Published:Updated:

நம்மிடம் சின்னத்தம்பி என்ன கேட்கிறான்!

அவன் நினைத்திருந்தால், எண்ணிலடங்கா சேதங்களை ஏற்படுத்தியிருக்க முடியும். தன்னைப் பிடிக்க களமிறக்கப்பட்ட கும்கிகளுடன் விளையாடிவருகிறான். தீப்பந்தத்தை வைத்து விரட்டுபவர்களையும் தாக்காமல் அமைதிகாக்கிறான். சின்னத்தம்பி தேடுவது தன் வாழ்விடத்தை மட்டுமே. 

நம்மிடம் சின்னத்தம்பி என்ன கேட்கிறான்!
நம்மிடம் சின்னத்தம்பி என்ன கேட்கிறான்!

ளத்தில் இறங்கிப்போராடும் இளைஞர்கள், கண்ணீர்விட்டு அழும் பழங்குடி மக்கள், அவனைப் பாதுகாக்க சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கும் நெட்டிசன்கள், வழக்குப் போடும் சூழலியல் ஆர்வலர்கள், விமர்சனம் செய்யும் அரசியல் கட்சித் தலைவர்கள் என்று பிரேக்கிங் நியூஸ்களிலும் சமூக வலைதளங்களிலும் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டான் சின்னத்தம்பி. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, யானைகள் குறித்தும் காடுகள் குறித்தும் பகிரப்படும் விவாதங்கள் நிம்மதியளிக்கின்றன. ஆனால், சின்னத்தம்பி யார், கோவையில் அவன் என்ன செய்தான், எதற்காக அவனை இடமாற்றம் செய்தனர். தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி பல மைல் தூரம் நடந்து சின்னத்தம்பி உலகத்துக்குச் சொல்லவருவது என்ன, இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என்பதை வெறும் பிரேக்கிங் நியூஸாகக் கடந்துவிட முடியாது.

மலைகள் சூழ, இயற்கையின் அலாதி அழகு நிறைந்த கோவைத் தடாகம்தான் சின்னத்தம்பியின் பூர்வீகம். சுறுசுறுப்பான சுட்டி பெரிய தம்பி என்ற யானையுடன் சுற்றித் திரிந்ததால், அந்த ஊர் மக்களால் சின்னத்தம்பி என்று அன்புடன் அழைக்கப்பட்டான். சின்னத்தம்பியின் நடவடிக்கைகள், தற்போது வேண்டுமானால் பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால், தடாகம் பகுதி மக்களும், ஆனைகட்டி பழங்குடி மக்களும், `எங்க ஊரு ராசா இப்படிக் கஷ்டப்படுதே’ என்று கண்ணீர்விட்டுவருகின்றனர். காரணம், சின்னத்தம்பி எப்போதுமே மனிதர்களைத் தாக்க மாட்டான். அவனுடைய சேட்டைகளுக்கு பொதுமக்களும் சூழலியல் ஆர்வலர்கள் மட்டுமல்ல, பல ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுமே ரசிகர்கள்தான். ஒரு கட்டத்தில், பெரியதம்பியை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். இதனால், தனியாகச் சுற்றுவது, விநாயகன் யானையுடன் சுற்றுவது, தாய், குட்டியுடன் வலம் வருவது 10, 15 உருப்படிகள் கொண்ட கூட்டத்துக்குத் தலைமை தாங்குவது என்று அலைந்து திரிந்துகொண்டிருப்பான் சின்னத்தம்பி.

திடீரென்று கட்டடங்களும் செங்கல் சூளைகளும் சின்னத்தம்பியின் வழியில் குறுக்கே நின்றன. வனமும் வளம் இழக்க, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கம்பீரமாக வாழ்ந்துவந்தான் சின்னத்தம்பி. விளை நிலங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, சின்னத்தம்பி மீதும், விநாயகன் மீதும் புகார்கள் எழுந்தன. ஊருக்குள் புகுந்து எந்த யானைகள் சேதம் செய்தாலும், இந்த இரண்டு யானைகள் மீதே பழி போடப்பட்டன. இரண்டு யானைகளையும் இடமாற்றம் செய்யச் சொல்லி போராட்டத்தில் இறங்கினார்கள் விவசாயிகள். சின்னத்தம்பி, விநாயகனை பிடிக்கக் கூடாது என்றும் ஆங்காங்கே எதிர்ப்புகள் எழுந்தன.

இதனிடையே, கோவை கலெக்டரிடம் `எங்க உயிர் போகுதுல்ல. அந்த யானைய சுட்டுக் கொல்லுங்க’ என்று விவசாயிகள் கொதித்தனர். சென்னை சென்று போராட்டம் நடத்தினார்கள். அமைச்சர் வேலுமணி மூலம் அழுத்தம்கொடுக்கிறார்கள். வேலுமணியும் உத்தரவிடவே, விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. விநாயகன் யானையை முதுமலைக்கு மாற்ற, சின்னத்தம்பி யானையை டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் விட்டனர். விநாயகனைப்போல சின்னத்தம்பியும் தங்கிவிடுவான் என்றுதான் அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், ஒரு வாரத்துக்குள் தன் வாழ்விடத்தைத் தேடி பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி பகுதிக்கு வந்தான் சின்னத்தம்பி.

