Published:Updated:

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை!
பிரீமியம் ஸ்டோரி
News
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை!

மாதம் 65,000 ரூபாய் லாபம்!பண்ணைத்தொழில்

யற்கைச்சீற்றம், விலையின்மை, ஆள் பற்றாக்குறை... எனப் பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபத்தொழில்கள்தாம். 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை!

ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு... என ஏகப்பட்ட பண்ணைத் தொழில்கள் உள்ளன.நமது பண்ணை அமைந்திருக்கும் சூழல், இடவசதி, தண்ணீர் வசதி... போன்ற முக்கியமான காரணிகளை வைத்துச் சரியான பண்ணைத் தொழிலைத் தேர்ந்தெடுத்து ஈடுபட்டால், கண்டிப்பாக நல்ல லாபம் ஈட்ட முடியும்.

சொல்லப்போனால் இதுபோன்ற விவசாய உபத் தொழில்கள் மூலம் விவசாயத்தில் எடுக்கும் வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். அது போன்ற பண்ணைத் தொழில்களை வெற்றிகரமாகச் செய்துவரும் விவசாயிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வெற்றிச் சூத்திரத்தை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இத்தொடரின் நோக்கம்.

இந்த இதழில், வெண்பன்றி வளர்த்து நல்ல வருமானம் ஈட்டி வரும் நண்பர்கள் உதயமுத்து மற்றும் டிமிட்ரோ ஆகியோரைப் பற்றிப் பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி யிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, குன்றக்குடி. அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்து நேமம் என்ற கிராமத்துக்குள் நுழைந்தவுடன், சாலையின் இடதுபுறம் அரசுத் தோட்டக்கலைப் பண்ணைக்குச் செல்லும் சாலை பிரிகிறது. அந்தச் சாலையில் சிறிது தூரம் சென்று வலது புறம் பிரிந்து செல்லும் மண்சாலையில் பயணித்தால், இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ‘மா ஒருங்கிணைந்த கால்நடைப்பண்ணை’ . இங்குதான் நண்பர்கள் உதயமுத்து, டிமிட்ரோ ஆகியோர் வெண்பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு நண்பகல் நேரத்தில் அவர்களது பண்ணையை அடைந்தோம். பன்றிகள்மீது தண்ணீர் தெளித்துக் குளுமைப்படுத்திக் கொண்டிருந்தனர், நண்பர்கள் இருவரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை!

வேலையை முடித்துவிட்டு வந்த உதயமுத்து, “படிப்பு முடிச்சுட்டு வேலை தேடிக்கிட்டு இருந்த சமயத்துல, என்னோட பெரியப்பாதான், வெண்பன்றி வளர்ப்பு பத்திச் சொன்னார். எனக்கும் அதுல ஆர்வம் வரவும், 2013-ஆம் வருஷம், காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்துல நாலு நாள் பயிற்சி எடுத்துக்கிட்டேன். பயிற்சி முடிச்சு வந்ததுல இருந்து, ஆறுமாசம் தமிழ்நாடு முழுக்கச் சுத்தி வெண்பன்றிப் பண்ணைகளைப் பார்த்துட்டு வந்தேன். கிட்டத்தட்ட 30 பண்ணைகளுக்கு மேல போய், நடைமுறையில வருகிற பிரச்னைகள், அதுக்கான தீர்வுகள் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்தேன்.அதுக்கப்புறமா, கானாடுகாத்தானுக்குப் பக்கத்துல இருக்குற வடகுடிப்பட்டி கிராமத்துல குத்தகைக்கு இடம் பிடிச்சு, ஒரு பண்ணை ஆரம்பிச்சேன். பன்றிகள் வளர்ந்து விற்பனை சூடுபிடிக்க ஆரம்பிக்கிறப்போ, உள்ளூர்காரங்க சிலர் பண்ணையைக் காலி செய்யச் சொன்னாங்க. அதனால, அங்கயிருந்து மாறி, கல்லல்ங்கிற ஊர்ல பன்றிப்பண்ணை அமைச்சேன். இதுவும் குத்தகை நிலம்தான். அங்க ரெண்டு வருஷம் நல்லாப் போயிட்டுருந்துச்சு. அந்த இடத்துலயும் கொஞ்சம் பிரச்னை. அதுக்கப்புறம் இனி சொந்த நிலத்துலதான் பன்றிப் பண்ணை அமைக்கணும்னு முடிவு செஞ்சேன்.

