Published:Updated:

யானைகளுக்குக் கோயில்... சின்னத்தம்பிக்குச் சிறப்பு பூஜை! எங்கே, ஏன்?

"சின்னத்தம்பி ரொம்ப நல்லவரு சாமி. மனுசங்களுக்கு எல்லாம் கிடைச்சுமே, பத்தல பத்தலனு பறந்துட்டு இருக்கோம். அவங்களுக்கு எதுவுமே கிடைக்காதப்ப, நம்ம கிட்டதான சாப்பாடு தேடி வருவாங்க? அவங்களுக்குக் கொடுக்கறது தானம் சாமி."

யானைகளுக்குக் கோயில்...  சின்னத்தம்பிக்குச் சிறப்பு பூஜை! எங்கே, ஏன்?
யானைகளுக்குக் கோயில்... சின்னத்தம்பிக்குச் சிறப்பு பூஜை! எங்கே, ஏன்?

``யானைகள் எங்கள் பட்டா நிலத்துக்குள் வரக்கூடாது. அவற்றைச் சுட்டுக் கொல்லுங்கள்” என்கின்றனர் சிலர். ``சின்னத்தம்பி இதற்கு மேல் காட்டில் வாழாது. எனவே, அவனைக் கூண்டில் அடைத்து கும்கியாக மாற்றுங்கள்” என்கின்றனர் சிலர். மனிதர்கள் வாழ்விடத்துக்கு யானைகள் வந்தால் அட்டகாசம் செய்கின்றன, விளைநிலங்கள் சேதம், வீடுகள் சேதம் செய்கின்றன என்று புகார்களை அடுக்குகிறோம். ஆனால், கடந்த சில தசாப்தங்களாக யானைகளின் வாழ்விடத்திலும், வழித்தடத்திலும் சத்தமே இல்லாமல் மனிதர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு எந்த அரசும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ``இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை. எங்களையும் வாழவிடுங்கள்" என்று மனிதர்களுக்கு சின்னத்தம்பி உணர்த்தி வருகிறான்.

மன்னர் காலத்திலிருந்து யானைகளும், மனிதர்களும் பழகிக்கொண்டுதான் இருக்கிறோம். பழங்குடி மக்களும் யானைகளை `காட்டு ராஜா', `விநாயகர்' என்று அழைத்து வருகின்றனர். பிறகு ஏன் தற்போது, யானைகள் வருகையை அட்டகாசம் என்று சொல்கிறோம்?. காரணம், இணைந்து வாழ்தல் என்ற எண்ணம் மனிதர்களின் நினைவிலிருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. இந்நிலையில், கோவை பழங்குடி மக்கள் யானைகளுக்காகக் கோயில் கட்டி, வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே, பனப்பள்ளி என்ற பழங்குடி கிராமத்தில் நூற்றாண்டைக் கடந்து ஒரு யானைக் கோயில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்குச் சென்றோம். பதுவன் பழங்குடி விவசாயி குடும்பத்துக்குச் சொந்தமானதுதான் இந்தக் கோயில். மலைக் காட்டில், யானைகள் நடமாட்டத்துக்கு நடுவேதான், வாழை விவசாயம், ஆடுகள், மாடுகள் என்று வாழ்ந்து வருகிறார் பதுவன்.

``நான்கு தலைமுறையா இந்தக் கோயில்ல பூஜை பண்ணிட்டு இருக்கோம். என் முன்னோர்கள், காரமடைல இருந்து இந்தச் சிலையைத்  தூக்கிட்டே நடந்து வந்தாங்க. முதலில், மரத்தடியில்தான் பெரியவரை (பெரிய யானை) வெச்சு வழிபட்டுட்டு இருந்தோம். பிறகு நான்தான், இதற்கு ஒரு சிறிய கட்டடம் கட்டி, ஒரு சிறியவரை (சின்ன யானை) வைத்தேன். இந்த உலகத்துல நம்ம மட்டுமே எல்லாத்தையும் சொந்தம் கொண்டாடக் கூடாது சாமி. அதனால, எங்க பாட்டன், பூட்டன் காலத்துல இருந்து விநாயகர கும்பிட்டுட்டு இருக்கோம். அவர விஞ்சுன சக்தி எதுவும் இல்லை. வாரத்துக்கு ஒருநாள் பூஜை, வருஷத்துக்கு ஒருமுறை, புரட்டாசி மாசத்துல நம்ம காட்டுல விளைந்த வெள்ளாமைகளை வெச்சு பூஜை பண்ணுவோம். யானைங்க கால் தடத்துல நம்மனால முடிஞ்ச சில்லறை காச வெச்சு, அதையும் பூஜை பண்ணி, துணில கட்டி முன்னாடி மாட்டிருவோம். முன்னாடி, நாட்டுக்காரர்களும் (பழங்குடி அல்லாதோர்) தங்களது பூமில விளைகிற வெள்ளாமைகள கொடுத்து பூஜை பண்ணிட்டு இருந்தாங்க. இப்படியெல்லாம் பண்றப்ப, ராஜாக்களால் எந்தச் சேதமும் இருக்காது. நம்ம பூமிக்கு வந்தாலும், போய்டு ராஜா'னு கையெடுத்து கும்பிட்டா போய்டுவாரு. ஒருமுறை என் வீட்டு வாசல் கிட்ட ராஜா (யானை) வந்துட்டாரு. 'எங்கள தொந்தரவு பண்ணாம பேசாமப் போய்ருப்பா'னு நானும், என் மனைவியும் சொன்னோம். திரும்பிக் கூட பார்க்காமல் அப்படியே போய்ட்டாரு. இப்ப நிறைய மாறிடுச்சு. நாட்டுக்காரர்கள் எல்லாம் பூஜைக்கு வரது இல்ல. பட்டாசு வெச்சு விரட்டுகிறோம். கல் எடுத்து அடிக்கிறோம். கோபமே படாதவங்கள, கோபப்பட வைக்கிறோம்" என்றவர்,