ஆனால், `சின்னத்தம்பி மனிதர்களின் வாழ்விடத்தில் தங்கிப் பழகிவிட்டான். இனி, அவனால் காட்டில் வாழ முடியாது. எனவே, அதைக் கும்கியாக மாற்றுவதைத் தவிர, வேறு வழி கிடையாது’’ என்று அதிகாரிகளும், சில `அறிஞர்களும் பரிந்துரைசெய்தனர். இப்படி எத்தனையோ விஷயங்கள் சின்னத்தம்பியைச் சுற்றி நடக்க, சின்னத்தம்பி மட்டும் உலகுக்கு எதையோ சொல்லிக்கொண்டே இருக்கிறான். தொடர்ந்து, பல கிராமங்கள் வழியே பயணித்துக்கொண்டிருக்கிறான் சின்னத்தம்பி. தற்போது கிருஷ்ணாபுரம் பகுதியில் இருக்கும் சின்னத்தம்பி பயணித்த பகுதிகளில், ஏராளமான மனிதர்களும், கட்டடங்களும் நிறைந்திருக்கின்றன. அவன் நினைத்திருந்தால், எண்ணிலடங்கா சேதங்களை ஏற்படுத்தியிருக்க முடியும். தன்னைப் பிடிக்க களமிறக்கப்பட்ட கும்கிகளுடன் விளையாடிவருகிறான். தீப்பந்தத்தை வைத்து விரட்டுபவர்களையும் தாக்காமல் அமைதிகாக்கிறான். சின்னத்தம்பி தேடுவது தன் வாழ்விடத்தை மட்டுமே. 

தன் சொந்தங்களையும் வாழ்விடத்தையும் விட்டுப் பிரித்து, தன் சொந்த இனத்தை வைத்தே மூர்க்கத்தனமாகக் குத்தி, ஜே.சி.பி-யால் இழுத்து, தந்தங்கள் உடைந்து, ரத்தக் காயங்களுடன் சின்னத்தம்பியை லாரியில் ஏற்றியதைக் கண்டு அவனைப் பிடிக்கச் சொல்லியவர்கள் கூட உள்ளூற வருத்தப்பட்டிருப்பார்கள். ஒருபக்கம் ரயில் தண்டவாளங்களும், மின்வேலிகளும் யானைகளின் உயிரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம், இடமாற்றம், கும்கிகள் என்ற பெயரில் கம்பீரமாகச் சுற்றவேண்டிய யானைகள், அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றன.

இத்தனைக்கும் மத்தியில், தனி ஒருவனாக பல கி.மீ தூரம் நடந்து, தன்னுடைய குணத்தை மக்களுக்கு உணர்த்தி, தன்னுடைய பிரச்னை தன் வாழ்விடம்தான் என்று அதிகாரிகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறான் சின்னத்தம்பி. 

``சின்னத்தம்பி, பகல் நேரங்களில் எப்போதும் பாதுகாப்பற்ற வனப்பகுதியில்தான் இருப்பான். இரவு நேரத்துலதான் நல்லா சுத்துவான். இப்ப அவன் வாழ்விடத்தைத் தேடித்தான் சுத்திட்டு இருக்கான். அவன் குழந்தை உள்ளம் கொண்டவன். ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி, வனத்தை வளப்படுத்தி, அகழி வெட்டி பராமரிச்சாலே பிரச்னை இல்ல" என்று சின்னத்தம்பியை ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கவனித்து வரும் வனத்துறை ஊழியர்கள் கூறுகின்றனர்.

கோவையைப் பொறுத்தவரை, கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், ஆன்மிகத்தின் பெயரில் இயங்கிவரும் சுற்றுலாத் தலங்கள், ஏன் பல அரசு அலுவலகங்கள்கூட யானைகளின் வாழ்விடத்தை அபகரித்துதான் இயங்கிவருகின்றன. 

``தமிழகம் முழுவதும் 101 இடங்களில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன’’ என்று ஒரு சூழலியல் மாநாட்டில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதே மேடையில், ``சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று கூச்சமே இல்லாமல் அறிவிக்கிறார். சூழலியல் காவலர்கள் என்றும், மேற்குத்தொடர்ச்சி மலையைப் பாதுகாப்போம் என்றும் சொல்பவர்கள்கூட, ``சின்னத்தம்பியைக் கூண்டில் அடைப்பதுதான் சரி’’ என்று சின்னத்தம்பிக்கு வைத்தியம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.

யானைகளுக்கு காடு, பட்டா பூமி வித்தியாசம் எல்லாம் தெரியாது. வித்தியாசம் தெரிந்த மனிதர்கள் செய்த தவறுகளுக்குத்தான் வனவிலங்குகள் தண்டனையை அனுபவித்துவருகின்றன. வைத்தியம் பார்க்கவேண்டியது யானை வழித்தடங்களை ஆக்கிரமித்தவர்களுக்குத்தானே தவிர, இவனுக்கு அல்ல. அவன், அழிந்துவரும் வனத்தைக் காப்பதற்காகப் போராடிவரும் வனமகன்.