அந்தச் சமயத்துல, நண்பர்கள் ராமச்சந்திரன், டிமிட்ரோ ரெண்டு பேர்கிட்டயும் இதுபத்தி பேசுனப்போ, அவங்களும் பண்ணையில் சேர்ந்துக்குறதாகச் சொன்னாங்க. அப்புறம், விவசாயம், கால்நடை வளர்ப்பு ரெண்டையும் செய்யலாம்னு முடிவு செஞ்சு, மூணு பேரும் சேர்ந்து இந்த 9 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். நானும், டிமிட்ரோவும்தான் முழுக்கப் பன்றிப் பண்ணையைப் பார்த்துக்கிறோம்” என்று முன்னுரை கொடுத்த உதயமுத்து பண்ணையைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

“ஏற்கெனவே என்கிட்ட இருந்த பன்றிகள்ல சிலதை இங்க கொண்டு வந்துட்டோம். அதோட, இன்னும் கொஞ்சம் பன்றிகளையும் வாங்கியிருக்கோம். இங்கேயே பிறக்குற குட்டிகளை வளர்த்து விற்பனை செய்றோம். அதில்லாம சின்னக்குட்டிகளை வெளிப் பண்ணைகள்ல வாங்கிட்டு வந்து வளர்த்து, அதுகளையும் விற்பனை செஞ்சுட்டுருக்கோம். எங்களுக்குப் பக்கத்துலேயே செட்டிநாடு கால்நடைப் பண்ணை இருக்கு. அங்க பதிவு அடிப்படையில பன்றிக்குட்டிகள் கொடுப்பாங்க. அங்கயும் பதிவு செஞ்சு வெச்சு, குட்டிகளை வாங்கி வளர்த்து விற்பனை செஞ்சுட்டுருக்கோம். இப்போ மொத்தம் இங்க 100 பன்றிகள் இருக்கு. எல்லாமே யார்க்‌ஷையர் இனம்தான். ஒரே ஒரு டியூராக் கலப்பின ஆண்பன்றி இருக்கு. அதை, இனச்சேர்க்கைக்காகப் பயன்படுத்திட்டுருக்கோம்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை!

இங்க பிறக்குற ஆண் பன்றிகளை இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்துனா, பிறக்குற குட்டிகளுக்கு மரபணுக் கோளாறுகள் வரும். அதனால, இனச்சேர்க்கைக்கான ஆண் பன்றிகளை மட்டும் வேற பண்ணைகள்ல இருந்துதான் வாங்கிட்டு வருவோம். அதனால, இங்க பிறக்குற ஆண் குட்டிகளுக்கு ஆண்மை நீக்கம் செஞ்சுடுவோம். அப்போதான், சீக்கிரமா நல்ல எடை வரும். அதே மாதிரி நாலஞ்சு தடவைக்கு மேல குட்டிகள் போட்ட பெண் பன்றிகளையும் இறைச்சிக்காக விற்பனை செஞ்சுடுவோம். அப்படிச் சரியா கழிச்சுக்கிட்டே வந்தாதான் குட்டி உற்பத்தி அதிகமா இருக்கும் இனவிருத்தித்திறன் குறைஞ்ச பன்றிகளுக்கு உணவு கொடுத்துப் பராமரிக்கிறது, தேவையற்ற செலவு.

