Published:Updated:

சீரான வருமானம் தரும் சிறுகிழங்கு! - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000

சீரான வருமானம் தரும் சிறுகிழங்கு! - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000
பிரீமியம் ஸ்டோரி
News
சீரான வருமானம் தரும் சிறுகிழங்கு! - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000

மகசூல்

மையலில் இடம்பெறும் சுவையான கிழங்குகளில் சிறுகிழங்கும் ஒன்று. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படும் இக்கிழங்குக்கு, எப்போதும் நல்ல சந்தை வாய்ப்புண்டு. இது தனிப்பட்ட சுவை மற்றும் மணம் கொண்டிருப்பதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இதை, ‘சைனீஸ் பொட்டேட்டோ’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். பெரிய அளவில் சாகுபடி செலவு தேவைப்படாமல் நல்ல வருமானம் கொடுக்கும் பயிராகவும் இருப்பதால், விவசாயிகள் பலர் இதை விரும்பிச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இக்கிழங்கை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்திருக்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன்.

சீரான வருமானம் தரும் சிறுகிழங்கு! - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000

சங்கரன்கோவிலிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘நகரம்’ எனும் கிராமம். ஊருக்குள் நுழைந்தவுடன் சாலை ஓரத்திலேயே இருக்கிறது, மாரியப்பனின் தோட்டம். ஒரு காலை வேளையில் அறுவடைப் பணியில் இருந்த மாரியப்பனைச் சந்தித்துப் பேசினோம்.

“எனக்கு இதுதான் சொந்த ஊர். விவசாயம்தான் பரம்பரைத்தொழில். நான் பத்தாம் வகுப்புவரை படிச்சுட்டு மிலிட்டரில சேர்ந்துட்டேன். மிலிட்டரி சர்வீஸை முடிச்சுட்டு ஊர் திரும்புனா விவசாயம்தான் செய்யணும்னு முடிவெடுத்து வெச்சுருந்தேன். சர்வீஸ் முடியுறதுக்குச் சில நாள்களுக்கு முன்னாடி, அதுபத்தி என்கூட வேலை பார்த்த நண்பர் விமல்கிட்ட பேசிட்டுருந்தப்போ... ‘விவசாயம் செய்றது நல்ல முடிவுதான். ஆனா, வழக்கமான ரசாயன முறை விவசாயத்தைச் செய்ய வேண்டாம். ரசாயன உரம் போட்டா மண் மலடாகிப்போயிடும். அதனால, இயற்கை விவசாயம் செய்யுங்க. மண்ணு எப்பவும் வளமா இருக்கிறதோடு விஷமில்லாத விளைபொருளை உற்பத்தி செய்யலாம்’னு சொன்னார். அதோட சில இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் கொடுத்தார். அதுல ஒரு புத்தகத்துல புளியங்குடியைச் சேர்ந்த கோமதி நாயகம் ஐயா, அந்தோணிசாமி ஐயா ரெண்டு பேரையும் பத்தி எழுதியிருந்தாங்க. இங்க இருந்து 5 கிலோமீட்டர் தூரத்துலதான் புளியங்குடி இருக்கு. ‘என்னடா நம்ம ஊர் பக்கத்துலேயே இயற்கை விவசாயம் செய்றாங்க, நமக்குத் தெரியலையே’னு வருத்தமா இருந்துச்சு.

அந்த வருஷம் லீவுல ஊருக்கு வந்தப்போ... புளியங்குடி போய், கோமதிநாயகம், அந்தோணிசாமி இரண்டுபேரையும் பார்த்துப் பேசினேன். அந்தோணிசாமி ஐயா, கரும்புத்தோட்டம், எலுமிச்சைத்தோட்டம் எல்லாத்தையும் காட்டினார். அவங்க ரெண்டு பேருமே இயற்கை விவசாயம் பத்தி நிறையச் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்களோட நிலத்து மண் வளத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போயிட்டேன். அந்தச் சமயத்துல ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் பத்திக் கேள்விப்பட்டு அதையும் படிக்க ஆரம்பிச்சேன். அப்போ அதுல ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ (தற்போதைய சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை முறை) பத்தி ஒரு தொடர் வந்துட்டுருந்துச்சு. அதுவும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால, ரிட்டையர்டு ஆனபிறகு இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு தீர்க்கமா முடிவெடுத்துட்டேன்” என்று முன்கதை சொன்ன மாரியப்பன் தொடர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சீரான வருமானம் தரும் சிறுகிழங்கு! - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000

“அப்புறம், 2011-ஆம் வருஷக் கடைசியில ரிட்டையர்டாகி ஊர் திரும்பினேன். வந்த உடனேயே நிலத்தை உழுது, ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை போட்டு நிலத்தை வளப்படுத்துனேன். நெல் வயல்ல தொழுவுரம் போட்டு, பலதானிய விதைப்பு செஞ்சதுல அதுவும் நல்லா வளமாச்சு. அடுத்து, ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டினு பயன்படுத்தி மிளகாய், தக்காளி ரெண்டையும் சாகுபடி செஞ்சேன். அடுத்து எலுமிச்சை, சிறுகிழங்கு, சீனிக்கிழங்குனு சாகுபடி செஞ்சேன். இயற்கை முறையில நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது.

