத காட்டைக் காமிக்க எதுக்கு இவ்வளவு பணம். என் பணத்தைத் திருப்பி கொடுங்க’னு சத்தம் போட்டாங்க’’ என நடந்த விஷயத்தை விளக்கினார் கார் டிரைவர். நாங்கள் ஏமாற்றப்பட்டது அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. எங்களைப் போல பல வாகனங்களில் வெளிநாட்டவரும், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களும் அங்கு டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தனர். அவர்களும் இந்த வறண்டக் காடுதான் முதுமலையோ எனத் தவறாக எண்ணி இருக்கலாம். ஏமாற்றமும், கோபமும், ஆற்றாமையும் என்னை வாட்டியது.

மறுநாள் காலையில் குன்னூரில் இருக்கும் அண்ணனுக்கு போன் செய்து சென்னை வந்து சேர்ந்த தகவலைச் சொன்னேன். ``எனக்கும் முதுமலை போகலாம்னு ஒரு பிளான் இருக்கு” என்றார். ``கவனமா இருங்க. எங்களை மாதிரி நீங்களும் ஏமாற வேண்டாம். மசினக்குடியில மறிச்சு `இதுதான் முதுமலை’னு சொல்லி, ஒரு கும்பல் பணத்தை எல்லாம் பிடுங்கி ஒரு வறண்ட காட்டைச் சுத்தி காமிக்கிறாங்க” என எச்சரித்தேன்.

நீங்களும் உஷார்!