Published:Updated:

``சின்னதம்பிக்கு அப்படி... லட்சுமிபிரியாவுக்கு இப்படி!" - மதுரை யானைக்கு ஸ்பெஷல் லாரி!

``லாரி வாங்கிய நேற்றைய தினமே டெமோவாகக் குட்டி யானை குஷ்மாவை, ஒரு குட்டிப் பயணம் கூட்டிச் சென்று வந்தோம்" என்று பூரிக்கிறார், ஹரேஷின் தந்தை ரெங்கன்!

``சின்னதம்பிக்கு அப்படி... லட்சுமிபிரியாவுக்கு இப்படி!" - மதுரை யானைக்கு ஸ்பெஷல் லாரி!
``சின்னதம்பிக்கு அப்படி... லட்சுமிபிரியாவுக்கு இப்படி!" - மதுரை யானைக்கு ஸ்பெஷல் லாரி!

`யானை விவசாய நிலங்களை அழிக்கின்றன. விரட்ட வேண்டும்!’ என்பது கோவை விவசாய மக்களின் குரல்.
`இல்லை! காடுகளின் பிள்ளைகள். அவர்களைக் காக்க வேண்டும்!' என்பது பழங்குடி மக்களின் குரல். 

கோவை தடாகத்தில் ஊருக்குள் புகுந்த யானைகள் விநாயகன் மற்றும் சின்னதம்பிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருவேறு சாரர்கள் குரல்கொடுக்க, குரலெடுக்க முடியாமல் தட்டுத் தடுமாறி காடு முழுக்க எதிரொலித்த தனது பிளிறல்களை மௌனமாய் உன்னித்தபடியே ஒருவழியாய் டாப்சிலிப்புக்குக் கண்ணீரில் மிதந்துசென்றான், `சின்னதம்பி'! 

இந்தச் சோகம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் ஆறுதல் தரும் விதமாக வேறு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. வீட்டில் வளர்க்கப்படும் தனது யானைகளுக்காக ஸ்பெஷல் லாரி ஒன்றை வாங்கியுள்ளார், மதுரை யானைக்குச் சொந்தக்காரர் ஹரேஷ்! 

காரணம் என்ன?

ஹரேஷ், மதுரை கடச்சனேந்தல் அந்தனேரிப் பகுதியில் உள்ள தமது இல்லத்தில் லட்சுமிபிரியா, குஷ்மா என இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவதற்காகப் பல ஊர்களுக்கு இவை அழைத்துச் செல்லப்படுகின்றன. வழக்கமாக வாடகை லாரி பிடித்து அதில் ஏற்றிக்கூட்டிச் செல்வார்கள். அவற்றை மேடான பகுதிக்குக் கொண்டுசென்று அதிலிருந்து லாரிக்குள் ஏற்றுவார்கள். ஆனால், அதற்கான ரெடிமேட் ஏற்பாடுகள் கொண்ட லாரி ஒன்று சொந்தமாக இருந்தால் வசதிதானே! அதைத்தான் வாங்கி வந்திருக்கிறார், ஹரேஷ். ``லாரி வாங்கிய நேற்றைய தினமே டெமோவாகக் குட்டி யானை குஷ்மாவை, ஒரு குட்டிப் பயணம் கூட்டிச் சென்று வந்தோம்" என்று பூரிக்கிறார், ஹரேஷின் தந்தை ரெங்கன்!

கேரளப் பகுதிகளில் இதுபோன்ற பிரத்யேக லாரிகளில்தான் யானைகள் பயணிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் இந்த வசதிகொண்ட வாகனங்கள் இல்லை. இதனால், தாங்களே அந்த யோசனையை முன்னெடுத்து அவை இரண்டும் பயணிப்பதற்கென்றே தனித்த வசதிகொண்ட லாரியை டெலிவரி பெற்றுள்ளனர் இந்தக் குடும்பத்தினர்.

``பாலக்காட்டுப் பகுதியில் இவ்வகை லாரிகளைப் பார்த்து வீடியோக்கள் எடுத்துக் கொண்டுவந்து மதுரை டி.வி.எஸ். நிறுவனத்தினரிடம் காண்பித்தோம். அந்த நிறுவனம், அசோக் லைலெண்டுடன் இணைந்து நாங்கள் காட்டிய மாதிரிகளைவிடச் சிறப்பாகத் தயாரித்துத் தந்துள்ளனர்" என்று கூறுகிற ரெங்கன், ரூ.17 லட்சம் செலவில் இந்த லாரியைச் சொந்தமாக்கியுள்ளார்.

இந்த லாரியில் என்னென்ன சிறப்பம்சங்கள் எனக் கேட்டோம். ``மரக்கட்டைகளுக்குப் பதிலாக இரும்பு ராடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், யானையின் பாதுகாப்பு இன்னும் பலப்படும். அதன் தீவனத்துக்குத் தனி இடம், அவற்றின் உருவ அளவிற்கேற்ப தாராளமான இட வசதி, யானை கால்வைத்து ஏறுவதற்காக லாரியுடனே இணைக்கப்பட்ட இரும்புப் படிவசதி என முழுமையான 'யானை ஸ்பெஷல்' லாரிங்க, இது!" என்றார் ஹரேஷ். வீட்டு யானைகள் என்றாலே கடைகளில் துதிக்கை நீட்டி, காசு கேட்கத்தான் பழக்கப்படுத்தப்படுகிறது என்கிற பொதுவான பார்வையை உடைப்பதாக இருக்கிறது ஹரேஷ் தன் யானைகளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கும் இந்த வண்டி. தமிழகத்தில் இருக்கும் மற்ற யானை வீட்டுக்காரர்களுக்கு ஹரேஷின் இந்த நடவடிக்கை ஒரு முன்மாதிரி.   

துதிக்கை தூக்கி `பை..பை’ சொன்ன பெரியவள் லட்சுமிபிரியாவிடம் நாம் விடைபெற்றுக் கிளம்பினோம். வழியில் நமது அலைபேசிக்கு அவசரமாக ஒரு `பிரேக்கிங் நியூஸ்' வந்தது, ``டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட `சின்னதம்பி', மீண்டும் ஊருக்குள் புகுந்தது" என்று.