மொத்தம் இது 5 ஏக்கர் நிலம். முழுக்கக் கரிசல் மண்தான். இதுல 25 சென்ட் நிலத்துல சிறுகிழங்கு போட்டு அறுவடையாகிடுச்சு. 10 சென்ட் நிலத்துல போட்டிருக்குற சீனிக்கிழங்கு அறுவடை செய்ற நிலையில் இருக்கு. 50 சென்ட் நிலத்துல போட்டுருக்குற குண்டுமிளகாய் இப்போதான் காய்க்கத் துவங்கியிருக்கு. இரண்டரை ஏக்கர் நிலத்துல எலுமிச்சை காய்ப்பில் இருக்கு. மீதி நிலத்தை உழுது நெல் சாகுபடிக்காகத் தயார் செஞ்சு வெச்சுருக்கேன். அதுல பாரம்பர்ய நெல் ரகங்களை விதைக்கலாம்னு இருக்கேன். இயற்கை விவசாயத்துல நல்ல மகசூல் கிடைக்குது.

சீரான வருமானம் தரும் சிறுகிழங்கு! - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000

சிறுகிழங்கைப் பொறுத்தவரை ஆவணி அல்லது புரட்டாசி மாசத்துல விதைச்சுடணும். அப்போ நடவு செஞ்சா மார்கழி, தை மாசங்கள்ல அறுவடைக்கு வரும். பொங்கல் சமயத்துல சிறுகிழங்குக்கு நல்ல விலை கிடைக்கும். இந்தமுற மழை அதிகமா இருந்ததால, சரியான பட்டத்துல விதைக்க முடியலை. கார்த்திகை மாசம்தான் விதைச்சேன். அதனால, அறுவடை தள்ளிப் போயிடுச்சு. போன வருஷம் பொங்கல் சமயத்துல ஒரு கிலோ சிறுகிழங்கு 70 ரூபாய் வரை விற்பனையாச்சு. இப்போ இங்க ரொம்ப அடிமட்ட விலைக்குக் கேக்குறாங்க. அதனால, நான் வழக்கமா விற்பனை செய்ற கேரளா வியாபாரிகிட்டதான் விற்பனைக்குப் பேசியிருக்கேன்” என்ற மாரியப்பன், “மொத்த அறுவடையும் முடிஞ்சுட்டது. கொஞ்ச நேரம் பொறுங்க, கிழங்கை எடைபோட்டுட்டு வந்து மகசூல் கணக்கு சொல்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

எடை போட்டுவிட்டு வந்த மாரியப்பன், “மொத்தமா, 25 சென்ட் நிலத்துல 1,397 கிலோ சிறுகிழங்கு மகசூலாகியிருக்கு. ஒரு கிலோ 30 ரூபாய்னு விலை பேசியிருக்கேன். மூட்டைப் பிடிச்சு கேரளாவுக்கு அனுப்பணும். மொத்தம் 1,397 கிலோ கிழங்கு விற்பனை மூலமா, 41,910 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுவரைக்கும் 11,900 ரூபாய்ச் செலவாகியிருக்கு. அதுபோக, 30,010 ரூபாய் லாபமா நிக்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிழங்கு ஏற்றிச் செல்ல மினி வேன் வந்தது. நமக்கு விடைகொடுத்துவிட்டு கிழங்கு மூட்டைகளை வேனில் ஏற்றுவதில் மும்முரமானார், மாரியப்பன்.

தொடர்புக்கு, மாரியப்பன், செல்போன்: 96004 97706.

இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

கூர்க்கன் கிழங்கு

கே
ரள மாநிலத்தில் சிறுகிழங்குகளைக் ‘கூர்க்கன் கிழங்கு’ மற்றும் ‘காவத்தன் கிழங்கு’ என அழைக்கிறார்கள். திருவாதிரை விரதம் இருப்பவர்கள் திருவாதிரை நாளில், திருவாதிரைக் களியுடன், ‘ஏழுதான் குழம்பு’ எனப்படும் ஏழுவகைக் காய்கறிகள் கொண்ட குழம்பு சமைப்பார்கள்.