முன்னாடி, இந்த வெளிநாட்டுப் பன்றியினங்களை இந்த மாதிரி வெப்பமான பகுதிகள்ல வளர்க்க முடியாதுனு கேப்பாங்க. ஆனா, இந்தப் பன்றிகள் இங்கேயே தலைமுறை தலைமுறையா உருவாகிட்டுருக்குறதால, ஓரளவுக்கு வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கப் பழகிடுச்சு. அதிக வெப்பமான சமயங்கள்ல தண்ணீரைப் பீய்ச்சி அடிச்சா, கொஞ்சம் குளுமை கிடைச்சுடும். மொத்தம் 4,500 சதுரஅடி பரப்புல கொட்டகை அமைச்சுருக்கோம். இதுல கிட்டத்தட்ட 250 பன்றிகளை வளர்க்க முடியும். தரையில இருந்து மூன்றரை அடி உயரத்துக்கு மட்டும் சுவர் அமைச்சுருக்கோம். மேற்கூரையை நல்ல உயரமா அமைச்சுருக்கோம். பக்கவாட்டுலயும் சுவர் வெச்சு அடைக்காம விட்டுருக்குறதால காத்தோட்டம் கிடைச்சுடுது” என்ற உதயமுத்துவைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார், டிமிட்ரோ.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை!

“கழிவுகளைப் பணமாக்கும் எந்திரம்னுகூடப் பன்றிகளைச் சொல்லலாம். இந்த அளவுக்குக் கழிவுகளை இறைச்சியா மாத்திக் கொடுக்குற பிராணி எதுவுமே கிடையாது. காரைக்குடியில் இருக்குற ஹோட்டல்கள், அப்போலோ ஆஸ்பத்திரி ஹாஸ்டல், சில பள்ளிக்கூட ஹாஸ்டல்கள்னு பேசி வெச்சுருக்கோம்.

அங்க வீணாகுற காய்கறிக்கழிவுகள், உணவுக்கழிவுகள், சாப்பிட்ட இலைகள் எல்லாத்தையும் தினமும் சேகரிச்சுட்டு வந்து, அதை உணவாகக் கொடுக்குறோம். அதனால, தீவனத்துக்குப் பெரிய செலவு கிடையாது. போக்குவரத்துச் செலவு, வேலையாள் சம்பளம் மட்டும்தான். கழிவுகள் குறைவாகக் கிடைக்குறப்போ அரிசி வாங்கிக் கஞ்சி மாதிரி காய்ச்சிக் கொடுத்துடுவோம். கேரளாவுல வெண்பன்றிகளுக்கு அதிகத்தேவை இருக்கு. பெரும்பாலும் கறிக்காகத்தான் வாங்குறாங்க. வியாபாரிகள் எங்க பண்ணைக்குத் தேடி வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க” என்றார். 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை!

வருமானம் குறித்துப் பேசிய உதயமுத்து, “ஒரு மாசத்துக்குப் பத்து, பன்னிரெண்டு பன்றிகள்வரை விற்பனை செய்றோம். மாசம் ஒரு டன் என கணக்கு வெச்சுக்கலாம். உயிர் எடைக்கு ஒரு கிலோ 110 ரூபாய்னு விற்பனை செய்றோம். ஒரு மாசத்துக்கு ஒரு டன் பன்றி விற்பனை மூலமா 1,10,000 ரூபாய் வருமானம் வருது. வேலையாள் சம்பளம், போக்குவரத்து, மருந்து எல்லாத்துக்கும் சேர்த்து மாசத்துக்கு 45,000 ரூபாய் செலவாகுது. செலவுபோக, மாசத்துக்கு 65,000 ரூபாய் லாபமா நிக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய நண்பர்கள் உதயமுத்து, டிமிட்ரோ ஆகியோர், “விவசாயத்துல சரியான வருமானம் இல்லைனு சொல்லி விவசாயிகள்லாம் நிலங்களை விற்பனை செஞ்சுட்டு, வேறு வேலைக்குப் போயிட்டுருக்காங்க. விவசாயத்தை மட்டும் நம்பாம கால்நடை வளர்ப்பையும் சேர்த்து செஞ்சா, விவசாயத்தை விட்டுப் போக வேண்டியிருக்காது. எங்களைப் பொறுத்தவரைக்கும் பன்றி வளர்ப்பு நல்ல லாபம் தரக்கூடிய தொழில். கூச்சம் பார்க்காம நம்பிக்கையோடு பன்றி வளர்ப்புல இறங்கினா, கண்டிப்பா நல்ல லாபம் எடுக்க முடியும். பன்றிக்கழிவுகள்ல அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கு. அதை வெச்சு அதிகமான புழுக்களை உருவாக்க முடியும். அந்தப் புழுக்களை உணவாகக் கொடுத்துக் கோழிகளை வளர்க்கலாம்னு முடிவு செஞ்சுருக்கோம். அதுக்காகக் கொட்டகை அமைக்கிற வேலைகளும் நடந்துட்டுருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தனர்.