சின்னத்தம்பி யானை நல்ல படியாக இருக்க வேண்டும் என்று சிறப்பு பூஜை செய்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

``அவரு நினைச்சா நம்ம எல்லாரையும் அடிக்கலாம். ராணுவத்தையே எதிர்த்து நின்னு அடிக்கற பலமும், தைரியமும், அவங்கக் கிட்ட இருக்கு. ஆனா, போதைல எதிர்ல நின்னு தொந்தரவு செய்யற ஆளக்கூட அவரு (சின்னத்தம்பி) அடிக்கல. அவர ரொம்ப கோபப்படுத்தறது நமக்கு நல்லது இல்லை. சின்னத்தம்பி ரொம்ப நல்லவரு சாமி. மனுசங்களுக்கு எல்லாம் கிடைச்சுமே, பத்தல பத்தலனு பறந்துட்டு இருக்கோம். அவங்களுக்கு எதுவுமே கிடைக்காதப்ப, நம்ம கிட்டதான சாப்பாடு தேடி வருவாங்க? அவங்களுக்குக் கொடுக்கறது தானம் சாமி. போன வருஷம் செப்டம்பர் மாசம் சின்னத்தம்பி எங்க தோட்டத்துக்கு வந்தாரு. `எங்களுக்கு மிச்சம் வெச்சுட்டு, நீ சாப்ட்டுக்கோ போப்பா'னு சொன்னேன். அவரும் நல்லா சாப்பிட்டிட்டு இருந்தார். என் மனைவி வந்து, `எல்லாமே நீயே சாப்பிட்டா, நாங்க என்ன ராசா பண்ணுவோம். இங்கிருந்து போ'னு சொன்னா. அடுத்த நொடியே, எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே கிளம்பிப் போய்டாரு. அதுக்கப்புறம் சின்னத்தம்பி வரவே இல்ல" சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார்.

``அவரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவரு. அவர் நினைச்சா, யார் தடுத்தாலும் இங்க வந்துருவார். அவருக்கு, ஏதும் ஆகக் கூடாது. ராஜா மாதிரி சுத்திட்டு இருந்தவர, கூண்டுல அடைக்கறது எல்லாம் பாவம். அவர சுதந்திரமா வாழவிடுங்க. அதுபோதும்" என்று முடித்தார் பதுவன்.

``சின்னத்தம்பி யானை மனிதர்களுடன் பழக ஆரம்பித்துவிட்டது. அதன் உணவுப் பழக்க வழக்கம் மாறிவிட்டது. எனவே, அதைக் கும்கியாக மாற்றுவதைத் தவற வேறு வழியில்லை" என்று அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் கூறி வருகின்றனர். அந்த மாற்றத்தை விதைத்தது நாம்தான். நாம் விதைத்த மாற்றங்களை நாம்தான் சரி செய்ய வேண்டுமே தவிர, யானைகளுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது.

இந்நிலையில், சின்னத்தம்பி யானையை சாஃப்ட் ரிலீஸ் (Soft Release) எனப்படும், வேலியால் சுற்றப்பட்ட, குறிப்பிட்ட பரப்பளவு உள்ள வனப்பகுதிக்குள் விட்டு, சிறப்புப் பயிற்சியளித்து, வனத்துக்குள் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியவுடன், மீண்டும் வனத்துக்குள் விடலாமா என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

சின்னத்தம்பிகளுக்கும் வாழும் உரிமை உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.