இந்தக் குழம்பில் சேர்க்கப்படும் காய்களில் சிறுகிழங்கும் ஒன்று. சிறு கிழங்குகளில் மண் ஒட்டியிருக்கும். அவற்றைக் கோணிச்சாக்கு அல்லது துணிக்குள் போட்டு மூட்டைப்போலக் கட்டி, அம்மி அல்லது கருங்கல்லில் அடித்தால்... கிழங்கில் ஒட்டியுள்ள மண்ணும், தோலும் உரிந்துவிடும். பிறகு, தண்ணீரில் அலசிச் சமைக்கலாம்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

25
சென்ட் பரப்பளவில் இயற்கை முறையில் சிறுகிழங்கைச் சாகுபடி செய்வது குறித்து மாரியப்பன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

சிறுகிழங்குச் சாகுபடிக்கு அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. இதன் வயது அதிகபட்சம் 5 மாதங்கள். நாற்று நடவுதான் ஏற்றது என்பதால், முதலில் நாற்றங்காலைத் தயார் செய்ய வேண்டும். 25 சென்ட் பரப்பில் சாகுபடி செய்ய, 1 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஓர் அடி இடைவெளியில்... ஓர் அடி அகலம், ஓர் அடி உயரத்தில் மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி ஈரமாக்கி பாத்திகளில் அரையடி இடைவெளியில் விதைக்கிழங்குகளை ஊன்ற வேண்டும்.

25 சென்ட் நிலத்துக்கு 1 கிலோ விதைக்கிழங்கு தேவை. விதைத்ததிலிருந்து 10-ஆம் நாள்வரை, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். அதற்குப் பிறகு 4 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். விதைத்த 7-ஆம் நாளுக்கு மேல் முளைப்பு தெரியும். விதைத்த 10 மற்றும் 20-ஆம் நாள்களில் 2 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 30-ஆம் நாளில் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும்.

நாற்று தயாராவதற்குள் சாகுபடி நிலத்தையும் தயார் செய்து விட வேண்டும். தேர்வு செய்த 25 சென்ட் நிலத்தை, ஒரு வார இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவு முடிந்து ஒரு வாரம் கழித்து ஒரு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி ஓர் உழவு செய்து... ஓர் அடி அகலம், ஓர் அடி உயரத்தில் மேட்டுப்பாத்திகள் எடுக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி, ஓர் அடி இருக்க வேண்டும். நாற்றங்காலில் வளர்ந்த சிறுகிழங்கு நாற்றுகளை எடுத்து, அவற்றை இரண்டு கணுக்கள் சேர்ந்ததுபோலப் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி, பாத்திகளின் இரு ஓரங்களிலும் அரை அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த 15-ஆம் நாள்வரை மூன்று நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதும். நடவு செய்த 20 மற்றும் 40-ஆம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 45-ஆம் நாளுக்கு மேல் கொடி ஓடத் துவங்கும். அந்த நேரத்தில், மண் அணைத்து விட வேண்டும். தொடர்ந்து பூக்கள் பூக்கும். பல செடிகள் பூப்பூக்காமலும் இருக்கும். பூப்பூப்பதற்கும் கிழங்கு பெருத்து போவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நடவு செய்த 100-ஆம் நாளுக்கு மேல் இலைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். சில கொடிகள் வாடத்தொடங்கும். செடியின் தூர்ப்பகுதியில் மண்ணில் வெடிப்புக் காணப்படும். பாத்தியின் ஓரத்தில் கிழங்குகள் தென்படும். இப்படி இருந்தால் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகிவிட்டன எனத் தெரிந்து கொள்ளலாம். 110-ஆம் நாளுக்கு மேல் 120-ஆம் நாளுக்குள் அறுவடை செய்து விடலாம். செடிகளைப் பிடுங்கி, வேரிலிருந்து கிழங்குகளைப் பிரித்து நிழலில் சேமித்து வைக்கலாம். அதிகபட்சமாக 3 நாள்கள்வரை இருப்பு வைக்கலாம். 3 நாள்களுக்கு மேல், இருப்பு வைத்தால், கிழங்கில் ஈரப்பதம் குறைந்து எடை இழப்பு ஏற்படும்.

அறுவடை செய்த கிழங்குகளில்... கோலிக்குண்டு அளவிலான கிழங்குகளை எடுத்து விதைக்காகச் சேகரித்து வைக்கலாம். விதைக்கான கிழங்குகளில் வெட்டுகள், துளைகள் போன்ற சேதாரங்கள் இருக்கக் கூடாது. ஓர் ஓலைப் பெட்டியில் நெல் உமியைப் போட்டு அதனுள் விதைக்கு எடுத்து வைத்த கிழங்குகளைப் போட்டு வைக்க வேண்டும். இப்படி 5 மாதங்கள்வரை வைத்து விதைக்கலாம்.   

சீரான வருமானம் தரும் சிறுகிழங்கு! - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000