தொடர்புக்கு, உதயமுத்து, செல்போன்: 95665 32049. டிமிட்ரோ, செல்போன்: 95974 53317.

ஜி.பிரபு - படங்கள்: வீ.சிவக்குமார்

சுத்தம் அவசியம்

வெ
ண்பன்றி பராமரிப்பு முறை குறித்துப் பேசிய உதயமுத்து, “பன்றிப்பண்ணையில் நாலு பேர் வேலை செய்றாங்க. தினமும் காலையில ஆறு மணிக்கு அவங்க வந்துடுவாங்க. வந்ததும் முதல்ல சுத்தப்படுத்துறதுதான் வேலை. சாணியை அள்ளிட்டுக் கொட்டகையைச் சுத்தமாகக் கழுவி விடுவாங்க. அதுக்கப்புறம் உணவு கொடுப்போம். ஒரு பன்றிக்கு ஒரு நாளைக்கு அஞ்சு கிலோங்கிற அளவுல உணவு கொடுக்குறோம். வெயில் காலமா இருந்தா மதிய நேரத்துல ஒருமுறை பன்றிகள் மேல தண்ணி அடிச்சுவிடுவோம். சாயங்கால நேரத்துல இலைதழைகளை உணவாகக் கொடுப்போம். இனப்பெருக்கத்துக்கான தாய்ப்பன்றிகளுக்கு மட்டும் தினமும் கடலைப்பிண்ணாக்கையும் உணவோடு கலந்து கொடுக்குறோம்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை!

பன்றிகளுக்கு, வருஷத்துக்கு ஒரு தடவை பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுடுவோம். வெளிப்பண்ணைகள்ல இருந்து வாங்கிட்டு வர்ற பன்றிகளுக்கு, வாங்கின மறுநாள் கட்டாயம் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுடுவோம். பன்றிகளுக்கு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை கோமாரிக்கான தடுப்பூசி போட்டுடுவோம். வருஷத்துக்கு ஒரு தடவை ‘சிர்கோ வைரஸுக்கான’ தடுப்பூசி போட்டுடுவோம். பன்றிக்காய்ச்சல், கோமாரி, சிர்கோ வைரஸ் மூணுக்குமான தடுப்பூசிகள் கட்டாயம் போட்டாகணும். இதில்லாம அப்பப்போ ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டா அதுக்கான வைத்தியங்களைப் பார்த்துக்குவோம்.

வெண்பன்றிகள் ஆறுமாத வயசுக்கு மேல் இனச்சேர்க்கைக்குத் தயாராயிடும். பருவத்துக்கு வந்த பெண்பன்றியை, ரெண்டு மூணு நாளைக்கு ஆண் பன்றியோடு சேர்த்து விடுவோம். பன்றிகளுக்குள் இனச்சேர்க்கை நடந்ததும், ஆண் பன்றிகிட்ட இருந்து, பெண் பன்றியைப் பிரிச்சு வெச்சுடுவோம். பன்றியோட சினைக்காலம் 114 நாள்கள். அதாவது மூணு மாசம், மூணு வாரம், மூணு நாள்னு சொல்வாங்க. குட்டி போடுறதுக்குப் பத்து பதினஞ்சு நாளைக்கு முன்னாடி சினைப்பன்றியைத் தனி அறையில விட்டுடுவோம். ஒரு தடவையில 3 குட்டியிலிருந்து 14 குட்டிகள்வரைகூடக் கிடைக்கும். குட்டிகளை 45 நாள்கள் வரை தாய்ப்பன்றியிடம் பால் குடிக்க விட்டுட்டு தாய்கிட்ட இருந்து பிரிச்சுடுவோம். குட்டிகளைப் பிரிச்சாதான் தாய்ப்பன்றி பருவத்துக்கு வந்து அடுத்த இனச்சேர்க்கைக்குத் தயாராகும். குட்டிகளைப் பிரிக்கலைன்னா அதிகமாகப் பால் கொடுத்துட்டே இருக்குறதால, தாய்ப் பன்றிக்குச் சத்துப் பற்றாக்குறை ஏற்படும்.

பிறந்த குட்டிகளுக்கு இரும்புச்சத்துக்கான மருந்து கொடுத்துடுவோம். அதேமாதிரி, குட்டிகள் பிறந்தவுடனே கோரைப்பற்களை வெட்டிடுவோம். அப்போதான் தாய்ப்பால் குடிக்கும்போது தாய்ப்பன்றியோட மடியில காயம் படாம இருக்கும். கோரைப்பல்லை வெட்டாம விட்டுட்டா, வளர்ந்த பிறகு ஒண்ணுக்கொண்ணு சண்டை போடுறப்போ காயம் ஏற்படும். ஆண் பன்றிக்குட்டிகள் மூணு மாசத்துல 12 கிலோ எடை வந்ததும் ஆண்மை நீக்கம் செஞ்சுடுவோம்.

குட்டி பிறந்த 60-ஆம் நாள்ல இருந்து மூணு மாசத்துக்கு ஒருதடவை, குடற்புழு நீக்க மருந்து கொடுத்துடுவோம். குட்டிகள் வளர்ச்சி குறைஞ்சு இருந்தாலும் குடற்புழு நீக்க மருந்து கொடுப்போம். கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்கள்ல விற்பனை செய்ற தாது உப்புக்கலவையைக் குட்டிகளுக்குக் கொடுக்குறோம். அதனால, தேவையான சத்துக்கள் கிடைச்சு, குட்டிகளோட வளர்ச்சி நல்லா இருக்குறதோடு முடிகளும் தோலும் பளபளப்பா இருக்கும்” என்றார்.

முறையான பயிற்சி அவசியம்

ன்றி வளர்ப்பில் இறங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசிய உதயமுத்து, “கூடுமானவரைக்கும் சொந்த நிலத்தில் வெண்பன்றி வளர்க்குறது நல்லது. அதே மாதிரி பன்றிப்பண்ணை ஊரைவிட்டு, அதாவது குடியிருப்புப் பகுதிகளை விட்டு ஒரு கிலோமீட்டர் தூரமாவது தள்ளியிருக்குறது நல்லது. இல்லாட்டி ஊர் மக்கள் ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு இருக்கு. விவசாய நிலத்துல பன்றிகளை வளர்த்தா பன்றியோட கழிவுகளை விவசாயத்துக்குப் பயன்படுத்தி அழிச்சுட முடியும். அதனால, துர்நாற்றம் இருக்காது.

அதேமாதிரி பண்ணை அமையுற இடம், கழிவுகள் கொண்டு வர்றதுக்கு வசதியான இடமாவும் இருக்கணும். கழிவுகளைக் கொண்டு வர்றதுக்கான போக்குவரத்துச் செலவு அதிகமா இருக்கக் கூடாது. பன்றிப்பண்ணையை நிலத்தோட மேடான பகுதியில அமைச்சா, மழைக்காலத்துல தண்ணீர் தேங்காது. சினையா இருக்குற பன்றிகளைத் தேவையில்லாம வண்டிகள் மூலமா வேறு இடங்களுக்குக் கொண்டுபோகக் கூடாது. கண்டிப்பாகக் கொண்டு போயே ஆகணும்னா ரொம்பப் பாதுகாப்பா கையாளணும். எல்லாத்தையும் விட முக்கியமானது, பயிற்சிதான். பன்றி வளர்ப்புல இறங்குறதுக்கு முன்னாடி முறையான பயிற்சி எடுத்துக்க வேண்டியது அவசியம். பயிற்சி எடுத்த பின்னாடி, சில பண்ணைகளையும் நேர்ல போய்ப் பார்த்துத் தொழில்நுட்பங்களைக் கத்துக்கிட்டு இறங்குனா நிச்சயம் வெற்றிகரமாகப் பண்ணையை நடத்த முடியும்” என்றார்.

பன்றிக்கழிவு மூலம் காய்கறிச் சாகுபடி

ன்றிக்கழிவுகளை மட்க வைத்து அவற்றைக் கொண்டு காய்கறி உற்பத்திச் செய்து வருகிறார்கள், உதயமுத்து மற்றும் டிமிட்ரோ ஆகியோர். அதுபற்றிப் பேசிய டிமிட்ரோ, “பன்றிகளோட சாணத்தைத் தினமும் அள்ளிக் காய வெச்சுடுவோம். அதை மட்டுமே உரமாகப் பயன்படுத்தி நாலு ஏக்கர் நிலத்துல வாழை, தக்காளி, நிலக்கடலை, கத்திரி, வெண்டைனு சாகுபடி பண்றோம். இங்க விளையுற கடலையைச் செக்குல கொடுத்து ஆட்டி எண்ணெயாத்தான் விற்பனை செய்றோம். எண்ணெய் ஆட்டுன பிறகு, கிடைக்கிற கடலைப்பிண்ணாக்கை எடுத்து வெச்சுப் பன்றிகளுக்கு உணவாகக் கொடுத்துடுவோம். பன்றிகளைக் கழுவிவிடுற தண்ணீர், கொட்டகையைக் கழுவிவிடுற தண்ணீர் எல்லாத்தையும் ஒரு தொட்டியில் சேகரிக்கிறோம்.

அதை அப்படியே பம்ப் பண்ணி வடிகட்டி, பாசன தண்ணீர்ல கலந்துவிடுறோம். காய்கறிக்கழிவு, ஹோட்டல் கழிவுனு நகரங்கள்ல வீணாகுற கழிவுகளைப் பன்றிகளுக்கு உணவாகக் கொடுக்குறோம். பன்றிகள் மூலமாகக் கிடைக்கிற கழிவுகளை உரமாகப் போட்டுக் காய்கறிகள், வாழைனு உற்பத்தி செய்றோம். அதெல்லாம் நகரத்துக்கு உணவுப்பயன்பாட்டுக்குப் போயிடுது. கழிவுகளை முறையா மறுசுழற்சி செய்றதால, எங்க பண்ணைச் சுத்தமா இருக்கு. எங்க தோட்டத்துல மின்சார வசதி இல்லை. அதனால, சோலார் மோட்டாரையும், டீசல் மோட்டாரையும்தான் பயன்படுத்திட்டுருக்கோம்” என்றார்.

உயிர் எடையில் பன்றிக்குட்டிகள்

சி
வகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகே இருக்கும் செட்டிநாடு கிராமத்தில் உள்ள அரசு கால்நடைப் பண்ணையில் கால்நடை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள், பயிற்சிகள், தீவனப்பயிர் விதைகள் மற்றும் வளர்ப்புக்கான கால்நடைகள் அனைத்தும் கிடைக்கின்றன. முன்பதிவின் அடிப்படையில் கால்நடைகள், தீவன விதைகள், விதைக் கரணைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆடு, கோழி, பன்றி ஆகியவை உயிர் எடை அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்புக்கு: அரசு கால்நடைப் பண்ணை, செட்டிநாடு. சிவகங்கை மாவட்டம்.

தொலைபேசி: 04565 283275